சிற்றெறும்பு, நிறைவிலி – கடிதங்கள்

நிறைவிலி [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நிறைவிலி கதை விவேகானந்தர் சூத்திரர்களை நோக்கிச் சொன்னதை நினைவுறுத்துகிறது. நீங்கள் சென்றகாலத்தில் இழந்துவிட்ட அனைத்தையும் வருங்காலத்தில் அடையவேண்டும். ஆகவே இருமடங்கு விசையுடன் எழுக என்று அவர் சொல்கிறார்.  ஆனால் சூத்திரர் உட்பட அத்தனை பேராலும் கீழே தள்ளப்பட்ட ஆதிவாசிகளுக்கு போடவேண்டுமென்றால் இந்த உலகமே தேவை.

நூறுநாற்காலிகள் வேண்டும் என்று காப்பன் சொன்ன வரியின் இன்னொரு வடிவம்

செந்தில் முருகேசன்

***

அன்புள்ள ஜெ

நிறைவிலி. நான் ராமச்சந்திர குஹா எழுதிய வெரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும் என்ற நூலை வாசித்திருக்கிறேன். முதலில் பழங்குடிகளை சீர்திருத்துவதற்காக காட்டுக்குள் செல்லும் எல்வின், பழங்குடி வாழ்வு தான் அனைத்து வகையிலும் சிறந்தது என்னும் முடிவுக்கு வருகிறார். அம் மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, இறையியல் ஆகியவற்றை ஆய்வு செய்து வெளியிட்டு, இது உங்கள் நவீன நாகரீகத்தை விட எவளவோ மேன்மையான வாழ்வு என்று உலகிடம் காட்டுகிறார். அதில் கோண்டு பழங்குடிகளும் உண்டு்.

கார்பரேட்டில் இருக்கும் ராம் சந்தீப்க்கு அந்த  மலையில் ஒரு டீ எஸ்டேட் இருக்கிறது, அங்கு அம்மக்கள் கூலிகளாக இருக்கிறார்கள். பாங்கா ராய் பழங்குடி வாழ்வில் இருந்து நகரத்துக்கு வந்து நிகழ்வுகள் நடத்தி தரும் தொழிலில் இருக்கிறாள். இரு வேறு பூர்வீகத்தில் இருந்து விரிந்த நவீன தொழில் வடிவங்கள். ராம் காப்பி குடிக்காதது எவ்வளவு பெரிய இழப்பு என்று சொல்கிறான். பழங்குடிகளை இழந்தது இன்றைய நாகரீகத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பு.

தன் பிறப்பையும் அது தரும் உணர்வுகளையும்  கடந்துவிட்டதாக  பாகா ராய் நினைக்கிறாள். ஆனால் அவள் கடக்கவில்லை. அவளால் காப்பி குடிக்கமுடியவில்லை. சுவரில் ஒட்ட பட்டிருக்கும் அந்த தன் கருப்பு வெள்ளை புகைப்படத்தை அவளால் பார்க்க முடியவில்லை. அது இரண்டும் அவளை தொந்தரவு செய்கிறது. இருவருக்கும் காப்பி தரும் பொருள் வேறு வேறு. தான் பழங்குடி என்று அவனுக்கு தெரிந்த பின்னர்தான் அவள் ராம் என்று பெயர் சொல்லி அழைக்க துவங்குகிறாள்.

உன் தட்டு நிறைய வேண்டாம் அப்பொழுதான் நீ மேலே சென்று கொண்டிருக்க முடியும் என்று சொல்கிற ராம் சந்தீப் தான் அந்த தட்டை குறையுள்ளதாக ஆக்கினான். ஆத்மார்த்தமாக என்றாலும் அவன் ஆளுமை நிர்வாகத்தை பற்றி ஒரு கோண்டுக்கு பாடம் எடுக்கிறான்.

நிறையவே கூடாது என்பது ராமின் வேரில் இருந்து வந்த சித்தாந்தம். பொழிவேன் என்பது பகாவின் வேரில் இருந்து வந்த சித்தாந்தம். எந்த நவீன நாகரீகம் பழங்குடி வாழ்வை அழித்ததோ, அது தன் காண்ணாடி ஜன்னலுக்கு வெளியே வைத்து இயற்கையை ரசிக்கிறது. தலையை சுற்றி மூக்கை தொடுகிறது.

நிறையவே நிறையாது என்றால் ஒன்றை ஏன் செய்யவேண்டும். பழங்குடி வாழ்கை போதும் என்று நிறைவுண்டு இருப்பதுதான். நிறைவடையாதே என்பது தான் இன்றைய நாகரீகம். பகா ராய் இரண்டு முரண்களுக்கு இடையே மாட்டி இருக்கிறாள். மானுடமே அப்படிதான் மாட்டியிருக்கிறது.

இல்லை. மீண்டும் பகா ராய் நவீன வாழ்வில் தன் பழங்குடி அழகையும் நர்மனத்தையும் பரப்புகிறாளா. அதுதான்  கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே உருவாகி வரும் தோட்டமா. நிகழ்வுகள் கொண்டாட்டமாக இருக்வேண்டும் என்று உருவான அலையா. பகா ராய் இரண்டுக்குமான சந்திப்பு புள்ளியாக இருக்கிளா. இரண்டு வாழ்வுகளை நாகரீகங்களை ஒன்றாக இணைக்கிறாளா. அதுதான் இறுதி நன்றியும் கைகுழுக்கலும்.

இழை கதையை தொடர்ந்து வரும் கதை வரிசை யார் அடிமை, எது அடிமை என்று கேட்கிறது என்று நினைக்கிறேன்.

நன்றி

பிரதீப் கென்னடி

***

சிற்றெறும்பு [ சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

சிற்றெறும்பு அதிகமாக வாசிக்கப்படாமல் போன ஒரு கதை. அது முழுக்கவே பழிவாங்குவதைப் பற்றிய கதை. பழிவாங்குவதிலிருப்பது ஆணவம் அல்லது தன்மதிப்பு. அது சீண்டப்பட்டால் எங்கோ பழிவாங்கித்தான் தீர்வார்கள். கதைசொல்லுபவனின் கதை ஒரே வரியில் வந்துசேர்கிறது. அவன் துரோகமிழைக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆட்சிப்பகுதிக்கு தப்பி ஓடி வந்தவன், அங்கே அடிமைவேலை செய்கிறான். அவனுக்கு துரையை, ஆதிக்கத்தை பழிவாங்கும் வெறி இருக்கிறது.

துரைச்சானிக்கு துரையை பழிவாங்கும் வேகம் அவளை அறியாமலேயே எங்கோ இருக்கிறது. அந்தச் ’சிற்றெறும்பு’க்கும் அந்த பழிவெறி இருக்கக்கூடும். அவர்கள் ஒருவரை ஒருவர் எப்படி பாதிக்கிறார்கள் என்பதுதான் கதையின் கண்காணாத பின்னல். சொல்லப்பட்ட கதையிலிருந்து இந்த வலைப்பின்னலை ஊகிக்கும்போது மனித உள்ளம் பற்றிய ஒரு பெருந்திகைப்பு உருவாகிறது

ரா. சந்திரசேகர்

***

அன்புள்ள ஜெ.,

கைபேசியில் தளத்தில் உங்கள் கதையைத் திறந்தவுடன் முதலில் நான் செய்வது விரலால் மேலிருந்து கீழாக ஒரு தேய்ப்பு. வலது ஓரத்தில் ‘scroll bar’ என்ன சைஸில் இருக்கிறது என்று பார்த்துக்கொள்வேன். கடுகு சைஸில் மேல் மூலையில் மினுங்கிக்கொண்டிருந்தால் மனதுக்கு நிறைவாக இருக்கும். ‘கல்கோனா’ போல நிதானமாக ‘வைத்து’ச் சாப்பிடலாம். தூக்கம் பிடிக்காமல் ஒவ்வொரு பள்ளியெழுச்சியின் போதும் கொஞ்சம் படிப்பது. பின் மறுநாள் எழுதப்போகும் கடிதத்தின் வரிகளை யோசித்துக்கொண்டே படுத்திருப்பது வாடிக்கை. ‘சரி, அதான் எழுதுறாங்கள்ல’ என்று ஒழிந்துவிட்டு தூக்கமுயற்சி அடுத்த பள்ளியெழுச்சி வரை. சில கதைகள் ஒவ்வொரு பள்ளியெழுச்சியின் போதும் முழுமையாகப் படிக்கச் செய்பவை. இது ரெண்டாவது வகை. மூன்று முறை படித்தேன் ஒரே இரவில்.

துரையின் இருப்பிடத்தையும், அவர் வேலைக்காரர்களின் அதிகாரவட்டத்தையும், கதைசொல்லியின் ‘சாதனைகளை’யும், உளவியலையும் விவரிக்கும்போதே உங்கள் ஆட்டத்தை ஆரம்பித்து விடுகிறீர்கள். நான் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சேம்பரில் தாசில்தார் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கும் அந்த நீண்ட இரும்புக்கழியைப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் ‘பங்கா’ (Punkah) தொங்கிக்கொண்டிருந்தது அங்கே. பரவலாக மின்விசிறி வருவதற்கு முன்னால்கூட ‘பங்கா புல்லர்’ என்ற பதவியும், ஆட்களும் இருந்தார்கள் என்றார் தாசில்தாராக ஓய்வு பெற்ற என் தந்தை. அடித்துணி முகர்தலை (Bromidrophilia) வைத்து அசாதாரணமான கதை ஒன்றை எழுதியிருக்கிறீர்கள். Paraphilic பிறழ்வினைப் பற்றிய கதை. ஆனால் பிறழ்வெழுத்து அல்ல. விலங்குக்கும் இரைக்கும் நடக்கும் உளவியல் ஆட்டம். ஆனால் இந்த விலங்கும் கூட தன்னிச்சையாக வேட்டையை நிகழ்த்த முடிந்த விலங்கல்ல. அதற்குமேல் வேறொரு பெரிய விலங்கு கண்காணித்துக் கொண்டிருக்கிறது. இரையும் சாதாரண இரையல்ல. கதைசொல்லி செவத்தானை சிற்றெறும்பு என்கிறான். துரைக்கு இவனுமே சிற்றெறும்புதான். ஆனால் இந்தச் சிற்றெறும்பை காதில் புகுத்தி எத்தனை யானைகளை விழுத்தாட்டியிருப்பான் துரை.

துரையே மெச்சும்படி ஆங்கிலம் பேசும் செவத்தான் ஒரு இலக்கிய வாசகனாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ‘தையல் படிக்கணும்னு மாடலுக்காகத்தான் திருடினேன்’ன்னு துரைகிட்ட சொன்னால் அவர் நம்பிடுவாரா என்ன? உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ளாத உடல்மொழியும், பார்வையும் கதைசொல்லிக்கு மட்டுமே சொந்தமா என்ன? “நாமளும் பதிலுக்கு என்னமாம் செய்யணும்லடே?” யோடு கதை முடிந்திருந்தால் அது வேறு கதை. அதற்கடுத்த நான்கு வரிகளில் நீங்கள், புனைவுலகின் உச்சத்திலிருக்கும் எழுத்தாளனாக ஆடியிருப்பது, ஊழிக்கூத்து. கதை முடியவில்லை என்றுதான் நினைக்கிறேன். ‘நீ ஆடு தல’ என்றுதான் சொல்லத் தோன்றியது. ஆட்டம் தொடரட்டும்.

அடித்துணி முகர்தலைப் பற்றிய ஞானத் தேடலை நிகழ்த்தியபோது கிடைத்த ஒரு கட்டுரை கீழே. இன்பம் துய்ப்பதன் எல்லையில்லா சாத்தியக்கூறுகள். ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?’ என்று சும்மாவா சொல்லியிருப்பான் நம் முப்பாட்டன்.

https://blogs.scientificamerican.com/bering-in-mind/bromidrophilia-beauty-is-in-the-nose-of-the-besniffer/

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

***

25 எச்சம் [சிறுகதை]

24 நிறைவிலி [சிறுகதை]

23 திரை [சிறுகதை]

22.சிற்றெறும்பு [ சிறுகதை]

21 அறமென்ப…  [சிறுகதை]

20 நகை [சிறுகதை]

19.எரிசிதை [சிறுகதை]

18 இருளில் [சிறுகதை]

17 இரு நோயாளிகள் [சிறுகதை]

16 மலைபூத்தபோது [சிறுகதை]

15 கேளி [சிறுகதை]

14 விசை [சிறுகதை]

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை

முந்தைய கட்டுரைஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-1
அடுத்த கட்டுரைஇரு கடிதங்கள், பதில்கள்