அறமென்ப… [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
அறமென்ப கதைக்குச் சமானமான ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் ஒருவரை ஆபத்தில் காப்பாற்றினேன். அவருடைய கஷ்டங்களில் நான் மட்டும்தான் துணைநின்றேன். இத்தனைக்கும் அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. பரிதாபம் பார்த்தேன். மனிதன்தானே என நினைத்தேன். அவர் ஒரு மடத்தனமான தப்பு பண்ணி மாட்டிக்கொண்டார். வேலை போய்விடும். வாழ்க்கை போய்விடும். அந்த நிலைமை. படிக்கிற குழந்தைகள், பெண்குழந்தைகள் இருக்கின்றதே என்று பார்த்தேன்.
ஆனால் அவர் வக்கீலிடம் போனபோது வக்கில் என்னையும் கோத்துவிட ஆலோசனை சொன்னார். நான் பெரிய பதவி. என்னையும் கோத்துவிட்டால் நானே வழக்கை பார்த்துக்கொள்வேன், தப்பிவிடலாம் என்று ஐடியா கொடுத்தார். அவர் எனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தார். நான் உடைந்தே போய்விட்டேன். அவரிடம் பேசினால் ‘நான் என்ன செய்ய? வக்கீல் சொல்றார்’ இதுமட்டும்தான் பேச்சு.
எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டேன். எனக்கு பல இழப்புகள். ஒருவழியாக தப்பிவிட்டேன். ஆனால் இன்றைக்கு வரை இதுதான் யுகதர்மம் போல என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். செல்வா போல புன்னகைக்கும் சந்தர்ப்பம் வரவில்லை
ஜி.வீரராகவன்
***
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
மற்றுமொரு அருமையான கதை. பணம் படைத்தவன் எப்படி தனக்கு என்று ஒரு நியாயம் வைத்திருப்பானோ, அதே போல், சரியோ தவறோ, ஏழைகளும் அப்படியே. சொல்ல போனால் ஏழை, பணக்காரன் வித்தியாசம் இதில் இல்லை. ஆனால் சமூகத்தின் அவலம் என்னவெனில், ஒரு ஏழை பாதிக்கப்பட்டால், எந்த சிந்தனையும் இல்லாமல், அவர்கள் சார்பே எடுக்கும். நம் சமூகம் ஏழைகளை புனிதமாக்கியே (romanticize) வைத்திருக்கிறது. கதாநாயகன், தான் உதவி செய்த ஏழை, அறம் ஒழுகி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நிதர்சனம் புரிந்த கணத்தில் சிரிக்கிறார். அதிலே ஒரு விடுதலை அடைகிறார்.
நீங்கள் வேண்டும் என்றால் பாருங்கள் – கண்டிப்பாக ஒருவர் ஜெயமோகன் ஏழைகளுக்கு எதிராக எழுதி விட்டார் என்று கம்பு சுத்தி கொண்டு வருவார்.
எனக்கு தெரிந்த ஒருவர் (உண்மையில் நடந்தது – பல வருடங்களுக்கு முன்பு), ஒரு கல்யாண மண்டபத்தில் இருந்து வரும்போது வேறு செருப்பை போட்டு வந்தார். நான் கவனித்து சொன்னேன். அதற்கு அவர், “என் செருப்பை எவனோ தூக்கிட்டு போய்ட்டான்.. அதான் நான் அவன் செருப்பை போட்டுட்டு வந்துட்டேன்” என்றார். நான் “அது அவன் செருப்பு இல்லை.. யாரோடதோ” என்றதை காது கொடுத்ததும் கேட்க அவர் தயாராக இல்லை. அவர் ஏற்கனவே தனது நியாயத்தை முடிவு பண்ணியிருந்தார்.
அன்புள்ள
சக்தி – மதுரை
இரு நோயாளிகள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
இரு நோயாளிகள் கதையை வாசித்தபோது புதுமைப்பித்தனின் இறுதிநாட்களைப் பற்றிய இரு குறிப்புகள் நினைவுக்கு வந்தன. அப்போது அவருடன் இருந்த சிதம்பரம் எழுதியவை. பிராமணர்கள் தனக்கு குழிதோண்டிவிட்டார்கள் என்று புதுமைப்பித்தன் கண்ணீர்விட்டிருக்கிறார். தன்னை ஒழித்துக்கட்டிவிட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார். கசப்பும் சிரிப்பும் கண்ணீருமாக இருந்திருக்கிறார்.
அதைப்பற்றி பேசும்போது சுந்தர ராமசாமி ஒரு முறை என்னிடம் சொன்னார். அந்த மனக்கசப்பு நோயினால் புதுமைப்பித்தன் உருவாக்கிக்கொண்டது என்று சொன்னார். உண்மை அதுவல்ல. அவருக்கு பண ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் நெருக்கமாக இருந்தவர்கள் பிராமணர்கள்தான். அவர் மறைந்தபிறகு அவரை தொடர்ச்சியாக முன்வைத்து சரித்திரத்தில் நிலைநாட்டியவர்களும் க.நா.சு முதல் சுந்தர ராமசாமி வரையிலான பிராமணர்கள்தான். அவருக்குப்பின்னால் உருவான திராவிட இயக்கம், பிராமணரல்லாதார் இயக்கம், வேளாளர்கள் அவரை கண்டுகொள்ளவே இல்லை. இன்றுவரை கண்டுகொள்ளவில்லை. இது சரித்திர உண்மை.
புதுமைப்பித்தனின் அந்த இலக்கில்லாத கசப்பு இக்கதையிலும் பதிவாகியிருக்கிறது. நான் ஒரு நண்பரிடம் விசாரித்தேன். சங்கம்புழா கிருஷ்ணபிள்ளா கடைசிநேரத்தில் பாடிக்கொண்டே இருந்தார் என்றார். இவர் மாடர்னிஸ்ட். அவர் ரொமாண்டிக் கவிஞர். சரியாகத்தான் இருக்கிறது
ராஜகோபால்
***
அன்புள்ள ஜெ
இரு நோயாளிகள். ஆமென்பது போன்ற கதை. ஒன்று உண்மையான வாழ்வாக இருக்கும் பொழுது அதை அணுகுவது சிரமமாக உள்ளது.
காசநோய் ஆஸ்பத்திரியில் இரு இளம் கவிஞர்கள். ஒருவர் ஜட்டி போட சொல்கிறார். மற்றொருவர் முக கவசம் போட சொல்கிறார். ஒருவர் அழகை பார்க்கும் கற்பனாவாதி. மற்றொருவர் அப்பட்டமான யதார்த்தங்களை பார்க்கும் நவீனத்துவர். இருவருமே அதன் அதன் அடியாழங்களை நெஞ்சுருகும் வரை சென்று பார்த்தவர்கள். காசநோய் ஆஸ்பத்திரியில் வந்து படுத்திருக்கிறார்கள்.
ஆனால் அதே காசநோய் ஆஸ்பத்திரியில் ஒரு குடும்பமே தன் வாழ்க்கையை, தொழிலை துவங்கி காலத்தில் வெற்றியாளர்கள் ஆகிறார்கள். அந்த நோயாளிகளுக்கு மத்தியிலே இருந்தாலும் ஏன் எம்.ஏ. கிருஷ்ணன் நாயருக்கோ அவர் அப்பாவுக்கோ மாமனாருக்கோ மனைவிக்கோ குழந்தைகளுக்கோ அந்த நோய் தொற்றவில்லை. நெஞ்சை உருக்கும் அளவுக்கு அவர்கள் எதையுமே காணவில்லை என்பதாலா.
ஆனால் எம்.ஏ. கிருஷ்ணன் நாயரால் விட விட பேசி கொண்டுதான் இருக்க முடியும். இதுவரை இந்த சமூகம் பெரிதாக ஒன்றும் செய்துவிடாத அந்த இரு இளம் நேயாளிகள் தான் கிருஷ்ணன் நாயருக்கு எடுக்கப்படும் ஆவணப்படத்தில் கூட இருப்பார்கள். அவர்கள் என்றும் நினைவில் நீடிப்பார்கள், அப்படி அந்த இருவர் நினைவு கூறபடுவதால் தான் எம்.ஏ கிருஷ்ணன் நாயரின் வரலாற்றுக்கு கூட மதிப்பு.
நன்றி
பிரதீப் கென்னடி
25 எச்சம் [சிறுகதை]
24 நிறைவிலி [சிறுகதை]
23 திரை [சிறுகதை]
22.சிற்றெறும்பு [ சிறுகதை]
21 அறமென்ப… [சிறுகதை]
20 நகை [சிறுகதை]
19.எரிசிதை [சிறுகதை]
18 இருளில் [சிறுகதை]
17 இரு நோயாளிகள் [சிறுகதை]
16 மலைபூத்தபோது [சிறுகதை]
15 கேளி [சிறுகதை]
14 விசை [சிறுகதை]
13. இழை [சிறுகதை]
12. ஆமென்பது[ சிறுகதை]
11.விருந்து [சிறுகதை]
10.ஏழாம்கடல் [சிறுகதை]
9. தீற்றல் [சிறுகதை]
8. படையல் [சிறுகதை]
7.கூர் [சிறுகதை]
6. யட்சன் [சிறுகதை]
5. கந்தர்வன் [சிறுகதை]
4.குமிழிகள் [சிறுகதை]
3.வலம் இடம் [சிறுகதை]
2.கொதி[ சிறுகதை]
1.எண்ணும்பொழுது [சிறுகதை]