கோவை வாசகர் சந்திப்பு, மார்ச் 2021

கொரோனாக்காலத்திற்கு முன்பு முடிவுசெய்யப்பட்ட சந்திப்பு இது, அதை மீண்டும் நடத்தலாமென முடிவெடுத்தது சென்ற அக்டோபரில். ஆனால் பலவகையிலும் நீண்டு சென்று இப்போது நடத்த உறுதியானது. பெரியநாயக்கன் பாளையத்தில் நண்பர் பாலுவின் தோட்டத்திலுள்ள பண்ணைவீட்டில்.

பாலு பொறியியல் தொழிற்சாலை ஒன்றை நடத்துகிறார். சரியாக என்ன செய்கிறார் என்றால் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் கோவையிலிருந்து 20 கிலோமீட்டரில் உள்ளது அவருடைய பண்ணைவீடு. ஏற்கனவே அங்கேதான் புத்தாண்டு கொண்டாட்டம்.

விழாக்களில், நிகழ்வுகளில் வாசகர்களைச் சந்திப்பதும் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொள்வதும் வழக்கமானதுதான். ஆனால் அங்கே உரையாடல் இயல்வது அல்ல. வெறுமே கைகுலுக்கலுடன் முடிந்துவிடும். ஆனால் இலக்கிய உரையாடல் என்பது வேறுவகை. அதற்கு ஒரு தொடர்ச்சி தேவை. ஒருவர் நம் உள்ளத்தில் பதிய வேண்டும்

அதைவிட அவர்களுக்குள் ஓர் அறிமுகம், உரையாடல் உருவாகவேண்டும் ஆகவேதான் இச்சந்திப்புகள். 2016ல் தொடங்கி ஐந்தாண்டுகளாக நிகழ்ந்து வரும் சந்திப்புகள் இவை. ஆண்டுக்கு குறைந்தது மூன்று எனக்கொண்டால் 12 சந்திப்புகள் வரை நடந்துள்ளன.

கோவைக்கு முந்தைய வாரம்தான் வந்து மீண்டிருந்தேன். திங்கள் சென்று சேர்ந்து வெள்ளி மீண்டும் கிளம்பினேன். ரயில் நிலையத்திற்கு கதிர்முருகன் வந்திருந்தார். ஏற்கனவே வந்து சேர்ந்திருந்த சென்னை குழு காரிலேயே இருந்தது. அவர்கள் காலைமுதல் வந்துகொண்டே இருந்திருக்கிறார்கள்.

பண்ணைவீடுகளில் சந்திப்பு நடத்துவதிலுள்ள சிக்கல் அனைவரையும் ஒன்றாகச் சேர்ப்பது. அதில் கதிர் முருகன் உழன்றுகொண்டிருந்தார். அப்போது கூட எவரோ எங்கோ வந்துகொண்டே இருந்த ஃபோன் வந்துகொண்டே இருந்தது. செல்லும் வழியில் ஒரு காபி சாப்பிட்டோம்

பண்ணைவீட்டுக்குச் சென்றதுமே பேசத் தொடங்கிவிட்டோம். இத்தகைய சந்திப்புகளின்போது பெரும்பாலும் கேள்விகளை ஒட்டியே பேச்சுக்கள் இருக்கும். அத்துடன் நான் எப்போதும் சொல்ல விரும்புபவை, அப்போது தோன்றி முன்செல்பவை சில உண்டு.

பொதுவாக நான் இலக்கியம் என்னும் ‘மிஷன்’ பற்றி எல்லா உரையாடல்களிலும் சொல்வேன். ஒருவகையில் முப்பபதாண்டுகளுக்கு முன் சுந்தர ராமசாமி என்னிடம் சொன்னவை அவை. அவற்றை திரும்பத்திரும்பச் சொல்லி நிலைநாட்ட வேண்டியிருக்கிறது. கையளித்துச் செல்லவேண்டியிருக்கிறது. இவை ஒரு இலக்கியவாதியின் சொற்கள் அல்ல. இச்சூழலில் பல தலைமுறைகளாக இருந்துவரும் சிறிய, ஆனால் அழியாத ஒரு தரப்பின் குரல்.

இலக்கியத்தை வேடிக்கையாக, போகிறபோக்கில் செய்வதாக எண்ணிக்கொள்ளும் மனநிலைக்கு எதிரான ஒரு தீவிரத்தை உருவாக்கவே எப்போதும் முயல்கிறேன். இலக்கியம் என்பது பொழுதுபோக்கு அல்ல. கதைசொல்லல் அல்ல. அது ஒரு ‘கலை’ மட்டும் அல்ல. ஓர் ‘அறிவுத்துறை’ மட்டும் அல்ல. அது ஒரு பண்பாட்டை உருவாக்கி, நிலைநிறுத்தும் தொடர்ச்செயல்பாடு.

ஒரு சமூகத்திற்கு இறந்தகாலம் எதிர்காலம் இரண்டுமே இலக்கியத்தால்தான் உருவாக்கி அளிக்கப்படுகின்றன. வரலாறு என்பதே உண்மையில் இலக்கியத்தின் கொடைதான். பண்பாடு என்பது இலக்கியத்தின் இன்னொரு முகம் மட்டுமே. இலக்கியம் அன்றாடவாழ்க்கையால் ஒவ்வொரு கணமும் மறக்கப்படுபவற்றை நினைவில் நிறுத்தும் கடமை கொண்டது. காலம் என்னும் நீட்சியை புறவயமாகச் சித்தரித்துக் காட்டும் பொறுப்பு கொண்டது. எதிர்காலக் கனவுகளை உருவாக்கும் பொறுப்பு கொண்டது.

அப்பொறுப்பை வாசகர்- எழுத்தாளர் இரு சாராரிடமும் வலியுறுத்துவதே என் நோக்கம். அவர்கள் மிக எளிய ஒரு செயலில் ஈடுபடுபவர்கள் அல்ல. அவர்கள் யுகத்தை கட்டமைப்பவர்கள். மிகச்சிறிய அளவிலாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரு மையச்செயல்பாட்டில் இருக்கிறார்கள்.

அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒருவர் தன் தலைக்குமேல் இன்னொருவரை நிறுத்தக்கூடாது. அரசியல்தலைவர்கள், அரசியல்கோட்பாட்டாளர்கள், தத்துவவாதிகள் எவராயினும் சரி, அவர்கள்மேல் கண்மூடித்தனமான் வழிபாட்டுணர்ச்சி கொண்டவர் இலக்கியவாதியே அல்ல. அவர்களிடமிருந்து வழிகாட்டுதல்களை, ஆணைகளை பெற்றுக்கொள்பவர் வெறும் கருத்தியல்கூலிப்படைகள்.

எழுத்தாளனிடமிருக்கவேண்டிய அடிப்படைப் பண்பே அந்த தன்னிமிர்வுதான். தான் வரலாற்றை சமைக்கிறோம் என்னும் தன்னுணர்வுதான். கும்பலில் கோஷமிடுவது, கூட்டத்தில் ஒருவராக ஓடுவதன்மேல் ஆழ்ந்த அருவருப்பு ஒருவனுக்கு இல்லையேல் அவன் ஒருபோதும் கலையை உருவாக்கப்போவதில்லை.

ஆசிரியர்கள் அவனுக்கு இருக்கலாம். அவர்கள் இலக்கிய முன்னோடிகளாக, தத்துவ ஆசிரியர்களாக, ஆன்மிக குருக்களாக இருக்கலாம். ஆனால் இலக்கியவாதி அவர்களுடன் ஆழ்ந்த அகவயமான உரையாடலில்தான் இருக்கிறான். அவன் இன்னொருவரின் செயல்திட்டத்தின் கரு அல்ல. இன்னொருவரின் படையின் உறுப்பினன் அல்ல. அந்த தன்னுணர்வை உருவாக்கவே எப்போதும் முயல்கிறேன்.

ஆனால் இது எளிதல்ல. இங்கே எழுதக்கூட வேண்டியதில்லை. வாசிக்க ஆரம்பித்தாலேபோதும், கும்பல் சுற்றிலும் கூடிவிடும். அரசியல்சரிகள் சொல்லி மிரட்டுவார்கள். கூட்டுமனுக்களில் கையெழுத்திட, ஊர்வலங்களில் கோஷமிட, தலைமைகளை ஏற்று பின்தொடர, கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஒப்புக்கொண்டு அதன்படி வாசிக்கவும் எழுதவும் வற்புறுத்துவார்கள். ஏற்காவிடில் வசைபாடுவார்கள். ஏளனம் செய்வார்கள்.

நாம் நினைப்பதைவிட வலிமையானது இவர்களின் இந்த சூழ்ந்துகொள்ளுதல். இவர்களை நாம் உள்ளூரப் பொருட்படுத்துவதில்லை. ஏளனமும் கசப்பும்தான் இருக்கும். ஆனால் இந்த அறிவிலிகளின் எண்ணிக்கை மிகப்பெரியது. இவர்களால் நம்மை சோர்வுறச் செய்யமுடியும். இலக்கியவாதி தனித்தவன், அவ்வப்போது உளச்சோர்வுகளுக்குள் செல்லும் தன்மை கொண்டவன். அவனை இவர்களால் சமயங்களில் மிகமிக எதிர்மறையான மனநிலைகளுக்குத் தள்ளிவிடமுடியும்

இங்கே இலக்கியவாசகன், எழுத்தாளன் இருவருமே இந்த கொசுக்கடியை தாங்கி முன்னகரும் அகவல்லமையை ஈட்டியாகவேண்டும். இது நூறாண்டுகளாக இப்படியேதான் இருக்கிறது. வெட்டிக்கூச்சல்களின் முகங்கள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கின்றன.

இவர்கள் உருவாக்கும் உளச்சோர்வு வாசகனை தலைமறைவாக இருக்கவைக்கிறது. எழுத்தாளனை சிற்றுலகில் ஒடுங்கவைக்கிறது. தன்னிமிர்வு வழியாக அதை இலக்கியவாதி எதிர்கொண்டே ஆகவேண்டும். இலக்கியச் செயல்பாட்டின் முதல் சோதனையே சிறுமையை எதிர்கொள்வதுதான். அதையே பாரதி ,புதுமைப்பித்தனிலிருந்து இன்றுவரை தலைமுறைகளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

உரையாடல்களை சிலசமயம் தீவிரமாக, சில சமயம் நகைச்சுவையாகக் கொண்டுசெல்வது வழக்கம். ஆனால் பொதுவாக அரசியல், சினிமா இரண்டையும் தவிர்ப்பது என் விதிகளில் ஒன்று. இந்த தேர்தல்காலத்தில் அரசியல் கலக்காமல் ஒரு குழு இரண்டுநாட்கள் பேசினார்கள் என்பதை வரலாறு பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

உரையாடலில் சிறுகதை, கவிதைகளின் வாசிப்பு மற்றும் எழுத்திலுள்ள நுட்பங்கள் எப்போதுமே பேசப்படும். வருபவர்கள் எழுதிக்கொண்டுவந்த படைப்புக்களை வாசித்து கருத்துச் சொல்வது வழக்கம். அதில் பூசிமெழுகல்கள் இல்லாமல் நேரடியாக வடிவம்சார்ந்த விமர்சனம் முன்வைக்கப்படும். பொதுவாக எழுதுவது பற்றிய விமர்சனம் வாசிப்பையும் கூர்மையாக்குவதை காணமுடியும்.

மாலையில் அருகிலிருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் வரை ஒரு நீண்ட நடை சென்றோம். அது ஒரு மலைவிளிம்பு. இரண்டு மலைகளின் சந்திப்பு. அப்பால் பள்ளத்தில் நெடுந்தொலைவு வரை சமவெளி, அதற்கப்பால் கேரளத்து மலைமுடிகள். அந்தியில் அப்படி ஒரு மலைவிளிம்பில் நின்று இருண்டு வரும் வானையும் விளக்கொளிகள் சுடரத்தொடங்கிய நிலத்தையும் பார்ப்பது அன்றாடத்திலிருந்து, கருத்துக்களிலிருந்து, எண்ணங்களிலிருந்து எழும் ஓர் அனுபவம்

ஐந்து கிலோமீட்டர் நடை. மீண்டும் ஐந்துகிலோமீட்டர் திரும்பி வருவதற்கு. மொத்தம் மூன்று மணிநேரம். பலருக்கு அவ்வளவு நடக்கும் வழக்கம் இல்லை என நினைக்கிறேன். அப்படியே திரும்பி வந்து அமர்ந்து மீண்டும் பதினொரு மணிவரை பேசுவதை நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அதற்குப்பின்னரும் பெண்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டேன்.

காலையில் நடை இல்லை. எழுந்து குளித்து முடிக்கவே எட்டு மணி ஆகிவிட்டது. எட்டரை மணிக்கே அமர்வு. மதியம் ஒன்றரைக்கு முடித்துக்கொண்டோம். அதன்பின் ஒவ்வொருவராக விடைபெற்றார்கள். எல்லா சந்திப்புகளிலும் இது ஓர் இனிய நிகழ்வு.

நான் மறுநாள் சென்னை கிளம்புவதாக இருந்தது. ஆகவே அங்கேயே தங்கிவிட்டேன். ஈரோடு, கோவை நண்பர்கள் உடனிருந்தனர். மாலையில் அருகிலிருக்கும் பாலக்கரை பெருமாள் கோயில் வரைச் சென்றோம். அங்கிருந்த அறங்காவலர் என்னை அறிந்திருந்தார். அவர் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும் காங்கிரஸ் காரருமான கருத்திருமனின் உறவினர். கருத்திருமன் தேர்ந்தெடுத்துத் தொகுத்த கம்பராமாயணப்பாடல்கள் பற்றி எழுதியிருக்கிறேன்.

அழகான புதிய ஆலயம். ஆனால் உள்ளிருக்கும் பழைய கட்டிடம் இருநூறாண்டு பழமைகொண்டது. பழங்குடிகளால் வழிபடப்பட்ட ரங்கநாதர் ஆலயம். அருகே சில பழங்குடி ஊர்கள் இருந்தன. இன்று பெரும்பாலானவர்கள் கோவை நோக்கி சென்றுவிட்டனர்

அந்த மாலையும் அழகியது. சூழ்ந்திருக்கும் பசிய மலைகளின் அடியில் அந்தியில் நின்றிருந்தோம். மலைக்குமேல் இன்னும் இரண்டு பெருமாள்கள் உள்ளனர் என்றார்கள். பெருமாளின் மணிமுடி முகம் நெஞ்சு கால் என ஆலயங்கள் மலையுச்சிகளில் அமைந்துள்ளன. கதிர்முருகன் எல்லா பெருமாள்கோயில்களுக்கும் ஏறிச்சென்றிருக்கிறார்.

கோவையின் அருகே இத்தனை அழகிய மலைக்கோயில்கள் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாதென நினைக்கிறேன். கூட்டம் குறைவாகவே இருந்தது. அந்தச் சூழலின் தனிமையும் விரிவும் ஆழ்ந்த அகநிறைவை அளித்தன

அன்றிரவும் பன்னிரண்டு மணிவரை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு எனக்கு சென்னைக்கு விமானம். ஊர்சென்று சேர நாள்களாகும். பின்னர் நினைவுகூர்கையில் ஒரு மெல்லிய சிறகடிப்போசையை அகத்தே எழுப்பும் நாட்கள் சில உண்டு. இவை அத்தகையவை.

முந்தைய கட்டுரைமலேசியா- ஒரு காணொளி உரையாடல்
அடுத்த கட்டுரைஇரு கேள்விகள்