எச்சம், மலை பூத்தபோது – கடிதங்கள்

எச்சம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மிகச்சுலபமான கோடுகள் வழியாக சில மாஸ்டர்கள் வரையும் கோட்டோவியம்போல் இருந்தது எச்சம். ரெஸ்ட் என்ற சொல்லை பாட்டா மண்டையிலேயே நிறுத்த முடியவில்லை. அதாவது எண்பது ஆண்டுகளாக அது ஞாபகத்தில் பதியவில்லை. ரெஸ்ட் என்றால் மிச்சம்தான். மிச்சத்தில் அமைதிகொள்ளுங்கள் என்றுதான் பொருள். தாத்தாவுக்கு இங்கேயே இன்னும் நிறையவில்லை

சென்றதலைமுறையில் இந்த மாதிரி தணியாத செயலூக்கம் கொண்டவர்களை பார்க்கமுடியும். அவர்களை நாம் இன்று ஒரு வகையான அரும்பொருட்களாகவே பார்க்கிறோம். காந்தியவாதிகள், கம்யூனிஸ்டுகள், தொழில்முனைவோர். அவர்கள்தன் இந்தியாவின் சிற்பிகள்

ஆனந்த்குமார்

***

ஆசிரியருக்கு வணக்கம்,

“அது நமக்கு செரியாவாது கேட்டியாலே” என்றார். எச்சம் கதையின் பாட்டாவின் கடைசிவரி.எழுவது எம்பது வருஷ கணக்காகும் அது அவரால் ரெஸ்டு எடுக்க முடியாது.

நான் பணிபுரியும் நிறுவன கப்பல்களில் ஞாயிறு மதியம் பிரியாணிக்குப்பின் அரை நாள் ரெஸ்டு கிடைக்கும்.அது கப்பல் துறைமுகத்தில் இல்லாமலும் அந்த நாளில் ஏதேனும் பழுது ஏற்படாமலும் இருக்கவேண்டும்.தினமும் பத்துமணிநேர உழைப்பிற்குப்பின் அந்த அரை நாள் ஓய்வை கப்பல்காரர்கள் எதிர்பார்ப்போம்.

அதுவே முழுநாள் ஓய்வு என்றால் மிக சிரமம் ஆகிவிடும் முழுநாளும் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் பகலில் தூங்கி இரவில் தூக்கம் இல்லாமல் கொஞ்சம் சிரமப்படுவார்கள் கப்பல்காரர்கள்.அசாதாரண சூழ்நிலையில்,எதிர்பாராமல் வரும் பணி சூழலை எதிர்கொண்டு பழகியவர்களுக்கு ரெஸ்ட் கொஞ்சம் கடினம்தான்.

சிலர் பணிஓய்வு வயதான அறுபது வயதுக்கு முன்னே விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்துவிட்டு  பணியில் இருந்து நின்றுவிடுவார்கள்.வீட்டிலும்,வெளியிலும் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் அதிக பட்சம் மூன்று அல்லது நான்கு வருடத்தில் வாழ்வே முடிந்துவிடும். அவ்வாறில்லாமல் குடிக்கும்,புகைக்கும் அடிமையாகி நோய்வாய்பட்டு மீண்டும் பணியில் இணைந்து இழந்த ஆரோக்கியத்தை மீட்டெடுத்தவர்களை கண்டிருக்கிறேன்.

தியான வகுப்புகளில் தியானம் கற்றுகொள்ள வருபவர்கள் சொல்வதுண்டு தியானம் வசப்படவில்லை என.எப்போதும் எதையாவது செய்துகொண்டு இருந்தவர்களுக்கு சும்மா இருத்தல் என்பது இயலாது.

எம் எ எம் ஆறுமுகபெருமாள் நாடாரும் இறுதி மூச்சு உள்ளவரை கடையை திறந்து மூடுவார்.

இன்றும் கதையை எதிபார்த்து காத்திருந்தேன். இருபத்தியைந்து  அதோடு இப்போதைக்கு நிறுத்தியுள்ளீர்கள்.எழுதி தீர்ந்து அல்ல என சொல்லியிருக்கீறிர்கள்.மீண்டும் வரட்டும் கதைகள்.

என்னால் முன்பு எப்போதும் தனிமை இயலாது.மும்பையில் இருக்கும்போதும் கப்பல் பணிக்கு வந்த போதும் தூங்க மட்டுமே அறைக்கு செல்வேன்.2014 இல் உங்கள் தளம் அறிமுகமாகி நான் வாசிப்பது இலக்கியம் என உணர்ந்தபோது தனிமை இனிமையாகிவிட்டது.தற்போது வந்த  கதைகளை வாசித்து கொண்டிருக்கையில் வந்த ஒரு எண்ணம்.பசிக்கு உணவும்,இரவு துயில ஒரு சின்ன இடமும் உங்கள் கதைகளும் மட்டும் இருந்தால் போதும் என. வாழ்வின் கடைசிநாட்கள் மகிழ்ச்சியாக இருக்க என்ன தேவை என இப்போதே தெரிந்து விட்டது.

ஷாகுல் ஹமீது.

மலைபூத்தபோது [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மலைபூத்தபோது கதையை 25 கதைகளின் வரிசையில் ஒன்றாக அப்போது வாசிக்கமுடியவில்லை. அதற்குள் நுழையவே முடியவில்லை. அது ஒரு மந்திர உச்சாடனம் மாதிரி இருந்தது. ஆனால் இந்தக்கதைகள் முடிந்த பிறகு அதை ஒரு அழகான ஃபேபிள் ஆக வாசித்தேன்.

பூக்களில் எழும் வேங்கைகள். அவைதான் ஊருக்குக் காவல். நாம் அவற்றுக்கு அவமதிப்பை இழைத்துக்கொண்டே இருக்கிறோம். அவை நம்மை மன்னித்துக்கொண்டே இருக்கின்றன

ராஜ்குமார் அர்விந்த்

***

அன்புள்ள ஜெ

மலைபூத்தபோது வாசித்தேன். சொல் எண்ணி வாசிக்க வேண்டிய கதை.

இயற்கை  என்னும் தெய்வம், தன்னை அழித்து மண்ணில் வாழும் மனிதர்களும் தன்னில் ஒரு பகுதியே என்றெண்ணி அவர்களை மன்னிக்கிறது. மலையியில் வாழும் இயற்கையே ஆன பழங்குடிகள் மண்ணில் வாழும் மக்களுக்காக அந்த தெய்வங்களிடம் பேசுகிறார்கள்.

இயற்கையில் உள்ள ஒன்றுக்கும் மற்றுக்குமான தொடர்ச்சி இக்கதையில் விவரிக்கபடுகிறது. ஆனால் வழக்கமான சொல்லப்படும் குரூரம் இல்லாமல் இங்கு இயற்கை முழுவதும் மென்மையால் இயங்குகிறது.

“ஆமாம், அதுதான், ஆகட்டும் தெய்வங்களே” என்ற மத்திரம் இயற்கை ஆகிய நீ எதை தருகிறாயோ அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீ எந்த முடிவை எடுக்கிறாயோ அதை நான் ஏற்கிறேன், ஏனென்றால் நீயும் நானும் ஒன்றே என்று சொல்கிறது. ஆனால் கதையையின் இறுதியில் மலையில் வாழும் அந்த ஆதி பழங்குடி இயற்கை மனிதன் முதல் முறையாக தெய்வதிடம் மண்ணில் வாழும் மனிதர்களுக்காக கோருகிறான். அதுவும் கனிந்து அருள்கிறது.

“இங்கே பிறந்து இறப்பவர்களும், வந்து செல்வனவும், முளைத்து மறைவனவும் கூட அந்த அழியாமையில் எஞ்சியிருக்கும்” என்னும் வாக்கியத்தை கதையில் மலை மனிதன் சொல்கிறான். அதேபோல “இலைகள் உதிர்ந்து தளிர் ஆகின்றன” என்று அவன் சொல்லும் உவமை கீதையில் ஆத்மா அழிவதில்லை என்பதற்கானது. மலையில் ஆதி மனிதன் உணர்ந்து வாழ்ந்த ஒன்றைத்தான் கிருஷ்ணன் கீதையில் சொல்கிறான்.

பூலிகளை பூக்களாக, அனைத்தையும் பொண்ணாக பார்க்க முடியும் கண் ஒன்றால்தான், தெய்வம் தரும் அனைத்தையும், “ஆமாம் அதுதான் ஆகட்டும் தெய்வங்களே” என்று ஏற்றுக்கொள்ள முடியும்.

“கிளகூட்டங்களை ஓசை எழுப்பி துரத்தினர். வயலுக்குமேல்  கிளிக்கூட்டங்கள் காற்றில் பறக்கும்  பச்சை சால்வை போல் நெளிந்து அலைக்கழிந்தன. சிறுகுறிவிகள் அஞ்சவில்லை. அவை கதிர்கள் மேல் இறங்கிய போது கதிர்களென்றே ஆயின. நெல்மனிகளை கொத்தும் பொருட்டு  நெல் மணிகள் போலவே அலகுகள் கொண்டிருந்தன. அவை சிறுகுரல் பேசி  சிறுசிறுகுகளை வீசி மேலெழுந்து அமைந்தன.” என்ற விவரிப்பு கதையில் வருகிறது.

கூட்டமான கிளிகள். சின்ன அலகுகள் கொண்ட சின்ன குருவிகள்.மண்ணில் வாழும் மனிதனுக்கும் இயற்கைக்குமான வேறுபாட்டை சித்தரிக்கும் உவமை இது. கிளியை போல் பெரிய கூட்டம் என்பதனாலேயே மண்ணில் வாழும் மனிதன் அஞ்சியவன். அவன் உணவுன்டாக வேண்டும் குலத்தை பெருக்கியாக வேண்டும். அதனால் அச்சதால் அனைத்தையும் அள்ளிவைத்து கொள்ள விரும்புபவன். பரிணாமத்தால் அதிகமாக அள்ளுவதற்காக பெரிய அலகுகளை உருவாக்கி கொண்டான் மண்  மனிதன். அதனால்தான் இயற்கையால் துரத்தப்பட்டு அவனுக்கு போதாமை எஞ்சுகிறது. மாறாக இயற்கையில் உருவகமான சின்ன குருவிகள் இயற்கையோடு ஒன்றியிருக்கிறது, மலை மனிதர்களை போல. அதற்கு தன் குலத்தை பெருக்கிகொள்ள வேண்டாம். எனவே அதற்க்கு முதலில் இயற்கை தந்த இயல்பான அந்த சின்ன அலகுகளே போதும். ஆகையால் அதற்கு போதுமான உணவு கிடைத்துவிடுகிறது. அதற்கு அச்சமும் இல்லை.

அதேபோல் கதையில் எலிகள் நெல்மணிகள் பற்றி வரும் உவமையையும் இப்படி விரித்துகொள்ள முடிகிறது. பள்ளத்தில் வாழும் மக்கள் எலிகளையும் எலியின் நெல்லையும் உண்கிறார்கள். மலை மனிதர்களுக்கு வேர்களாகி எலிகள் தெய்வம், அவர்கள் அதை உண்பதில்லை. அனைத்தையும் அள்ளிக்கொள்ள வேண்டும் என்னும் நிதானமின்மையாலேயே  மண்மனிதன் வயிலில் எலிகள் உண்பதை விட அதிகமான நெல்மணிகளை சிதறடித்து கரியாக ஆக்குகிறான். ஆதனால் வேரை அழிப்பதன் மூலம் இயற்கையும் தன்னையும் அழித்துகொள்கிறான். தரை தோண்டி எலியை உண்பதை தங்கம், வைரம், நிலகரி், எண்ணை என்று அவன் பூமியில் தோண்டுவதாக கூட பார்க்கலாம்.

மண்ணில் வாழும் மனிதர்கள் தங்கள் ஊர் தெய்வங்களையும், தங்கள் முதல் தெய்வங்களையும் அதற்க்கு செய்ய வேண்டிய காணிக்கையையும் மறந்து விட்டார்கள்.

“பொண்ணாகி பூவாகி நிக்குது தெய்வங்கள் மண்ணில் நிறையவே” என்று அதே இடத்தில் காலம் காலமா பாடும் அந்த பாடலை மனிதர்கள் காதுகொடுத்து கேட்டதில்லை.

மண்ணுக்கும் பொண்ணுக்கும் என்ன பகை என்று கேட்கிறான் மலை மனிதன். அப்படியென்றால் தரைக்கு வர நேர்ந்த மண் மனிதன் முன்பு அவன் மலையில் கண்ட பொண்ணை இழந்தான், அந்த இழந்ததை  பூமிக்கு அடியில்  தேடுகிறான். அந்த உண்மையை உணர்ந்துதான் புலிகள் பூவாக கனிந்ததா.

நன்றி

பிரதீப் கென்னடி

25 எச்சம் [சிறுகதை]

24 நிறைவிலி [சிறுகதை]

23 திரை [சிறுகதை]

22.சிற்றெறும்பு [ சிறுகதை]

21 அறமென்ப…  [சிறுகதை]

20 நகை [சிறுகதை]

19.எரிசிதை [சிறுகதை]

18 இருளில் [சிறுகதை]

17 இரு நோயாளிகள் [சிறுகதை]

16 மலைபூத்தபோது [சிறுகதை]

15 கேளி [சிறுகதை]

14 விசை [சிறுகதை]

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை

முந்தைய கட்டுரைஇரு கேள்விகள்
அடுத்த கட்டுரைநிறைவிலி, விசை – கடிதங்கள்