அறமென்ப, எச்சம்- கடிதங்கள்

 அறமென்ப…  [சிறுகதை]

அன்புள்ள ஜெ

அறமென்ப கதையை வாசித்துக்கொண்டிருந்தோம். நானும் என் நண்பர்களும் ஒரு சின்ன விஷயம் பற்றி பேச நேர்ந்தது. ஏனென்றால் அதை ஏற்கனவே நாங்கள் பேசியிருந்தோம். அதாவது பெரிய டாப் விளக்குகள் உள்ள இடங்களில் மக்கள் ஏன் மரநிழல்களிலேயே நிற்கிறார்கள்? பலமுறை இதைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

பல காரணங்கள் யோசித்தோம். முதல் விஷயம் பழக்கம். அனிச்சையாக அதைச் செய்கிறார்கள். இரண்டாவது காரணம், மக்கள் எப்போதுமே ஒதுக்குபுறமாகவே நிற்கிறார்கள். வெட்டவெளியில் நிற்பதில்லை. அதை நான் அறமென்ப கதையில் வாசித்து சுட்டிக்காட்டினேன். கார்கள் மக்கள் எல்லாம் மரநிழல்களிலேயெ நிற்பார்கள். ஏற்கனவே கார்களும் மக்களும் நிற்கும் இடத்திலேயே இரவிலும் நிற்பார்கள். இதை ஒரு ரயில்வே ஸ்டேஷனைப்பற்றி எழுதியபோது அசோகமித்திரனும் எழுதியிருக்கிறார்.அந்த விஷயம் கதையில் யோசிக்காமல் பதிவாகியிருக்கிறது. அதுதான் கலைஞனின் கண் என்று சொன்னேன்.

என்ன ஆச்சரியமென்றால் ஒரு நாள் கழித்து முகநூலில் யாரோ ஒரு மடச்சாம்பிராணி ‘ராத்திரி காரை ஏன் மரநிழலில் நிறுத்தவேண்டும்? வெயில் இல்லையே’ என ஆராய்ந்து கண்டுபிடித்து எழுதியிருந்ததை நண்பர் கொண்டுவந்து காட்டினார். எது கூர்மையான கவனிப்பால் பதிவானதோ அதுவெ இந்த அசடுக்கு தப்பாக தெரிகிறது. உங்களை திருத்தி நல்வழிகாட்டவும் முயல்கிறது.

எனக்கு உங்கள் தோரணைமேல் கொஞ்சம் ஒவ்வாமை உண்டு. அதை எழுதியும் இருக்கிறேன். ஆனால் இந்தமாதிரி மடையர்கள் நடுவே புழங்க ஒரு திமிர் வேண்டும். அந்த திமிரைத்தான் பிழை கண்டுபிடிப்பவர்கள் பற்றிய குறிப்பில் பார்த்தேன். அது நல்லதுதான். நன்றி

 

கே. ஜெயபாஸ்கரன்

எந்த ஒரு செயல் மீதும் தர்க்கத்தை அள்ளி நிரப்பி சரி என்று காட்டிவிட முடியும்தான். இங்கு பாதக செயல் என்று நாம் அலங்காய்க்கிற எந்த செயலுக்கும் அதை செய்வதற்கு தேவையான சரியாக காரணத்தை தொகுத்துகொண்டு    இறுக பற்றி இருப்பார் அதை இயற்றுகிறவர்.

 

இப்படி பல திசையில் அவரவர் அவரவர்களுக்காக சொல்ல கூடிய அறத்தை ‘அறமென்ப’ முன்வைப்பதாக புரிந்து கொள்கிறேன். இங்கு எது அறம் என்ற கேள்வி வாசகர்களுக்கு விடப்படுவதாக எடுத்துக்கொள்கிறேன். இனி நீ என்ன செய்வாய் என்ற கேள்வி எழுந்தால் “ரோட்டில் சாக கிடக்கும் ஒருவரை பார்த்தால், தூக்கி கொண்டு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு காவல் நிலையம் சென்று ஒரு கம்ப்லைன்ட் கொடுத்து விடுவேன் ” என்று தான் சொல்வேன்.

அத்தருணத்தில் செல்வா அனைத்து பதட்டத்தையும் மறந்து சடால்னு ஒரு நிம்மதி ஒரு சந்தோசத்தை உணர்கிறான். ஏன் என்று கேட்டுக்கொண்டால், எனக்கு இரண்டு காரணம் தென்படுகிறது.

  1. அனைவரிடமும் இருக்கும் நியாயத்தை புரிந்து கொள்கிறான். “ஆம் இது இப்படி தானே இருக்க முடியும். கொஞ்சம் ஒவெறா recognition எதிர் பார்த்துட்டோம் போல” என்று…
  1. பீட்டர் பார்வையில் சொல்லப்பட்ட இன்னொன்று.

மற்ற அனைவரின் கீழ்மையையும் பார்த்து தன்னை உயர்வாக மதிப்பிட்டு கொண்டு தன்னை செய்ன்ட் மாதிரி பீல் பண்ணி கொள்வது. பீட்டர் இதை எந்த உணர்ச்சியுமற்று மிக சாதாரணமாக சொல்வதை பார்த்தால் வக்கீல் தொழிலில் செல்வா மாதிரி வந்துகொண்டே இருக்கும் கேஷ்களை நிறய பார்த்திருப்பான் போல. அவன் அறிந்திருக்கிறான் “செல்வா முன்வைக்கும் ஜென் பீல்லாம் சும்மா என்றும், அவன் பிற பலவிசயங்களில் உருவாக்கும் தர்க்கம் (அறெமென்ப..) என்ன என்று கூடவே வாழும் அவன் மனைவி அறிந்திருப்பாள் என்றும்”.

நான் பீட்டருடன் உடன்படுகிறேன்

பாண்டியன் சதீஷ்குமார்

எச்சம் [சிறுகதை]

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

நிறைவிலி மற்றும் எச்சம் இரு கதைகளையும் இணைத்துப் பார்த்து உங்களின் தற்போதைய மனநிலையை ஊகித்துக் கொண்டேன்.

நிறைவிலி கப்பரையைப் பார்த்தபோதே நினைத்தேன் ஏதோ ஒன்று பெரியதாக வரப்போகிறது என்று. வாழ்நாள் முழுக்க தினம் ஒரு பத்து பக்கம் எழுதக்கூடிய ஏதோ ஒன்றை கையில் எடுக்கப் போகிறாரோ?

தமிழக மற்றும் இந்திய மாற்று வரலாறு, இந்து பௌத்த சமண முரணியக்கம், இன்றைய நவீன மெய்யியல், நாளைக்கான மானுடப் பேரறம் என இன்னும் தொடப்படாத எத்தனையோ உள்ளன தமிழில். உங்களுக்கே உரித்தான ஒரு மாபெரும் புனைவுக் காவியப் பெரும் பரப்பைக் கூட இவற்றை உள்ளடக்கி உங்களால் படைக்க முடியும்.

வெண்முரசினும் மீப்பெரியது ஏதேனும் வந்தால் அந்தக் கப்பரைக்கு நன்றி! பாத்திரங்கள் இரண்டு வகை ஒன்று எவ்வளவு போட்டாலும் எப்போதும் நிறைவதே இல்லை மற்றொன்று எவ்வளவு எடுத்தாலும் குறைவதே இல்லை. இலக்கிய வாசகர்கள் எல்லோரும் முதல் வகை பாத்திரம். ஜெயமோகன் இரண்டாவது வகை பாத்திரம். தமிழின் நல்ஊழ்.

ரெஸ்ட்டுன்னா மிச்சம். நம்ம பாஷையில மிச்சம்னா எச்சம். எண்பது வயசு பாட்டாவே ரெஸ்ட் வேண்டாம்னு முடிவு பண்ணிவிட்டார்.

எங்கள் ஜெயமோகன் பாட்டா மிச்சம் சொச்சம் வைக்காம தமிழில் உச்சம் நோக்கி சிறிதும் எச்சம் விடாமல் எழுதிக் குவிக்க முடிவு செய்துவிட்டார் என நெஞ்சம் மகிழ்ந்தேன். எச்சம் மிச்சம் எதுவானால் என்ன நமக்கு அதுவே உசித உச்சம். என்நாளும் படித்து பகிர்ந்து கொண்டாட்டம்.

நீங்கள் இருக்கும் வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதிக் குவித்து விட்டுப் போகவேண்டும் என்பதே எங்கள் அனைவரின் பேரவா. உங்களைப் போன்ற ஒரு எழுத்து பேரசுரன் தமிழின் வரம்.

மழை பெய்யும் பொழுது ஏரிகளிலும் குளங்களிலும் ஆறுகளிலும் அணைகளிலும் நிறைத்து வைத்துக் கொள்வோமே அதுபோல உங்கள் அமுத எழுத்துக்களை நிறைத்துக் கொள்வோம்.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

 

அன்புள்ள ஜெ

எச்சம் மிக ‘ஈஸியாக’ எழுதப்பட்ட அருமையான கதை. உழைப்பில் இன்பம் கண்ட பாட்டா ஒரு கர்மயோகி. அவருக்கு ஓய்வு என்பது சாவுதான். ரெஸ்ட் வேறு கட்டையை சாய்த்தல் வேறு என பாட்டா உணர்ந்திருக்கிறார். ரெஸ்ட் என்பது எஞ்சுவதுதான். மிச்சம்தான். அதை அவர் ஓடி முடிந்தபிறகுதான் உணரமுடியும். உற்சாகமான உரையாடல் வழியாகவே செல்லும் கதை. அதில் பாட்டாவின் குணச்சித்திரமே துலங்கி வருகிறது. பல இடங்களில் வெடித்துச் சிரித்தேன். குறிப்பாக ஏசுவும் முருகனும் அமரக்கூடாது என்னும் பாட்டாவின் ஆன்மிகப்புரிதல்

ராஜசேகர்

முந்தைய கட்டுரைஇருபத்தைந்து கதைகள்
அடுத்த கட்டுரைஎரிசிதை,சிற்றெறும்பு- கடிதங்கள்