அன்புள்ள ஜெ,
அறமென்ப கதையைப் பற்றி நண்பர்களிடம் பேசியபோது பெரும்பாலானவர்களுக்கு இதற்குச் சமானமான ஓர் அனுபவம் இருப்பதைக் காணமுடிந்தது. பெரும்பாலும் அவர்கள் எளியவர்கள், ஏழைகள் என நினைக்கும் மனிதர்கள் பணம் பறிப்பதில் தீவிரமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். ஏன் அதிர்ச்சி அடையவேண்டும், தேர்தலில் வாக்கு சேகரிக்க வருபவர்களிடம் வெளிப்படையாக பணம் கேட்கும் மக்கள்தானே என்று நான் பதில் சொல்வேன். அகப்பட்டவனை மாட்டிவிட்டு மிரட்டுவது, பணம் பறிப்பது இங்கே சாதாரணம். போலீஸும் பலசமயம் உடந்தை. சிலசமயம் தலையிட மாட்டார்கள். எனக்கே ஓர் அனுபவம் உண்டு. நமக்கு வழக்கு போலீஸ் ஸ்டேஷன் என்றெல்லாம் சொல்லும்போது வரும் பயம்தான் இங்கே மிரட்டலுக்கு அடிப்படையாக அமைகிறது.
ஆனால் இந்தக்கதையில் செல்வா அடைந்தது என்ன? அவன் தன்னை உணரும் ஒரு கணம் என நினைக்கிறேன். தன்னைப்பற்றி உயர்வாக நினைக்கும் ஒரு எண்ணத்தில் இருந்து விடுதலை அடைகிறான். தன் இயல்புப்படி இருக்கலாம் என நினைக்கிறான். நாம் ஓர் உதவியைச் செய்கிறோம், அதைப்பெற்றவர் கண்ணீர் மல்கி நன்றியுடன் இருக்கவேண்டும் என்று நினைக்கும் சிறுமை உடனே வந்துவிடுகிறது. அவரவருக்கு அவரவர் நியாயங்கள் என்ற நினைப்பை அடைந்து தன்னை தெய்வத்தின் இடத்தில் வைத்த நிலையில் இருந்து அவன் விடுதலை அடைகிறான். அந்த விடுதலை அடையும் கணம் விளக்கப்படாமல் கதையில் உள்ளது. அதுதான் கதையே
கதை பற்றிப் பேசும்போது பெரும்பாலானவர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகும் அவர்களுக்கு நடந்ததையும் அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும் சீற்றத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சீற்றம் ஏமாற்றம் எல்லாவற்றிலிருந்தும் செல்வா விடுதலைபெறுகிறான்
ஆர்.அருண்
***
அன்புநிறை ஜெ,
அறமென்ப… – இக்கதையின் தலைப்பில் உள்ள மூன்று புள்ளிகளோடு சேர்த்தே இக்கதையை புரிந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. ‘அறமெனப்படுவது யாதெனின்…’, ‘அறத்தாறிது…’, ‘அறம் என்பது…’, என்பது போன்ற அறம் குறித்துப் பேசும் தங்களது பல கட்டுரைகளின் தலைப்பில் வரும் முற்றுப் பெறாத புள்ளிகள் அவை.
மிக நேரடியான கதையாக, உரையாடல்கள் வழியாக நகரும் கதையாக இதை அமைத்திருப்பதே, இதன் பேசுபொருளாகிய அறம் அப்படி எளிமையாக, முற்றாக வகுத்துவிட முடியாத ஒன்றாக இருக்கிறது என்பதை சொல்லத்தான் எனத் தோன்றுகிறது.
இக்கதையில் முதல் வாசிப்பில் உருவாவது பதற்றம், செல்வாவின் பார்வைத் தரப்பில் வாசிப்பவர் அடையும் பதற்றம். “நான் நல்லதுதானே செய்தேன், எனக்கேன் இப்படி?” என்ற கேள்வியோடு அவனுடைய அதே பதைபதைப்போடுதான் வாசிக்க நேர்கிறது. ஆனால் அந்தக் கதையின் நோக்கம் அந்தச் சிடுக்கிலிருந்து அவன் எப்படி வெளியே வந்தான் என்பதல்ல, அதற்கு மட்டும் எழுதப்படவில்லை இக்கதை என்பதை அந்த முடிவுறாத தொடர்புள்ளிகள் நினைவுறுத்துகின்றன.
இது பல தரப்புகளின் அறமுரண்பாடுகளுக்கு இடையே ஆடும் துலாக்கோலின் ஊடாட்டமே இக்கதை. இதில் வரும் வக்கீல்கள், காவலர்கள், விபத்தில் அடிபட்டவர் குடும்பம் அனைவரும் அவரவருக்கான தரப்பின் நியாயங்களையே பேசுகிறார்கள். அதில் உண்மையும் இருக்கிறது. செல்வா ஒரு உயிரைக் காக்கும் பொருட்டு செய்த உதவி அனைத்திலும் மேலான அறம், என்றாலும் அவரவர் தரப்பு அற வாதங்கள் அறத்தின் துலாமுள்ளை நடுங்கச் செய்து கொண்டுதானிருக்கும். அந்த முள் நிலைகொள்ளும் தருணம் வருவதே அவனுள் எழும் புன்னகை. அந்தக் கிழவிக்கு அவன் மீண்டும் உதவ முற்படுவதே அதை அவன் தனக்கே உறுதி செய்து கொள்ளும் கணம்.
மிக்க அன்புடன்,
சுபா
வணக்கம் ஜெ,
பணி நிமித்தமாக அல்லது வேறு சந்தர்ப்பங்களில் சிங்களவர் யாரையேனும் சந்தித்து உரையாடுவதுண்டு. அவர்களில் பலர் எனது சிங்கள அறிவை கிலாகித்துவிட்டு “நாங்கள் தமிழரை தாழ்வாக நினைப்பதில்லை. அவர்களை நண்பர்களாகவே எண்ணுகிறோம்” என்று கூறுவதுண்டு. எப்போதும் எனது பதில் “நானும் அப்படித்தான். சிங்களவரை தாழ்வாக நினைப்பதில்லை” . அவர்கள் முகம் சுண்டிவிடும்.
இந்தக்கதை அவ்வாறான ஒவ்வாமையை அளித்தது. கார்ப்பரேட் “வெற்றிகளை” பீற்றிக்கொள்ளும் ராம் “சாப்பாட்டிற்காக வந்திருக்கிறாய் என்று நினைத்துக் கொள்வார்கள்” என்றும் வேறு பல கூற்றுக்கள் மூலமாகவும் தன்னைத்தான் கேவலப்படுத்துகிறார். பகா அவரிடம் ஆளுமைப் பயிற்சிக்கு வரவில்லை. அவளது சாதுரியமான பேச்சினையும், பெருந்தன்மையையும் பொறுமையையும் ராம் பழகிக்கொள்ளலாம் :)
ராகா
***
அன்புள்ள ஜெ
நிறைவிலி கதையின் மையம் என்பது பகாவின் இயல்புதான் என நினைக்கிறேன். ராமின் இயல்பு ஒரு தோரணையுடன் இருக்கிறது. அத்தகையவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். தங்களுக்கு தேவையானவர்கள் தேவையான தகுதியுடன் இருக்கவேண்டும், அவ்வளவுதான். அவரையும் புன்னகையுடன் எடுத்துக்கொள்கிறாள். அவள் ஜெயிப்பவள்.
செந்தில்குமார்