அன்புள்ள ஜெ,
வெண்முரசு வரிசை நாவல்களில் வெய்யோன் நாவலை இன்று வாசித்து முடித்தேன். கர்ணன் என்ற ஒரு மனிதன் பலவாறாக என் சிறுவயதில் இருந்தே என்னுள் நுழைந்திருந்த ஒரு ஆளுமை. மகாபாரத கதைகளை செவி வழியாக அறிய தொடங்கிய நாள் முதலே அவனில் இருந்த ஈர்ப்பு ஒரு வித கதாநாயக தன்மை உடையது. இன்று நினைக்கையில் மகாபாரதம் என்றதும் அவன் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. காலப்போக்கில் எங்கோ மறைந்திருந்த அவனை பற்றிய கனவுகள், வெண்முரசை வாசிக்க தொடங்கும் பொழுது முன் வந்து நின்றன. ஆனால், நீங்கள் வெண்முரசின் வழியாக என்னை எடுத்து சென்றது ஒரு பெரும் தரிசனத்தை நோக்கி. அங்கு அனைத்து மனிதர்களும் என்னுள் நிறைந்திருந்தனர். ஒவ்வொருவரும் தன்னளவில் வளர்ந்து வரும் பொழுதெல்லாம் ஒரு தலைமுறை காலகட்டத்தை வாழ்ந்து முடித்த ஒரு நிறைவு மனதில் ததும்பி இருந்தது. ஒவ்வொரு நாவலையும் வாசித்து முடித்த பிறகு உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்தாலும், எனக்குரிய தயக்கமும், கூச்சசுபாவமும் என்னை வென்றன. ஆனால், வெய்யோன் நாவலின் இறுதி கட்டங்களை வாசித்து முடித்த பிறகு தங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றிய மறுகணமே தட்டச்சு செய்ய தொடங்கி விட்டேன்.
முதற்கனல் நாவல் வரும் காலங்களில் நடக்கவிருக்கும் அனைத்திற்கும் ஒரு கனல் என்றால், அதன் முதல் அனல் பரவல் இங்கு தான் தொடங்குகிறது. கர்ணன் தன்னையும், தன்னை சுற்றியும் ஓயாமல் நோக்கி கொண்டிருக்கிறான். அவனை பற்றிய மற்றவர்களின் பார்வையை அவன் கடந்து செல்லும் விதங்கள் ஞானத்திற்கு உரியவை. துரியோதனனும் அவனும் மிக சிறந்த நண்பர்கள் என்று சொல்லப்பட்டாலும், நீங்கள் அவர்களின் உறவை எடுத்து செல்லும் ஒவ்வொரு நிகழ்வும் உணர்வு மேலிட்டு கண்ணீரை உதிர்த்தன கண்கள். கௌரவர்கள் அனைவரும் அவன் மேல் கொண்ட மதிப்பிற்கு சாட்சி அங்கநாட்டில் சுஜதானின் கலிங்கத்து சேடியை நோக்கி உதிர்க்கபடும் சொற்கள். சிறிது நேரம் பித்து பிடித்தாற்போல் இருந்த நொடிகள் அவை. அவனது அஸ்தினாபுர வருகையை அவர்கள் அணுகும் விதமும், அவர்கள் அவனை மூத்தவரே என்று அழைப்பதும் நிறைவான தருணங்கள்.
பீமன் இந்திரப்ரஸ்த நகர் விழாவிற்கு அழைப்பதற்கு வரும் நிகழ்விலிருந்து கதை ஒரு கூரிய பயணத்தை மேற்கொள்வதற்கு தன்னை தயார் செய்து கொள்வது போல் உள்ளது. அங்கிருந்து கர்ணன் நாகர்களை எதேச்சையாக சந்தித்து அங்கிருந்து ஜராசந்தனை துரியோதனிடம் அழைத்து செல்வது எல்லாம் ஊழின் கணங்கள். தன்னை அறியாமலே அவன் ஒரு பெரும் வஞ்சத்திற்கு வழிகோலுகிறான்.
ஜராசந்தனையும் துரியோதனையும் ஒன்றாக பார்க்கும் பீமனும், அர்ஜுனனும் தன்னுள் ஒரு வஞ்சத்தின் துளியை உணர்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதிலிருந்து அந்த இரெண்டு நாட்களும் அவர்களுக்குள் ஒரு நச்சு விதை துளிர்க்க தொடங்கியது என்று தெரிகிறது. துரியோதனன் இடறி விழும் இடத்தில் அந்த நஞ்சு தன்னை முன்னிறுத்துவது ஒரு பெரும் வஞ்சத்திற்கான தொடக்கம். அப்பொழுதும் கர்ணன் அதை கடந்து செல்லவே விழைகிறான். ஆனால், இறுதியில் அந்த அஸ்வசேனனை கையில் எடுத்து அவன் உரைக்கும் வஞ்சினம் ஒரு நொடி அச்சத்தை உடல் முழுதும் சொடுக்கி சென்றது.
அன்புடன்,
நரேந்திரன்.