கேளி, குமிழிகள்- கடிதங்கள்

கேளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இதுவரை நீங்கள் எழுதிய சிறுகதைகளிலேயே மிக மிக தனித்துவம் கொண்ட, இசையின் தித்திப்பை அதன் விஸ்வரூபத்தை அப்படியே அள்ளி கொண்டு வந்த கதை.

வெண் முரசின் நீலனின் குழலிசைக்கு மேலும் அற்புத இசை தருணத்தை உங்களால்  எழுத முடியும் என்று கேளி கதைக்கு முன்பாக எவரும் சொன்னால் அது முடியவே முடியாது என விமர்சன தாண்டவம் ஆடி இருப்பேன். :)

கடலூர் சீனு

 

அன்புள்ள ஜெ

இசையனுபவம் அல்லது கலையனுபவத்தை எழுத முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது. நான் பார்த்தவரை ஒன்றுண்டு, நேரடியாக அதைச் சொல்ல ஆரம்பித்தாலே அபத்தமான மொழிப்பாய்ச்சலாக, அல்லது வெறும்படிமமாக ஆகிவிடுகிறது. சிறந்த வழி என்பது அந்தச்சூழலைச் சொல்வதுதான். அந்தச் சூழலிலேயே இசையின் மயக்கம் இருக்கும். அந்த சூழலை சொல்லி அதில் இசை திகழ்வதைச் சொல்ல முடிந்த அருமையான கதை கேளி

என்.ரங்கராஜன்

குமிழிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

குமிழிகள் கதையின் வாசிப்புகளை பார்த்து ஆச்சரியம்தான். ஆனால் ஆச்சரியமும் இல்லை. சங்ககாலம் முதல் நாம் பெண்ணை முகிழ்முலை, பணைமுலை, வறுமுலை என சொல்லித்தான் அடையாளம் செய்திருக்கிறோம். பெண்ணின் அடையாளம் அது. ஆனால் இனி அது பெண்மையின் அடையாளம் மட்டுமே, காமத்தின் அடையாளம் அல்ல என்னும்போது அது பெரிய சிக்கலைத்தான் உருவாக்குகிறது. பிரச்சினை தத்துவார்த்தமாக ஆகிவிடுகிறது

ராஜ்குமார் அருண்

வணக்கம் ஜெ

‘ஆமென்பது’ வாசித்தபின்’குமிழிகள்’ குறித்து மீண்டும் எழுதத் தோன்றியது. இரண்டிலும் ஆணவத்தின் வெளிப்பாடான தனிமனிதவாதத்தின் இருவேறு வெளிப்பாடு. இங்கே நிலவும் தனிச்சுயம், ‘நான்’களின் தன்மை என்ன ? அது எவ்வாறு முற்போக்காகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது ? ஆணவத்தின் திரட்சியாகவே இந்தச் சுயம் உருவாகிறது. எல்லாவித போக்குகளும் ஒரு பின்னணியை, காரணத்தைக் கொண்டிருக்கும். ‘தனி மனிதன்’ நிராகரிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுள்ள நிலைமையை அது அடைந்திருக்கிறது. உறவுகள், குடும்ப அமைப்புகளில் நிலவிய அதிகாரப் போக்கும், வன்முறையும், இத்தகைய அதீத தனிமனிதவாதத்திற்கு பெரும் காரணங்களாய் விளங்குகின்றன. ஆனால் இது இன்று ஒரு முட்டுச்சந்தை அடைந்துவிட்டது என்றே எண்ணுகிறேன். இன்று மனிதனின் தனித்தன்மைக்கும் சமூகத்தன்மைக்கும் சமநிலை ஒன்றை அடைய வேண்டிய இடத்தில இருக்கிறோம். தனிமனிதவாதம் பேசத்தொடங்கிய காலத்திலும் இது பரவசமாக அணுகப்பட்டிருக்கும். ஜெயகாந்தனின் ‘அந்தரங்கம் புனிதமானது’ அத்தகைய காலகட்டத்தில் எழுதப்பெற்ற கதை. சரியாக இந்த மடைமாற்றத்தை விளக்கும் கதை. ‘ஏய் மந்தைக் கூட்டமே, அந்தரங்கம் என்ற ஒன்று இருக்கிறது தெரியுமா உனக்கு’ என்ற தொனியில் எழுதப்பெற்ற கதை.  ஆனாலும் இன்றைய வாசிப்பில்  அதன் ஒரு கோணம் லிலியின், ஜயானனின் போலித்தனத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. உறவுகளில் உள்ள அத்தனை போதாமைகளையும் சாதகமாக்கிக் கொண்ட போலித்தனம் அது.

லிலி தன் வாழ்க்கைச் சூழல், தொழில் சூழல், தனது மேட்டுக்குடித்தனம், ஆகியவை சார்ந்து தன்னை எப்படி முன்னிறுத்துவது, வெளிப்படுத்துவது என்று மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கிறாள். அதாவது பிறரிடம் தன்னை எப்படி வெளிப்படுத்துவது என்பது மட்டுமே. ஆனால் அதை அவள் ஏற்கவில்லை. அது தனது தன்னம்பிக்கை, தன்முனைப்பு என்று சொல்கிறாள். அதாவது ‘பிறரை’ நோக்கிச் செல்லும் தனது ஆசைகளையும், விழைவுகளையும் வலுக்கட்டாயமாகத் ‘தன்னை’ நோக்கித் திரும்புகிறாள். இந்த இடமே அவளைப் போலி என்று வைக்கிறது. மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வது, ஒப்பனை செய்துகொள்வது எல்லாமே அவர்களின் சமூகத் தன்மையின் வெளிப்பாடுதான். அதில் தனிச் சுயத்திற்கு எந்தப் பொறுப்பும் இல்லை. அழகுபடுத்துவது என்பது ஒருவகையில் காமத்தின் வெளிப்பாடே. உடல்களின் சேர்க்கையற்ற அருவமான காமம். அது யாரை நோக்கியது ? அது தனிமனிதர்களை நோக்கியதாகவோ, எதிர் பாலினத்தை நோக்கியதாகவோ இருக்க வேண்டியதில்லை. அது அமைப்பை நோக்கியதாக இருக்கலாம். அப்படி வெளிப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நிறைவு என்பது அவர்களின் செயலூக்க விசையாகவும் இருக்கும். பிறரை ஈர்ப்பது என்பது நேரடியான காமத்தின் சமிக்ஞையாக இல்லாமலிருக்கலாம். ஆனாலும் அது ரகசியமான கிளர்ச்சியைத் தருகிறது. பெண்கள் விஷயத்தில் அது ஆண்களை நோக்கியதாக மட்டும் இருக்க வேண்டியதில்லை. பெண்களை நோக்கியதாகவும் இருக்கும். பெண்களுக்கிடையேயான மெல்லுணர்ச்சி அதன் காரணமாகும்.

சினிமா நடிகர், நடிகைகள் விஷயத்தில் இதை கவனிக்கலாம். இன்றைய முதலாளித்துவச் சூழலில் இவர்கள் தங்களை இருப்பதிலேயே சிறப்பாகக் காட்டிக்கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதை விட்டு அவர்கள் வெளியே வரமுடியாது. பிறரிடம் ஏக்கத்தைத் தோற்றுவித்தல் என்பது அந்த நிறைவின் முக்கிய  அம்சம். அதுவும் எதிரியிடம்/ எதிர்த்தரப்பிடம். தன்னை ஒரு ஆளுமையாகக் காட்டிக் கொள்வதும் சரி, அழகாகக் காட்டிக் கொள்வதும் சரி அது பிறரை உத்தேசித்துதான். ஆனால் நாம் ஏன் அதை அப்படி எண்ணுவதில்லை (அ) ஒப்புக்கொள்வதில்லை ?

இன்று பொதுவாக நம்மிடம் சமூகத்தன்மை மீது ஒருவித கசப்பு உள்ளது. மேலும் இன்று வென்றவர்களாகக் கருதப்படும் தரப்பினரின் விஷயங்களை வரித்துக் கொள்ளும் போக்கு உள்ளது. அதையே நாம் உயர்வானதும் முற்போக்கானதும் என முடிவுசெய்துவிடுகிறோம். இன்று வென்ற தரப்பாகத் தோற்றமளிக்கும் மேற்கின் விழுமியங்களான தன்னை முன்னிறுத்துவது, அதீத சுயம் போன்றவைகளை நாம் கண்மண் தெரியாமல் குழப்பியடிக்கிறோம். இன்று இணைய வெளியில் இளைஞர்களின் ஸ்டேடஸ்களை பார்க்கும்போது இது தெரியும். ‘நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கு யாரும் அடிமையில்லை’, ‘என் உடல் என் உரிமை’, ‘I Love Myself’, ‘நான் யார் என்பதை பிறர் முடிவு செய்ய முடியாது’, ‘ நான் என்னை செதுக்குகிறேன்’, ‘எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது’ போன்ற ‘உரிமை’ வசனங்கள் மலிந்து கிடக்கின்றன. தன்னளவில் இவ்வசனங்கள் சரிதான் என்றாலும் இவைகளை எதோ ‘தன்னை நோக்குதல்’, ‘தன்னை உணர்தல்’ என்ற ஆன்மீக விஷயமாகக் கொள்ளமுடியாது. இது சமூகத்தின் மீது, உறவுகளின் மீது ஏற்பட்ட கசப்பின் வெளிப்பாடே.

அதனால் நாம் நமது வெளிப்படுத்தல்களை, அழகுபடுத்தல்களை பிறருக்காக என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறோம். குறிப்பாக பெண்கள் தங்கள் செயல்களை ‘ஆண்களுக்காக’ என்று ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆண்களை எதிர்நோக்குவது, அவர்களைக் கவர முற்படுவது, அவர்களை விரும்புவதைக் கூட வெளிப்படுத்தக் கூடாது என்பது காலம்காலமாக பெண்களுக்கு கற்பிக்கப்பட்ட ஒன்று. ஆண்களை விரும்புவது மட்டுமல்ல, அவர்களை வெறுப்பதிலும் உதாசீனப்படுத்துவதிலும் இதை செய்ய முடியும். லிலிக்கு ஆண்கள் பொருட்டல்ல.  Just Hanging balls. அதனாலேயே அவர்கள் முன் தன்னை வெளிப்படுத்த விரும்புகிறாள். அதாவது, ‘நீ என் அழகையும் ஆளுமையையும் கண்டு புழுங்கிச் சாக வேண்டும்; நான் உன்னை அந்த அளவுக்கு தொந்தரவு செய்பவளாக இருக்க வேண்டும். ஆனால் நீ எனக்கு ஒரு பொருட்டே அல்ல. Just Hanging balls…. த் தூ… அவ்வளவுதான்.

கே.வி.ஜயானனின் தேவை என்ன ? அவர் தேடியது ஒரு தந்தையை. தடவிக்கொடுக்கும் தந்தையை அல்ல; தட்டிக் கேட்கும் தந்தையை. தன்மீது பிறர் உரிமை எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது அடிப்படையான விழைவு. தந்தையைத் தேடும் குழந்தை. தன்னை பிறரிடம் ஒப்புக்கொடுப்பது; சரணாகதி. அதுவே அவருக்கான தேவை. சுயம் என்பதும் தனிமை என்பதும் கடந்து அடைய வேண்டிய விஷயமாகவும், சாதனா மூலம் கைகொள்ள வேண்டிய விஷயமாகவும் இருக்க வேண்டும். சாதனா இல்லாத தனிமை இறுதியில் வெறுமையைக் கொடுக்கும். அது வெறுமனே தர்க்க அறிவு கொடுக்கும் ஆணவ நிறைவு மட்டுமே. உறவுகளை அர்த்தப்படுத்துவதே உரிமை எடுத்துக் கொள்வதில்தான் உள்ளது. அடிப்படையில் உறவுகள் என்பது ஒப்பந்தம் போன்றதே என்றாலும், அது ஜயானன் தயாரித்த ஒப்பந்தம் போன்றதல்ல. நம்மை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது, கேள்வி கேட்காமல் இருப்பது ஒருவித சுதந்திரம் என்றாலும், நெருக்கமான அணுக்கமான உறவுகள் சில நம்மைக் கட்டுப்படுத்த, கேள்வி கேட்க இருக்கின்றன என்கிற நிறைவு நமது அடிப்படையான விழைவு. அவைகளைக் கடந்து செல்லலாமே வொழிய கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டால் அவை இல்லாமல் ஆகிவிடாது. ஜயானன் அடைந்த வெறுமையையே அடைய வேண்டியதிருக்கும். இன்று செண்டிமெண்ட், உறவுகள், குடும்பம் போன்ற வார்த்தைகள் கெட்டவார்த்தைகள் ஆகிவிட்டன.

லிலியின் போலித்தனம் முதலாளித்துவம்; ஜயானனின் போலித்தனம் கம்யூனிசம். லிலியின் ஆணவம் மேட்டுக்குடி- சந்தை- முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்டது. ஜயானனின் ஆணவம் புரட்சிகர பொதுவுடைமையால் உருவாக்கப்பட்டது. இவ்விரு கதைகளும் அழகான கோர்வையாக விளங்குகின்றன.

*

குமிழிகள் கடிதங்களில் ஒரு வாசகர் மட்டுமே காந்தியைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இவ்விஷயத்தில் நமக்கான தேவை காந்தியே. இத்தகைய போலித்தனங்களை எதிர்கொள்ள திராணியுள்ள ஒரு தரப்பு என்றால் அது காந்தியம்தான். முதலாளித்துவம் உருவாக்கும் சந்தை சர்வாதிகாரம், நுகர்வு வெறி, அர்த்தமற்ற சுய விழைவு, புரட்சிகர முற்போக்கு உருவாக்கும் உரிமை விழைவு, அதற்கான பாதை யாவும் நம் ஆன்மாவை அரித்துக்கொண்டிருக்கின்றன. காந்தி நமக்காக அங்கேதான் இருக்கிறார். அவருக்கான தேவை இனிமேல்தான் இருக்கிறது.

*

விவேக் ராஜ்

 

 

https://www.jeyamohan.in/142864/

 

https://www.jeyamohan.in/144362/

 

https://www.jeyamohan.in/144281/

முந்தைய கட்டுரைபடையல், தீற்றல் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎரிசிதை, நகை- கடிதங்கள்