இரு நோயாளிகள், விருந்து – கடிதங்கள்

இரு நோயாளிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இரு நோயாளிகள் கதையின் கட்டமைப்பில் இருக்கும் ஈஸியான ஒழுக்கைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். சும்மா ஒரு சம்பவத்தைச் சொல்கிறீர்கள் என்ற பாவனை. யாரோ ஒருவன் யாரோ ஒருவரைப்பற்றிச் சொல்கிறான். ஊடாக தமிழகத்திலும் கேரளத்திலும் வாழ்ந்த இரு பண்பாட்டு நாயகர்களின் கதைகள் வந்து செல்கின்றன

சொல்பவருக்கு இருவரையுமே தெரியாது. இருவருமே ஒரு பொருட்டு அல்ல. அவர் மாறவே இல்லை. அவர் வெறும் சாட்சிதான். கதையில் அந்தச் சாப்பாட்டு வர்ணனை ஏன் என்று நினைத்தேன். அது இந்த மக்கள் வாழும் அன்றாடத்தையும் அவர்கள் திளைக்கும் அந்த ருசியையும் சொல்லும் பகுதி. நீ கவிதை எழுது, கதை எழுது, செத்துப்போ, நான் புழுங்கலரசிச் சோறும் ரசவடையும் தின்றுகொண்டிருப்பேன் என்பதுதானே சாமானியர்களின் அறைகூவல்?

ஜெயக்குமார்

அன்புள்ள ஜெ

கடந்த இரண்டு மாதங்களில் என்னுடைய ஒருநாளின் பெரும்பாலான நேரங்களை உங்களின் இணையதளத்தில்தான் செலவிடுகிறேன். கடந்த வருட நூறு கதைகளைத் தவறவிட்டதுபோல இந்தாண்டு செய்துவிட மாட்டேன். கொதி முதலாக இருநோயாளிகள் வரை படித்துச் சிலிர்த்தேன். மீண்டும் ஒருமுறை வாசித்து என்னளவில் தோன்றுவதை உங்களுக்கு எழுத விழைகிறேன். அது என் எழுத்தையும் சிந்தனையையும் கூர் தீட்ட நல்லதொரு பயிற்சியாகலாம்.

இன்று இப்பொழுது இருநோயாளிகளிலிருந்து தொடங்குகிறேன். இரவு கண்விழித்த 1.40 முதல் உங்கள் தளத்தில் வந்துள்ள கடிதங்கள் மற்றும் உங்களின்கடந்தகாலக் கட்டுரைகளை செல்பேசியில் படித்துக்கொண்டிருந்தேன், அல்லதுதிரைவாசிப்பான் வழியே கேட்டுக்கொண்டிருந்தேன்.உங்கள் அன்றாடக் கதைகளை மட்டும் ஆழ்ந்து வாசிக்க முடிவு செய்துள்ளதால்,அதிகாலை 4 மணிவரை காத்திருந்து, படுக்கை அறைவிட்டு மெல்ல நீங்கிச் சென்றுஎனது மடிக்கணினியில் ஈஸ்பீக் திரைவாசிப்பான் வழியே ஒவ்வொரு வரியாகமெல்லப் படிக்கத் தொடங்கினேன்.

நோய் முதலை வெவ்வேறு அகக்கண்கள் கொண்டு பார்க்கும் துருவ எழுத்தாளர்கள்.ஒருவர் சொன்னாலும்கூட இருவருமே சமூகத்தை இறுகப் பிடித்துத் தன் வாக்கில்பற்றி முத்தமிட்டவர்கள்தானே! ஏன் ஒருவரிடம் மட்டும் விரக்தி மேலிடுகிறது?மெத்தையை அடித்தபடியும் கால்ளை உதைத்தபடியும் சிரிக்கும் அவர் உண்மையில் அடைவது ஒருவிதத் தாழ்வுணர்ச்சி என்றே தோன்றுகிறது. இவ்வளவு எழுதியும் நம்மால் ஒரு பாட்டுக்காரன் மனதைப் பெற இயலவில்லையே என்கிற தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடாகவோ, அல்லது அந்தப் பாட்டுக்காரனிடமிருந்து தான் கனப்பொழுதில் பெற்றுக்கொண்ட கீற்றினால் விளைந்த மகிழ்வோ எதுவானாலும், அந்த இருவரின் நோய்மை என்பது, “தெரியலையே” என்று தொடர்ந்து சொல்லியபடியே, கலையின் தரிசனமின்றி, தனவந்தர்களாய் தலைமுறைக்கும் சேர்த்துவிட்டுச் செத்துப்போகும் M.A. கிருஷ்ணன் நாயர்களாகிய பொதுஜனம்தானே. அதிலும் பெரும்பாலோர் மிக அற்புதமான இசையை வெளிப்படுத்தும் உயிரற்ற வானொலிப்பெட்டிகள் கூட இல்லையே.

பிரெயில் வழி பாடப்புத்தகங்கள் அன்றி பிற எழுத்துகளை அதிலும் சமகால எழுத்துகளை கணினி கைக்கெட்டிய பின்னரும் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தங்கள் கதைகளால் தணியத்தொடங்கியிருக்கிறது. மனமார்ந்த நன்றிகளுடன்

ப. சரவணமணிகண்டன்.

விருந்து [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

விருந்து சிறுகதையையும் அதற்கான வாசகர் கடிதங்ளையும் வாசித்து வருகிறேன்.  சாமிநாத ஆசாரி ஆட்டுக்கிடாவிற்கு தனது பெயரிட்டு பலியிட்டான் என்பதை தாண்டி மேலதிகமான ஒரு வாசிப்பு சாத்தியமாகிறது என்றே எனக்கு தோன்றுகிறது.

சாமிநாத பிள்ளை கந்தர்வனாக இசை,  சித்திரம், கதை என்ற கலைகளின் வழியாக, இவ்வுலகை மற்றும் இவ்வுலக வாழ்க்கையை விரும்பும் ஒருவனாகவே இருக்கின்றான் என்றே என் வாசிப்பனுபவம் சொல்கிறது.  இதனை அவன் வாழ கடைசி முயற்சியாக செய்து கொள்ளும் கருணை மனுவினை கொண்டு உய்த்துணரலாம். தனது மரணம் நிச்சயம் என்றும் உணர்ந்தவனாக இருக்கின்றான். மரண தேதி குறிக்க பட்டதும் எப்போதும் போல கந்தர்வ வாழ்க்கையினை மேற்கொண்டாலும் ஆழ் மனதில் ஒரு அதிர்வை உணர்ந்திருக்கலாம்.  கடைசி ஆசையாக அவன் ஆட்டுக்கிடாவை தன்னை பலியிட்டு விருந்தாக்கிய வாசிப்பை இன்னோரு கோணத்தில் கரைநாயரை கொன்று விருந்திட்டதாக வாசித்தால் கதை அடையும் இடம் வேறாக இருக்கின்றது.  தன் மரணத்திற்கான காரணத்தை உறுதிபட பற்றி கொண்டு மனதின் சஞ்சலத்தை போக்கிக்கொள்ளவும் அந்த ஆட்டுகிடாவை தன் கண் முன்னால்  அறுத்து அது துடித்து இறக்கும் வரை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்திருக்கலாம்.  இறந்த பின்னும் கிடாவின் கவலை தோய்ந்த சிப்பி கண்களை கரைநாயரின் கண்களாகவே கண்டிருக்கலாம்.  அதன் பின் சோகமும் அழுகையும் நிறைந்த மரண ஆலாபனையில் கடைசி இரவை கழிக்கின்றான் என்ற வாசிப்பும் சாத்தியமாகிறது.

நன்றி ஜெ

சரத் கே

அன்புள்ள ஜெ

விருந்து கதையை வாசகர் கடிதங்கள் வழியாக விரித்துக்கொண்டே இருக்கிறேன். ஒருவன் சாகப்போகிறான். அவன் ஓர் ஆட்டைப் பலியாகத் தருகிறான்.அதற்கு அவன் தன்பெயரை போட்டான் என்பது ஒரு வாசிப்பு. ஏன் அப்படி இருக்கவேண்டும்? அவன் போட்டபெயர் சாவு என்பதாக இருக்கலாமே? எதைவேண்டுமென்றாலும் போட்டிருக்கலாமே? அந்த மர்மம் சாகிறவனிடமல்லவா இருக்கிறது?

அவன் அந்த ஆட்டை கொஞ்சி ஊட்டிவளர்க்கிறான். நான் அவன் தன் மனதுக்குள் நிறைந்திருந்த வஞ்சத்தைத்தான் அப்படி பலி கொடுத்துவிட்டு தூயவனாக தூக்குமேடை ஏறுகிறான் என நினைக்கிறேன்

செல்வநாயகம்

முந்தைய கட்டுரைகோவை வெண்முரசு கூடுகை,காஸ்மாபலிடன் கிளப்
அடுத்த கட்டுரைபடையல், தீற்றல் கடிதங்கள்