குமிழிகள் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
குமிழிகள் கதை பற்றி வந்துகொண்டே இருக்கும் கடிதங்கள் அதன் ஆழமான கலாச்சாரப் பிரச்சினையை காட்டுகின்றன. காலந்தோறும் ஆண்பெண் உறவு மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இதைப்போல அடிப்படையான கேள்வி பலநூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் எழுகிறது. ஆணுக்குப் பெண் உடம்பில் என்ன உரிமை, உரிமை உண்டா இல்லையா என்பது ஒரு கேள்வி. பெண்ணின் ஆளுமை ஆணைச்சாராமல் அமைய முடியுமா என்பது இன்னொரு கேள்வி. கேள்வியுடன் நின்றுவிடுகிறது அந்தக்கதை. ஒவ்வொருவரும் விடைகளைத் தேடிச்செல்கிறார்கள்
கிருஷ்ணமூர்த்தி என்,ஆர்.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நாங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கிறோம் என்று தெரிந்துகொண்டு, அப்படியே ப்ரௌசரில் இன்னொரு வின்டோ திறந்து வைத்து நம் கதைகளும் வாசிக்கட்டும் என்று மீண்டும் கதைகளை எழுதித் தள்ளுகிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் இதுவரை எழுதியதில் ‘விருந்து’ மட்டும்தான் வாசிக்கவில்லை.
‘வலம் இடம்’, ‘விசை’, ‘படையல்’, ‘குமிழிகள்’ , இந்த நான்கில் எதற்கு கடிதம் எழுதுவது என்று குமிழிகள் தேர்வு செய்துகொண்டேன். பழைய வரலாற்றுப் பின்னனி, விவசாயம், எருமை, பனைமரம் ஏறும் குடும்பம் என்று இருக்கும் கதைகளைவிட, இன்றைய சமுதாயத்தைப் புரிந்துகொண்டு, இக்கால காதலர்களை, மடிக்கணினியை மடியில் வைத்துக்கொண்டு பேசும் தம்பதிகளை வைத்து பின்னும் கதைகளில், காலத்தை கடந்து, இருக்கும் இடத்தைக் கடந்து பார்க்கும் உங்களின் விசாலமான பார்வை சொல்லும் கதைகளை அறிவதிலும், அலசுவதிலும் எனக்கு ஓர் ஆர்வம்.
ஆண், நேர்முகத்திற்கு செல்லும் முன்னர், மீசையை ஒதுக்கிக்கொள்கிறான். தாடியை வழித்துவிடுகிறான் அல்லது ட்ரிம் செய்துகொள்கிறான். அவன், செல்லும்பொழுது , அங்கே நேர்முகம் செய்ய இருப்பவர் ஒரு பெண்ணாக இருக்கலாம், ஆதலால், அவரை மயக்கி வேலை வாங்க இருக்கிறான் என்று கற்பனை செய்வதில்லை. அவன் செல்லும்பொழுது அவனை ‘ப்ரசன்டபலாக’ எடுத்துச் செல்கிறான் அவ்வளவே. அதே சமயம் பெண் நேர்முகத்திற்கு கொஞ்சம் லிப் ஸ்டிக் போட்டுக்கொண்டு, ஜீன்ஸ் , டீ ஷர்ட் போட்டுக்கொண்டால், அவள் மயக்கி வேலை வாங்கப் போகிறாள் என்ற கற்பனை ஓடுகிறது. அவளை நேர்முகம் செய்பவள் ஒரு பெண்ணாக இருக்கக் கூடாதா என்ன?
நான் முழுக்க முழுக்க இந்தக் கதையின் லிலியின் பக்கம்.
ஆண், பொருள் தேடி நாடு விட்டு நாடு சென்று பொருள் தேடும் காலத்தில், வீட்டில், அந்தக்காலத்து லிலி, காமம் மறந்து வருடக்கணக்கில் அவனுக்காக காத்திருந்தாள். அன்று, அவளுக்கில்லாமல், சாமிநாதன் முழு உடலையும் எடுத்துச் சென்றான். அவளிடம் எதிர்பார்த்தது தியாகம்.
இன்று லிலி சம்பாரிக்கும் பணம் வேண்டும், நினைத்தவுடன் எதுவும் வாங்குமளவு வரும் வருமானம் வேண்டும். அவள் கொடுக்கவேண்டிய காமமும் குறைவில்லாமல் வேண்டும் என்றால் என்ன செய்வது. பெண் அலங்கரித்தாலே, செக்ஸுக்கான அறைகூவல்தான் என்ற பொதுப்புத்தியை செருப்பால் அடிக்கும் கதை இது என்றே எடுத்துக்கொள்கிறேன். இந்தக் கதை சாமிநாதனுக்கு மட்டும் இல்லை. சாமிநாதனைப்போல நினைக்கும் பெண்களுக்கும். நீங்கள் , குமிழிகள் என்று பெயர் வைத்து, லிலியின் வாதங்களின் மூலம், ஓவர் டோஸ் கொடுத்தது மிகச்சரி. இன்றைய பிரச்சனையை சொல்லும் இந்தக் கதையை மொழி கடந்து வாசிக்கலாம். இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க, நானோ அல்லது எனது ரெப்பர்சன்டேட்டிவோ உங்களிடம் அன்புடன் கேட்டு உரிமையை வாங்கிக்கொள்கிறோம் J.
அன்புடன்,
வ. சௌந்தரராஜன்
ஆஸ்டின்
ஆமென்பது… [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஆமென்பது என் வாழ்க்கையின் கண்டடைந்த உண்மைகளில் ஒன்றைச் சொல்கிறது. என் 30 வயது வரை நான் அவநம்பிக்கை நிறைந்தவன். துயரமானவன். ஏன் துயரமானவன் என்றால் எனக்கு துயரம் பிடித்திருந்தது என்பதனால்தான். நான் வாழ்க்கையில் வெற்றியை விரும்பவில்லை, இந்தவாழ்க்கையில் எந்த அர்த்தமும் இல்லை என நினைக்கிறேன் என்று எனக்குநானே சொல்லிக்கொண்டேன். என்னை நானே துக்கமாக ஆக்கிக்கொண்டேன். சொல்லச் சொல்ல எல்லா துக்கமும் மெய்யாகவே எனக்கு வந்தது.
மனிதனின் அகங்காரம்தான் ‘நான் துக்கமானவன்’ என்பது. அவன் தான் உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ள துக்கமானவன் என்று காட்டிக்கொள்கிறான். அதை உணர்ந்தபோது இனி எனக்கு துக்கம் இல்லை என்று சொல்லிக்கொண்டேன். ததாஸ்து என்று அந்த தேவதையும் சொல்லிவிட்டது
அருண்குமார்
அன்பு ஜெ,
சிலைகளையெல்லாம் குமரன் போன்ற சிற்பிகளின் வழியே ஆகாயம் சிறுகதை வழியே பார்த்திருந்தேன். இன்று நீங்கள் தெய்வங்கள் வழி, அதை நிறுவிய மனிதர்களின் வழி ஒரு சித்திரத்தை அளித்திருக்கிறீர்கள். அது மேலும் சிந்திக்கத் தூண்டியது.
“தாயின் கருவிலிருக்கும்போதே என்னை தெரிந்து கொண்ட இயேசுவே” என்ற ஒரு வரியை சிறுவயதில் என் வழிபாட்டின் போது உபயோகிப்பதுண்டு. அந்த வார்த்தையை வழிபாட்டின் போது இணைத்துப் பழக ஈர்க்கப்பட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். தெய்வங்கள் தான் நம்மைத் தெரிந்து கொள்கின்றன என்ற சிந்தனையை இன்று அடைந்தேன் ஜெ. சிறுவயதில் என் கழுத்திலுள்ள ஜெபமாலையைப் பார்த்துவிட்டு சித்தப்பா ராஜமுனி அருகே அழைத்து கடவுள்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். ஒருவாராக அவர் சொல்ல வந்தது இதைத்தான். நம்மைச் சுற்றியிருக்கும் தெய்வங்கள் தான் நமக்கானவை. நம்ம ஊரு எல்லையிலிருக்கும் இசக்கியம்மன், ஊரின் தெய்வங்களான முப்பிடாரி, ராசாத்தியம்மன், அதைத்தாண்டி நம் ஊரிலுள்ள ஆண்டாள்- ரங்கமன்னார், வைத்தியநாதசாமி ஆகியோரை நீ என்றும் மறந்துவிடக் கூடாது. அவை நம் மக்களைத் தேர்ந்து கொண்ட தெய்வங்கள் என்று கூறினார். ஏசுவும் ஒரு கடவுள் தான். ஆனால் அவர் இஸ்ரேல் மக்களுக்கானவர். நீ வேறெங்கோ இருக்கும் தெய்வத்தை ஏன் இவ்வளவு தீவிரமாக வழி பட வேண்டும் என்று கேட்டார். சிறுவயதாதலால் எனக்கு அவர் சொன்னது புரியவில்லையெனினும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் சரி சித்தப்பா என்று சொல்லி வைத்தேன். ஆனால் எனக்கு ஒன்று தோன்றும் “நானா தேடிப் போறேன். அது தான் என்னைப் பிடித்து ஆட்டுவிக்கிறது” என்று. என்னை தேர்ந்து கொள்வது அவர்கள் தான். சில கோவில்களும், சில கடவுளர்களும் நம்மை அவை நோக்கி ஈர்த்து வைக்கின்றன.
முதன் முறை வர்ப்புறுத்தி தான் நான் அவனை இடைக்காட்டூருக்கு கூட்டிச் சென்றேன். ஆனால் அதன் பின் அவன் ஒரு நாள் நான் இல்லாதபோது தானாகவே அங்கு சென்று வந்தான். நான் ’என்ன அங்க’ என்று கேட்டபோது ’அங்க போன மனசுக்கு நல்லா இருக்கு’ என்று கூறினான். அதன்பிறகு அவன் மிக நல்ல தருணங்களின் போதும் மிக துயரமான தருணங்களின் போதும் இடைக்காட்டூருக்கு நான் அறியாமல் கூட சென்று வருகிறான். இடைக்காட்டூரின் திரு இருதயம் அவனை ஈர்த்திருக்கிறது.
அதேபோல் பல பேய்க் கதைகளை என் பாட்டியிடமிருந்து நான் கேட்டிருக்கிறேன். சாத்தானை பாம்பாக உருவகப்படுத்த தள்ளப்பட்டிருக்கிறேன். ஆனால் அதன் ஒரு தருணம் கூட இன்னும் நான் அனுபவித்ததில்லை. இன்னும் அவை என்னை தேர்ந்து கொள்ளவில்லை என்று நினைத்தேன். எனக்கான பேய்த்தருணம் இன்னும் அமையவில்லை என்று கொண்டேன்.
இது தவிர உறவின் ஏக்கங்கள் கதை முழுவதுமாக விரவியிருந்தது. உறவுகளைப் பொறுத்தவரையில் புறக்கணிப்புகளே அவர்களுக்கு நாம் தரும் மிகப் பெரிய தண்டனை என்று நினைக்கிறேன். ஒரு முதிர்ச்சி வரும் வரை அல்லது சுயாதீனமாக வாழ முடியும் என்ற எண்ணம் வரும் வரையிலுமே கூட மிகப் பெரிய அளவில் நாம் உறவுகளைச் சார்ந்தே இருக்கிறோம். அது வரை நாம் எதிர்பார்த்திருந்த அன்பு கிடைக்காத போது அவர்கள் நம்மை அன்பு செய்யவில்லை என்று உணரும் தருவாயில் துணிந்து நாம் அவர்களுக்கு கொடுக்ககூடிய மிகப் பெரிய தண்டனை புறக்கணிப்பு மட்டுமே. அதை நானும் என் நெருங்கிய உறவுகளுக்கு கொடுத்திருக்கிறேன். அதை அவர்களால் வெளிக்காட்ட இயலாது, எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று திணருவதைக் கண்டு ஏளனப் பார்வையோடு கடந்து வந்திருக்கிறேன். நம் அன்புக்கு உரிமையானவர்களால் மட்டுமே விலக்கத்திற்கும் விளக்கம் கேட்க முடியும். எங்கு அன்பான மனிதர்களைக் கண்டாலும் நான் நெகிழ்ச்சி அடைவதுண்டு. சமீபத்தில் ஜெ-சைதன்ய சிந்தனை மரபு என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு மிகவும் கலங்கிப் போனேன். நீங்கள் சைதன்யாவை எப்படியெல்லாம் கூப்பிடுவீர்கள் என்று பட்டியலிட்டு அதை இன்னொரு புத்தகமாகப் போடலாம் எனும்போது புன்னகையோடு சேர்ந்து கண்ணீரும் வந்தது. என்னையெல்லம் ரம்யா என்பதைத் தவிர என் வீட்டில் வேறு பெயர் சொல்லி அழித்ததேயில்லை. இன்னும் சிலருக்கெல்லாம் தடிமாடு, சனியன், எருமை என்ற பெயர்கள் தான் நிரந்தரமாக இருக்கின்றன. அதே போல வெண்முரைன் மழைப்பாடலில் திருதிராஷ்டிரனுக்கும் விதுரனுக்கும் இடையே நடக்கும் உரையாடலின் போது “நான் இறந்து விட்டால் நீ உயிருடன் இருக்காதே” என்று கூறிய அந்தத் தருணம்… மிகவும் ஏங்கி அழுதுவிட்டேன். அதுவரை கூட “விதுரா மூடா” என்பதை அவ்வளவு பாசமாக நான் எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் காந்தாரி வசுமதியிடம் அவன் விதுரன் தனக்கு எத்துனை முக்கியம் என்று கூறிய தருணத்திற்குப் பின் அவன் கூப்பிடும் மூடா என்ற ஒவ்வொரு இடத்திலும் பொங்கி வரும் அன்பையே பார்க்கிறேன்.
பிள்ளைகள் பெற்றோரை வெறுக்கும் உச்ச நிகழ்வு ஒரு நாளில் அமைந்துவிடுவதில்லை. அது கால நெடுகிளும் ஒவ்வொரு ஏக்கத்தருணங்களாக கூடிக் கொண்டே வந்து இனி ஒரு போதும் தாங்கிக் கொள்ளவியலாத வலியை அவர்கள் தரும் தருணத்தில் தான் சாவில் கூட விழிக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தமைகிறது. கே.வி.ஜயானுக்கு அவரது தந்தை மேலும், அவர் மேல் அவருடைய பையனுக்கும் வந்தமையும் மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தேன் சிட்டு கூடமைத்து குஞ்சு பொறித்து அது பறக்கும் வரை உடனிருந்து அந்த வானத்தில் அதை கரை சேர்ப்பது வரை உடனிருக்கும் நிகழ்வை முதன் முதலில் என் கல்லூரி விடுமுறை நாட்களின் போது பார்த்தேன். அது என்னில் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. பறவைகள் கூட இந்த வாழ்வென்னும் உயிர்ப்பின்னலில் தங்களுக்கான கடமையை சரிவர செய்கின்றன. ஆனால் இந்த சில மனிதர்கள் மட்டும் ஏன் இப்படி சுயமோகங் கொண்டு சிறு குஞ்சுகளை கே.வி.ஜயான், அவருடைய பிள்ளை போன்றவர்களை துன்பத்திற்கு ஆளக்குகின்றனர் என்று நினைத்துக் கொண்டேன். அன்னை தந்தை அல்லது வேறு எந்தவொரு உறவையும் புனிதமென்ற போர்வைக்குள் அடைக்கும் செயலையே நான் வெறுக்கிறேன். அதனால் தான் எனக்கு மிகப் பிடித்தவர்களை நான் உறவைச் சொல்லி அழைப்பதில்லை.
மேல் குறிப்பிட்ட ஒவ்வொரு சிந்தனையையும் ஏக்கத்தையும் கேள்விகளையும் இந்த சிறுகதை விவாதத்தின் வழி நித்ய சைதன்ய யதியின் வரிகளாக நீங்கள் சொன்னவற்றில் கரைக்கிறேன்.
“நீ செய்யவேண்டியதை செய்துவிட்டாய் என்றால் உனக்கு செய்யப்படவேண்டியது செய்யப்படாவிட்டாலும் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள உன்னால் முடியும். அளிக்கவேண்டியவற்றை அளித்தவர் அவற்றை கடந்துசென்றவராவார். வாழ்க்கையில் எதையும் எச்சம் விட்டு மேலே செல்லாதே. விட்டுவிட்டவை வளரும், விழுங்கும்’ என்ற வரிகளைக் கொண்டு இந்த சிறுகதையை நிறைவு செய்கிறேன். நான் எச்சம்விட்டுச் செல்லாத ஒரு வாழ்வை வாழ்ந்து முடிக்கவே தலைப்படுகிறேன். என் பெற்றோருக்கானாலும் சரி, இனி பிறக்கப் போகும் என் பிள்ளைக்கானாலும் சரி. ஏனெனில் பிரதிகிரகை என்னும் தேவதை ஆமெனச் சொல்ல எப்போதும் காத்துக் கொண்டு அருகிருப்பதை தரிசித்துவிட்டேன். இதன் மூலம் என்னிலிருந்த ஒரு சிந்தனையை மாற்றி ஒரு துளி ஞானத்தைப் பரிசளித்திருக்கிறீர்கள். மேலும் கேட்க முற்படுகிறேன். நன்றி ஜெ.
பிரேமையுடன்
இரம்யா.