திரை [சிறுகதை]

[ 1 ]

அரண்மனை காறுபாறு ரங்கப்பையருக்கு நான் வந்திருக்கும் செய்தியை அறிவித்தபின் கைகளைக் கட்டிக்கொண்டு காத்து நின்றிருந்தேன். இந்த அரண்மனையில் ஏகப்பட்ட வாசல்கள். எந்த வாசல் வழியாகவும் ஓர் அரசக்குடியினரோ, அமாத்யரோ, தளவாயோ, ராயசமோ, சம்பிரதியோ என்முன் தோன்றக்கூடும். நான் எந்நேரமும் கண்ணுக்குத் தெரியாத அத்தனை உயர்ந்தோரையும் பணிந்துகொண்டிருந்தேன். மதுரைப் பெரியகோயில் கோபுரத்துக்கு அடியில் அத்தனை எடையையும் தாங்கிக்கொண்டு உடல்குறுகி தொப்பை பெருத்து விழிதெறிக்க வரிசையாக அமர்ந்திருக்கும் பாதாள முண்டன்களில் நானும் ஒருவன் என்று தோன்றுவதுண்டு எனக்கு.

அரண்மனையில் என்ன நடந்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ நடந்திருக்கிறது. எங்குபார்த்தாலும் எவரோ எங்கோ ஓடிக்கொண்டிருந்தனர். எவருக்கோ எவரோ ஆணைகளிட்டுக் கொண்டிருந்தனர். என் முன்னால் எவரெவரோ ஓடிச்சென்றார்கள். எவரிடமும் எனக்கு முகம் கிடையாது. என்னை காறுபாறு மட்டும்தான் அறிவார். இங்கே சிராப்பள்ளி அரண்மனைக்கு நான் எப்போதாவதுதான் வருவது. அதுவும் எனக்கான நேரடி ஆணையை காறுபாறு அளிக்கவேண்டியிருக்கும்போது மட்டும்தான்.

அழைப்பு வந்ததும் கிளம்பிவந்து அரண்மனைக்குப் பின்பக்கம் குதிரைப்பந்திக்கு வந்து நிற்பேன். அங்கே நான் நிற்பதை காறுபாறின் வேலைக்காரனுக்குச் சொல்வேன். என்னை உள்ளே அழைத்துச் செல்வார்கள். ஆணை அளிக்கப்பட்டதும் அப்படியே கிளம்பிவிடுவேன். இந்த அரண்மனையை நான் முப்பத்தெட்டு ஆண்டுகளாக அறிவேன். ஆனால் இதில் ஒரு பாதையையும், காறுபாறின் சிறிய தனியறையையும் தவிர வேறெதையும் நான் பார்த்ததில்லை. அதற்குமேல் அறியாமலிருப்பதே நல்லது என்றும் நான் அறிந்திருந்தேன்.

நான் அழைக்கப்பட்ட நேரம் சரியில்லை என்று தோன்றியது. அரண்மனையை அத்தனை கொந்தளிப்புடன் நான் பார்த்ததில்லை. ஆனால் கெட்டது ஏதுமில்லை. மகிழ்ச்சியும் கொண்டாட்டமும்தான். முக்கியமான யாரோ வரப்போகிறார்கள், அல்லது குழந்தை பிறந்திருக்கிறது, அல்லது திருமணம் நிச்சயமாகியிருக்கிறது, அல்லது வேறேதோ நிகழவிருக்கிறது. அத்தனைபேரும் கிளர்ச்சி கொண்டிருக்கிறார்கள்.

வேலைக்காரன் வந்து என்னை உள்ளே அழைத்துச்சென்றபோது நான் “என்ன விசேஷம் உடையாரே” என்று கேட்டேன்.

அவன் “என்ன?” என்றான்.

“இல்லை, கொட்டாரத்திலே என்னமோ நடக்குது போல”

“என்ன நடக்குது?”

நான் ஒன்றும் சொல்லவில்லை.

அவன் என்னை ஓர் அறையில் நிற்கச் சொல்லிவிட்டு சென்றான். உடனே திரும்பிவருவது வழக்கம். வரவில்லை. ஆகவே நான் நின்றுகொண்டே இருந்தேன். காக்கவைக்கப்படுவது என்னைப்போன்ற சிறிய ஊழியர்களுக்கு பெரிய விஷயம் அல்ல. எங்களை ஏவுபவர்களுக்கு எங்கள் உயிரே கூட ஒரு பொருட்டு கிடையாது.

நேரம் ஆகிக்கொண்டிருந்தது. எவருமே என்னை பார்க்கவில்லை. என்னை மறந்துவிட்டார்களா என்ன? இங்கெயே பகலுமிரவும் நிற்கப்போகிறேனா?

அதன்பின் வேலைக்காரன் வந்தான். என்னை சைகையால் அழைத்தான். நான் அவன் பின்னால் சென்றேன்.

அவன் என்னை காறுபாறு ரங்கப்பையரின் அறைக்குக் கூட்டிச் செல்லவில்லை. மேலும் சிறிய இடைநாழிகள் வழியாக கூட்டிச் சென்றான். அரண்மனை அத்தனை பெரியது என நான் அறியவில்லை. மண்ணில் சிதல்புற்றை வெட்டினால் அறையறையாக அது வந்துகொண்டே இருக்குமே, அதுபோல சென்றுகொண்டே இருந்தது. எல்லா அறைகளிலும் சிதல்கள் போல வெள்ளை ஆடை அணிந்தவர்கள் பரபரப்பாக ஏதோ செய்துகொண்டிருந்தனர்.

ஓர் அறையின் வாசலில் வந்ததும் என்னை உள்ளே போகச் சொல்லிவிட்டு அவன் நின்றுகொண்டான். நான் கதவைத் திறந்து உள்ளே சென்றேன். லேசாக நடுங்கிக்கொண்டிருந்தேன்.

அது வேறு வகையான அறை. சுவர்கள் சுதையாலனவை. மிக உயரமாக சூழ்ந்திருந்தன. எல்லா சாளரங்களிலும் செம்பட்டுத்திரைச்சீலைகள் தொங்கின. தரையில் சிவப்புநிறமான பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. செம்பட்டு மெத்தைவைத்த நான்கு நாற்காலிகள் கிடந்தன. சுவர்களில் அலங்காரமாக கண்ணாடிபோல பளபளக்கும் வாள்களும் பொன்போல துலக்கப்பட்ட வெண்கல மலர்வடிவங்கள் கொண்ட இரும்புக் கேடயங்களும் மாட்டப்பட்டிருந்தன.

தலைக்கு மேலே கூரையிலிருந்து அலங்காரப்பூக்கள் கொண்ட செம்பட்டாலான பங்கா ஒரு பட்டுச்சரடால் இழுக்கப்பட்டு அசைந்துகொண்டிருந்தது. அங்கே ஏதோ பூமரக்கிளை இளங்காற்றில் அசைவதுபோல தோன்றியது. அதன் ஓசை மட்டும் அந்த அறைக்குள் செறிந்திருந்த அமைதிக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அமைதியைவிட முறுகி பின்னர் எதிர்முறுகி ஒலித்த அந்த பங்காவின் ஓசைதான் பதற்றத்தை கூட்டியது.

அந்த அறையின் இன்னொரு வாசல் திறந்து காறுபாறு ரங்கப்பையர் வெளியே வந்தார். என்னை பார்த்ததும் சைகையால் அருகே வரும்படி கைகாட்டினார். நான் சென்று வணங்கி நின்றேன்.

“உன்னை மகாராணி பாக்கப்போறாங்க” என்றார் காறுபாறு ரங்கப்பையர்.

நான் சற்று நடுங்கினேன். மகாராணியை நான் தூரத்தில் பார்த்ததோடு சரி. மகாராணியுடன் நேரில் பேசும் வாய்ப்பு கிடைப்பதென்பது ஒரு பெரிய பதவி. ஆனால் அவ்வாய்ப்பை அடைந்தவர்களை நோக்கி எங்கோ வாள்களும் கூர்கொண்டு விட்டிருக்கும். என்றேனும் அவர்கள் எவராலாவது கொல்லப்படுவார்கள். கொல்லப்படாமல் நீடிப்பவர்கள் உச்சத்தில் இருந்துகொண்டிருப்பார்கள்.

”மகாராணிக்கு உன்னாலே ஒரு வேலை ஆகணும்” என்றார். வா என்று கைகாட்டிக்கொண்டு நடந்து அறையின் மூலைக்குச் சென்று நின்றுகொண்டார். “உன்னைப்பத்தி நான்தான் சொன்னேன். நீ எதையும் செஞ்சிருவேன்னு சொல்லியிருக்கேன். கெலிச்சுட்டேன்னு வையி, உனக்கு ஏத்தம்தான். ராஜகுடும்பத்துக்காக வெளியே சொல்லமுடியாத வேலைகளை செய்யுறவன்தான் ஏணியிலே முதற்படிமேலே காலைவைக்கிறான். தெரிஞ்சுதா?”

என்னால் படபடப்பை மறைக்க முடியவில்லை. என் கைகளை விரல்கூட்டி இறுக்கி நெஞ்சோடு வைத்துக்கொண்டேன். மூச்சு சீராக வரவில்லை. ஆகவே அவ்வப்போது நீள்மூச்செறிந்தேன்.

“என்ன வேலைன்னு மகாராணியே சொல்லுவாங்க.  இப்ப உள்ள ஆளிருக்கு. முடிஞ்சதும் கூப்பிடுவாங்க. அதுக்கு முன்னாடி காரியம் என்னன்னு சொல்லிடறேன்” என்றார் காறுபாறு ரங்கப்பையர் “உனக்கு சம்பிரதி கேடிலியப்ப பிள்ளையை தெரியுமா?”

நான் எல்லாவற்றையும் புரிந்துகொண்டேன். மகாராணியின் ஆணை என்னவாக இருக்கப்போகிறது என ஐயமே இல்லை. ஆனால் ஆறுதல் ஏற்பட்டது, எனக்குத் தெரியாத ஒன்று அல்ல.

“தெரியும், நாய்னா காலத்திலே நாலஞ்சுவாட்டி அவரோட வீட்டுக்கும் போனதுண்டு.”

“வேதாரண்யம்தானே அவரு ஊரு?” என்றார் “நான் வாறப்பவே அவரு போய்ட்டாரு.”

காறுபாறு ரங்கப்பையர் சித்ரதுர்க்காவின் ராயசமாக இருந்து இங்கே வந்தவர். வந்த பின்புதான் தமிழே கற்றுக்கொண்டார். ஆனால் அவர் இயல்பாகக் கேட்டாலும் சோதனை செய்கிறார் என்றும் தெரிந்து கொண்டேன்.

“அப்டிச் சொல்லலாம்” என்றேன். பெரியவர்கள் சொல்லும் எதையும் நான் மறுப்பதில்லை. அப்படியே நீட்டி என் சொற்களைச் சொல்வேன். “கேடிலியப்ப பிள்ளையோட அப்பா சிவகடாட்சம் பிள்ளையோட பூர்வீக ஊரு ஆதனூர். அங்கே ஆண்டளக்கும் ஐயன் கோயிலிலே சீகாரியம் வகையறா. இவரு ரெண்டாம் மகன். அதனாலே மூத்தாருக்கு அந்தப்பதவியை விட்டுட்டு வேதாரண்யம் கோயில் ஸ்தானிகரா வந்தார்.”

“கேடிலியப்ப பிள்ளை சிவகடாட்சம் பிள்ளைக்கு மூணாவது மகன்” என நான் தொடர்ந்தேன் “திருவாவடுதுறையிலே பெரியதமிழ் படிச்சாரு. நல்ல படிப்புவாசனைங்கிறதனாலே அவரை தஞ்சாவூருக்கு அனுப்பினாரு சிவகடாட்சம் பிள்ளை. கேடிலியப்ப பிள்ளை தஞ்சாவூரிலே சம்ஸ்கிருதமும் மராட்டியும் தெலுங்கும் கத்துக்கிட்டாரு. மோடி எழுதவும் வரும். இங்கிலீஷும் உருதுவும் கூட கொஞ்சம் வசமுண்டு. தஞ்சாவூர் ராயசமா கொஞ்சநாள் வேலை பார்த்தார். அப்ப அவரோட பிராப்தியை அறிஞ்ச நம்ம பெரிய அம்மாராணி மங்கம்மத் தாயார் அவரை ஆளுவிட்டு கூட்டி சிராப்பள்ளியிலே வைச்சுக்கிட்டாங்க”

“இங்க வந்த பிறகுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. கொட்டாரம் ராயசம் மருதை நன்முத்துப்பிள்ளை மகள் கெஜவல்லி அம்மை. பெரியதாயார் மங்கம்மா ராணி மண்நீங்கின பிறகு மகாராஜா பெரியநாயக்கர் விஜய ரகுநாத சொக்கலிங்க கொடியுடையார் கீழே கேடிலியப்ப பிள்ளை சம்பிரதியா ஆனாரு. அவரோட அண்ணார் ஆண்டளப்பார் பிள்ளை இப்பவும் வேதாரண்யம் சீகாரியமா இருக்காரு. ரெண்டாவது அண்ணார் மறைமுத்துப்பிள்ளை தஞ்சாவூரிலே ஆத்தங்கரைக் கொட்டாரம் காறுபாறு. அவங்க ரெண்டுபேரோட பிள்ளைங்க பலபேரு திருவாவடுதுறையிலேயும் தருமபுரத்திலேயும் ராமேஸ்வரத்திலேயும் சீவில்லிப்புத்தூரிலேயும் காறுபாறு மாதிரி பல வேலைகள் செய்யுறாங்க”

“கேடிலியப்ப பிள்ளைக்கு பிள்ளைங்க எத்தனைபேரு?” என்றார் காறுபாறு ரங்கப்பையர்.

அப்போதுதான் அவருக்கு உண்மையிலேயே பெரிதாக ஏதும் தெரியாது என்று தெரிந்துகொண்டேன். அவர் என்னிடம் கேட்பது பராபரியாக தெரிந்தவற்றை சரிபார்த்துக் கொள்ள.

“சிவனருளாலே கேடிலியப்ப பிள்ளைக்கு நாலு ஆண்பிள்ளை, ஏழு பெண்பிள்ளை. ஆண்பிள்ளை மூணுபேருலே மூத்தமகன் சிவசிதம்பம் பிள்ளை மருதை கொட்டாரம் ராயசமா இருந்து போன வருசம் ராஜபிளவை வந்து சிவனடி சேர்ந்தார். ரெண்டாவது மகன் சிவநடனம் பிள்ளை ஆனைக்கா கோயிலிலே ஸ்தானிகர். மூணாவது ஆள் சிவமுத்துப் பிள்ளை திருச்சுழி கோயிலிலே சீகாரியம்”.

“நாலாவது மகன்தான் தாயுமான பிள்ளை, இல்ல?”

“ஆமா. அவரு கொஞ்சநாள் இங்க ராயசமா வேலை பாத்தார். நல்ல படிப்புள்ள மனுஷன்… இப்ப ராமேஸ்வரத்திலே இருக்கிறதா கேள்வி.”

”அங்க என்ன?”

”அவரு இங்க இருக்கிறப்பவே வேற மாதிரித்தான் இருந்தாரு.”

“வேற மாதிரின்னா?”

“சின்னப்புள்ளையா இருக்கிறப்பவே புத்திமாறாட்டம் இருந்திருக்கு. இங்க ஆனைக்கா பெரிய சிற்றம்பல தேசிகரோட பாடசாலையிலேதான் படிக்கச் சேத்திருக்காரு. எட்டுவயசுக்குள்ளே திருமுறை முச்சூடும் காணாப்பாடமாச் சொல்லிட்டாரு. பத்துவயசிலே தேசிகர் கேடிலியப்ப பிள்ளையை கூப்பிட்டு பையனை கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டார். இனி இவனுக்கு நான் சொல்லிக்குடுக்க ஒண்ணுமில்லை, இன்னொரு நாலஞ்சு வருசத்திலே இவனுக்கு நான்தான் அடியமர்ந்து மாணவனாகணும்னு சொல்லிட்டார்.”

“அப்ப தேசிகர் சொன்னதா ஒரு பேச்சு உண்டு” என்று நான் மேலும் சொன்னேன். “அதாவது, குறையில்லா நீரோட்டம் உள்ள வைரம் வீட்டுக்கும் நாட்டுக்கும் உள்ளதில்லை, அது தெய்வத்துக்கு உள்ளது, அதை அங்கேயே குடுத்திருங்க பிள்ளைவாள்னு. ஆனா பிள்ளைவாள் மனசு கேக்கலை. அவருக்கு பேராசை. மத்த பிள்ளைங்க அப்பிடி இப்பிடிதான். இருந்த இடத்திலே வேருவிடுற ஆளுங்க. இவரை வைச்சு குடும்பம் மேலே போயிடணுமுண்ணு கேடிலியப்ப பிள்ளை நினைச்சார்….”

காறுபாறு கூர்ந்து கேட்பதை கண்டால் அவர் நான் சொல்வதை வரிவரியாக நினைவில் நிறுத்த முயல்வதைப் போலிருந்தது.

“எங்க நாய்னா அடிக்கடி சொல்லுறதுண்டு. பெரிய தாயார் காலத்துக்கு பின்னாடி எல்லாமே மாறிப்போச்சு. இங்க அரண்மனை முழுக்க ஆட்சியும் ஆலோசனையும் எல்லாம் வடுகநாட்டு அய்யமாருதான். ஏன்னா அவங்களுக்கு துலுக்கன் பாசையும் தெலுங்கு பாசையும் கன்னடபாசையும் தெரியும். ஆயிரம் வருசம் சோழராசா அரண்மனையிலே கணக்குபாத்த பிள்ளைமாரெல்லாம் அவங்க பின்னாலே கைகட்டி நிக்கிற நெலைமை வந்திட்டுது. சம்ஸ்கிருதமும் தமிழும் வைச்சு இங்க கொட்டாரத்திலே ராயசம் பண்ணமுடியாது” என்று நான் தொடர்ந்து சொன்னேன்.

“ஆனால் இப்ப எல்லாம் இன்னும் மாறிப்போச்சு. கும்பினிக்காரக் கூட்டம் வந்து சுத்திப்போட்டுது. கும்பினிக்காரன் பேசுற மூணு பாசையும் தெரிஞ்சாகணும்ங்கிற நிலைமை. மூணும் காதுக்கு ஒண்ணு, கருத்துக்கு மூணு, கணக்குபோட்டா முப்பது. அதை மகன் கத்துக்கிட்டான்னாக்க அவனை மிஞ்ச கொட்டாரத்திலே ஆளில்லை. அவன்தான் அமாத்யன், அவன் சொல்லுதான் மருதையிலும் சிராப்பள்ளியிலும் வெளைஞ்சு நிக்கும்னு நினைச்சார். சொல்லப்போனா இங்க உள்ள அத்தனை பிள்ளைமாரும் கேடிலியப்ப பிள்ளையோட மகன் தாயுமானபிள்ளையை நம்பிட்டிருந்தாங்க. ஒத்தக்குருதையை நம்பி யுத்தம் காணப் போறது மாதிரி.”

நான் சொன்னேன். “அதனாலே பையனை பல எடங்களுக்கும் அனுப்பி படிக்க வைச்சார். பையன் படிச்சு வரல்லை, கையிலே அண்டா கொண்டுபோய் அறிவை மொண்டுட்டு வந்தான்னு சொல்லுவாங்க. போனதும் தெரியாது, வாறதும் தெரியாது. ஆறு வருசத்திலே அறிவுள்ளவன் படிக்கிறதை ஆறுமாசத்திலே படிச்சு வார ஆனையறிவுள்ள மகன்… நாலு கும்பினி பாஷையோட சேத்து ஒன்பது பாஷை பேசுவான், எழுதுவான். அஷ்டாவதானியோ சதாவதானியோ இல்லை, சகஸ்ராவதானம்னு ஒண்ணு உண்டுன்னா அது சொல்லணும் பையன் வயணத்துக்கு.”

“சொன்னாங்க” என்றார் காறுபாறு.

“கேடிலியப்ப பிள்ளை மாந்தப்பெருக்கிலே கைலாசம் போறப்ப தாயுமானபிள்ளைக்கு வயசு இருபத்திமூணுதான். மூத்தமகன் சிவசிதம்பரம்பிள்ளை அப்ப கொட்டாரம் காரியக்காரரா இருந்தார். அவரு தம்பிக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிவைச்சு நேரா கொண்டுவந்து ராஜா முன்னாடி நிப்பாட்டினார். வைரமில்லா வந்து நிக்குது கண்முன்னாடி. பெரியநாயக்கரு விடுவாரா? இங்கே செவியும் நாவுமுள்ள ஆளில்லாமே நின்னு தவிச்சிட்டிருக்கிற நேரம்… அப்டியே கொட்டாரம் ராயசமா ஆயிட்டார். ஒரு வருசத்திலே சம்பிரதி… மூணுவருசம் இருதிருந்தா அமாத்யராகியிருப்பாரு…”

“மண்மறைஞ்ச விஜயரகுநாத சொக்கலிங்க நாயக்கர் மகாராஜா தாயுமான பிள்ளையை நெத்திச்சுட்டியிலே ரத்தினம் மாதிரி வச்சிருந்தார். இவரானா சொல்லெல்லாம் முத்தா எடுத்து அடுக்குற ஆள். கேக்கணுமா?” என்று நான் தொடர்ந்தேன். “எல்லாம் சரியாத்தான் போச்சுது. ஒரு மகன் பிறந்தான். கனகசபாபதிப் பிள்ளைன்னு பேரு. பஞ்சுப்பொதி பிய்ஞ்சு முள்ளுக்காட்டிலே பறந்தது மாதிரி கிடந்த மருதை சிராப்பள்ளி தேசத்தை ஒண்ணாக்கினார். குட்டிக்கும் நிறைஞ்சு பசுவுக்கும் வலிக்காம பால் கறக்குற கோனாப்புள்ளை மாதிரி கிஸ்தி வசூல் பண்ணி கஜானவை நிரப்பினாரு… அப்பதான் பெரிய நாயக்கர் மகாராஜா மண்மறைஞ்சது. தத்துப் பிள்ளைக்கு வயசடையல்லேன்னு பெரிய மகாராணி கோல்கொண்டு அமர்ந்தது. அப்றம் நாலு மாசத்திலே இவரு ராமேஸ்வரம் போய்ட்டார்”

காறுபாறு ரங்கப்பையர் பெருமூச்சுவிட்டார். அவர் கேட்டதெல்லாம் சரிதான் என்று உறுதிசெய்துகொள்கிறார்.

“அவரு விஷயமாத்தான் மகாராணி கூப்பிடுறாங்க”

“அதுக்கு முன்னாலே ஒரு காரியம் எனக்குத் தெரியணும்” என்றேன். “இப்ப கொட்டாரத்திலே என்ன நடந்திட்டிருக்கு?”

“அது உனக்கு எதுக்கு?” என்று கண்களைச் சுருக்கியபடி காறுபாறு ரங்கப்பையர் கேட்டார்

”எனக்கு ஒண்ணுமில்லை. ஆனா மகாராணி எனக்கு சங்கதிகள் சுற்றுபாடுகள் தெரியுமான்னு கேப்பாங்க… ஒரு நாலு அம்புகள் என்னை பாத்து விடாம மனசு திறந்து பேசமாட்டாங்க.”

காறுபாறு ரங்கப்பையர் என் கண்களை ஒருகணம் பார்த்துவிட்டு “சங்கதி ஊருக்கே தெரிஞ்சதுதான்… ஆற்காட்டுப் படைகள் நாலு மாசமா நம்மை சுத்திவளைச்சு நின்னுட்டிருந்ததே. அவனுக கப்பம் வாங்கி கைச்சாத்து போட்டுட்டு கெளம்ப முடிவெடுத்தாச்சு. நவாப்புப்படைகளை பின்னெடுக்குற உத்தரவு வந்தாச்சு. தண்டு எடுத்து நகர்ந்திட்டிருக்காங்க… ஒரு வாரத்திலே போயிடுவாங்க… சிராப்பள்ளியையும் மருதையையும் பிடிச்ச கிரகணம் ஒழிஞ்சுது”

“அப்டி அவனுக போயிடுவானுகளா?”

“ஏன் நீ இங்க அமாத்யன் வேலை பாக்க நெனைக்கிறியா? அவன் எதுக்கு வாறான்? கப்பமும் வாரமும் வேணும்னு வாறான். அவன் யுத்தம்பண்ணி ஜெயிச்சா கிடைக்கிறதை இப்பமே குடுத்தா பேசாம போயிடறான்… அவன் யுத்தம்பண்ணினா அவனுக்கும் பாதிப்படை அழிஞ்சிரும்ல? சும்மா கிடைக்குமா மருதையும் சிராப்பள்ளியும். இது அவனுக்கு லாபவியாபாரம்தான்”

“ஆனாலும்…”

“என்ன ஆனாலும்?”

“இல்ல, இது நாம நம்மளோட சக்திக்குறைவை அவனுகளுக்குச் சொல்லுறது மாதிரி இருக்கே?”

“என்ன சக்திக்குறைவு? இது ராஜதந்திரம். அந்தக்காலத்திலே பெரியராணி மங்கம்மத்தாயார் முகிலன் படைகளை இதேபோல கப்பம் கொடுத்து அனுப்பியிருக்கார். இந்தமாதிரி துண்டுத் துணுக்கு ஆற்காட்டு நவாப்பு இல்லை. சாட்சாத் டெல்லி பாதுஷா ஔரங்கசீப்போட தளவாய் சுல்ஃபிகர் அலி கான். அவன் யாரு? அவனை முகிலன் தர்பாரிலே தக்காணத்து ஓநாய்னு சொல்லுவாங்க. அவனே கப்பத்தை வாங்கிட்டு பேசாமப் போனான். எதுத்து நின்ன செஞ்சியை அவன் தரைமட்டமாக்கினான். மருதையிலேயும் சிராப்பள்ளியிலேயும் ஒரு கல்லு உதிர்ந்து விளல்லை… போர்னா ஒரு வியாபாரம். எல்லா வியாபாரமும் போர்தான். சொன்னது அமாத்யர் சென்ன கஸ்தூரிரங்கய்யா… அவரு அறியாத ராஜதந்திரமா?”

நான் தலைவணங்கி, “வெகுசிறப்பு, எஜமானரே” என்றேன்.

[ 2 ]

 

உள்ளிருந்து ஓர் ஏவலன்  வெளியே வந்து “காறுபாறு ரங்கப்பையர்” என்றான்.

“அடியேன் இங்கே இருக்கேன்” என்றார் காறுபாறு ரங்கப்பையர்.

அவன் அவரைப் பெயர் சொல்லி அழைப்பது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஆச்சரியமேதுமில்லை. அரண்மனைக் கோழிக்குஞ்சு கொத்தினால் அம்மிக்கல்லும் உடையும்.

“மகாராணி உத்தரவு. உங்க ஆளை மட்டும் உள்ள விடணும்”

“போய்ட்டு வா… என்னன்னு எங்கிட்ட வந்து சொல்லு” என்றார் காறுபாறு ரங்கப்பையர் ரகசியமாக.

நான் தலைவணங்கியபின் உடம்பை முடிந்தவரை குறுக்கி, வாயை கையால் பொத்தியபடி உள்ளே போனேன். கதவருகே வாய்பொத்தி குனிந்து நின்றேன்.

பெரிய அறை. அதன் மறுபக்க வாசல் அருகே ஒரு முதிய தாசி நின்றிருந்தாள். இந்த வகையான தாசிகளின் முகங்களில் அவர்கள் எப்போதும் காட்டும் உணர்ச்சிப் பாவனை அப்படியே சிலையாக மாறி நீடிக்கும். வியப்பு, பரவசம், பக்தி கலந்த பாவனை அது. துவராபாலகர் சிலைகளில் உள்ளது. கிழவி அப்படியே வியந்து நெகிழ்ந்து நின்றிருந்தாள். அவளே ஏராளமான நகைகள் போட்டிருந்தாள், தாசிகளுக்குரிய கல்நகைகள்.

சாய்வான மஞ்சத்தில் வெள்ளைப்பட்டு விரிக்கப்பட்டிருந்தது. செம்பட்டுத் தலையணைகள். அவற்றின்மேல் சாய்ந்தவளாக மகாராணி மீனாட்சித் தாயார் அமர்ந்திருந்தாள். மடிமேல் விரித்தட்டை வைத்து அதன் மேல் கட்டு அவிழ்த்து பரப்பப்பட்ட ஓலைகளை புரட்டிக்கொண்டிருந்தாள். அருகே ஒரு சந்தனப்பேழையில் சிவந்த பட்டுநூல்களால் கட்டப்பட்ட ஓலைகள் இருந்தன. கையெட்டும் தொலைவில் ஒரு மூங்கில்கூடையில் பழங்கள். அறைமூலையில் ஒரு சிறிய செம்புக்கலத்தில் குந்திரிக்கம் புகைந்தது. அறைக்குள் அந்த வாசனை நிறைந்திருந்தது. மேலே இரு பங்காக்கள், மாபெரும் பட்டாம்பூச்சி ஒன்று சிறகடிப்பதுபோல எதிரெதிர் திசைகளில் அசைந்தன.

சாளரங்களில் எல்லாம் இளஞ்சிவப்புச் சாயமிட்ட வெட்டிவேர்த்தட்டிகள் தொங்கின. அவற்றின் வழியாக வந்த மிதமான வெளிச்சத்தில் அந்த அறையே அழகான ஓவியம்போலிருந்தது. காற்றில் வெட்டிவேரின் குளிர்ச்சியும் மணமும் இருந்தது. வெண்ணிறச் சுவர்களில் ஓவியங்கள். எல்லாமே கிருஷ்ணலீலைகள். வெண்ணை உண்பது, பூதனை மோட்சம், உரலில் கட்டுண்டிருப்பது, வஸ்திராபகரணம், குழலூதி கோபிகைகளுடன் நின்றிருக்கும் லீலாவினோதக் காட்சி. அதன் நடுவே மகாராணி மீனாட்சித் தாயார் இன்னொரு ஓவியம்போலிருந்தாள். வெள்ளை ஆடை. நகைகள் ஏதும் இல்லை.ஆனாலும் எப்படி ஓவியமாக ஆகிறாள் என்று தெரியவில்லை.

அவள் ஓலையை வைத்துவிட்டு என்னைப் பார்த்தாள். அருகே வரும்படி கைகாட்டினாள். நான் சென்று ராணியின் அருகே தரையில் விழுந்து நெற்றி நிலம்பட மும்முறை வணங்கினேன். “மதுராபுரி ராஜ்யம் இருந்தருளும் விஷ்ணுபாதசேவினி ,பூதேவி ஸ்ரீதேவி பிரத்யக்க்ஷரூபினி, ஸ்ரீவிஜயநகர பதாகையவகாசினி, ஸ்ரீவர்த்தினி ,தர்மபரிபோஷிணி, அஷ்டாஸ்வைர்ய தாரிணி, மகாராணித் தாயாருக்கு நித்ய ஜயமங்களம்” என்றேன். “அடியேன், தாயுமானவ சுவாமி ஆலயத்து காவல்படை நூற்றுவன், அடிபணிந்தொழுகும் வீரன், பங்காரு ராமப்பன்.அடியனையும் அடியான் குடும்பத்தையும் அம்மைத்தாயார் ஆசீர்வதித்து அருளல் வேணும்”

”நீதான் அங்கே எல்லாம் பாத்துக்கிடுறியா?” என்று மகாராணி மீனாட்சி அம்மங்கார் கேட்டாள். அவளிடம் தெலுங்குக் கொச்சை இருந்தது.

“அடியேன், அம்மங்காரு அருளாலே அவ்வண்ணமே” என்றேன்

“உன்னாலே எனக்கொரு காரியம் ஆகணுமே”

“அடியேன், அது தெய்வகாரியத்துக்கும் மேல். தலைகொடுத்து முடிக்க அடியேன் கடமையுள்ளவன்”

“ம்ம்” என்று பெருமூச்சு விட்டாள். பிறகு திரும்பி தாசியைப் பார்த்தாள். தாசி பரவசபாவனையைக் காட்டினாள்.

“உனக்கு தாயுமானவப் பிள்ளையைத் தெரியுமா?”

“அடியேன்,தெரியும். பாத்ததும் பேசியதும் உண்டு…”

“எங்கே இருக்கார் தெரியுமா?”

“அடியேன். அறிந்தவரை,  ராமேஸ்வரத்திலே சேதுபதி ஆதரவிலே திருஉத்தரகோசமங்கை கோயிலை ஒட்டிய வடம்போக்கி மேற்குத்தெருவிலே ஒரு பழைய மடத்திலே இருக்கிறார்.அது திருவாவடுதுறை ஆதீனத்து மடம். உள்ளே ஒரு சின்னக் கோயில் உண்டு. அதிலிருப்பதும் தாயுமானவலிங்கம்தான்… “

“அங்கே எப்படி போனார்?”

“அடியேன், அவரோட பெரியப்பா மகன் நஞ்சுண்டார் பிள்ளை அங்கே கோயில் சீகாரியமா இருக்கார். அதாவது கேடிலியப்ப பிள்ளையோட அண்ணா மறைமுத்துப்பிள்ளையோட மூத்த மகன்…”

“ராமநாதபுரத்துக்கு நம்மோட நல்ல உறவு இல்லை… உறவு உண்டுண்ணும் சொல்லலாம், இல்லையென்றும் சொல்லலாம்…” என்று மகாராணி மீனாட்சித் தாயார் சொன்னாள். “இப்போ நவாபுகான் படைகள் நம் ராஜ்ஜியத்து மண்ணிலே இருந்து பின்வாங்கி திண்டுக்கல் வழியா கேரளதேசம் போறதா ஒற்றர் சொல்லு இருக்கு… ஆனா அவங்களிலே யாராவது ராமேஸ்வரம் பக்கமா போகலாம். தொண்டி துறைமுகத்துக்கு அதிபதி சேதுபதியானதனாலும் காலம்போன மகாராஜா பெரியநாயக்கர் காலம் முதல் அவங்க நமக்கு கப்பம் குடுக்காமலிருக்கிற காரணத்தாலும் அவங்க கிட்டே நல்ல பணம் இருக்க வாய்ப்புண்டு. அது நவாபு கான்களுக்கு நாக்கை ஊறத்தான் வைக்கும்…”

“அடியேன், அவங்க கேரளம் போனா பெரிசா ஒண்ணும் கிடைக்காது அம்மங்காரே” என்றேன்.

“ஏன்?”என்று  மகாராணி மீனாட்சித் தாயார் புருவம் சுளித்து கேட்டாள்.

“அடியேன், இப்ப கேரளராஜாக்கள் யாருமே தனியாளு இல்லை. எல்லாருக்கும் பறங்கிகளும் லந்தக்காரங்களும் துணையிருக்கு. பீரங்கிகள் இருக்கு. இடிபோல தீயைத் துப்புற ராட்சச பீரங்கிகள். இந்த நவாபு கான்களுக்க வேகமெல்லாம் வெள்ளைக்காரன்கிட்டே நிக்காது… என்னைக்கானாலும் அந்த செம்பூதக்கூட்டம் இந்த முகிலக்கூட்டத்தை அடிச்சு ஒழிச்சுப்போடும்”

“ஓ” என்று மகாராணி மீனாட்சித் தாயார் சொன்னாள். அவள் இமைகள் தாழ்ந்தன. ஏதோ யோசிக்கிறாள், எதை என்று எண்ணக்கூடவில்லை. பின்னர் என்னை நோக்கி “ஆனா கேரள ராஜாக்கள் கிட்டே முளகும் சுக்கும் வித்த பணம் பொன்னும் மணியுமா குவிஞ்சிருக்குன்னு பேச்சு…”

“அடியன், அது உள்ளதாக்கும், அது ஒல்லாந்தனும் பறங்கியும் குடுத்த பணம்… குடுத்தவனுக்கு காவந்து பண்ணவும் தெரியும்”

“அப்ப ராமேஸ்வரம் நோக்கி போகத்தான் வாய்ப்பு கூடுதல் இல்லியா?”

“அடியேன், போவானுக… தெக்கே போறதுக்கும் வாய்ப்புண்டு. திருநெவேலி பக்கமா”

“அதெப்படி? நம்மகிட்டே சந்தி ஒப்பு போட்டிருக்கே? நம்ம சிராப்பள்ளி மருதை தேசத்து மண்ணுக்குள்ளே படைகொண்டு வரமாட்டோம்னு சொல்லி சோனகவேதம் மேலே தொட்டு சத்தியம் பண்ணியிருக்கே?”

“அடியேன், அப்டீன்னா வரமாட்டானுக. ஆனா கான்களை நம்பமுடியாது. ஓநாய் மாதிரி ரத்தமணம் புடிச்சு அலையுறானுக” என்றேன்.

“அதைத்தான் நானும் சொல்லுறேன். நீ ராமேஸ்வரம் போ. தாயுமானவப் பிள்ளையைப் பாத்துச் சொல்லு, நவாப்புப் பட்டாளம் அங்கே வரும்னு. அவங்க வந்தா முதலிலே சேதுபதியை புடிப்பாங்க. அடுத்தாப்லே தாயுமானவப் பிள்ளையைத்தான் பிடிப்பாங்க. பிடிச்சு பணையக்கைதியா வச்சுக்கிடுவாங்க”

“அடியேன், அது எனக்கு புரியல்லை. தாயுமானப்பிள்ளை அங்கே ராஜ்யப் பிரவர்த்திகள் விட்டு சைவமும் சித்தாந்தமும் படிச்சு திருமுறை ஓதி சீவனம் செய்றதாத்தானே சொன்னாங்க?”

“அவரு எனக்கு என்ன வேணும்னு கான்களுக்கு தெரியும்… தெரியாட்டி எடுத்துச் சொல்ல ஆளிருக்கு”

நான் அங்கே எச்சரிக்கை அடைந்தேன். எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தேன்.

“அவருக்காக நான் உயிர்கொடுப்பேன்… வேணுமானா இந்த ராஜ்ஜியத்தையே குடுப்பேன். அது அவருக்கும் தெரியும்…” என்றாள் “அவரு அந்த நவாப்புக் கான்கள் கையிலே சிக்கிரப்படாது. அவரை பத்திரமா மருதை ராஜ்ஜிய எல்கைக்குள்ளே கூட்டிட்டு வந்திடணும்… நான் கூப்பிட்டதாச் சொன்னா வரமாட்டார். நான் ஆசைப்பட்டதனாலே நாடும் குடியும் வேண்டாம்னு ராமேஸ்வரம் போனவரு அவரு”

நான் இல்லாதவன்போல் இருந்தேன். என் கண்களில் ஏதும் தெரியாமலிருக்க நிலம் நோக்கியிருந்தேன்.

“எனக்கு ஒண்ணுமே வேண்டாம்… இனி நான் பாக்கக்கூட வேண்டாம். எங்காவது நல்லா இருந்தா போதும். நிறைவா இருந்தா போதும்” மெல்லிய விம்மலோசை ஒன்று அவளிடமிருந்து எழுந்தது. “எப்டியாவது கூட்டிட்டு வந்திரு… இந்தச் சிராப்பள்ளி எல்கைக்குள்ளே எங்க வேணுமானாலும் இருக்கட்டும்… மடம் வேணுமானா மடம், கோயில் வேணுமானா கோயில். எது வேணுமானாலும் குடுக்குறேன்னு சொல்லு”

“அடியேன், சொல்றேன்”என்றேன்.

அவள் திடுக்கிட்டவள்போல் என்னைப் பார்த்தாள். அவள் கண்களில் நீர் நிறைந்திருப்பதைக் கண்டேன். அவளை அப்போதுதான் நான் முழுமையாகப் பார்த்தேன். நல்ல வெண்மை நிறம். வடுகநிறம் அது. வடுகநாட்டு வெள்ளைப்பளிங்கின் நிறம். சிறிய உடல், சிறிய முகம். அதில் சிறிய மூக்கு, குவிந்த சின்னஞ்சிறு உதடுகள். கன்னங்களில் சிவந்த புள்ளிகளாக பருக்கள். நெற்றியில் திருமண் கீற்று. கூந்தலிழைகள் கலைந்து நெற்றியில் பறந்து பங்காவின் காற்றில் அசைந்தன.

கரைந்த குரலில் “எப்டியாவது கூட்டிட்டு வந்திரு. புண்ணியமாப்போகும்… என்ன வேணுமானாலும் தாறேன்” என்றாள். சட்டென்று எழுந்துவிட்டாள். அக்கணம் சிறுமி என தெரிந்தாள்.

பின்னர் தன் முகத்திரையை இழுத்து விட்டுக்கொண்டு குனிந்து அமர்ந்தாள். நான் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.

அவளுக்கு என்ன வயது இருக்கும்? இருபத்திரண்டா? இல்லை. ஏழாண்டுகளுக்கு முன் பெரியநாயக்கர் விஜயரங்கர் அவளை திருமணம் செய்துகொண்டபோது பதினாறு வயது. அப்படியென்றால் இருபத்து மூன்றுவயது முடிந்திருக்கிறது. ஆனால் பதினாறு வயதுப்பெண் போலிருந்தாள். அதைவிடவும் இளையவளாக, வயதடையாத குழந்தை போல தெரிந்தாள்.

அவள் பெருமூச்சுடன் முகத்திரையை விலக்கி “எனக்கு ரகசியம் ஒண்ணுமில்லை. என் மனசுக்கு உகந்த ஆம்புளை அவருதான்.என்னை மங்கலம் பண்ணி ராணியாக்கிய பெரியநாயக்கர் இல்லை, அவருதான் என் ஆத்மா அறிஞ்ச ஆம்புளை… பெரிய நாயக்கர் என்னை பாணிகிரகணம் பண்ணுறப்போ எனக்கு ஒண்ணுமே தெரியாது. அரண்மனைக்கு வெளியே உலகத்தைப் பாத்ததில்லை…”

அவள் தன் கைகளை பார்த்தபடி சொல்லிக்கொண்டே சென்றாள். “பாணிகிரகணம் நடக்கிறப்பக்கூட அவரைப் பாக்கலை. இங்கே சிராப்பள்ளிக்கு வந்த பிறகுகூட பாக்கலை. பதினெட்டாம்நாள் சடங்கெல்லாம் முடிஞ்சுதான் பாத்தேன். பழுத்த கிழவர் மாதிரி இருந்தார். சீக்காளி. நாப்பத்திரண்டு வயசுக்கு எம்பது வயசு தோற்றம். மூச்சிளைப்பு நோய். நாலு சொல் சேந்தாப்லே பேசமுடியாது. இரவுபகல் எந்நேரமும் அபினி வேணும்… நான் அவரை பாத்ததே ஏழெட்டு தடவைதான். அப்ப நான் அறிஞ்சதெல்லாம் அபினி நாத்தம்தான்”

அவள் அரசியாக இல்லை. சொற்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்திருந்தாள். நான் திகைப்புடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தத் திகைப்பை மறைக்க என்னால் முடியவில்லை.

“ஏற்கனவே எட்டு ராணிமார். ஒருத்தருக்கும் பிள்ளை இல்லை. பிள்ளையில்லாமே சிராப்பள்ளி மருதை ராஜ்ஜியம் அன்னியம்நின்னு போயிடும்னு பயம் இருந்தது. தஞ்சாவூர் மராட்டியனும் செஞ்சி நாயக்கனும் நாக்கை ஊறப்போட்டு உக்காந்திருந்தாங்க. ஆற்காட்டு நவாப்புக்கும் ஆசை உண்டுன்னு தெரியும். அதனாலே என்னை பெண்ணெடுத்தாங்க”

குரல் ஓங்க“எதுக்கு? பிள்ளை பெத்துக்கிட… நியோக முறையிலே பிள்ளை பெத்துக்கிட… வெறும் ஒரு புதுப்பானை, வேறே ஒண்ணுமில்லை. பிராமணன் ஊத்துறதை புடிச்சுக்கிட ஒரு கலம்” என்றாள் “பழைய ராணிகளிலே நியோகம் பண்ணினா ஊருலே சந்தேகம் வரும். அதுக்காக புதியவ என்னை கொண்டு வந்தாங்க. வந்த மூணாம் மாசம் மருத்துவச்சிங்க குறிச்சு குடுத்த நாளு நேரத்திலே ராத்திரியிலே இருட்டோட இருட்டா வந்தான் யாரோ ஒரு பிராமணன். ஏழெட்டுநாளு… அது வெறும் பொலிகாளை. புல்லுக்கொச்சமும் பீஜக்கொச்சமும் வீசுற வெறும் மாமிசம்…”

“எனக்குள்ளே ஒண்ணுமே முளைக்கலை. ராஜாவோட உயிரும் நலிஞ்சுட்டே வந்தது. வேற வழியில்லாமே ராஜகுடும்பத்திலே பங்காரு திருமலையோட மகனை இளவசரனா தத்து எடுத்தாங்க. எனக்கு நியோகம் வந்த அந்த எருதுக்கு பீஜசக்தி இல்லைன்னும் அதெல்லாமே பங்காரு திருமலையோட சதின்னும் பிறகு தெரிஞ்சுது. பெரிய நாயக்கர் மண்மறைஞ்சாரு. தத்துப் பிள்ளைக்குக் காவலா நான் இங்க உக்காந்திட்டிருக்கேன்”

அவளுடைய சிவந்து பழுத்த முகத்தை, மூச்சிளைப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படி சாதாரணப்பெண்களும் பேசமாட்டார்கள். இவள் பேசுவது என்னிடமல்ல, அவரிடம். ஆனால் ஒன்று தெரிந்தது, இந்தச் சொற்களையும் உணர்வுகளையும் இவள் என்னிடம் சொல்லிவிட்டதனாலேயே என்னை வாழவிடமாட்டார்கள். இந்த தூதைச் சொல்லிவிட்டு அப்படியே லந்தக்காரர்கள், பறங்கிகளிடம் போய் சேர்ந்துவிடவேண்டும். மறுபடி இந்தச் சிராப்பள்ளி- மதுரை நாட்டு மண்ணில் காலே வைக்கக்கூடாது. தலைவேண்டுமென்றால் ஓடிவிடவேண்டும்.

ஆனால் நான் என் முகத்தை சிலையாக வைத்திருந்தேன். என் கண்களை நிலைகுத்த வைத்திருந்தேன். கண்களை ஒரே புள்ளியில் நிறுத்தி உதடுகளையும் இறுக்கிக்கொண்டால் நம் முகம் கல்லென ஆகிவிடும்.

“சரி ,அது என் விதி. ஆனா நானும் பொம்புளைதான். பெண்ணாப்பிறந்தாச்சு. நாராயணன் என் மனசிலே தேனை ஊறவைச்சா நான் அதை துப்ப முடியாது. நான் அவர் மேலே ஆசைப்பட்டேன். என் ஆசையை அவர்கிட்டே சொல்லலை. அவரை நான் என் மஞ்சத்துக்கு கூப்பிடலை. நான் ஒண்ணுமே கேக்கலை. அவர்கிட்டே ஒருவார்த்தை பேசணும்னுகூட நினைக்கலை”

“கண் நிறைஞ்சு நின்னிட்டிருந்தார். இந்த சிராப்பள்ளிச் சபையிலே அவர் நுழைஞ்சா இளஞ்சூரியன் உதிச்ச மாதிரி. அழகுன்னா அவர்தான் அழகு… திருவரங்கனோட ஆபாதசூட தங்கக்காப்பு மாதிரி பாக்கப் பாக்க கண்ணு நிறையும், மனசு நிறையாது. அறிவுக்கும் ஞானத்துக்கும் அவருக்கு ஒப்பம் சொல்ல யாருமில்லை. கண்களிலே கருணை நெய்த்தீபம் மாதிரி ஒளி வீசிட்டிருந்தது. வார்த்தைகளிலே அந்த மதுரம் இருந்தது. அந்தக்காலத்திலே பிருந்தாவனத்திலே கிருஷ்ணன் அப்டித்தான் இருந்திருக்கணும்… ”

“பொம்புளைக்கு என்ன வேணும்? ஞானமா, அறிவா? ஒண்ணும் வேண்டாம். கனிஞ்சு ஒரு வார்த்தை, அவ்ளவுதான். பொம்புளைக்கிட்டே பேசுறப்ப பொம்புளையும் குழந்தைங்க கிட்டே பேசுறப்ப குழந்தையும் ஆகிறவன்தான் நிறைஞ்ச ஆம்புளை… அப்டி ஒரு ஆம்புளைய கண்ணெதிரே பாத்தபிறகும் அந்தக் காலடியிலே விழலேன்னா நான் பொம்புளையே இல்லை” அவள் மெல்ல அடங்கினாள். பெருமூச்சுகளாக விட்டபடி மஞ்சத்தில் தளர்ந்து சாய்ந்தாள்

அவள் திரும்பிப்பார்க்க முதியசேடி குடிநீர் கொடுப்பதற்காக வெள்ளிக்கோப்பையைக் கையிலெடுத்தாள். அவள் வேண்டாம் என்று கைகாட்டினாள்.

என்னிடம் திரும்பி “நான் சொன்னேனே, நான் அவர்கிட்டே ஒண்ணையும் எதிர்பார்க்கலை. அவரை நாளுக்கொருமுறை பாக்கணும், அவர் குரலைக் கேக்கணும். அவ்வளவுதான். அது ஒண்ணும் தப்பில்லை. நான் எனக்குள்ளே இருக்கிற நாராயணன்கிட்டே கேட்டேன். சொல்லு, நீயும் ஆயர்பாடியிலே பெண்ணை அறிஞ்சவன்தானே? நான் பிரேமை வைக்கப்பிடாதான்னு கேட்டேன். பிரேமைன்னா பொன்விளக்கிலே சுடராக்கும்னு அவன் சொன்னான். எனக்கு எந்த தப்பும் தெரியல்லை. இப்பவும் தெரியல்லை”

“ஆனா இங்கே சபையிலே பேச்சு கிளம்பிட்டுது. அதை மறைக்க முடியாது. தீயைக்கூட மறைக்கலாம், ஆசைய மறைக்கமுடியாது. திவான் விஜயரங்கய்யா வந்து சொன்னார். இது தப்பு, ஏற்கனவே பெரியராணி மங்கம்மத் தாயாரை இதேமாதிரி ஒரு பழியை சொல்லிப் பரப்பித்தான் ஒழிச்சாங்க, இது வேண்டாம் ராணின்னு சொன்னார். பழிசொல்ல ஒண்ணுமே இல்லியே அமாத்யரேன்னு நான் சொன்னேன்.”

“திவான் விஜயரங்கய்யா எங்கிட்ட சொன்னார்.பெரியராணி  மங்கம்மத்தாயாருக்கும் பழி சொல்ல ஒண்ணுமே இல்லை. பெரிய தளவாய் கஸ்தூரி ரங்கய்யா அம்மங்காரோட பால்யகால சகா. கஷ்டங்களிலே துணையா நின்னது தவிர அவர் மேலே தப்பில்லை. ஆனா ஒரு தெலுங்குக் கவிஞனுக்கு காசு குடுத்து மங்கம்மா பும்சலீ நீச சரித்ரான்னு ஒரு பாட்டை எழுதவைச்சு ஊரெல்லாம் பாடிப் பரப்பினாங்க. ஊரே அவச்சொல் பேசிச்சுது .அந்த இருட்டிலே அம்மங்காரை துறுங்கிலே அடைச்சாங்க.அம்மங்கார் துர்க்கை அவதாரம். அவரையே பட்டினிபோட்டு சாகடிச்சாங்க. கஸ்தூரிரங்கய்யாவுக்கும் விஷம் வைச்சு கொன்னாங்க.. சிராப்பள்ளி மருதை ராஜ்ஜியமே அனாதையாச்சு…”

“நான் என்ன பண்ணணும்னு சொல்றீங்க அமாத்யரேன்னு நான் கேட்டேன். இது ராஜகாரியம். பண்டு புராணத்திலே நிஷத நாட்டு ராஜாவான நளன் கால் கழுவினப்ப ஒரு சின்ன இடைவெளி விட அதுவழியா கலி உள்ளே நுழைஞ்சதா கதை உண்டு. அந்தக் கதையோட தாத்பரியம் இதுதான். ராஜபரிபாலனத்திலே நம்ம பக்கம் பழி, மறுபக்கம் பகை ரெண்டும் துளிகூட மிஞ்சக்கூடாது. இந்த ராஜ்ஜியத்தை அழிக்க ஆயிரம் நஞ்சுக் கூட்டம் சுத்தி காத்திருக்கு. அவங்களுக்கு வாய்ப்பு குடுக்கவேண்டாம்னு திவான் சொன்னாரு”

“சட்டுன்னு நான் அழுதிட்டேன்.அப்ப எனக்கு வாழ்வே இல்லியா? உடம்பாலே வாழலை, மனசாலேகூட வாழக்கூடாதா? கண்ணை கட்டுறதுக்கு எங்கிட்டே மந்திரமா இருக்குன்னு சொல்லி அழுதிட்டே எந்திரிச்சு உள்ளே போயிட்டேன். திவான் என்ன செஞ்சாருன்னு தெரியல்லை. மறுநாள் தாயுமானவ பிள்ளை சபையிலே இல்லை. அவரோட மனைவியையும் மகனையும் வேதாரணியத்துக்கு அனுப்பிவைச்சுகிட்டு எங்கயோ போய்ட்டார்னு சொன்னாங்க. தேடித்தேடித்தான் ராமேஸ்வரத்திலே இருக்கிற செய்தி தெரிஞ்சுது”

“ஆளனுப்பிப் பேசவைக்கலாம்னு நினைச்சேன். ஆனா அப்டியே விட்டுட்டேன். எனக்கு என் மனசிலே இருக்கிற அவரோட முகமே போதும். தங்கக் காப்பு போட்ட பெருமாள் என்னோட கருவறையிலே கொலுவிருக்காரு. அங்கே அஸ்ருபூஜை பண்ணி வாழ்ந்திட்டு போயிடறேன். அதை யாரும் தடுக்கமுடியாது. அவரே கூட அதை தடுக்க முடியாது. அவர்கிட்டே போய் இதைச் சொல்லு. இதைச் சொல்ல ஒருத்தர் வந்ததும் நல்லதாப் போச்சு. மனுஷக்காது கேக்க இதைச் சொல்லாம இருந்திருவேனோன்னு நினைச்சிட்டிருந்தேன். சொல்ல எனக்கு வார்த்தை உண்டுன்னுகூட இப்பதான் தெரியுது”

“அடியேன், ஆணை தலைக்கொண்டு சொல்லிடறேன் மகாராணி”என்றேன்.

“இப்பவும் நான் சொல்ல நினைக்கலை. அவரை பேசிச் சம்மதிக்க வைச்சு மருதை ராஜ்ய எல்கைக்குள்ளே கொண்டுவரணும். அதுக்கு அவர்கிட்டே முன்னாடி பேசிப் பழகின ஒரு ஆளு வேணும். ஒற்றனாகவும் இருக்கணும், ஆனா ராஜகொட்டாரத்துக்கு சம்பந்தமும் இருக்கக்கூடாதுன்னு காறுபாறு ரங்கப்பையர் கிட்டே சொன்னேன். அவருதான் உன்னை அனுப்பியிருக்கார். உன்னைப் பார்த்ததுமே நீ பிராப்தன்னு தெரிஞ்சுகிட்டேன். என்னை அறியாமலேயே மனசு திறந்து பேசிட்டேன்… நான் பேசினதை எல்லாம் சொல்லு”

“அடியேன், ஆணை மகாராணி”

“ஏன் இதெல்லாம் பேசுறேன்னு தெரியல்லை. பேசாமப் போயிடக்கூடாதுன்னு நாலஞ்சுநாள் முன்னாடி நினைச்சேன். அப்பக்கூட இப்டி ஒரு அறியா மனுஷன்கிட்டே பேசுவேன்னு நினைக்கல்லை. ஆனா அறியா மனுஷன்கிட்டேதான் சொல்லமுடியும். அறிஞ்ச முகத்தைப் பாத்து சொல்ல முடியாது”

“அடியேன், நான் கிளிமாதிரின்னு நினைக்கணும். சொல்லறிஞ்ச பொருளறியா கிளியாக்கும் அம்மங்காரே”

“நல்லது, அவர்கிட்டே சொல்லு. நான் முதலிலே நினைச்சேன், அவரை ஒருவேளை திவான் பயமுறுத்தி அனுப்பியிருக்கலாம்னு. என்னோட ஆணைன்னு சொல்லியிருக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனா அஞ்சுறவரு இல்லை அவர். மனுஷங்களோட மனசாழம் அறிஞ்சவரு. அவருக்கு ஆரும் ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லை. இருந்தாலும் சொல்லு, ராணி இப்பவும் பிரேம தபஸ் தான் பண்ணிட்டிருக்கான்னு. ராணிக்கு அந்த தபஸ் செய்ய அவரோட ஒரு தலைமுடியிழை கூட வேண்டாம்னு சொல்லு. மானசபூஜைக்கு எந்த தெய்வமும் தடைசொல்லாதுன்னு எடுத்துச் சொல்லு. கோபிகைக்கு கிருஷ்ணன்மேலே உரிமை உண்டுன்னு சொல்லு அவர்கிட்டே”

“அடியேன், சொல்றேன் மகாராணி”

“அவரு எப்டியாவது மருதை எல்கைக்குள்ளே வந்தாப்போரும். நீ அட்டியில்லாமே மருதைக்கும் அப்புறமும் போகிறதுக்கு உண்டான முத்திரையும் ஓலையும் உனக்கு தரச்சொல்றேன்… ஏண்டி மாணிக்கம்?”

அந்த தாசி உணர்ச்சிப்பரவச மெய்ப்பாடுகளைக் காட்டினாள். நகைகள் அசைந்தன

“போய்ட்டு வந்திரு… உனக்கு வேண்டியதை தாறேன்” என்று சொன்னபின் ராணி கையசைத்தாள்

நான் தண்டனிட்டு “அஷ்டாங்கம் பூமிஸ்பர்ஸம். சர்வானுக்ரகம் வேணும். மங்களாஸம்சைகள் வேணும். அம்மங்கா அருளாலே குலம்பெருகணும், வளம்பெருகணும், பேரு நிலைகொள்ளணுனும்” என்றேன்

அவள் என்னை வாழ்த்துவதுபோல கையை காட்டினாள். நான் எழுந்து புறம் காட்டாமல் குனிந்து வாய்பொத்தியபடியே நடந்து பின்னடைந்து கதவு அருகே நின்றேன். கதவு திறந்ததும் வெளியே சென்றேன். தாசி என் பின்னால் வந்தாள்.

கூடத்திற்கு வந்ததும் அந்த தாசி தாழ்ந்த கட்டைக்குரலில் “முத்திரை மோதிரமும் ஓலையும் வாங்கிக்கோ” என்றாள்.

அவள் முகத்தில் அத்தனை நாள் பழகியிருந்த சிருங்கார பாவனைகள் முதுமையால் அசிங்கமாக மாறியிருந்தன. நான் பார்வையை தாழ்த்திக்கொண்டேன். அவள் நகைகளும் மணிகளும் ஒலிக்க நடந்தாள். நான் கூடவே சென்றேன்.

[ 3 ]     

ஓலையும் மோதிரமும் பெற்றுக்கொண்டு நான் வெளியே வந்ததும் என்னை காறுபாறு ரங்கப்பையர் வந்து சந்திப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் அங்கே இல்லை. நான் கொட்டாரத்திலிருந்து வெளியே போய் என் குதிரைவண்டியில் ஏறி கோட்டை தாயுமானவர் ஆலயத்து சன்னிதி வடக்குத்தெருவிலிருக்கும் என் வீட்டுக்குச் சென்றேன்.

என் மனைவியிடம் நான் சென்றதுமே, மறுநாள் அவள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு புதுச்சேரிப் பக்கம் போய்விடவேண்டும் என்று சொன்னேன்.

“அங்கே கும்பினிக்காரங்க ஆட்சி நடக்குது. அவங்க பொம்புளையாளுங்களை ஒண்ணும் செய்யமாட்டாங்க. சக்ரபாணி செட்டிகிட்டே சொல்லி பணம் குடுத்து ஏற்பாடு செய்யுறேன். செட்டித்தாலி செட்டிப் பாம்படம் போட்டுக்க. புடவையைச் செட்டிக்கட்டு கட்டிக்க. செட்டிச்சியா உக்காந்திரு. வண்டியிலேயே கூட்டிட்டுப் போவாங்க. செட்டிகளை இங்க யாரும் மறிக்கிறதில்லை. புதுச்சேரி புதிய ஊராக்கும். அங்கே உங்கிட்டே யாரு என்னன்னு கேக்க மாட்டாங்க. அங்கே கையிலே இருக்கிற பணத்தை வைச்சுக்கிட்டு நாலுபேரு அறியாம இருந்திரு. அங்க இருக்கிற பாதிப்பேரு இப்டி வந்தவங்கதான். அதனாலே ஒண்ணும் வித்தியாசமா தெரியாது. நான் எங்கபோறேன், ஏது செய்வேன்னு கேக்காதே. நான் வந்திருவேன்” என்றேன்.

அவளுக்கு என் தொழில் தெரியும். அவள் கொஞ்சம் மிரண்டாலும் மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை.

“அங்கே கொஞ்சநாள் இரு. நான் வரேல்லன்னா நம்மாளுகளை கண்டு அவங்க கூட சேந்துக்கோ. புள்ளைகளை கருத்தா வளத்து ஆளாக்கு. உனக்குண்டான பணம் செட்டி கையிலே குடுத்திருப்பேன். செட்டிச் சொல் கெட்டிச்சொல்லுன்னு சொலவடை உண்டு… பயப்படாதே” என்றேன்.

நான் என் பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தபோது காறுபாறு ரங்கப்பையரின் வேலைக்காரன் ஒருவன்  என்னை தேடிவந்தான். அவன் கோயிலில் அஷ்டகால பூசைக்கு அனுமதி கேட்பவன்போல வந்தான். ரகசியமாக என்னை தாயுமானவர் சன்னிதி மூன்றாம் தெருவில் உள்ள சுந்தரையரின் வீட்டில் காறுபாறு ரங்கப்பையர் எதிர்பார்ப்பதாகச் சொன்னான்.

நான் மேலாடையை சுற்றிக்கொண்டு கொல்லைப்பக்கம் சந்து வழியாகக் கிளம்பிச் சென்றேன். வீட்டு முற்றத்தில் என் குறடுகளை போட்டு வைத்திருந்தேன். நான் அங்கிருப்பதாக அவை காட்டும். ஒருவேளை நான் திரும்பி வராமலேயே போகலாம்.

சுந்தரையரின் வீடு முடுக்குக்குள் இருந்தது. என்னை அங்கே ஒருவன் வாசலிலேயே வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான். சிறிய தொட்டிகட்டு வீடுபோல தோன்றியது. ஆனால் உள்ளே சுரங்கப்பாதைபோல வழி சென்றது. உள்ளே பெரிய அங்கணமும் திண்ணைகளும். உள்ளே குட்டித் திண்ணையில் காறுபாறு ரங்கப்பையர் இருந்தார். சுந்தரையரின் இளம் மனைவி அவருடன் பேசிக்கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் கூர்ந்து பார்த்துவிட்டு விலகிச் சென்றாள்.

நான் அவரை கண்டு கும்பிட்டு நின்றேன், அவர் என்னை கூர்ந்து பார்த்து நாவால் வெற்றிலைத் துணுக்கை நிமிண்டியபடி பார்த்தார்.

“நான் கிளம்பிட்டிருக்கேன்” என்றேன்.

“என்ன சொன்னா ராணி?”என்று காறுபாறு ரங்கப்பையர் கேட்டார்.

நான் தயங்கினேன். அங்கே எவருமில்லை. பின்னர் “தாயுமானவப் பிள்ளைக்கு ஒரு தூது… எதிர்பார்த்ததுதான்” என்றேன்.

“ஆமா, ஆனா அது இப்ப எதுக்கு?”என்றார் காறுபாறு ரங்கப்பையர்.

“நவாப்புப் பட்டாளம் ராமநாதபுரத்துக்குப் போகும்னு நினைக்கிறாங்க… அவரை மருதை ராஜ்ஜிய எல்கைக்குள்ளே வரச்சொல்லச் சொன்னாங்க”

“என்ன சொன்னா ராணி, முழுசாச் சொல்லு”

நான் அங்கே ராணி பேசியதை சொன்னேன். ஆனால் ராணியின் உணர்வுகளைச் சொல்லவில்லை. அவர் சொன்ன எதையுமே சொல்லவில்லை. ராணிக்கு தாயுமானவ பிள்ளையின் பாதுகாப்பு பற்றி இருக்கும் பயத்தையும், அவரை பணயமாகப் பிடித்துக்கொண்டு நவாப்புப்படைகள் ராணியிடம் பேரம்பேசலாமென்று அவர் சந்தேகப்படுவதையும் மட்டும்தான் விவரித்தேன்.

காறுபாறு ரங்கப்பையர் நிறைவடைந்துவிட்டார். அதற்குமேல் ராணி என்னிடம் அணுக்கமாக பேசியிருக்க வாய்ப்பிருக்கவில்லை. “என்ன சொல்லுறாங்கன்னே புரியல்லை” என்றார். “இப்ப நாடு இருக்கிற நிலைமையிலே இதுவா பெரிய விஷயம்?”

“நாட்டுக்கு என்ன குறை?”என்றேன்.

“உனக்கென்ன தெரியும்? மருதை பெரிய பாலகுடு தளவாய் பங்காரு திருமலை யாருன்னு நினைக்கிறே? பழைய மருதை பெரியநாயக்கர் திருமலை மகாராஜாவோட ரத்தம் அவரு.திருமலை நாயக்கரோட தம்பி குமாரமுத்து நாயக்கரோட கொள்ளுப் பேரன். மருதையே அவரோடது. இப்ப சிராப்பள்ளி இளவரசர் விஜயகுமார சின்னநாயக்கர் அவரோட சொந்த மகன். மங்கம்மா ராணி போனது முதல் மருதையை தன் கையிலேயே வைச்சிருக்காரு. இந்த சிராப்பள்ளி மருதை ராஜ்யத்துக்கு முழுசா ராஜாவா ஆகமுடியாம அவரை தடுக்கிற ஒரே சக்தி ராணி மீனாட்சி அம்மங்காருதான். ராணியை நீக்கம் பண்ண அவரு செய்யாத க்ஷுத்ர தந்த்ரம் இல்லை”

நான் பெருமூச்சுவிட்டேன். என்னிடம் எல்லாவற்றையும் சொல்கிறார்கள். என்னை பலிகொடுக்க முடிவெடுத்துவிட்டார்கள்.

“ராணி ராஜ்யபரிபாலனம் தொடங்கினப்பவே பங்காரு நாயக்கர் தந்திரங்களை ஆரம்பிச்சிட்டாரு. அரண்மனை முழுக்க அவரோட ஆளுங்களை வைச்சாரு. ராணி சித்ரதுர்க்காவிலே இருந்தும் அனந்தபூரிலே இருந்தும் அவங்களுக்கு சொந்தமான ஆளுங்களை வரவழைச்சாங்க. பங்காருவோட ஆளுங்களை ஒவ்வொரு காரணமாச் சொல்லி வெளியே அனுப்பினாங்க. இந்தச் சதுரங்க வெளையாட்டு நடந்திட்டே இருந்தது. ராணியோட அண்ணா தளவாய் வெங்கட்டப்பெருமாள் நாயக்கர் துணையிருந்ததனாலே அவராலே பங்காருவை வைக்கவேண்டிய இடத்திலே வைக்க முடிஞ்சது”

“கடைசியிலேதான் ராணி சிராப்பள்ளி பெரியதளவாய்  வெங்காச்சாரி மேலே கையை வைச்சாங்க. அரண்மனையிலே உக்காந்துட்டு ராணிக்கு எதிரா எல்லாம் செய்தவரு அவரு. அவரு பங்காருவோட கூட்டாளின்னு முன்னாடியே தெரியும். ஆனா சல்லிவேரை வெட்டாம ஆணிவேரை வெட்டமுடியாது. தளவாய் வெங்காச்சாரியை கூத்திகோட்டைக்கு காவலோட அனுப்பினாங்க. போறவழியிலே அவரு சாகட்டும்னு நான் சொன்னேன். இல்லே, பிரம்மஹத்யை வேண்டாம்னு ராணி சொல்லிட்டாங்க. அவரு அங்கேருந்து பங்காருகிட்டே வந்து சேந்தாரு. இப்ப எல்லாம்  அவரு சொல்லி செய்றதுதான். அவரும் பங்காருவும் சேந்து ஏழுமுறை சிராப்பள்ளியைப் புடிச்சு ராணியை துறுங்கிலே அடைக்க முயற்சி பண்ணியிருக்காங்க…”

நான் அதில் பாதிக்கதைகளை ஏற்கனவே கேட்டிருந்தேன்.

“நாம ராணி மங்கம்மா காலம் முதல் டில்லி பாதுஷாவோட ஜாகீர்தார் அந்தஸ்திலேதான் இருக்கோம்னு தெரியுமே… சுல்பிகர் அலிகானுக்கு அப்பவே ஒருகோடி பக்கோடா பணம்குடுத்து சந்தி பண்ணிக்கிட்டோம். மராட்டியராஜாகிட்டே இருந்து செஞ்சியை புடிக்க சுல்ஃபிகர் அலி கானுக்கு உதவியும் பண்ணினோம். அதிலே இருந்து நாம டில்லி பாதுஷாவுக்கும் அவரோட அதிகாரமுள்ள கர்நாடக நவாப்புக்கும் கப்பம் கட்டிக்கிட்டு வாறோம். இப்ப அதிகாரம் ஹைதராபாத் நைஜாம் சப்தர் அலி கானுக்கு இருக்கு. நாம அவனுக்கு கப்பம் குடுக்கிற ஆளுங்க” என்றார் ரங்கப்பையர்

“வெங்காச்சாரி சொல்லி பங்காரு நேரா ஹைதராபாத் நைஜாமை பாக்க அவரே போனாரு. சிராப்பள்ளி ராஜ்ஜியத்தை தனக்குக் குடுத்தா முப்பது லட்சம் பொன்பகோடா குடுக்கிறதாச் சொல்லி அஞ்சுலட்சம் முன்பணமாவும் குடுத்தாரு. சப்தர் அலி கான் அதை வாங்கிக்கிட்டு அவரோட கின்னேதார் சந்தாசாகிப்பை சிராப்பள்ளிக்குப் படையோட அனுப்பினாரு. அவன் ஆறுமாசமா சிராப்பள்ளிப்பக்கத்திலே முகாம் அடிச்சு உக்காந்திருந்தான். இப்ப, இதோ இன்னைக்குத்தான், சந்தி சமாதானம் ஆயி அவன் திரும்பிப் போய்ட்டிருக்கான். நம்ம மகாராணி ஒருகோடி பொன்பகோடா குடுக்கிறதா ஒப்புத்துக்கிட்டிருக்கா. அதிலே முப்பது சந்தா சாகிப்புக்கு, மிச்சம் சப்தர் அலி கானுக்கு… அவனுக்கு லாபம்தான்”

“இப்ப இந்த தாக்கல் போனதுமே பங்காரு திருமலை மருதையை விட்டு கிளம்பியிருப்பார்… நான் அவர் கெளம்பினாங்கிற செய்தியைத்தான் காத்துக்கிட்டிருக்கேன். அவர் தெக்கே போவார்… ராமநாதபுரம் போகமாட்டார், சேதுபதி அவர்கூட  சேந்து படைநிக்கமாட்டார். அவரு அம்மங்காரு மங்கம்மாவுக்க ஆப்தராக்கும். ஆனா பங்காரு நாயுண்டு தெக்கேபோனா கயத்தாறு பாண்டியனுங்களை சேத்துக்கிடலாம். திருநெல்வேலியிலே நிருபதி நாயக்கன் படையோட நின்னுட்டிருக்கான். அவனையும் சேத்துக்கிட்டா ஒரு பத்துவருசம் நின்னு போராடமுடியும்”

“சந்தா சாகிப் துரத்திட்டுப் போவாரா?”

“ஆமா, அவன் தெக்கே திரும்புறதப் பாத்தா வழியிலே பங்காருவை மறிச்சிருவான்னு நினைக்கிறேன்”

அவர் மேலே பேச நான் காத்திருந்தேன்

ரங்கப்பையர் குரலை தாழ்த்தி “இதிலே நமக்கு ஒரு வியாபாரம் இருக்கு.அதான் உன்னை கூப்பிட்டேன். நீ எப்டியும் ராமநாதபுரம் போறே”

“சொல்லுங்க” என்றேன்.

“நீ நமக்கு ஒரு சகாயம் செய்யணுமே?”

“சொல்லுங்க உடையோரே, என் கடமையாக்குமே”

“ராணி உனக்கு அடையாளம் தந்திருப்பாளே?”

“ஆமா” என்றேன்.

“அதைவைச்சு செய்யவேண்டிய வேலை. நீ இப்ப நேரா மருதைக்குப் போறே. ராமநாதபுரம் போக மருதை போகவேண்டியதில்லை, ஆனா பாதுகாப்புக்காக அப்டி போறேன்னு கணக்கு, புரிஞ்சுதா?”

“சரி”

“மருதையிலே சேவப்ப நாயக்கன்னு ஒருத்தன் உண்டு. நம்ம ஆப்தன் அவன். அவன் ரங்கமகாலிலே ராயசமா இருக்கான். நீ வந்த செய்தியைச் சொல்லி அனுப்பு, ஆனா நேரிலே போய் பாத்திராதே. அவனே உன்னை வந்து சந்திப்பான். அவன்கிட்டே என்னோட முத்திரை மோதிரம் இருக்கும்… பம்துலா குடும்பத்து முத்திரை உனக்குத் தெரியும். அவன் உங்கிட்ட ஒரு ரெண்டு பெட்டியைக் குடுப்பான். கொஞ்சம் பெரிய பெட்டி. வண்டியிலே வைச்சுக்கோ… அப்டியே ராமநாதபுரம் போ. சோலியை முடி. பெட்டி உங்கிட்டேயே இருக்கட்டும். எல்லாம் முடிஞ்ச பின்னாடி அப்டியே திரும்பி வந்திராமே நேரா நாகப்பட்டினம் போயிடு. அங்கே ஒல்லாந்துக்காரன் டானிக் ஆச்சென்பெர்க்குன்னு ஒருத்தன் கிட்டே நீ வந்த செய்தியைச் சொல்லி அனுப்பு. அவன் துறைமுகத்திலே காப்டனா இருக்கான். அவனும் வந்து உன்னைப் பார்ப்பான். கொஞ்சம் குட்டையா, மேலேதூக்கின மூக்கோட, பச்சைக் கண்ணோட இருப்பான்.அவன்கிட்டேயும் என்னோட முத்திரை ஓலை இருக்கும்… அவன்கிட்டே பெட்டிகளைக் குடுத்திரு…”

நான் பேசாமல் நின்றேன்.

“மருதை இப்ப நாயி நுழையிற மாதிரி திறந்து கிடக்கும். அவனவன் கொள்ளை அடிக்கிறான். இப்ப நவாப்புப்படை உள்ளே நுழைஞ்சிட்டுதுன்னா நாய் நக்கின சட்டியா துப்புரவா ஆயிடும். நாம எதுக்கு விடணும்? நாம கொஞ்சம் சேத்துக்கிட்டா இந்த காத்துமழை காலத்திலே நம்ம புள்ளைகுட்டிங்களுக்கு ஆகுமே?” என்றார் ரங்கப்பையர் “எல்லாம் இப்டி உண்டுபண்ணிக்கிட்ட சொத்தும் சுகமும்தான்டே. நீ ஒண்ணையும் யோசிக்காதே… உனக்குண்டானதை குடுத்திடறேன்… நீயும் கை மணக்க நெய்யூறச் சாப்பிடுவேன்னு நினைச்சுக்கோ. என்ன சொல்றே?”

“ஆனா ஆபத்தாக்கும்”

“ஆபத்துதான். ஆனா உங்கிட்டே ராணியோட தனிப்பட்ட முத்திரை இருக்கு. அதைக் கண்டா யாரும் கும்பிடுவானுக. ராமநாதபுரம் சேதுபதிகூட கும்பிடுவார்”

“எதுக்கு ராமநாதபுரம் போறது? நேரா நாகப்பட்டினம் போலாமே?”

“போகலாம். ஆனா மருதை நாகப்பட்டினம் சாலையிலே முப்பது எடங்களிலே வண்டிமறிக்க ஆளிருக்கு. கள்ளர் பயமும் எகிறி அடிக்குது. மருதையிலெ இருந்து எறும்புக்கூட்டம் கணக்கா கையிலே அகப்பட்டதை எடுத்துக்கிட்டு கெளம்பிப் போய்ட்டிருக்கானுக… அந்த வரிசையிலே நாம வரவேண்டாம்… இந்தப்பக்கமா போனா கண்காணிப்பு இல்லை. ராமநாதபுரத்திலே இருந்து கடப்புறம் சாலை வழியா வடக்காலே போனா நாகப்பட்டினம். வழி முச்சூடும் மீன்பிடிக்கிற சனம், அவங்களுக்கு கொள்ளையடிக்கிற வழக்கமில்லை… நல்லா பாத்துக்கிடுவாங்க”

“சரி”

“செய்டே, உனக்கு வேணுமானது இரட்டியா கையிலே வந்திரும்”

“அது தெரியுமே, நான் இங்கே தலை காலிலே பணிய வேலை செய்றவனாக்குமே” என்றேன்.

“நல்லா இருடே”

நான் அவரை பணிந்தேன். அவர் இடக்கையை தூக்கி என்னை வாழ்த்தினார்.

நான் திருமப வீட்டுக்குச் செல்லவில்லை. நேராக சக்ரபாணிச் செட்டியிடம் சென்றேன். என் பணமெல்லாம் அவரிடம்தான் இருந்தன. வட்டியும் கொடுத்துவிடுவார், பாதுகாப்பாகவும் இருக்கும். செட்டி சொல்மாறாத குலம். அவரிடம் பேசி ஏற்பாடு செய்துவிட்டுஅரண்மனைக் கொட்டிலுக்குச் சென்றேன். நல்ல வண்டியையும் வண்டிக்காரனையும் தேடிக்கொண்டேன். உடனே மதுரைக்குக் கிளம்பினேன்.

வீட்டுக்குப்போய் குழந்தைகளை ஒருமுறை பார்த்தாலென்ன என்று தோன்றியது. ஆனால் என் வீடு கண்காணிக்கப்படும் என்றும், ஒருவேளை என்னை அங்கிருந்து எவராவது பிடித்துச்செல்லக்கூடும் என்றும் நான் அஞ்சினேன். நான் ராணியிடம் பேசிய செய்தி அரண்மனை முழுக்க நிறைந்திருக்கும் ஒற்றர்களுக்கெல்லாம் இந்நேரம் தெரிந்திருக்கும்.

[ 4 ]

சிராப்பள்ளி மதுரைச் சாலை மங்கம்மாத் தாயார் காலத்தில் போடப்பட்டது. நல்ல சரளைக்கல் போட்டு இறுக்கிய வண்டிச்சாலை. நாளுக்கு ஆயிரம் வண்டிகள் இரும்புப்பட்டை அழுந்த ஓடினாலும் புழுதியாகாது, மழைக்காலத்தில் சேறும் ஆகாது. இருபக்கமும் ஓங்கிய புளியமரங்கள் கிளைகளால் முட்டிக்கொண்டு பின்னி உருவாக்கிய பச்சைக்கூரைக்குக் கீழே நீண்டு செல்லும் குகை போலிருந்தது அது.

மிகச்சரியாக குதிரையும் காளையும் தவங்குமிடத்தில் நீர் காட்ட குளங்களுடன் மண்டபச் சத்திரங்கள். அங்கே குளிர்ந்த சம்பாரம், மாடுகளுக்கு வைக்கோல், குதிரைக்குக் கொள். தேவையென்றால் வாடகைக் காவலர்களையும்கூட எடுத்துக்கொள்ளலாம். உப்புதொட்டு சத்தியம் செய்து உடன் வந்தால் மறவர்கள் உயிர்கொடுப்பார்கள்.

மங்கம்மா மகாராணி காலத்தில் உருவான சாலைகளால்தான் நாடு செழித்தது. மக்கள் வயிற்றில் சோறு முடக்கமில்லாமல் போயிற்று. ’மாரியை நம்பலை, மாதேவரை நம்பலை, அந்த மகாராசி பெயரைச் சொல்லி பிள்ளைபெத்தோம்’ என்று ஒரு பாட்டு உண்டு.

ஆனால் வழியெங்கும் அந்த அமைப்பு சிதறிக்கிடப்பதை, எங்கும் அச்சம் பரவி அராஜகம் தலையெடுக்க ஆரம்பிப்பதைக் கண்டேன். பல சத்திரங்களில் எவருமில்லை. சில சத்திரங்களின் அருகிலேயே வழிப்பறிக் கொள்ளையர் பதுங்கியிருப்பதாக வழியிலேயே செய்தி சொன்னார்கள்.

பல கிராமங்களில் அன்னியர் ஊருக்குள் நுழையக்கூடாது என்று சொல்லி காவல் மாடம் கட்டி ஈட்டிகளுடன் ஆளை நிறுத்தியிருந்தனர். சில செழிப்பான ஊர்களில் கூலிப்படை மறவர்கள் வளரியும் ஈட்டியுமாக அமர்ந்திருந்தனர்.பல கோயில்களை நிரந்தரமாக மூடிவிட்டிருந்தனர். பட்டர்களும் சிவாச்சாரியார்களும் தெய்வங்களை உற்சவமூர்த்திகளில் ஆவாகித்து எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டனர் என்று சொன்னார்கள்.

நான் பாதிவழிச் செல்வதற்குள்ளாகவே சந்தா சாகிப்பின் படைகள் தெற்கே நகர்ந்துவிட்டதை அறிந்தேன். அவர்கள் மதுரைக்குச் செல்லவில்லை.வத்ராயிருப்பு தாண்டிக்கொண்டிருந்தனர். பங்காரு திருமலை சீவில்லிப்புத்தூர் தாண்டிவிட்டிருந்தார். அவர்கள் அவரை எங்கே சந்திப்பார்கள்? சந்திக்குமிடத்தில் கண்டிப்பாகப் போர் உண்டு.

நான் மதுரையைச் சென்றடைந்தேன். மதுரை நான் நினைத்ததற்கு மாறாக எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் திறந்து கிடந்தது. கோட்டைவாசலிலேயே காவலில்லை. வைகைப்பாலங்கள் இரண்டிலும் வண்டிகளும் தலைச்சுமை மூட்டைகளும் குழந்தைகளும் சட்டிபானைகளுமாக மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு வெளியேறிக்கொண்டிருந்தனர்.

“என்ன நடக்குது?”என்று ஒருவனிடம் கேட்டேன்.

“நாயக்க ராஜா பயந்து ஓடிப்போயிட்டார்லே? எப்ப வேணுமானாலும் துருக்கப் படைங்க உள்ளே வந்திருவாங்க. வந்தா பின்னே அவனுகளுக்கு மாசக்கணக்கிலே கொள்ளைதான். பொன்னு பணம் தானியம் மட்டுமில்லை சட்டிபானைகூட மிஞ்சாது. பெண்டுகளை பிடிச்சுகிடுவான். பிள்ளைகளை தூக்கி கொண்டுபோயி நாகப்பட்டினத்திலே பறங்கிகளுக்கு வித்துப்போடுவான்…. ”

அதெல்லாம் நடந்துகொண்டுதான் இருந்தது. சித்ரதுர்க்காவிலும் அனந்தபூரிலும் செஞ்சியிலும் வேலூரிலும் அதெல்லாம் அன்றாடம். ஆனால் திருமலை நாயக்கர் காலம் முதல் மதுரை சிராப்பள்ளி ராஜ்ஜிய எல்லைக்குள் அமைதிதான். மங்கம்மா காலத்தில் நீதி இல்லாத இடமே இல்லை. அதுதான் இன்னும் ஆபத்து. அமைதிக் காலத்தில் நாடு செழிக்கிறது. மக்கள் எச்சரிக்கையை இழக்கிறார்கள். ஊர்கள் தேன்நிறைந்த தட்டுகளாகின்றன. காவலிழந்தால் கள்வர் தேடிவருவார்கள்.

எத்தனை சூறையாடல்கள், எத்தனை கூட்டப்படுகொலைகள். என் நாய்னா மதுரையில் சதநாயகமாக இருந்தார். என் தாத்தா எட்டையபுரம் பாளையக்காரரிடம் இருந்தார். அவருடைய அப்பா அனந்தப்பூரில் இருந்தார். அவருடைய தாத்தாவும் நாய்னாவும் கூத்தி கோட்டையில் இருந்தனர். அதற்குமுன் விஜயநகரத்தில் கிருஷ்ணதேவராயரின் படையில் இருந்தனர். அவருடைய முன்னோர்கள் வரங்கல்லில் இருந்தனர். அதற்கு முன்னால் எப்போதோ வடக்கே தேவகிரியில் இருந்தனர்.

தலைமுறை தலைமுறையாகப் போர்தான். செத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். போராடிப் போராடி இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து உயிர்வாழ்ந்து கொண்டே இருந்திருக்கிறார்கள். தேவகிரி இன்றைக்கு தௌலதாபாத். ரெட்டகுட்டர்களின் வரங்கல் இடிபாடுகளாகக் கிடக்கிறது. ராணி ருத்ரம்மா ஆட்சிசெய்த நிலம். அந்த துர்க்காதேவியால் ஏரியும் குளமும் வயலுமாகச் செழித்த நிலம். அங்கே கால்வைக்கவே முடியாது இன்றைக்கு.

துங்கபத்ரா நதிக்கரையில் ஆயிரம் கோபுரங்களுடன் இருந்த விஜயநகரம் வெறும் கற்குவியல். பெரிய நாயக்கர் கிருஷ்ண தேவராயரின் பெயர் பாடல்களில் மட்டும்தான் எஞ்சியிருக்கிறது.கூத்தி விழுந்துவிட்டது. பெல்லாரி அன்னியர் கைவசம். அனந்தபூரும் சித்ரதுர்க்காவும் செஞ்சியும் தோற்றுவிட்டன. எஞ்சுவது சிராப்பள்ளியும் மதுரையும் மட்டும்தான். நீரில் கரையும் மண்கட்டிபோல. இந்த கான் படைகள் பெருவெள்ளம் போன்றவை. அவர்களுக்கு நாடில்லை, மண்ணில்லை, வாழ்க்கையே போர்தான். பிறந்து சாவதுவரை போர்க்களத்திலேயேதான் இருக்கிறார்கள்.

ஆனால் இன்னொன்று நிகழும். இவர்கள் தங்கள் மூர்க்கமான ஆற்றலால் எதிர்க்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.வெறிகொண்ட காட்டெருமைகள்போல ஆற்றல் கொண்டவர்கள். கூர்மையான நச்சுப்பல்லுடன் வரும் நாகம் இந்த காட்டெருமைகளை முத்தமிட்டே கொல்லும். இவர்களின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது. அதை என் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது.

மதுரைக்குள் மாடவீதிகளெல்லாம் வெறித்துக் கிடந்தன. ஏற்கனவே பெரும்பாலானவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். பணம்படைத்த செட்டிகளும் வேளாளர்களும், நகரை ஆட்சி செய்யும் நாயக்கர்களும் போனபின் எஞ்சியிருந்த மக்கள் பெரிய வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தடுக்க ஊரில் யாருமில்லை, ஆனாலும் அவர்கள் புழக்கடை வழிகள் வழியாகவே கொள்ளையடித்துச் சென்றுகொண்டிருந்தனர்.

படைவீரர்கள் கொள்ளையடிப்பதற்கும் ஊரார் கொள்ளையடிப்பதற்கும் வேறுபாடு உண்டு. படைவீரர்கள் கொள்ளையடிப்பதை தங்கள் வெற்றிக்கொண்டாட்டமாக நினைத்தனர். ஆகவே கூச்சலிட்டு நடனமிட்டு களியாடினர். மக்கள் ரகசியமாக சுமந்துகொண்டு சென்றனர். கொண்டுசெல்வதை இன்னொருவன் பறித்துக்கொள்ள வாய்ப்பிருந்தது.ஆகவே திறந்த வீடுகளிலும் புழக்கடை வழியாகவே நுழைந்தனர்.

இதை நான் கண்டிருக்கிறேன். இவர்களால் மிக எளிதாகக் கொள்ளையடிக்க முடியும். தேவையெல்லாம் ‘எல்லாரும்தான் செய்கிறார்கள்’ என்ற ஒரு சமாதானம் மட்டும்தான். அதைத்தான் மகாப்பிராமணனான ரங்கப்பையரும் என்னிடம் சொன்னார். அரசில்லாமல் ஆகிவிட்டால் அரசாக இருந்தவர்களே கொள்ளையடிப்பார்கள். ஒவ்வொருவரும் கொள்ளையடிப்பார்கள். மக்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வார்கள்.

இந்த மாபெரும் அராஜகத்தை கண்டால் இதை அடக்கவேமுடியாது என்று தோன்றும். ஆனால் ராணி மீனாட்சியின் படைகள் உள்ளே வந்து ஐம்பதுபேரை சாலைதோறும் கழுவில் அமர வைத்தால் போதும் அமைதியும் ஒழுங்கும் திரும்பிவிடும். நீதி நேர்மை அறம் என்னும் சொற்களும் மீண்டு வரும். நாடு என்பது யானை, அது அங்குசத்தால் மட்டுமே ஆளப்படுவது,

நான் மேலமாசி வீதியில் என் முன்னாள் ஆப்தனாகிய சுப்பா ரெட்டியைச் சென்று சந்தித்தேன். அவன் தாயுமானவ சாமி கோயில் சீகாரியம் நரசிங்கரெட்டியின் மைத்துனன். அவன் மனைவி மக்களை கிராமத்துக்கு அனுப்பிவிட்டு தன் வீட்டில் தனியாக இருந்தான். அவன் அங்கே  பட்டுவியாபாரம் செய்து வந்தான். அவனுக்கு சில வரவுகள் மிச்சமிருந்தன. அவற்றை கடைசியாக முட்டிப் பார்த்துவிட்டு கிளம்பிச் செல்ல நினைத்திருந்தான். அவன் வீட்டிலேயே நான் தங்கினேன். நான் வந்துவிட்ட விஷயத்தை சுப்பா ரெட்டியின் வேலைக்காரனை ரங்கமகாலுக்கு அனுப்பி நான் வந்த செய்தியை அறிவித்தேன்.

“எல்லாம் உடைஞ்சு சரிஞ்சு விழுந்திட்டிருக்கு… இப்ப பணத்துக்கு பாதுகாப்பு வேணுமானா ஒண்ணு வெள்ளைக்காரக் கும்பினி ஆட்சி பண்ணுற நாட்டுக்கு போகணும். இல்லேன்னா வெள்ளைக்காரன் கிட்டே சரசமா இருக்கிற ராஜா ஆட்சி பண்ணுற நாட்டுக்குக் போகணும்… நான் நேரா திருவிதாங்கூர் போறதா இருக்கேன். அங்கே வலிமையான யுவராஜா வந்திருக்காருன்னு பேச்சு இருக்கு. வெள்ளைக்காரன் அவனுக்கு ஆப்தனா இருக்கான்” என்றான் சுப்பா ரெட்டி.

”பறங்கியும் ஒல்லாந்தனும் சும்மா சோனையனுங்க. பிரித்தானியன்னா சாமானியன் இல்லை. நஞ்சு நிறைஞ்ச ராஜவெம்பாலை அவன். இப்ப அவனோட நாடு திருவிதாங்கூர். நம்ம நாய்னாவோட அண்ணா அங்கே முனிஞ்சிப்பட்டியிலே இருக்கார். கொல்லம் கோட்டாறு சந்தைகளிலே நல்லா வியாபாரம் பண்றார். கெளம்பிடலாம்னு இருக்கேன். கொட்டாரம் கணக்கு இனி பாத்தா முடியாது. வெற நாலு கணக்கு இருக்கு, முடிச்சா கெளம்பிருவேன்” சுப்பா ரெட்டி சொன்னான்.

“சந்தா சாகிப்பு எங்க போறான்?” என்றேன்

“பங்காரு திருமலையை துரத்திட்டு போறான். திருநெல்வேலி பட்டாளம் வந்து சேந்துகிட்டா பங்காரு நின்னு திருப்பி அடிப்பாரு. யுத்தம் நடக்கும். பாப்போம், என்ன ஆகுதுன்னு பாப்போம்”

“என்ன ஆகும்?”

“நாயுண்டு, இதோபார், நம்மாலே இப்ப துலுக்கனுகளை ஜெயிக்கவே முடியாது. அவனுக ஒண்ணாச் சேந்து சாமிகும்பிடுற கூட்டம். நாம நாயி மூக்கிலே நாலு வாடைன்னு அலையுற கூட்டம். அவ்ளவுதான், பங்காருவை நொறுக்கிருவான் சந்தா சாகிப்பு” என்றான் சுப்பா ரெட்டி.

“அப்டிச் சொன்னா…”என நான் இழுத்தேன்.

“துலுக்கன் கிட்டே பீரங்கி இருக்கு. எல்லாம் ஒல்லாந்து பீரங்கி… கப்பல்பீரங்கி. பாதாள நாகம் போலே வாய் திறந்து வீங்கிப் பெருத்து வா விழுங்குறேங்கிற மாதிரி இருக்கும்”

“ஆமா, அவன்கிட்டே அது பெரிய சக்திதான்”

“நாயுண்டு, அதை குடுத்தவனே ஒல்லாந்தன். அவன்கிட்டே அந்த மாநாகம் தண்ணிப் பாம்பா சுருண்டிரும்”

மாலையிலேயே சேவப்ப நாயக்கன் அவனே இரண்டு வேலைக்காரர்களுடன் வந்தான். அவன் கறுப்பாக, குட்டையாக, பெருந்தொந்தியும் உறுதியான உடலுமாக, பெரிய மீசையுடன் இருந்தான்.  சிவந்த பெரிய கண்கள். நானும் அவனும் தனியாகச் சந்தித்தோம். அவன் முத்திரையை காட்டினான். ரங்கப்பையரின் பம்துலா குடும்பத்து முத்திரை மோதிரம். ரத்தினத்திலேயே தெலுங்கு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஓலையையும் காட்டினான். நானும் என் ஓலைகளை காட்டினேன்.

அவனுடைய வேலைக்காரர்கள் அவர்கள் வந்த வண்டியில் கொண்டுவந்த பெட்டிகளை என் வண்டிகளில் ஏற்றிக்கொண்டார்கள். சாதாரணமாக துணிகளை வைக்கும் மரப்பெட்டிகள். இரும்புப்பூட்டும் கீல்களும் கொண்டவை. ஆனால் நல்ல எடையுடன் இருந்தன. அவற்றில் பொன் இருப்பதை எடையே காட்டியது.

அவன் போனபிறகு சுப்பா ரெட்டி “அந்தப்பக்கம் போனதுமே ரெண்டு வேலைக்காரனுகளையும் வெட்டிப்போட்டிருவான்… பாவம் விசுவாசமான  வேலைக்காரனுங்க. ஆனா இங்க விசுவாசம்தான் சாவு” என்றான்.

என் மனம் படபடத்தது. அதை மறைத்துக்கொண்டேன். அன்றிரவே கிளம்பி ராமநாதபுரம் சென்றேன். என்னுடன் வண்டிக்காரன் மட்டும்தான்.

கிளம்பும்போது சுப்பா ரெட்டி என்னிடம் “பொன்னும் நாகநஞ்சும் ஒண்ணு. கம்மியானா மருந்து, ஜாஸ்தியானா சாவு. நினைப்பிலே இருக்கட்டும்” என்றான்.

நான் தலையசைத்து வண்டியில் ஏறிக்கொண்டேன்.

[ 5 ]

நான் ராமநாதபுரத்திற்குச் செல்வது வரை எந்தச் சிக்கலும் இல்லை. ராணியின் முத்திரை என்னை பூதங்களைப்போல காவல் காத்தது. ராமநாதபுரம் வழியில் பெரிய நெரிசலும் இல்லை. எல்லாரும் வடகிழக்காகத்தான் சென்றுகொண்டிருந்தனர். ஒல்லாந்தரும் பறங்கியரும் ஆளும் மண்ணுக்குச் செல்லலாம் என்று பலருடைய திட்டம். சாமானிய ஜனங்களுக்கு தஞ்சாவூர் சிறந்ததாக தெரிந்தது. அங்கே மராட்டியர் ஆட்சியில் பெரிய பூசல்கள் இல்லாமல் வாழ்க்கை சென்று கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்திருந்தன.

நகருக்குள் சென்றதுமே நான் சேதுபதியின் சதமுடையானிடம் என் ஓலையைக் காட்டினேன். அவன் என்னை அழைத்துச்சென்று சன்னிதி தெருவில் ஒரு ராஜதாசி வீட்டில் தங்கவைத்தான். வள்ளியம்மை சேதுபதிக்கு வேண்டியவள். அவள் வீட்டில் எட்டு இளம்பெண்கள் இருந்தார்கள். விருந்தினர்கள் தங்க முகப்புவீட்டு மச்சில் பெரிய இரண்டு அறைகள் இருந்தன. நான் பெட்டிகளை வண்டியிலிருந்து எடுக்கவில்லை. எடுத்து பத்திரமாக வைத்தால்தான் ஆபத்து. ஆனால் வண்டிக்காரனிடம் வண்டியிலேயே இருக்கும்படிச் சொல்லிவிட்டேன்.

வள்ளியம்மை வீட்டில் நான் பயண அலுப்பாற வெந்நீரில் குளித்தேன். வாசனாதிகளை பூசிக்கொண்டேன். நல்ல ஆடைகளையும் அணிந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்த்ரீ சம்போகமும் மேற்கொண்டேன். இரண்டு இளம்பெண்களும் சூட்டிகைகளாக இருந்தனர். ஒருத்தி பெயர் நவரத்தினம். இன்னொருத்தி ஜீவரத்தினம். இருவரும் சகோதரிகள். அவர்களுக்கு ஆளுக்கு இரண்டு கழஞ்சு பொன் பரிசாகக் கொடுத்தேன். சாயுங்காலம் சேதுபதி சபைக்கு எனக்கு உத்தரவு வந்தது.

சேதுபதி என்னை அவருடைய கோஷா அறைக்குத்தான் வரச்சொல்லியிருந்தார். அரண்மனை மரத்தாலானது, தாழ்வான கூரை கொண்டது. ஆனால் வரிசையாக நின்ற தூண்களெல்லாமே கருங்கல்லால் ஆனவை. எல்லா காவலர்களும் கொண்டையங்கோட்டை மறவர்கள் என்று தெரிந்தது. முகப்பில் சேதுபதியின் குதிரைவண்டி நின்றிருந்தது. அது ஒல்லாந்திலிருந்து வந்தது. எடையற்ற உடலும் பெரிய சக்கரங்களும் கொண்டது.

கோஷா அறை சிறியது, அதற்கு ஒரே சாளரம்தான். பங்கா இல்லை, ஆனால் கடற்காற்று துருத்திவாய் போல அந்த சாளரம் வழியாக வந்தது. அங்கே அவருக்கு அணுக்கச்சேவகனாகிய தடிகொண்டத்தேவன் மட்டும்தான் உடனிருந்தான். சேதுபதி வெள்ளை வேட்டியை தட்டுசுற்றாக கட்டி ,மார்பில் ஒரு முத்தாரம் மட்டும் அணிந்து தாழ்வான மஞ்சத்தில் மெத்தைமேல் படுத்திருந்தார்.

அழைக்கப்பட்டதும் நான் உள்ளே போய் கும்பிட்டேன். “சேதுக்கடல் காத்தருளும் பாண்டியவம்சாக்ரஜர், சிவப்பிரியர், ஸ்ரீநிதி பூநிதி சமேதர், வித்யாபூஷணர், சேதுபதி மகாராஜாவுக்கு பாத தண்டனம்” என்றேன்.

“சுபம்” என்று சொல்லி அவர் என்னை வாழ்த்தினார். மேலே சொல் என்று கைகாட்டினார்.

நான் மகாராணி மீனாட்சியின் ஆணையை மட்டும் சுருக்கமாகச் சொல்லி ஓலையை காட்டினேன்.

“ராணி அவரை இங்கேருந்து கூட்டிட்டுப் போக நினைச்சா அதிலே தப்பில்லே. வந்தா கூட்டிட்டுப் போகலாம்” என்றார் “ஆனா இங்க அவருக்கு ஆபத்தில்லே. சேதுபதி நாட்டிலே கடைசி மறவன் செத்து விழுந்த பிறகுதான் சிவனடியார் மேலே கைவைக்க முடியும்… அதை நான் சொன்னதா ராணிகிட்டே சொல்லு”

“அடியேன்” என்று வாய்பொத்திச் சொன்னேன்.

“அவரு எங்கே இருக்காருன்னு தெரியுமா?”

“அடியேன், தெரியும்”

“சரி, நம்மாள் ஒருத்தனை துணைக்கு அனுப்பறேன். உத்தரகோசமங்கை இங்கே பக்கத்திலேதான்…”

நான் வணங்கி “அடியேன்” என்றேன்.

“என்ன நடந்திட்டிருக்கு மருதையிலே?”என்றார் சேதுபதி.

நான் சுருக்கமாக நான் கண்டதைச் சொன்னேன். “கயத்தாறு பாண்டியருங்களும் திருநெல்வேலி நிருபதி நாயக்கனும் சேந்துகிட்டா சந்தா சாகிப்பு படைகளை களுகுமலை பிராந்தியத்திலே சந்திப்பாங்க… யுத்தம் நடக்காம இது தீராது”

“ம்” என்று அவர் மீசையை நீவிக்கொண்டார்.

“அடியேன், ஆனா சிராப்பள்ளி மருதை ராஜ்ஜியம் தப்பியாச்சு. படைகளை திரும்ப இளுத்துக்கிட்டான் சந்தா சாயிப்பு”

“ஆமா, ராணி கோடிப்பொன் கொடுத்ததா பேச்சு”

“அடியேன், அது வழமையா குடுக்கிறதுதான், படைகொண்டுவந்ததனாலே இரட்டிப்பணமாச்சு” என்றேன் “எப்டியானாலும் வந்த வினை வழியோட போச்சே”

“ஆமா, ஆனா அவனை நம்பலாமா?”

“அடியேன், கொரான் தொட்டு சத்தியம் பண்ணியிருக்கான். இனி அவன் மருதை சிராப்பள்ளி ராஜ்ஜியத்திலே காலு வைக்கமாட்டான்னு சொல்லிப்போட்டான்”

“ம்” என அவர் கண்கள் சரிய, மீசையை நீவிக்கொண்டார்.

சேதுபதி கண்காட்ட தடிகொண்டதேவன் எனக்கு பத்து கழஞ்சு பொன்னை பட்டுக்கிழியில் கட்டி கொடையளித்தான். குனிந்து பெற்றுக்கொண்டு “மகாராஜா திருமுகம் பார்த்த லக்ஷணம் பொன்னாத் துலங்கவேணும்” என்று நான் சொன்னேன்.

வள்ளியம்மைக்கு மேலும் ஐந்து கழஞ்சு பொன்னை கொடுத்துவிட்டு என் வண்டியிலேயே திருஉத்தரகோச மங்கை சென்றேன். செல்லும் வழியில் என் மனம் உல்லாசம் கொண்டபடியே இருந்தது. இதுவரை ஒன்றும் ஆகவில்லை.  இடர்மிக்க பகுதிகளை தாண்டிவிட்டேன். சேதுபதி ராஜ்ஜியத்தில் வாளின் ஆட்சி நடைபெறுகிறது. அப்பால் ஒல்லாந்தர் மண்ணில் வெடிமருந்து ஆட்சி. ஆயுதம் ஆட்சிசெய்தால் அறம் நிலைநிற்கும் என்பது என் அனுபவம்.

உத்தரகோச மங்கை சென்றதும் என்னுடன் வந்த சேதுபதியின் வழிகாட்டி மறவன் என்னை அங்கே சன்னிதித் தெருவில் சந்திரபிரபா என்ற ராஜதாசி வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அது அத்தனை பெரிய வீடு அல்ல. அந்த ஊரே சிறியதுதான். அரசர் வந்தால் தங்குவதற்கான அரண்மனை அப்பாலிருந்தது. அதுவே சிறியதுதான். சந்திரப்பிரபாவின் வீட்டில் இளம்பெண் ஒருத்திதான், அவள் மகள்.

நான் அங்கேயே வண்டியை நிறுத்திக்கொண்டேன். பெட்டிகளை வண்டியை விட்டு வெளியே எடுக்கவில்லை.  சந்திரப்பிரபாவின் மகள் நாகரத்தினம் என்னை நீராட்டினாள். மேற்கொண்டு அவளிடம் சல்லாபம் செய்யவில்லை. வெள்ளை ஆடைகள் அணிந்தேன். விபூதி தரித்து, குடுமியில் பூச்சூடி, மடத்துக்கு கிளம்பினேன்.

திருவாவடுதுறை ஆதீனத்தின் குட்டித்தம்புரான் மடம் வடம்போக்கி மேற்குத்தெருவில் இருந்தது. ஊரில் அதை தாயுமானவர் கோயில் என்றார்கள். சேதுபதி மன்னர்களால் நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தாழ்வான கருங்கல் கட்டிடம் அது. சிற்பங்கள் இல்லாத கருங்கல் தூண்கள் கருங்கல் கூரையை தாங்கி நிழல்களை சரித்து நின்றிருந்தன. முற்றத்தில் இரண்டு மூங்கில் பல்லக்குகள் நின்றிருந்தன. குட்டித்தம்புரான் உலாப்போவதற்குரியவை. காவலன் என ஒருவன் இலுப்பை மரத்தடியில் வேலுடன் அமர்ந்திருந்தான்.

நான் என் வருகையை அவனிடம் சொன்னேன். குட்டித்தம்புரான் தூங்கிக்கொண்டிருப்பதாக அவன் சொன்னான். மடத்தில் முன்காலை முதல் பூஜைகள் இருக்கும். அதன்பின் அவர் கோயிலுக்கும் அருகிலிருக்கும் எட்டு சிறிய கோயில்களுக்கும் போகவேண்டும். சாயங்காலம் இதுவே மீண்டும் நடக்கும். கோயில் பூசைகள் முடிந்தபிறகும் மடத்தில் சடங்குகள் இருக்கும். தம்புரான் பின்காலையிலும் முன்மதியத்திலும்தான் சரியாக தூங்கமுடியும்.

நான் தாயுமானப் பிள்ளையை பார்க்க வந்திருப்பதாகச் சொன்னேன். காவலனுக்கு சிறிய ஆர்வம் ஏற்பட்டதைக் காணமுடிந்தது.

“அவரு இங்க வந்த பின்னே பலர் வந்து பாத்திருக்காங்க… பெரிய பெரிய ஆளுங்க. நகை போட்டு வாளு வைச்சிருக்கிற ராஜாக்களே வந்திருக்காங்க. எல்லாபேரையும் நானேதான் கூட்டிட்டுப் போனேன். வாங்க” என்றான்.

“இங்க இல்லியா?”

“இது மடம்ல? அப்பாலே மடத்துக்கு ஒரு நந்தவனம் இருக்கு. அதிலே குடிசை போட்டு உக்காந்திட்டிருக்காரு. நந்தவனத்திலே செடிகளுக்கு தண்ணி நனைக்கிறது, மண்ணு கொத்தி விடுறதுதான் நாள் முச்சூடும் பண்ணிட்டிருக்காரு. ராத்திரிகளிலே பாடுறதுண்டு. கேக்க நாலஞ்சு உள்ளுரு சிவனடியாருங்க வருவாங்க… அவரு இங்க சாயங்காலம் ஒருவாட்டி வந்து தாயுமானவலிங்கத்தை கும்பிட்டுட்டு போறதுண்டு… ஆனா இப்ப கொஞ்சகாலமா இங்கேயும் வாறதில்லை”

அவன் என்னை நந்தவனத்திற்கு அழைத்துச் சென்றான். நான் அவர் என்னை நினைவுகூர்வாரா என எண்ணிக்கொண்டே சென்றேன். சிராப்பள்ளியில் இருந்த நாட்களில் அவர் ஒவ்வொரு நாளும் முதற்புலரிக்கு முன்பு தாயுமானவ சாமி கோயிலுக்கு வருவார். அவரை வாசலில் எதிர்கொண்டு உள்ளே அழைத்துச்செல்பவன் நான்தான். அவர் என் பெயரை தெரிந்துவைத்திருந்தார். அன்போடு அவ்வப்போது பேசுவதுமுண்டு.

நந்தவனத்தின் வாசலில் நின்று  “நான் உள்ள போறதில்லை நாய்க்கரே. நீங்க உள்ளே போங்க… நீங்க யாருன்னு சொல்லுங்க. சாமிக்கு மனசிருந்தா சந்திக்க சம்மதிக்கும்” என்றான் காவலன்.

அவன் சென்றபின் நான் தயங்கி நின்றேன். பின்னர் குறடுகளை கழற்றிவிட்டு கைகூப்பியபடி மெல்ல உள்ளே சென்றேன்.

அழகான நந்தவனம். ஒவ்வொருநாளும் பராமரிக்கப்படுவது என்று நன்றாகவே தெரிந்தது. குறைவான நீரிலேயே வளரும் அலரி,நந்தியாவட்டை போன்ற பூச்செடிகளே மிகுதி. வில்வம் போன்ற பூசைக்கு தேவையான மரங்களும் இருந்தன. மென்மையான காற்று வீசிக்கொண்டிருந்தது. அங்கே எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவருக்கு மாணவர்கள், அணுக்கர்கள் என எவருமில்லையா என்ன?

நான் செடிகளினூடாக நடந்தேன். தோட்டத்தின் நடுவே ஒரு சிறிய குடில், ஒரே ஒருவர் உள்ளே தங்க முடியும். வெளியே ஒரு பந்தலில் கயிற்றுக்கட்டில் போடப்பட்டிருந்தது. நடந்த பாதையில் நீர்த்துளிகள் விழுந்து புழுதியுடன் உருண்டிருந்தன. அவ்வழியாக நீர் கொண்டுசெல்கிறார்கள். அங்கேயே நின்று காத்திருந்தேன்.

சற்றுநேரத்தில் இடையில் குறுந்துண்டு மட்டும் அணிந்து, தோளில் காவடியில் கட்டப்பட்ட இரு மரக்குடுவைகளில் நீருடன் தாயுமானப்பிள்ளை வருவதைக் கண்டேன். அவரேதான். உடம்பு மிக மெலிந்திருந்தது. அரண்மனையிலிருந்த பொன்னின் நிறம் இல்லை. ஆனால் தசைகள் இறுகிய சிறிய உடலில் வேறேதோ பொலிவு இருந்தது. தாடி நன்றாகவே வளர்ந்து மார்பில் தொட்டு காற்றில் சிலும்பி நின்றது. தலைமயிரும் நீண்டு வளர்ந்து கொண்டையாக தலையுச்சியில் முடியப்பட்டிருந்தது. கழுத்தில் ஒற்றை ருத்ராட்சம் நாரில் கட்டப்பட்டு தொங்கியது. வேறு அணிகள் ஏதுமில்லை.

அவர் என்னருகே வந்து, என்னை பார்த்துவிட்டு கடந்து ,பாதையில் திரும்பிச் சென்றார். நான் கும்பிட்டபோது அவர் என்னை அடையாளம் கண்டதாகத் தெரியவில்லை. கண்களில் எந்த சலனமும் இல்லை. அங்கே நின்றிருந்த வில்வத்துக்கும் மரமல்லிக்கும் நீரூற்றினார். ஒழிந்த குடுவைகளுடன் திரும்பி வந்தார். என்னருகே நின்று நிமிர்ந்து பார்த்தார்.

“அடிதொட்ட மண்ணிலே தலைதொட்டுத் தெண்டனிட்டு பிரார்த்திச்சுக்கறேன் சுவாமி… அருளணும்” என்று கும்பிட்டேன். ”நான் பங்காரு நாயக்கன்.தாயுமானவ சாமிகோயில் ஸ்தானிகனா இருக்கேன்”

“தெரியும்” என்றார். அப்போதும் கண்களில் அறிந்தபாவனை இல்லை.

“நான் இப்ப ராணி மீனாட்சியோட தூதனா வந்திருக்கேன்…” என ஓலையை எடுக்கப்போனேன்.

தேவையில்லை என அவர் கைகாட்டி “சொல்லு” என்றார்.

“ராணி அவங்களோட தாசனா என்னை அனுப்பினது ஒரே ஒரு பிரார்த்தனையோடத்தான். அடிகள் திருவுள்ளம் கனிஞ்சு ராமநாதபுரம் ராஜ்ஜியத்தை விட்டு நீங்கி மருதை சிராப்பள்ளி ராஜ்ஜியத்துக்கு வரணும். சிராப்பள்ளி ராஜ்ஜிய எல்கைக்குள்ளே தங்கணும். இங்கே நவாப்புப் படைகள் வந்தாலும் வரலாம். வந்தா அடிகளை அவங்க புடிச்சுக்கிட வாய்ப்பிருக்கு”

“எதுக்கு?” என்றார்.

“அடிகள்னா மகாராணிக்கு என்ன அர்த்தம்னு தெரியாதவங்க இல்லை”

“அந்த அர்த்தம் எனக்கு இல்லை”

“இல்லே, அதில்லே. கான்படைகளுக்கு கருணையில்லை, ஆனா கணக்குகள் உண்டு. அதிலே நாம சிக்கவேண்டாமே”

“நான் எதிலேயும் சிக்க விரும்பல்லை”

“அடிகள் அகம் கனியணும். ராணி மீனாட்சி சொன்னதைச் சொல்லிடறேன். இது என் வார்த்தையில்லை, அவங்க வார்த்தை. அவங்க சொன்னதை அப்டியே சொல்லுறேன்” என்றேன் “அவரு வந்து சிராப்பள்ளி எல்கைக்குள்ளே எங்க வேணுமானாலும் இருக்கட்டும்… மடம் வேணுமானா மடம், கோயில் வேணுமானா கோயில். எது வேணுமானாலும் குடுக்குறேன்ன்னு சொல்லு அப்டீன்னு ராணி திருவாய் அருளிச் சொன்னாங்க”

“எனக்கு ஒண்ணும் வேண்டாம். இந்த இடமே நிறைவா இருக்கு” என்றார் தாயுமானப்பிள்ளை.

”நான் ராணியை பாத்த கோலம் நெஞ்சிலே நிக்குது. மெழுகுச்சிலை உருகிற மாதிரி உருகிட்டிருந்தாங்க… தெய்வ சாபம் வந்த தேவகன்னி மாதிரி இருந்தாங்க. அவங்க கண்டதெல்லாம் என்ன? பொன்னும் பட்டும் இருந்தாலும் பூவும் மஞ்சளும் இல்லை. சுகம்னு ஒண்ணு வாழ்க்கையிலே இல்லை. எங்கிட்டே சொன்னப்ப அந்த குரலிலே தாய் மறந்து போட்டுப்போன பிள்ளையோட அழுகைதான் கேட்டுது” என்றேன்.

“எங்கிட்டே ராணி சொன்னதைச் சொல்லிடறேன். நான் அவர் கிட்டே ஒண்ணையும் எதிர்பார்க்கலை. அவரை நாளுக்கொருமுறை பாக்கணும், அவர் குரலைக் கேக்கணும். அவ்வளவுதான். அது ஒண்ணும் தப்பில்லை. நான் எனக்குள்ளே இருக்கிற நாராயணன் கிட்டே கேட்டேன். சொல்லு, நீயும் ஆயர்பாடியிலே பெண்ணை அறிஞ்சவன்தானே? நான் பிரேமை வைக்கப்பிடாதான்னு கேட்டேன். பிரேமைன்னா பொன்விளக்கிலே சுடராக்கும்னு அவன் சொன்னான். எனக்கு எந்த தப்பும் தெரியல்லை. இப்பவும் தெரியல்லை அப்டீன்னு சொன்னாங்க. பெருமாளை அறிஞ்சவங்களுக்கு பிரேமைன்னா என்னான்னு தெரியும்”

“நானறிஞ்ச தெய்வம் நடுக்காட்டுச் சுடலைப் பொடிபூசி தோலுடுத்து தீயேந்தி அமர்ந்திருக்கிற பித்தன். பற்றறுத்து நின்றாடுற பேயன்” என்றார் தாயுமானவப் பிள்ளை.

“ஆனா அவனும் மங்கையொரு பாகன், கங்கைமுடி சூடியவன்” என்றேன்.

“நான் இதைப்பத்திப் பேச விரும்பலை.. நீ போகலாம்” என்றார். அவர் முகம் சிவந்திருந்தது. மூச்சு எழுந்தடங்குவதைக் கண்டேன். ஆமாம், இரும்பு உருகித்தான் இருக்கிறது. அடிவிழ அடிவிழ நெகிழும். இந்த அனலுக்கு உருகாத இரும்பென ஏதுமில்லை.

”ராணி உரிமை சொல்லலை. உடமைக்கு ஆசைப்படலை. கண்ணீரை பூவா விட்டு பூசைசெய்ய மட்டும்தான் நினைக்கிறாங்க. அவங்க சொன்ன வார்த்தையை சொல்ற கடமை எனக்கிருக்கு. ராணி சொன்னது இதுதான். எனக்கு என் மனசிலே இருக்கிற அவரோட முகமே போதும். தங்கக் காப்பு போட்ட பெருமாள் என்னோட கருவறையிலே கொலுவிருக்காரு. அங்கே அஸ்ருபூஜை பண்ணி வாழ்ந்திட்டு போயிடறேன். அதை யாரும் தடுக்கமுடியாது. அவரே கூட அதை தடுக்க முடியாதுன்னு சொல்றப்ப அவங்க விட்ட கண்ணீரை இங்கே கொண்டுவந்திருக்கேன்”

தாயுமானப் பிள்ளை என்னைப் பார்த்தபோது அவருடைய கண்களும் நீர்ப்படலம் கொண்டிருந்தன. அப்போது அவை மிக இளையவனின் கண்களாகத் தெரிந்தன. மெல்லத் துடித்த சிறிய ,சிவந்த உதடுகளும் இளஞ்சிறுவனுக்குரியவை.

“ம்ம்” என்று அவர் முனகினார். பெருமூச்சு விட்டார். ஆனால் மிகமெல்ல மெழுகு உறைவதுபோல ஒன்று நிகழ்ந்தது. அவர் இன்னொருவராக ஆனார்.

“ராணி சொன்னது சரிதான். அவங்க கண்டது தங்கக்காப்பு மட்டும்தான். வைரம் இழைச்ச தங்கமே ஆனாலும் அது காப்புதான். திரைதான்… ஆமா திரை” அவர் கண்களின் இமைகள் சரிந்தன. அப்போதுதான் அவை எவ்வளவு பெரிய கண்கள் என்று தெரிந்தது. அவரை சிறுவன் என காட்டுபவை அந்தக் கண்கள்தான்.

இமைகள் எழ அக்கண்கள் என்னை பார்த்தபோது அதுவரை கண்ட இருவருக்கும் அப்பால் இன்னொருவர் எழுந்திருந்தார்.  “அவங்க கிட்டே சொல்ல எனக்கு ஒண்ணுமே இல்லை. பாவப்பட்ட பெண். ரொம்ப ஏழைப்பட்ட பெண். ஒண்ணுமே இல்லாத பெண்… திரைதான் மூடியிருக்கு அவங்களை. பாக்கப் பாக்க அழகு காட்டி, விலக்க விலக்க பெருகிட்டிருக்கிற தங்கப்பட்டுத் திரை”

அவர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டே சென்றார். ”நாம் திரையிட்டுக் கொண்டால் நமக்கும் திரைதான் தெரியும். ராணி ஆசைகொண்டவங்க, ஆசை மேலே துக்கத்தோட திரையைப் போட்டுக்கொண்டதனாலே அவங்களுக்கே அது தெரியல்லை… பாவம் அவங்களாலே எங்கும் திரையை மட்டும்தான் பாக்க முடியுது. திரைதூக்கிப் பாக்க இப்பிறவியிலே வாய்ப்பில்லை. திரையென்றாகி அவங்ககூட வெளையாடுது புரையென்று புவிமூடிய மாயை” புன்னகைத்து தாடியை நீவியபின் “சரிதான், ஒண்ணுமே இல்லாம வாழ்ந்து மறையறதுக்கு திரையழகும் நல்லதுதான்…”

சட்டென்று இரு கைகளையும் தூக்கி உரக்க “குன்றாத மூவுருவாய் அருவாய் ஞானக்
கொழுந்தாகி அறுசமயக் கூத்தும் ஆடி நின்றாயே மாயை எனுந் திரையை நீக்கி
நின்னையார் அறியவல்லார்!” என்றார்.

பின்னர் சட்டென்று திரும்பி நடந்து செடிகளுக்கு அப்பால் மறைந்தார்.. நான் அங்கேயே நின்றிருந்தேன். என் அனுபவத்தில் தெரிந்துகொண்டேன், இனி ஒரு சொல்கூட பேசமுடியாது அவரிடம்.

[ 6 ]

என்ன செய்யவேண்டும் என்று முன்னரே முடிவுசெய்திருந்தேன். ராமநாதபுரத்துக்கு திரும்பி, அங்கிருந்து கடலோரமாக சென்றேன். மதுரைச்சாலை ஆபத்து என்பதனால் கடலோரமாகச் செல்வதாகச் சொன்னபோது சேதுபதியின் ராயசம் அது சரிதான் என்றார்.

நான் நாகப்பட்டினம் செல்லவில்லை, நேராக காரைக்கால்தான் சென்றேன். அங்கே போனதுமே வண்டிக்காரனை அனுப்பிவிட்டு இருபெட்டிகளுடன் எனக்குத்தெரிந்த வியாபாரியான சேவுகம் செட்டியின் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். பெட்டிகளை திறந்து உள்ளிருந்த பொன்னை செட்டிக்கும் கொடுத்தேன்.

எட்டு மாதம் கழித்து சேவுகம் செட்டி உதவியுடன் புதுச்சேரிக்குச் சென்றேன். அங்கே என் கையிலிருந்த பொன்னில் ஒரு பகுதியை கும்பினிக்காரர்களுக்கு கொடுத்தேன். மிச்சத்தை கப்பல்காரர்களுக்கு வட்டிக்கு விட்டேன். என் மனைவியை புதுச்சேரியில் கண்டுபிடித்தேன். என் குழந்தைகளை கையில் எடுத்து தலைமேல் வைத்துக்கொண்டேன். பெருமாள் என்னை காப்பாற்றினார்.

பங்காரு திருமலை தெற்கே போய் திருநெல்வேலியை அடைந்தார். நிருபதி நாயக்கனின் படைகளையும் சேர்த்துக்கொண்டார். திண்டுக்கல் கோட்டையை அவர் கைப்பற்றினார். சந்தா சாகிப் பெரும்படையுடன் வந்து அவரை சூழ்ந்துகொண்டான். திண்டுக்கல் அருகே அம்மையநாயக்கனூரில் நடந்த போரில் பங்காரு திருமலை தோல்வியடைந்தார். தப்பியோடி சிவகங்கையில் அடைக்கலம் புகுந்தார். அங்கிருந்து கண்டி அரசனுடனும் தஞ்சாவூர் மராட்டியர்களுடனும் தொடர்பு கொண்டு தொடர்ந்து போரிட்டார்.

சந்தா சாகிப் பங்காரு திருமலையை ஜெயித்ததும் நேராக சிராப்பள்ளிக்குத்தான் வந்தான். நகரை தாக்கி கைப்பற்றி ராணி மீனாட்சியை சிறையிலடைத்தான். ராணி சிறையிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

அந்தச் செய்தி என்னை வந்தடைந்தபோது நான் புதுச்சேரி துறைமுகத்தில் ரத்தினராய முதலியாரின் கிட்டங்கியில் இருந்தேன். செய்தியைச் சொன்னவன் பிரெஞ்சுக் கப்பலில் வேலைபார்க்கும் முருகப்ப முதலி. “ராணி மீனாட்சி மண் மறைஞ்சதுமே நாயக்க ராஜ்ஜியம் அழிஞ்சு போட்டுது. மருதையிலே இப்ப ஆற்காட்டு கொடி பறக்குது. ஆனா கொடிக்குரிய நவாப்பு யாருன்னு யாரைக்கேட்டாலும் நான்தான்னு நெஞ்சை தொட்டு காட்டுறான்” என்றான்.

“அதெப்டி? சந்தா சாகிப்பு ராணி மீனாட்சித் தாயாருக்கு கொரான் தொட்டுச் சத்தியம் செஞ்சு குடுத்தானே?” என்று நான் கேட்டேன்.

“அதான் ருசிகரமான கதை” என்றான் முருகப்ப முதலி. “அங்கே காரைக்காலிலே இதுதான் பேச்சு. ராணி மீனாட்சி சந்தாசாகிப்புக்கு ஒருகோடி பகோடா  குடுத்திருக்கா. அதை வாங்கிட்டு அவன் கொரான் மேலே சத்தியம் பண்ணிக் குடுக்கணும்னு ஏற்பாடு. அவன் சத்தம் குடுத்ததும் அவனோட சேவகன் பெரிய தங்கத் தாம்பாளத்திலே கொரானை வைச்சு அதுக்குமேலே தங்கச்சரிகைவேலை செஞ்ச பட்டுத்திரை போர்த்தி கொண்டுவந்திருக்கான். அவன் அதுமேலே கையைவைச்சு சத்தியம் பண்ணிக் குடுத்திட்டு போய்ட்டான்”

“அப்பாலே?”என்றார் ரத்தினராய முதலியார்.

“ஆனா அது கொரான் இல்லை. ஒரு செங்கல்லு. தங்கரேக்கு போட்ட பட்டுத் திரையாலே மூடியிருந்ததனாலே ராணி நம்பிட்டா… செங்கல்லு மேலே சத்தியம் செஞ்சா அவனுக்கென்ன? திண்டுக்கல்லிலே இருந்து நேரா தெக்க போவான்னு ராணி நினைச்சிட்டிருந்தா. அவன் படையோட சிராப்பள்ளிக்கு வாரப்பக்கூட அவன் ஏதோ பேசத்தான் வாறான்னு நம்பிட்டிருந்தா. கோட்டைவாசலை மூடக்கூட இல்லை. அவன் அப்டியே உள்ள பூந்து அடிச்சு நொறுக்கி அமாத்யன், தளவாய், ராயசம், சம்பிரதி, காறுபாறு எல்லா பேரையும் கொன்னு குவிச்சுப்போட்டு சிராப்பள்ளியையே சூறையாடிட்டான். பதினொருநாளு கொள்ளை நடந்திருக்கு. பொம்புளையாளுக தாலி முதல் அடுக்களை உப்புப்போணி வரை கொள்ளையடிச்சுட்டானுக. பாவம் ராணியும் வைரத்தை விழுங்கி செத்துட்டா…”

“அவ விதி அது” என்றார் ரத்தினராய முதலியார். “நமச்சிவாயம்!”

முருகப்ப முதலி. “அங்கே காரைக்காலிலே ஒரு பண்டாரம் பாடினான். பூவாலே திரையிட்டா வண்டுகள் என்ன செய்யும்? பொன்னாலே திரையிட்டா பொண்டுக என்ன செய்யும்னு… நல்ல பாட்டு”

“நான் சொல்லுறேன் கேட்டுக்கோ, லச்சத்திலே ஒருத்தன் இருக்கலாம். மிச்சபேர் யாராலேயும் திரையை தாண்டி பாக்கமுடியாது, நமச்சிவாயம்! நமச்சிவாயம்!” என்றார் ரத்தினராய முதலியார்.

*******

22.சிற்றெறும்பு [ சிறுகதை]

21 அறமென்ப…  [சிறுகதை]

20 நகை [சிறுகதை]

19.எரிசிதை [சிறுகதை]

18 இருளில் [சிறுகதை]

17 இரு நோயாளிகள் [சிறுகதை]

16 மலைபூத்தபோது [சிறுகதை]

15 கேளி [சிறுகதை]

14 விசை [சிறுகதை]

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைகதைகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகவிதை,லக்ஷ்மி மணிவண்ணன் உரை