இருளில் [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
இருளில் கதையின் தலைப்புத்தான் முக்கியம். இருளில் இருப்பவை பற்றியது அந்தக்கதை. இருளில் எவ்வள்வோ இருக்கின்றன, பேசப்படவே முடியாதவை. ஆனால் அவைதான் வாழ்க்கையை நிர்ணயம்செய்கின்றன. இருள் என்பது கற்பனையா, வாழ்க்கையின் ஆழமா, எதிர்பாராத தன்மையா எதுவானாலும் இருக்கலாம்.
வெளிச்சத்தில் நிகழும் சம்பவங்களுக்குத்தான் நமக்கு விளக்கம் இருக்கிறது. இருளில் நடக்கும் சம்பவங்களுக்கும் நாம் வெளிச்சத்தால் விளக்கம் அளிக்கிறோம். ஆனால் உண்மையில் விளக்கத்துக்கு அப்பாலிருக்கின்றன பெரும்பாலான வாழ்க்கையின் அடிப்படைகள்.
அப்துல் வாழ்க்கையில் இருட்டில் வேறொரு உண்மை இருக்கிறது. மனைவியை அவளும் அவள் மூஞ்சியும் என்று திட்டுபவன் அவள்மேல் பெருங்காதல்கொண்ட ஆண். அதை அவரே அறிவதில்லை. தருண் தேடுவதென்ன என்று அவனுக்கே தெரியாது
அந்த இருட்டு ஒரு யானை மாதிரி. அது ஒவ்வொருவரையும் அறைந்து தெறிக்க விடுகிறது. ஆனால் கதைமுடிவில் அப்படி அறைந்து ஒருவரை அது மேலேற்றிவிடுமா, விடுதலையை அளித்துவிடுமா என்ற கேள்வி எழுந்து நிற்கிறது. ‘யா ரஹ்மான்’ என அதற்கு அப்துல் பதில் சொல்கிறார்
ராஜசேகர்
அன்புநிறை ஜெ,
இருளில் மிக மிக ஆழமான ஒன்றைப் பற்றிய கதை. வாழ்வில் எதிர்பாராது ஒரு முறை நிகழ்ந்து விடும் பேரனுபவம் என்றைக்குமாக அதிலிருந்து வெளியேற முடியாது செய்து விடும் வாதையைப் பற்றிய கதை.
உண்மையில் இருளில் கதையைப் படித்ததும் கடிதம் எழுத எண்ணிய மனதை, எழுத நினைத்த விஷயங்களை மனதின் அனைத்து கடிவாளங்களையும் இட்டு இழுத்துப் பிடிக்க வேண்டியிருந்தது. அனைத்தையும் எழுதுவதற்கு அந்த இருளே வடிவாக வந்த பெண் போல சத்தியம் வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.
அலைகள் அடங்கிய பிறகு கதை மெல்ல வேறொன்றாகியது. எதை வாசித்தாலும் முதலில் வெண்முரசில் சென்று பட்டு எதிரொலிக்கும் அகம் ஊர்வசி புரூரவஸிடம் வாங்கிக் கொள்ளும் சத்தியத்தை நினைவுபடுத்தியது.
இக்கதையில் எதற்கு மூவர் என்ற கேள்வி எழுந்தது. அப்துல் நினைவுகளால் அது கிளர்த்தும் உணர்வுகளால் கட்டுண்டவர். அதுவே அவரைக் கனவிலும் தொடர்கிறது. அவரைக் கட்டியிருக்கும் ஜின் அதுதான். தருண் புலன்களின் அதி தூய்மையான அனுபவத்தால் என்றைக்குமாக கட்டப்பட்டிருக்கிறான். அவன் பித்தனல்ல. ஷேர் மார்க்கெட்டில் பணம் செய்யும் திறமை உள்ளவன், நீலம் அல்ல இண்டிகோ என திருத்தும் அளவுக்குக் கூர்மையானவன். அவனது பேரனுபவத்தை அவனது உடலும் உள்ளமும் தாள முடியாது அவனை நாடோடியாக்கி இருக்கிறது. கதைசொல்லி தூய தர்க்கமாக வருகிறான். அறிவின் துலாக்கோல் கொண்டு அப்துலையும் தருணையும் அளந்து கொண்டே இருக்கிறான். அப்துலின் உணர்வுகளையும் அது சார்ந்த நம்பிக்கைகளையும் அவனது தர்க்கம் நகைத்துக் கடக்கிறது. தருணின் உடல் சார்ந்த உணர்வெழுச்சியையும் அவன் போதை தரும் உச்சத்தில் இருக்கிறானோ என்று சந்தேகிக்கிறான். இறுதியாகவும் தருண் அத்தருணத்தில் உருவாக்கிக் கொண்ட ஒரு கதையைத் திறம்பட நடித்துவிட்ட சென்ற ஒருவனாக கதைசொல்லி சந்தேகிக்கிறான். அவரவர் இயல்பே வாழ்வின் அனுபவங்களைத் தீர்மானிக்கின்றன. ஓட்டும் கையில் ஜின் இருந்து காப்பது அப்துலின் அகநம்பிக்கை. உடலின் எல்லை வரை பயணித்துக் கடப்பது தருணின் பயணம். ஒரு மாபெரும் அனுபவத்துக்குப் பின் தருண் செய்வதனைத்தும் உடல் ஆற்றலை சிதறடித்துத் தனை மீட்டுக் கொள்வதாகவே இருக்கிறது. இந்த இரண்டு நோக்குகளையும் தன் அறிவால் கேட்டு வெறும் பார்வையாளனாக மட்டும் இருப்பது கதைசொல்லியின் பயணம். அனைவருக்கும் சாலை பொதுவானது. பயணங்கள் வேறானது.
இச்சம்பவத்துக்குப் பிறகு அவள் என்னவாகி இருப்பாள் என்பது குறித்த அப்துல் மற்றும் கதைசொல்லியின் உரையாடல் ஒரு உச்சம். கீழே சிந்திய நீர் சிதறிப் பரவுவது போல சித்தம் அவரவர் போக்கில் விரித்து நீட்டிக் கொள்ளும். அவர்கள் பேசிக் கொள்ளும் ஒவ்வொரு சாத்தியமுமே நடக்கக்கூடியதுதான். அவளும் தருணைப் போலத் தேடலில்தான் இருப்பாள் என்பது உணர்வுபூர்வமான ஒரு எதிர்பார்ப்பு, திரைப்படமாக எடுப்பதற்கும், ஒரு ஆணின் விருப்பக் கற்பனையாக எண்ணிக் கொள்ளவும் உகக்கும் முடிவாகக் கூட இருக்கலாம்.
எல்லாவற்றிலும் அவனைக் காணக்கூடியவளாக மாறியிருக்கலாம் என்பது அறிவு சென்று தொடக்கூடிய உச்சம். அகத்தின் அலைக்கழிவை உற்றுநோக்கும் தர்க்கம் ஓரிடத்தில் ஒரு உன்னதமாக்கலை சென்று தொடுகிறது. அனைத்தையும் கடந்து பெரும் உயரத்துக்கு அவள் சென்றிருக்கலாம் என்பது அனைத்துக்கும் மேலான ஒரு ஆன்மீக உச்சத்துக்கு கதையை எடுத்துச் செல்கிறது.
உங்கள் கலையில் நீங்கள் ஒரு மாஸ்டர் என்பதை மீண்டும் நிறுவுகிறீர்கள்.ஒரு துளி சம்பவத்தை நீங்கள் உருவாக்கி வார்த்த மேதைமை மலைப்பை உருவாக்குகிறது.
மிக்க அன்புடன்,
சுபா
கூர் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
கூர் கதையில் அந்தச் சிறுவர்களை போலீஸ்காரர்கள் அஞ்சுவது அற்புதமாகச் சொல்லப்பட்டுள்ளது. நானே அதைக் கண்டிருக்கிறேன். சிறுவர்கள் போலீஸை பயப்படுவதில்லை. அவர்களுக்குப் பயமே இல்லை. பயப்படாதவர்களிடம் போலீஸ்காரர்கள் தோற்றுவிடுவார்கள்.அதைவிட போலீஸ்காரர்களுக்குக்கூட அந்தச் சிறுவர்களைப் பார்த்தால் ஒரு குற்றவுணர்ச்சியும் இருக்குமென நினைக்கிறேன்
செல்வக்குமார்
அன்புள்ள ஜெ..
கூர் கதை ஒரு குறிப்பிட்ட பின்புலத்தில் நடக்கிறது ஆனால் ஒட்டுமொத்த மானுட வாழ்க்கையையும் புரிந்து கொள்ள வைக்கிறது;
யார் எந்த நேரத்தில் கூர்மை பெற்று பிறரை கிழிப்பார்கள் என்பது பல சமயங்களில் அவரவர்களுக்கே தெரியாது
உங்கள் பழைய சிறுகதை ஒன்றில் , மனைவியின் துரோகத்தை மன்னித்து இயல்பாக பேசும் கணவன் திடீரென ஒரு கணத்தில் கூர் கொண்டு அவளை வெட்டி எறிவான்
அசோகமித்திரனின் ஒரு ராத்தல் இறைச்சி கதையில் , நாய் தன்னை கடித்ததைக்கூட மன்னிக்க தயாராக இருப்பவனால் அது தன் காலை நக்கும் அடிமைத்தனத்தனத்தால் சீண்டப்படுகிறான்.
அதேபோல கூர் கதையில் இளம் குற்றவாளிகளை கருணையுடன் பார்க்கத்தெரிந்த , மனிதாபிமானம் மிக்க இன்ஸ்பெக்டரின் ஈகோ , ஒரு விசுவாசமான முழு கீழ்ப்படிதல்மிக்க பணியாளைப்பார்த்து சீண்டப்படுகிறது. காரணம் , அவர் வாழ்க்கையே மேலதிகாரிகளுக்கும் அரசு இயந்திரத்துக்கும் விசுவாசமாக இருக்கும் அடிமைப்பிழைப்புதானே.
அந்த வகையில் ஒரு கணத்தில் அவர் கூர் , ஒரு அப்பாவியின் வாழ்க்கையை அழிக்கிறது. அதன் மூலம் அப்பாவி − பலிகடா என்ற முடிவற்ற தொடர் அழியாமல் இருக்க தன்னை அறியாமல் இன்ஸ்பெக்டரும் பங்களிப்பு செய்கிறார். அந்த அப்பாவி பணியாளின் குழந்தைகள் நாளை யாரையாவது குத்திக்கிழிக்க தயாராவார்கள்
அன்புடன்
பிச்சைக்காரன்