கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

மீண்டும் வெண்முரசு நாட்களைப்போலவே தொடர் வாசிப்பில் மகிழ்ந்திருக்கும் நாட்களை அளித்திருக்கிறீர்கள்.  அதிகாலை வாசிக்கும் கதையின் சாயலிலேயே அந்நாள் முழுதும் இருக்கின்றது. கதையை, கதை மாந்தர்களை, சம்பவங்களை மனம் நினைத்துக்கொண்டே இருக்கிறது வழக்கமான வேலைகளின் .ஊடே.

கதையைப்போலவே நீங்கள் கதையை யாருடைய பார்வையில் சொல்லுகிறீர்கள், எந்த நிகழ்வில் துவங்கி கதையை கொண்டு போகிறீர்களென்பதையும் கவனிப்பதும் கூடுதல் சுவாரஸ்யம்.

டிராக்டரில் வருகையில் தெங்கோலை சேகரிக்கும் நேசையனிலிருந்து துவங்கும் ஒரு அன்னையின் கதை,  விரைவில் பணி ஓய்வடையும் ஒரு காவலரின் பார்வையில்  குற்றப்புலனாய்வும் காதலுமாக ஓரிழையால் கட்டுண்டிருக்கும் கதை, எருமையிடம் என்னவோ மாற்றமிருப்பதாக சொல்லும் மனைவியின் பேச்சில் துவங்கும் வலமும் இடமுமாக, வாழ்வுக்கும் சாவுக்குமான கதை, ஒரு கார் பயணத்தின் உரையாடலில் சொல்லப்படும் வயிற்றுக்கொதியின் கதை, தேசிய நெடுஞ்சாலையில் லாரிப்பயணத்தில் துவங்கும்  இழந்த அரிய சந்தர்ப்பங்களின் கதை,  பாதிக்கப்பட்டோரின்  ரகசியசந்திப்பில் துவங்கி தீப்பாய்ந்த அம்மனில் முடிந்த  கந்தர்வனின் கதை, மலையாளப்பாடல் வரிகளில் துவங்கும் ஒரு இழந்த காதலின் கதை, இப்படி பலநூறு கதைகளை ஒன்றின் சாயல் மற்றொன்றில் இல்லாதது போல எழுதியிருக்கிறீர்கள் என்பது பெரும் ஆச்சர்யத்தை அளிக்கின்றது.

ஒவ்வொன்றுக்குமான தலைப்பும் அப்படித்தான் மிக தனித்துவமானது, கதை மாந்தர்களின் பெயரும் அப்படியே, வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் யாரையாவது நினைவுபடுத்தும் பெயர்கள், எங்கோ கேட்ட பெயர்கள்,  ஏழாம் கடலின் ’பர்னபாஸ்’ எனக்கு வெகுகாலத்துக்கு முன்பு தொடர்பிலிருந்த ஒரு கிருத்துவ குடும்பத்தினரை நினைவுபடுத்தியது. இவையெல்லாமே நான் மலைத்துப் போகும் விஷயங்களென்றால் கதைகளைக் குறித்த வாசகர்கள் கடிதம் இன்னும் மலைப்பேற்படுத்துகிறது.

நான் எல்லாக்கதைகளுக்குள்ளும், கண்முன்னே தெரியும் ஒரு கதவை திறந்து போகிறேன். பலர் இன்னும் இன்னுமென தொடர்ந்து கதவுகளை திறந்து உள்ளே போய்க் கொண்டிருக்கிறார்கள், ரகசிய கதவுகளை திறந்து உள்ளே நுழைபவர்களும்,  கதவே இல்லாத இடத்தில் கதவவொன்றை உருவாக்கி உள்ளே செல்பவர்களுமாக  கதைகளுக்கு உருவாகிவரும் பரிமாணங்கள்  அளிக்கும் ஆச்சர்யங்களுக்கும் அளவேயில்லை.

கதைகளை குறித்து உங்கள் தளத்தில் வெளியாகும் கடிதங்களுடன், கூடுதலாக வாசக நண்பர்கள் நாங்களும் பல கலந்துரையாடல்களில் உங்கள் சிறுகதை வாசிப்பை அவரவர் கோணத்தில் பகிர்ந்துகொள்கிறோம். ஒவ்வொரு கதையும் பல சாத்தியங்களை, பற்பல திறப்புகளை கொண்டவைகளாக மாறிவிடுகின்றது.

பள்ளிக்காலத்தில் வெள்ளைத்தாள் மடிப்பில் ஒரு சொட்டு மையை வைத்து தாளை மடித்து திறந்தால் எதிர்பாரா பல வடிவங்களில் மை ஊறி பரவியிருக்கும். இப்படி கடிதங்கள் கலந்துரையாடல்களுமாக கதைகள் மீண்டும் புதிது புதிதாக மாறிக்கொண்டே இருக்கிறது.

இவற்றையெல்லாம் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்களோ அதை வாசகர்கள் மிகச்சரியாக கண்டுகொள்கிறார்களா?

நீங்களே எதிர்பாரா திசையிலும் வாசிப்பை கொண்டு போகிறவர்களும் உண்டா?

புரிதலின் போதாமைகளுடன் இருப்பவர்கள் உங்களுக்கு  சலிப்பேற்படுத்துவார்களா?

அல்லது எழுதிய பின்னர் முற்றாக கதையிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டு எல்லா கருத்துக்களையும் எட்ட நின்று  பார்க்கிறீர்களா?

சிங்கை சுபாவிடம் இதைக்குறித்து பேசிக்கொண்டிருக்கையில்  ’’இக்கதைகள் எல்லாம் தங்க புத்தகத்தை போன்றவை அவரவர்க்கு அவரவர் பிரதி’’யென்றார். தங்க புத்தகத்தின் எனக்கான பிரதியே என் வாழ்வில்  பெரும் பொக்கிஷம்

மிக்க அன்புடன்

லோகமாதேவி

 

அன்புள்ள லோகமாதேவி,

இக்கதைகளை ஏன் எழுதுகிறேன் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சென்ற பிப்ரவரியில் கொரோனா பாதிப்பில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் இருந்தேன். நிறைய நூல்களை வாசிக்கக் கொண்டுசென்றேன். ஆனால் வரலாற்றுநூல்களை தவிர எவற்றையும் வாசிக்கமுடியவில்லை. எனக்கு என் புனைவுதான் புனைவுலகில் உலவும் இன்பத்தை முழுமையாக அளிக்கிறது. ஆகவே எழுதினேன். அப்படித்தான் மீண்டும் தொடங்கியது.  புனைவு உருவாக்கும் சமானமான மாற்றுலகில் வாழும் இன்பத்துக்காக மட்டுமே எழுதுகிறேன். இவை கதைகள் மட்டுமே. இவற்றிலுள்ள மற்றெல்லாம் நான் என் வாழ்க்கையில் கொண்டிருப்பவை, ஆகவே இயல்பாக அமைபவை. நான் கதைக்காரன், கதையில் பெரும்பகுதியும் மெய்வாழ்வில் கொஞ்சமும் வாழ்பவன். எனக்கு சமகாலம் போதவில்லை, சலிப்பூட்டுகிறது. வரலாறும் கனவும் தேவைப்படுகிறது.

இவற்றை வாசிப்பவர்களில் எவரெல்லாம் இதேபோல கற்பனையின் துணைகொண்டு ஒரு நிகர்வாழ்க்கையை வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் எனக்கு அணுக்கமானவர்கள். அவரவர் அனுபவம், தேடலுக்கு ஒப்ப அவர்கள் கதைகளை விரித்துக்கொள்கிறார்கள். ஆகவே எல்லா வாசிப்பும் சரிதான், எல்லாரும் என்னுடன் வருபவர்களே. கற்பனைத்திறன் இல்லாமல் கோட்பாடு, அரசியல், வடிவப்புதிர்களுக்காக வாசிப்பவர்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அவர்கள் வாழ்வது வேறெங்கோ. அவர்களை நான் பொருட்படுத்துவதில்லை

 

ஜெ

 

அன்புள்ள ஜெமோ,

எப்படியிருக்கிறீர்கள்? ”தீற்றல்” சிறுகதை எனக்கு மிகப் பிடித்திருந்தது. எங்கோ எப்போதோ கேட்ட இசையின் கார்வையை மனம் மீட்டிப் பார்ப்பதைப் போன்ற உணர்வை அது தந்தது. மை தீட்டிய கண்ணின் வாலை நினைவில் தீற்றியதற்கான உருவகமென முதலில் வாசித்தேன். ஒரு சிறிய குறிப்பும் முகநூலில் எழுதினேன். எனக்கு அந்த வால் ஆலிஸ் இன் வொண்டர்லாண்டின் செஷயர் பூனையின் சிரிப்பாகத் தென்பட்டது.

ஓர் அலட்சியமான கீற்று. ஒரு கணம், அந்த ஒருகணம், அது அங்கிருந்தது. கண்கள் இல்லை, மையிட்ட இமைகளும் இல்லை, நீட்டிவரைந்த வால் மட்டும் எஞ்சியிருந்தது.

எனச் சிறுகதை முடிவில் வருகிறது.

ஆனால் மீண்டும் கதையைப் படித்தபோது, நடந்த நிகழ்வின் / நிகழ்வுகளின் நினைவுத் தடத்தை அது சொல்லவில்லை என்று தோன்றியது. மாறாக ஒரு துளிக் கணம். அல்லது கதையே கூறுவது போல அந்தக் கணத்தில் ”துள்ளிய” ஒரு ”சொல்.” அந்தக் ”கணம்” அல்லது “சொல்” குறித்த நினைவாக மாத்திரம் கதை சொல்லப்படுகிறது என்று தோன்றியது. ஒருவேளை கதைசொல்லியின் முதுமை இந்தவிதமான நினைவுகூரலைச் சாத்தியப்படுத்தியதோ என்று எண்ணினேன்.

மேலும், ’நினைவு’ எந்தப் பெண்ணைக் குறித்தது, அது கதைசொல்லிக்கு நிகழ்ந்ததா, அல்லது அவன் நண்பனுக்கு நிகழ்ந்ததா போன்ற கேள்விகளைக் கடந்து, முதுமையில் அதன் பெறுமதி ஒன்றுதான் என்றும் கதை தெரிவிப்பது போலிருந்தது. அதாவது முதுமையைப் பொறுத்தவரை, ’நினைவு’ ஒரு கணத்தின் தடம் என்பதற்கு அப்பால், நிகழ்வுக்கோ நபர்களின் அடையாளங்களுக்கோ பெரிய முக்கியத்துவம் இல்லை. ஒருவேளை அதனால்தான் ’நினைவு’ நீட்டி வரைந்த வால் என மாத்திரம் இலேசாக காற்றில் அலைகிறதோ என்னவோ.

கதையின் இடையில் மௌனி வருகிறார். மௌனியின் கதையான ’பிரபஞ்ச கானமோ, அழியாச் சுடரோ’ என வருகிறது (இதிலும் பெயர் முக்கியமில்லை). மௌனியின் கதை என்ற வகையில் அது ஒரு departure point. பொதுவாக மௌனியின் சில கதைகளில் காலமில்லாத காலத்தில் நேசத்துக்கு உரியவரது உயிரிழப்பு சம்பவித்துவிடும். ஆனால் நேசித்தவருக்கு அவரது நினைப்பு அகலாது. அந்தப் பாணியிலிருந்து இக்கதையின் பாதை விலகுகிறது. அதற்குப் பதிலாக கால மாற்றத்தினால் நேசத்தின் இலக்கு ”சூனியமாகிவிடுவதைச்” சொல்கிறது. கதைக்குள்ளேயே மௌனியின் பாணிக்கு எதிர்நிலை எடுத்ததற்கான cues தரப்பட்டிருக்கின்றன. புதிய முயற்சியாக இக்கதை உள்ளது.

சற்றுமுன் ”இரு நோயாளிகள்” படித்தேன். It disturbed me very much. புதுமைப்பித்தனின் அந்திமக் காலத்தை நினைக்கையில் மனம் உடைந்துபோகிறது. இந்தக் கதையை ப்ராசெஸ் செய்ய எனக்கு ஓரிரு நாட்களாவது தேவைப்படும்.

அன்புடன்,

பெருந்தேவி

 

அன்புள்ள பெருந்தேவி,

எப்போதும் மிகப்பெரிய காலப்பெருக்கை ஒரு சிறு நினைவுத்தீற்றல்தான் எழுப்புகிறது. 1990ல் நான் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். சட்டென்று கல்லூரி நினைவுகள் அலையென வந்து அறைந்தன. பின்னர் ஏன் என்று கண்டடைந்தேன். ‘லாமினேஷன்’ 1978ல்தான் அறிமுகமாகிறது. சீசன் டிக்கெட்டுகள் லாமினேஷன் செய்யப்பட்டன. அந்த வார்னீஷ் மணம் கல்லூரிக்கால பேருந்துப்பயணங்களின் நினைவுடன் பின்னிப்பிணைந்தது. அலுவலகத்தில் ஒரு லாமினேஷன் செய்யப்பட்ட அட்டை அந்த ஒட்டுமொத்த வாழ்க்கைச்சூழலையும் மீட்டிவிட்டது

இரு நோயாளிகள் ஒரு விந்தையான உணர்வெழுச்சியின் கதை. காசநோய் மலையாளத்தில் க்ஷயம் எனப்படுகிறது. க்ஷயம் என்றால் குறைந்து அழிவது. குறைந்து அழிந்த இருவர். ஒரே மாதம், ஒரே ஆண்டில். எனக்கு சங்ஙம்புழ மிகப்பிடித்தமானவர். என் அம்மா சங்ஙம்புழாவின் அடிமை. பித்தி. பல கதைகளில் அம்மா சங்ஙம்புழாவின் ரமணன் காவியத்தை வாய்விட்டுப் பாடுவது பற்றி எழுதியிருக்கிறேன். அம்மாவின் தோழியும் அம்மாவுமாக ஒரு ஆழமான குளத்திற்குள் அமர்ந்து அதைப் பாடி கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள். அந்த தோழி தற்கொலைசெய்துகொண்டார். அம்மா முப்பதாண்டுகளுக்குப்பின் தற்கொலை செய்துகொண்டார். ரமணன் தற்கொலையை இலட்சியவாதமாக காட்டும் காவியம்- அந்தக்கால கற்பனாவாதம். ஜே.ஜே.சிலகுறிப்புகளில் அதை ஜே.ஜே.கிண்டல் செய்கிறான்.

 

ஜெ

முந்தைய கட்டுரைஇ.பா- ஓர் உரையாடல்
அடுத்த கட்டுரைதிரை [சிறுகதை]