இரு நோயாளிகள், விசை – கடிதங்கள்

இரு நோயாளிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

இரு நோயாளிகள் கதையை முற்றிலும் இன்னொருவகையான கதையாக வாசித்தேன். இந்த வரிசையில் இந்தப்பாணியில் கதையே இல்லை. உண்மையான மனிதர்கள், உண்மையான வரலாறு, சாராம்சம் கற்பனையானது. ஆனால் அது உண்மையிலிருந்து திரட்டி எடுக்கப்பட்ட வரலாறு. ஆச்சரியமான கதை

சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை, புதுமைப்பித்தன் இருவருமே 13 நாட்கள் இடைவெளியில் காசநோயால் இறந்தார்கள் என்பது ஓர் ஆச்சரியம்தான். கி.ராஜநாராயணன் ஏறத்தாழ அதேகாலத்தில் ஆசாரிப்பள்ளம் டிபி ஆஸ்பத்திரியில் இருந்திருக்கிறார். அன்றைய எழுத்தாளர்கள் பலர் டிபி வந்து இறந்தார்கள்

அந்த நோயை இரு கோணங்களில் ஆராய்கிறது கதை. இரு நோயாளிகளுக்கும் நோய் அளித்தது சமூகம். ஒருவர் முத்தமிட்டுப் பெற்றுக்கொண்டார். ஒருவர் உமிழப்பட்டு பெற்றுக்கொண்டார். ஒருவர் ரொமாண்டிக். ஒருவர் மாடர்னிஸ்ட்

ஆனால் புதுமைப்பித்தன் எதற்காகச் சிரித்தார்? அதுதான் கதையே

மாதவன்

வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

இரு நோயாளிகள் தலைப்பே வெகு அற்புதம். ஒருவன் உலகத்தை அதன் சுகத்தை பெண்ணாய் போதையாய் அள்ளி அள்ளிப் பருகி அல்பாயுசில் போகிறான். இன்னொருவன் உலகத்தின் மீதும் தன் மீதும் வெறுப்பை உமிழ்ந்து உமிழ்ந்து மெலிந்து நொந்து எரிந்து அவனும் அரைகுறை வயதில்தான் போகிறான்.

//இந்த உலகத்திலுள்ள அத்தனைபேரும் அவர் முகத்தில் காறித்துப்பினார்கள். அதனால் காசநோய் வந்தது என்று//

//இந்த உலகத்திலுள்ள அத்தனைபேரையும் முத்தமிட்டதனால் காசநோய் வந்தது என்று சொன்னாரே?//

இருவர் சொன்ன வாசகங்களையும் இணைத்து ஒருவன் சட்டென்று ஞானத்தின் கீற்றை அள்ளிக் கொள்கிறான்.

//நாம் சிலவேளைகளில் மிகப்பெரிய ஒன்றை பார்த்துவிடுகிறோம்.//

அந்த இருவரையும் இளமையில் காணும் பேறு பெற்றவனோ அவர்களிடமிருந்து எதையுமே பெறாமல் செக்கு மாட்டு வாழ்க்கை வாழ்ந்து நிற்கிறான். இனிய இசையை ஒளிபரப்பும் வானொலிப் பெட்டி போல. வானொலிப் பெட்டியை கேட்ட மற்றவனோ

அதைக் கொண்டு தனக்கான மையப் பாதையையும் வகுத்துக் கொள்கிறான்.

//ஏதோ ஒரு கொக்கி கிடைக்கும். மனிதன் எவரானாலும் முற்றிலும் காலியானவர் அல்ல//

வாழ்நாள் முழுவதுக்குமான ஒரு தங்க கொக்கி கிடைத்தது அந்த வீடியோ கிராபருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தான்.

அந்த மலையாள கவிஞனுக்கு கற்பனாவாதம்  கவிதைக்கான பொருள் அல்ல, வாழ்க்கையேதான். அவன் வாழ்ந்ததே கற்பனைகளுக்குள் தான்.

இந்த தமிழ் இலக்கியவாதிக்கு வாழ்க்கையில் கிடைத்ததெல்லாம் துன்பமும் வேதனையும் தான். துன்பத்திலிருந்து விடுபட முடியாமலேயே மாண்டு போனான் இவன்.

ஒருவனுக்கு சாராயத்தோடு கூட பெண்கள் தீராப் போதை. எல்லா பெண்ணும் பேரழகியாக தெரிந்த கற்பனாவாதக் காதலன். எல்லா பெண்களையும் கவர்ந்து அடையும் கந்தர்வனாகவும் திகழ்ந்தவன். அதனாலேயே இளமையில் மாண்டு போனவன். மற்றவனோ ஏகபத்தினி விரதன், ஒழுக்கவாதி என காட்டிக்கொள்ள முயன்றவன், அதில் சற்று தோற்றுப்போனவனும் கூட. ரெண்டு பேரும் செத்துத்தான் போனார்கள். அதீத கொண்டாட்டமும் தவறு எதன் பொருட்டேனும் கடைபிடிக்கப்படும் அதீத சுய வதையும் தவறு. சமநிலையோடு நடக்க தெரிந்தவனே வாழத் தெரிந்தவன்.

ஒரு எழுத்தாளனாக மிகவும் சூட்சுமமாக புதுமைப்பித்தனைப் பற்றி தொட்டுச்செல்கின்ற கதையில் புலையர்கள் குறித்து நீங்கள் பேசுவது சிந்திக்க வேண்டிய ஒன்று… அதுவும் துன்பக்கேணி பொன்னகரம் போன்ற கதைகள் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்ற காலகட்டத்தில்….

//முன்பு புலையர்கள் நாடாண்ட ஒரு குறுநிலம். அங்கே ஒரு கோட்டை இருந்ததாக தொன்மம் உண்டு.//

வாழ்ந்தவன் விழுவதும் விழுந்தவன் எழுவதும் காலச்சக்கரத்தின் முடிவிலா விளையாட்டு. அன்று விழுந்த புலையச் சமுதாயம் என்றுதான் எழுந்துவருமோ முழுமையாய்…. சக்கரம் சுற்றி மேலே வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்… ஜெயமோகன் ஆகிய நீங்களும் “நூறு நாற்காலிகள்’ போல இன்னும் நூறு நூறு கதைகளை எழுத வேண்டியிருக்கும்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற பொழுது எங்கள் பள்ளியில் அப்பாதுரை என்ற ஒரு ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த ஆசிரியர் எனக்கு இருந்தார். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சேரியிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு படித்து அரசு வேலையில் அமர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி. போற்றி நினைவு கூறத்தக்க ஒரு ஆசிரியப் பெருந்தகை. அவருக்குப் பின்பாக அவரின் வழிகாட்டுதலில் அந்த சேரியே படிப்புக்கு மிக முக்கியத்துவம் தந்து, பொருளாதார உயர்வில், வாழ்வு முறையில், மலர்ந்து உயர்ந்து நிற்கிறது இன்று. அவர்கள் விடியலை நோக்கி இன்னும் போக வேண்டிய தூரம் மிக அதிகம் எனினும்கூட விடிவெள்ளி தெரியத் துவங்கி விட்டது. இன்னும் பல அப்பாதுரைகள் வரவேண்டும் நிலைமைச் சீராக. வருவார்கள், வந்துதான் தீர வேண்டும்.

சங்ஙம்புழ கிருஷ்ண பிள்ளை பற்றியும் புதுமைப்பித்தனை பற்றியும் கட்டுரைகளாக நிறையவே எழுதி இருக்கிறீர்கள் எனினும் கூட கதை பாத்திரங்களாக அவர்கள் வரும்பொழுது அவர்கள் வெளிப்படுகின்ற அழகே அழகு. அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் உங்களை கதைமாந்தராக்கி வெளிப்படுத்தப் போகும் கதைகளை எண்ணிப் பார்த்து புன்முறுவல் பூத்துக்கொண்டேன். நீங்கள் வாழும் பொழுதே யாராவது எழுதினால் இன்னும் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருக்கும் அல்லவா. பார்ப்போம் யார் செய்கிறார்கள் முதலில் என்று.

அந்தக்கால கேரள மற்றும் மலபார் உணவு வகைகளை குறித்து நீங்கள் எத்தனை எழுதினாலும் அலுப்பதே இல்லை எங்களுக்கு. கற்பனையிலாவது சாப்பிடக் கொடுத்து வைத்திருக்கிறதே இந்தத் துரித உணவு கலாச்சார காலத்தில்.

திருவனந்தபுரத்தின் வரலாறும், இடங்களின் வரலாறும் நிலக்காட்சி வர்ணனைகளும் சேர்ந்து உங்கள் எழுதுகோல் (தட்டச்சுப் பலகை!) எங்களை 1948 க்கு கொண்டு சென்றுவிட்டது.

நிறைவான கதை. காலையில் வந்த பொன்னிற சூரியனை கண்டுகொண்டே இந்தக்கதையைப் படித்தேன். இந்தக் கதையும் ஒரு பொற்கதிரே. உன்னதப் படுத்தும் உவகை தரும் நம்மை தொட்டு பொன்னாக்கும் எதுவும் பொற்கதிர் தானே…

மிக்க அன்பும் நன்றியும்

ஆனந்த் சுவாமி

திருவண்ணாமலை

விசை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

விசை ஓர் ஆழமான கதை. இதேபோன்ற பல கதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆழமான சிறிய குளம் போன்ற பெண்கள். தங்கள் மனசை வெளியே காட்டாமலேயே செத்துப்போனவர்கள். ஒரு சொல்லோ செயலோ அவர்களிடமிருந்து நம் நினைவில் நின்றிருக்கிறது.

அந்த அம்மாள் வாயை இறுக்கியபடி முழு விசையுடன் இழுத்து இழுத்து ஓலை நெய்யும் காட்சி கண்ணில் நிற்கிறது

குமரி மாவட்டத்தில் சிதையை தேங்காய் மட்டையில்தான் செய்வார்கள். ஆகவே தீ கனலாகவே இருக்கும். கொப்பளித்து பறக்காது. ஆகவே சிதையில் வைத்த பாய் துணி எல்லாம் அப்படியே கரிவடிவாக இருப்பதை கண்டிருக்கிறேன்

இந்த கரி ஓலை கிழவியின் கையில் இருந்த விசைதான்

ஆர். எஸ். கண்ணன்

***

அன்புள்ள ஜெ

என் அத்தை ஒருவர் தன் கணவர் இறந்த போது விட்ட கண்ணீர் விட்டு மயங்கி விழுந்த நிலையை நினைத்துப் பார்க்கிறேன். அவர் உயிரோடு இருந்தபோது பல சண்டைகள் வாக்குவாதங்கள் ஏன் அடிதடி கூட நடந்தது உண்டு. பல மாதங்கள் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தது உண்டு. என் மாமா இறந்த அந்த நாளில் அந்த கண்ணீர் எந்த அளவுக்கு உண்மை என திகைத்தது உண்டு.

உங்கள் விசை கதை படிக்கும் போது இதெல்லாம் நினைவுக்கு வந்தது.இந்தக் கதைக்குரிய புகைப்படமே ஒரு கவிதை போல் இருக்கிறது. சரியான தேர்வு. நேசையன் ஓலையைப் பொறுக்குவதில் ஆரம்பிக்கும் கதை “நான் ஓலைக் காரியின் மகனல்லவா” என்பதோடு முடிகிறது. இடைப்பட்ட பயணத்தில் ஓலைக்காரியின் கதை சொல்லப்படுகிறது. தென்னையோலையை கதை முழுவதும் தரிசிக்கிறோம். அதுவும் ஒரு பாத்திரமாக மிளிர்கிறது.

எலிசாம்மாள் என்ற ஓலைக்காரியின் சொந்த வாழ்க்கை பற்றி குறைவான வரிகளே காண்கிறோம். ஏன் கிழவி இப்படி ஆனாள்? எந்த விசை அவளுள் இருந்தது. எதற்காக ஓலை முடைந்து கொண்டே இருந்தாள். அவள் இளமையில் அடிமை வேலை செய்தவள்.  பல துன்பங்களுக்கு ஆளானவள். நேசையனின் அப்பன் அவளை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கிறான். நிச்சயமாய் காதல் கொண்டுதான் பணத்தைக் கொடுத்து விடுவித்திருப்பான். எலிசாம்மாள் கணவனுடன் மனம் நிறைந்து மகிழ்ந்து  வாழ்ந்திருக்க வேண்டும். அவள் வாழ்வில் அவன் ஏற்றி வைத்த ஒளியில் திளைத்த அவள் அவன் திடீரென இறந்தவுடன் இருளில் மூழ்கி விட்டாள். கடைசிவரை அவள் அதிலிருந்து வெளி வரவே இல்லை. பெற்ற மகனை வளர்க்க வேறு வழியின்றி நடைப்பிணமாக வாழ்கிறாள். தாய்மைதான் அவளை வாழ வைக்கிறது. அதுதான் ஒரு விசையாகச் செயல்பட வைக்கிறது.

அவள் உதடுகளில் சொல்லாமல் தேங்கிய வார்த்தை என்னவாக இருக்கும் என்று யோசித்தால் வாழ்வு முழுவதும் சொல்லாமல் சேர்ந்த சொற்கள் அவள் உதடுகளில் தேங்கி கடுமையான தோற்றத்தை கொடுத்திருக்கலாம் . நேசய்யன் மீது அவளுக்கு எந்த புகாரும் இருப்பது போல் தெரியவில்லை. அவள் இறந்த காலத்தில் உறைந்து போயிருந்தாள் போல. எனக்கு தனியாகி தன்னுள் உறைந்த  “சிவை’யின் நினைவு வந்தது. “இறைவன்” கதையின் “இசக்கியம்மாள்” நினைவில் வந்தாள். கணவர் மேல் உள்ள கோபத்தை விடாமல் வீட்டை சுத்தம் செய்து  கொண்டேயிருந்த கதா பாத்திரம்  நினைவில் வந்தது. கதையின் பெயர் நினைவில் எழவில்லை.  பல பெண்கள் தங்கள் துயரங்களை ஏதேனும் விசை கொண்டு செயலில்தான் காட்டுவார்களோ என்னவோ.

எலிசாம்மாள் இளம் வயதினள். மூன்று வயதுதான்  குழந்தைக்கு. என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என் கணவர் என்னை விட்டு அமெரிக்கா சென்ற பின்  அவர் திரும்பி என்னை அழைப்பது வரை கிட்டத்தட்ட நடைப்பிணமாக வாழ்ந்தது நினைவிருக்கிறது. என் எடை குறைந்து பாதி ஆளானேன். இதெல்லாம் கதையில்தான் வரும் என்றெண்ணியிருந்த நான் என் வாழ்வில் கணவரைப் பிரிந்துவேறொரு அனுபவத்திற்கு ஆளானேன். எங்காவது அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்படி வாழ்பவர்கள் இல்லாமல் இல்லை. நான் பார்த்த வரையில் கணவர் இறந்த பின்னர் கொஞ்ச நாள் துக்கம் கொண்டு அதன் பின்  வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதற்கு எதிர்மறையாக மனைவியை இழந்த கணவர்  அப்படியே ஸ்தம்பித்து அமைதியில் ஆழ்ந்து வாழ்பவர்கள் எத்தனையோ பேர். அனுபவித்த ஆழமான அன்பை இழந்தவுடன் ஓலைக்காரி வேறொருத்தியாக உறைந்தாள் என்றுதான் படுகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன் மறைந்த தாயை ஓலையைப்  பொறுக்கிச் சேர்ப்பதின் மூலம் தாயையே ஓலையில் காண்கிறான் நேசையன். அந்த ஓலை தந்தை இருந்த காலத்திலேயே உப்பும் புளியானது. தந்தை இறந்த பின்னர் சோறும் தேங்காய் துவையலானது. ஓலைக்காரி இறந்த பின்னரும் கறிச்சோறும், ஏழைப்பிள்ளைகளின் படிப்புக்கு உதவும் பணமாகியது. விசை கொண்டு அவள் செய்த வேலை வீணாகவில்லை. இத்தனை விஷயங்களை ஒருசேர நினைவுறுத்தும் ஓலையை நேசையன் நேசித்தததில் பிழையென்ன!

இப்படிக்கு உங்கள் தீவிர தீவிர வாசகி

இஷ்ரஜ்

***

முந்தைய கட்டுரைவிருந்து,படையல் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிசை, கேளி – கடிதங்கள்