அ.பாண்டியனும் தமிழ்ப்புத்தாண்டும்

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் இன்றைய காந்தி என்ற பேரில் பின்னாளில் தொகுக்கப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். அதில் வைக்கம் போராட்டத்தில் ஈவேரா அவர்களின் பங்கு என்ன என்பதைப் பற்றி எழுதியிருந்தேன். நான் எழுதியிருந்தது வைக்கம் போராட்டத்தின் ஓர் ஒட்டுமொத்தச் சித்திரம். அது எப்படி தொடங்கப்பட்டது, எவரெவர் பங்கெடுத்தனர், எப்படி அது முடிக்கப்பட்டது, அது உருவாக்கிய தொடர்விளைவுகள் என்ன என்று ஆதாரங்களுடன் விளக்கியிருந்தேன்.

டி.கே.மாதவன் தொடங்கிய அவ்வியக்கம் காந்தியர்களால் முன்னெடுக்கப்பட்டு இறுதியில் நாராயணகுருவின் ஈடுபடலால் முடிவுக்கு வந்தது. அதில் ஈவெரா பங்கெடுத்தார், சிறைசென்றார். ஆனால் அவர் அதை தொடங்கவில்லை, தலைமைதாங்கி நடத்தவில்லை, முடித்துவைக்கவுமில்லை. அப்போராட்டத்தின் ஒரு சிறு கால அளவில் அதில் தமிழகத்திலிருந்து பங்கெடுத்து போராடிய  எம்.வி.நாயிடு, கோவை அய்யாமுத்துபோன்ற மூத்த காங்கிரஸ்காரர்களுடன் ஈவேராவும் சென்றார்.

அவருடைய பங்களிப்பை நான் மறுக்கவில்லை. ஆனால் அத்தனை பாடநூல்களிலும் அவர் அப்போராட்டத்தை  Launched என்றும், தொடங்கி நடத்தி முடித்து உரிமைகளை ‘வாங்கிக்கொடுத்தார்’ என்றும் சொல்லப்பட்டிருப்பது மிகை, பொய் என்று சொன்னேன். திரும்பத்திரும்ப ஈவேரா ‘தொடங்கவில்லை நடத்தவில்லை முடிக்கவில்லை- பங்கெடுத்தார்’ என்று விளக்கினேன். குறைந்தது இருபதுமுறை சொல்லிவிட்டேன்.

ஆனால் இன்றும் திரும்பத்திரும்ப அவர் பங்கெடுத்ததற்கான சில ஆதாரங்களை காட்டுகிறார்கள். பெரும்பாலும் அவரோ அவர் ஆதரவாளர்களோ எழுதிய ஆதாரங்கள். அவருடன் அங்கே போராடியவர்கள் அளிக்கும் ஆதாரங்கள். அதன்பின் ஈவேரா வைக்கம்போராட்டத்தை முழுக்க அவரே நடத்தினார் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது, ஜெயமோகனுக்கு பதில் இதோ என்று கொக்கரிக்கிறார்கள். நூல்களையே இந்த ஒழுங்கில் எழுதி வெளியிடுகிறார்கள். தமிழ் ஹிந்து போன்ற கூலி ஊடகங்களை பயன்படுத்தி ஒருபக்கச் செய்திகளாக பரப்புகிறார்கள். தமிழ் ஹிந்து ஆதாரபூர்வமாக அவற்றுக்கு அளிக்கப்பட்ட மறுப்புகளைக்கூட வெளியிடுவதில்லை.

ஒரு கட்டத்தில் இந்த வைக்கோல்புதர் விவாதம் இவர்களின் நூறாண்டு பழக்கமுள்ள உத்தி, இதனுடன் அறிவார்ந்த விவாதம் நடத்தமுடியாது என்று நான் ஒதுங்கிவிட்டேன். என் எழுத்துக்கள் அப்படியே ஆவணமாக, இணையத்தில் எப்போதும் எடுக்கக்கூடியவையாக உள்ளன.

இதே சீரில்தான் தை பொங்கலே தமிழர் புத்தாண்டு என்று ‘1921ல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிய நாநூறு தமிழறிஞர்கள் ஒரே குரலாக முடிவுசெய்து அறிவித்தனர்’ என்ற பொய் சொல்லப்படுகிறது. அதற்கு ஆதாரம் எங்கே, மறைமலை அடிகளார் எங்கேயாவது அதைச் சொல்லியிருக்கிறாரா, அவருடைய நாட்குறிப்புகள்கூட பிரசுரமாகியிருக்கின்றனவே என்று அ.பாண்டியன் கேட்கிறார்.

அதற்கு அவருக்கு தைப் பொங்கலே தமிழர்புத்தாண்டு என்று [இன்று] சொல்லப்படுவது தெரிந்திருந்து அவர் [அன்றே] மறுத்திருப்பாரே, மறுப்பே இல்லையே, மறுப்பு இல்லாவிட்டால் உடன்பாடுதானே என உருள்கிறார்கள். இந்த ஆழ்ந்த தர்க்கத்தை முத்திரைகுத்துதல், வசைபாடுதலுடன் கலந்து முன்வைக்கிறார்கள்.

இந்தக் கேள்விகள் எவையும் அரசியல் தரப்புக்கள் அல்ல. அ.பாண்டியனே சொல்வதுபோல தை பொங்கலே தமிழ்ப்புத்தாண்டு என்பதில் அவருக்கு மறுப்பில்லை. ஆதாரம் எங்கே என்று கேட்கிறார். ஒரு சூழலில் ஒரு வரலாற்றுக் கருத்து சொல்லப்படுகையில் அதற்கு குறைந்த பட்ச வரலாற்று ஆதாரம் கேட்பதுதான் அறிவுச்செயல்பாடு. அந்த அறிவுச்செயல்பாட்டின்மேல் நடக்கும் இந்த வசைமழைதான் உண்மையில் ஃபாசிசம் என்பது

தைப்புத்தாண்டு: அந்த இன்னொரு வாழைப்பழம்தான் அது!

முந்தைய கட்டுரைஇருளில், கூர்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநகை [சிறுகதை]