கேளி [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நாம் திருவிழாக்களில் அடையும் உணர்வுகளை சொல்லிச் சொல்லி தீர்க்கவே முடியாது. எத்தனை உணர்வுகள். தொட்டதுமே நினைவுகள் பற்றிக்கொள்கின்றன. ஆனால் ஒன்று திருவிழாவில் அப்படி திளைக்கவேண்டும் என்றால் அதற்கு ஒரு வயது இருக்கவேண்டும்.
அந்த கணம் அற்புதமாக வந்திருக்கிறது. அப்படியே மறைந்து மறைந்து ஆழத்துக்குப் போன இசையும் விழாவும் ஒரு சின்ன முனகலில் பற்றிக்கொண்டு எழுந்துவிடும் அந்த கணம்தான் வாழ்க்கையின் அற்புதம்
செல்வக்குமார்.
***
இனிய ஜெயம்
மகாசிவராத்திரி அன்று தில்லையம்பதியில் இருந்தேன். அன்றைய இரவை வாழ்நாள் அனுபவம் என்றே சொல்லுவேன்.
கொரானா காரணமாக இறுதி நேரத்தில் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. பல ஊரில் இருந்து வந்த கலைஞர்களில் பலர் வந்த நிலைக்கு கூத்தபிரானை வணங்கி விட்டு செல்ல, மிக சிலர் கோவில் வளாகத்துக்கு உள்ளேயே அமர்ந்து சில நிமிடங்கள் தாம் கொண்ட கலை வழியே ஆடல் வல்லானை அர்ச்சித்து மீண்டனர்.
ஆம்பிலிபயர் இன்றி கேட்கும், திறன் கூடிய வயலின் இசையுடன் கூடிய மனிதக் குரலுக்கு எவ்வளவு வசீகரம் என்று அங்கே பாடி இசைத்த திருவாசகம் வழியே அறிந்தேன். திருவாரூர் பக்தவச்சலம் என்ற மிருதங்க கலைஞர். கோவிலுக்குள் நுழைந்தார் சன்னதி நோக்கி கும்பிட்டார். பிரகார மையத்தில் வரையப்பட்டிருந்த வண்ணக் கோலத்தின் மத்தியில் அமர்ந்தார். அவரது மாணவர் அனைத்தையும் ஒருங்கு செய்ய, ஒரு மணிநேரம் இருவரும் தனியாவர்த்தனமாக மிருதங்க இசையில் ஆலயத்தை மிதக்க விட்டனர்.
இசை முடிந்ததும் சென்று அறிமுகம் செய்து கொண்டேன். மாணவர் பெயர் அரவிந்த், கேரளம். அப்பா ஃபேக்ட் மோகனன் கதகளி ஆட்டக்காரர். இவர் பத்து வயதிலேயே மிருதங்கம் தான் தன்னுடைய இசைப் பாதை என்று தெரிந்து இதற்குள் வந்து விட்டார். இந்த ஆசிரியர் வசம் 7 வருடமாக இருக்கிறார். மொத்த உடல் மொழியிலும் குரு பக்தி. முதல் கணம் என் கேவல மனம் இது உண்மையா என்றே வினவியது. சில நிமிடங்களில் அந்த வினாவுக்காக வருந்தினேன். அவர்களை காரேற்றி அனுப்பும் வரை உடன் இருந்தேன். ஒன்று கவனித்தேன் ஒரு கணம் கூட அறாமல் அரவிந்த் உள்ளே மிருதங்க ஜதிக்கட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. அவரது விரல்கள் தொடைகள், சுவர், மேஜை என தோயும் இடங்களில் எல்லாம் இசை கூட்டிக்கொண்டு இருந்தது. அவருக்கு மட்டும் இந்த புற உலகம், அவர் விறல் சென்று தொடும் இடம் எல்லாம் மத்தள தோல் சருமம் என்று தன்னை உருமாற்றி முன் வைக்கிறது. எனில் மிருதங்கம் கொண்ட இரு பக்கங்கள் எத்தனை சிறிய இடம்.
திரும்பி வருகையில் ஒரு இளம் பெண். பூரண அலங்கார நடன உடையில் இருந்தாள். கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும் சன்னதி வாசல் முன் நின்று வணங்கி விட்டு, பொன்னம்பலனுக்குக்கு தனது நடன அஞ்சலியை துவங்கி விட்டாள். பாடல் இல்லை. நாட்டுவாங்கம் இல்லை. ஜதி இல்லை. மொபைலில் கூட பின்னணி பாடல் இல்லை. மௌன நடனம். அவளும் நடராஜனும் மட்டும். இடையே வேறு எதுவும் அவளுக்கு நினைவிலேயே இல்லை போலும். ஒரு சில அபிநயம் வழியாகவே கண்டு கொண்டு விட்டேன். அற்ப சுகம்தனை நினைத்தோம். அரன் திருவடி தனை மறந்தோம்… திருநாளை போவார். சற்றே விலகி நில்லும் பிள்ளாய் என்று சிவன் அருள் மொழி உரைப்பதை அவன் குரலை துல்லிய நடன பாவம் வழியே கண்டேன்.
இசை குறித்த என் கோழிமுட்டை உலகத்தின் அறிவு அனைத்தும் கலைத்து அடுக்கப்பட்ட இரவு அது. இளையராஜா அவர்கள் மிக முன்பு எழுதிய முக்கியமான அனுபவ கட்டுரை ஒன்று உண்டு. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் “தான்” எனும் நிலை உருகி, மொத்த புற உலகும் நாத வெளியாகி நின்ற கணத்தை, அதை உணர்ந்த தருணத்தை எழுதி இருப்பார். கிட்டத்தட்ட விஷ்ணுபுற திருவடி நிலையேதான்.
இத்தகு நிலைகளின் சாராம்சம் குறித்த அழகிய கதை கேளி. மொத்தமாக ‘அமைதியாகி’ நின்றிருக்கும் புற உலகம். அவனது அகத்தின் இசை அவனை விட்டு வெளியேறி, புறத்தை தொட்டு மொத்த புறமே அதன் அத்தனை அசைவும் மௌனம் உதிர்த்து, கேளி கொட்டென ஆகும் கணம். வெண் முரசின் குழலிசைக்கு பின்னரும் இப்படி ஒரு தனித்துவம் மிக்க அழகிய கதை ஒன்று சாத்தியம் என்பதை நம்ப இயல வில்லை. ஒவ்வொரு காலையும் கலையில் கண் விழிக்கும் அற்புத சூழல் மீண்டும். பிரமாதம் ஜெ. :)
கடலூர் சீனு
விசை [சிறுகதை]
அன்புள்ள ஜெ
’விசை கதை ஒரே வரியில் தீயாலும் சுடமுடியாத நெஞ்சின் விசை’. அந்த அன்னையின் மனதுக்குள் ஓடிய தீ தான் கைகளில் அத்தனை விசையாக இழுபட்டது. எவரிடமும் பகிரப்படாத ஆவேசம் அது. மகனை வாழவைத்தது. பலநூறு குழந்தைகளை வாழவைக்கிறது. தீயோ காலமோ அதை அத்தனை எளிதாக தொட்டுவிடாது
பத்மகுமார்
***
அன்புள்ள ஜெ.,
அன்றைக்கெல்லாம் சென்னைத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளின் இடையே மெல்லிசைப் பாடல்களை ஒளிபரப்புவார்கள். பாலமுரளிகிருஷ்ணாவின் ‘எந்தன் தாயை எண்ணிடும் போது இதயம் விம்மிடுதே..’ அடிக்கடி ஒளிபரப்பப்படும் பாடல். அன்னையின் நினைவு தரும் பூரிப்பினால் இதயம் விம்மிடுதலின் உண்மையான அர்த்தத்தினை, அந்த விம்மிடுதே என்ற வார்த்தையை பாலமுரளியின் கார்வையில் கேட்டபோது நான் உணர்ந்தேன். “கெடக்கட்டு டீக்கனாரே, நான் ஓலைக்காரிக்க மகன்லா?” என்ற நேசையனின் பூரிப்பு அதற்குச் சற்றும் குறைந்ததல்ல.
இப்போதும் கூட நான் இருக்கும் சென்னை நங்கநல்லூரில் பழுத்து உதிர்ந்த தென்னை மட்டைகளைச் சேகரித்து தெருவோரத்தில் வயதானவர்கள் துடைப்பத்துக்காக ஓலை கீறிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ‘உதிராத மட்டைகள்’ என்று நினைத்துக்கொள்வேன். நேசையனின் அம்மைக்கு தென்னை ஓலையைப் பலகையாய் முடையும் விசை கூடியது எப்படி? அடிமையாய் இருந்து மீட்கப்பட்டவள், கணவனை இழந்து குழந்தையோடு நிர்கதியாய் நின்றவள் தனக்குத் தெரிந்த ஒரே வேலையான ஓலை முடைவதை கரை தெரியாத வாழ்க்கைக்கடலைக் கடக்கும் தோணியாகவே நினைத்திருப்பாள். இது போல முகம் இறுகி , அகம் தொலைத்த, தலைவன் இல்லாக்குடும்பத்தை தூக்கிநிறுத்திய, எத்தனை அன்னையர் குடும்பம் தோறும். நெகிழ்ச்சியான கதை.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்