ஆமென்பது… [சிறுகதை]
அன்புள்ள ஜெ
‘ஆமென்பது’ என்ற கதை வாசித்ததிலிருந்து மிகவும் தொந்தரவு செய்தது. இக்கதையையொட்டி, கதையைத்தாண்டி, பல சிந்தனைகள். என்னால் என் சிந்தனைகளை கோர்வையாக முன்வைக்கமுடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் மிகவும் சென்சிட்டிவான புள்ளியில் இந்த கதை வந்து அடித்தது. அதை அந்த உணர்வுச்சூட்டோடு ஒரு பதிவுக்காகவாவது எழுதியாகவேண்டும் என்று நினைத்தேன்.
‘வாழ்க்கையே சாவுக்கான காத்திருப்பது. செத்தப்பிறகும் காத்திருப்பதென்றால் எத்தனைப்பெரிய அபத்தம்’ என்கிறார் கதையில் வரும் பிரபானந்தர். வரப்போகாத மகனுக்காக காத்திருப்பு. ‘செண்டிமெண்ட்’ என்று புறம்தள்ளிய மகன் வருகைக்கான கடைசிகால ஏக்கம். இளமையில் வெறுத்தொதுக்கிய தந்தையை வாழ்க்கை முழுவதும் தேடித்தேடி அலைந்து குருவடிவில் தந்தையை – அல்லது தந்தை வடிவில் குருவை – கண்டடைவது.
இருத்தலியல்வாதத்தையும, அபத்தவாதத்தையும் அறிவார்ந்த நிலைப்பாடுகளாகக் கொள்ளும் ஓ.வி.விஜயனை ஒட்டிய கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் வெளிப்படும் அபத்தங்கள், அசட்டுத்தனங்கள், துணுக்குறவைப்பவை. அறிவார்ந்த தேடல் – intellectual quest – சாராம்சத்தில் மனிதனின் வாழ்க்கைக்கு அளிப்பதுதான் என்ன என்ற கேள்வியில் வந்து முட்டி நிற்க வைக்கிறது.
நோய்களை குறி காணும் மருத்துவருக்கு நோய்வராமல் போகும் என்று எந்த உத்தரவாதமும் இல்லையே. அறிவொன்றும் தடுப்பூசி இல்லையே. சரி, அப்படியென்றால் அறிவின் பயன் தான் என்ன? விஜயனின் வாழ்க்கைக்கு அவர் கண்ட அறிவு என்ன பொருள் கொடுத்தது? பிரபானந்தர் புனைவெழுத்தாளர்களை ஒட்டுமொத்தமாக கழித்துவிட்டுப் பேசிச்செல்லும் வாக்கியம் இங்கே முக்கியமாகிறது. “நான் எதையும் வாசித்ததில்லை. எழுத்தாளர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். தாங்கள் அறியாத தெய்வங்களை பிடித்து நிறுவிவிடும் துரதிர்ஷ்டம் கொண்டவர்கள் என்று சொன்னேன்.”
பிரபானந்தரின் கோணம் கதையின் இரண்டாம் அடுக்கு. அவர் பார்வையில் எல்லாமே அபத்தம் கொள்கிறது. சடங்குகள், கவலைகள், காத்திருப்புகள், எல்லாம். “சாமியார்கள் பிறப்பு, சாவு, கல்யாணம் எல்லா சடங்குகளிலும் அபத்தமாக தெரிகிறார்கள்” என்று இன்னொரு கதாபாத்திரம் சொல்கிறது.
விஜயன் கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்தக் கதையைச் சொல்லும் அவர் தங்கையாரின் கோணம் மூன்றாவது அடுக்கு. உண்மையில் இவரது பார்வைக்கோணம் இந்த மொத்த narrative-விலும் என்னை மிக அணுக்கமாக பாதித்தது. ஒரு கவிஞரின், பெண்ணின், தங்கையில், தூய பார்வையாளரின் பார்வை இந்தக் கோணத்தில் வெளிப்படுகிறது. சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும் வாழ்க்கை விசைகளின் அச்சாணியில் நின்று பார்ப்பதுபோல் கூறுகிறாள்.
தந்தைக்கும் அண்ணனுக்குமான பிணக்குகளை, அண்ணனுக்குள் ஓடும் அரசியல், அறவியல், அழகியல் சார்ந்த மோதல்களை, அவர் சலனமில்லாமல் அவதானிக்கிறாள். வாழ்க்கையையும் அவ்வாறே அந்தப் பெண்மணி அவதானிக்கிறாள், அவள் கவிதையின் ஊற்று அது என்று ஊகிக்கமுடிகிறது. அங்கே அவள் நின்று பேசும் பீடத்தை விஜயன் கதாபாத்திரம் ‘செண்டிமெண்ட்’ என்று கேலி செய்கிறார். “உன் கவிதைகளைப்போல் இருக்கிறது உன் பேச்சு,” என்கிறார்.
ஆனால் தங்கை விட்டுக்கொடுப்பதில்லை. “ உலகமே செண்டிமெண்டுகளால்தான் இயங்குகிறது. நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் அசட்டு கருத்துக்களால் அல்ல. அதெல்லாம் சும்மா வாசித்து சுருட்டி பழையபேப்பர் வியாபாரிக்குப் போடும் குப்பைகள்” என்கிறாள். “உங்களுக்கு செண்டிமெண்ட்களை புரிந்துகொள்ளும் வரலாற்று அறிவும் பண்பாட்டு அறிவும் இல்லை என்றால் செண்டிமெண்டுக்கு பொருள் இல்லை என்று ஆவதில்லை” என்கிறாள்.
இவளில் வெளிப்படுவது வாழ்க்கைச்சார்ந்த ஆ யதார்த்த பார்வை ஒன்று. ஆனால் அதை என்னிலையிலும் மறுக்கமுடியவில்லை. ஆணித்தனமாக நிற்கிறது. அதற்கு அத்தாட்சி விஜயன் கதாபாத்திரமே. அவர் வாழ்க்கைக்கொள்ளும் திருப்பமே. சுருக்கமான கார்ட்டூன் கோடுகளாக அவர் வரையும் குழந்தையின் சித்திரம் – அது வளர்ந்த மகன் அல்ல, காரில் சிரித்துக்கொண்டே ஏறிச்சென்ற அவர் இழந்த குழந்தை – மிகமிக ஆழமான இமேஜ். அந்த கடைசி நாளை அவர் ‘சர்வ சாதரணமாக’ சொல்லிச்செல்லும் இடம், அங்கிருந்து அவர் நகர்ந்து வரும் தூரம், மிகப்பெரிய ஒன்றாக உள்ளே அதிர்ந்துகொண்டே இருக்கிறது.
அந்தப் பேரிழப்பு. அதற்கு புன்னகையுடன் ‘ததாஸ்து’ சொன்ன கொடுந்தெய்வம். எங்கிருந்து வருகிறது இந்தப் பெருந்துயரம்? ரணவலி? அந்தநாள் விஜயன் எடுத்த முடிவுகளை ‘வீம்பு’ என்றெல்லாம் சொல்ல முடியவில்லை. அதில் அதீத நிலைப்பாடு, கன்விக்ஷன் இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அது அறிவதிகாரத்திலிருந்து பிறப்பது. அறிவென்பது என்ன? ஒரு திறப்பு. ஒரு புரிதல். பிரபானந்தர் அதைத்தான் கதையின் ஆரம்பத்தில் சொல்கிறார். அதை ஒரு வார்த்தை, ஒரு தேவதை, என. நாம் எண்ணத்தில் கண்டுகொண்டுவிட்டால், ஒரு வார்த்தையென்று ஆக்கிவிட்டால், எழுத்தென்றோ பொருளென்றோ வடிவம் கொடுத்துவிட்டால், அது இங்கே நிலைகொண்டுவிடுகிறது.
ஆனால் பிரபானந்தர் சொல்வதெல்லாம் எச்சரிக்கைகளே. தேவதையை பின்னால் துறத்திச்செல்லக்கூடாது. அப்படியே விட்டுவிடவேண்டும். அவை திரும்பிப் பார்த்தால் பேயாகிவிடும். மலையின் முகத்தில் காற்று அறைந்து அதை வடித்தெடுக்கிறது. ஆனால் மலை காற்றைப் பற்ற முயல்வதில்லை. அதேபோல் தெய்வங்களையும் பேய்களையும் அப்படியே விட்டுவிடவேண்டும். இல்லையென்றால் அவை ஒருவனை வாழ்னாள் முழுவதும் பலிகேட்டு பலிகேட்டுப் பீடிக்கக்கூடியவை. இருக்கும் தெய்வங்கள் போதும், இனியும் ஒரு தெய்வத்தை இங்கே நிறுத்தாதே, என்பது பிரபானந்தரின் தரப்பு.
அறியமுடியாமை கோடானுகோடிகோடி விதங்களில் இங்கே அறிவாக திறந்துகொள்ளும் சாத்தியம் கொண்டது. அத்தனை சாத்தியங்களையும் மனிதன் இங்கே இழுத்து நிலைத்து வைத்தால் உலகம் தாங்குமா, என்று பிரபானந்தர் கேட்கிறார். இது அறிவுமறுப்புக் கொள்கையா? சொல்லத்தெரியவில்லை. அறிவின் விஸ்தரிப்பை மறுக்கிறது. அல்லது அதன் எல்லைகள் என்ன, ஆபத்துகள் என்ன, என்று எச்சரிக்கிறது. தொடர்ந்து விரியும விஜயனின் வாழ்க்கைக்கதை இந்த சிந்தனைக்கு ஒரு முத்தாய்ப்பாக அமைகிறது.
அதுவும் ஒரு பெரிய அதிர்வுதான். ஏனென்றால் விஜயன் அபத்தத்தை எதிர்நோக்கும் மனிதன் மட்டுமல்ல. சிந்தனையாளன். புனைவுகளை உருவாக்குபவன். அறிவதிகாரத்தில் நம்பிக்கை கொண்டவன். அந்த அறிவின் வெகுமதி அவன் வாழ்க்கையில் என்ன என்று என்னால் வகுத்துக்கொள்ள முடியவில்லை. கதையிலும், கதையைத்தாண்டிய உலகிலும், பெரிய மர்மமாகவே எஞ்சுகிறது.
*
எனக்குள் இருக்கும் ஐயங்களை இவ்வாறு சொல்கிறேன். உலகத்தில் எதுவுமே பிரபானந்தரின் தரப்புக்கு முன் பொருள் கொள்வதில்லை. அது வேதாந்தியின் நெருப்பு. அதற்கு முன்னால் மங்கலமும் அமங்கலமும் அபத்தமாகிறது. தெய்வங்களை உருவாக்காதே என்று அவர் சொல்வதும் ஒரு வித மாயை எதிர்ப்பு வாதம் என்று கொள்ள இடமுள்ளது.
வேதாந்திகளிடம் பொதுவாக மாயையின் இயல்பைப் பற்றி கேள்வி கேட்டால், அதிகமாக விஸ்தாரிக்க மாட்டார்கள் என்பது என் புரிதல். மாயையை ஆராய்ந்துகொண்டிருக்காதே, அதை வெட்டிவிட்டு மேலேச்செல் என்று சொல்வார்கள்.
ஆனால் புனைவெழுத்தோ, மாயைக்குள் மாயையை உருவாக்கியே திளைக்கிறது. அதன் வழியாக மேலும் மேலும் அறிவை சேர்த்துக்கொள்கிறது. புனைவெழுத்தாளனும் வாசகனும் அனுபவம் வழியாக அறிந்தவர்கள் ஆகிறார்கள். ஆனால் இந்த அறிவால் அவர்களுடைய துக்கம் விலகுவதில்லை. ஆகவேதான் இந்தக்கதையில் பிரபானந்தர் எழுத்தாளர்கள் மீது அலட்சியம் கொள்கிறார் என்று நினைக்கிறேன்.
என் ஐயம் இந்தப் புள்ளியில் தான். அறிவுக்கு சாராம்சத்தில் மதிப்பு உண்டா? எங்கு, எதில் உள்ளது? அறிவைப்பெறும் இன்பத்தைத் தாண்டி அதில் சாரமென்று ஏதும் இல்லையா? Pure intellectual quest என்பதற்கு ஓர் எல்லை வரையிலும் தான் அர்த்தமிருக்கிறதா? நீங்கள் இந்தக் கேள்விகளை ஒட்டி நித்ய சைதன்ய யதியுடன் பேசியதுண்டா?
ஏனென்றால் எனக்கு புரிந்த வரையிலும் வேதாந்தத்தின் பாதையும் கலை இலக்கியம் அறிவுச் சேகரிப்பின் பாதையும் நேரெதிரானவை. ஒன்று இருக்கும் உலகையே தாண்டிச்செல்லச் சொல்கிறது. மற்றொன்று அதற்குள் ஏனைய பிரபஞ்சங்களை கண்டடைய முனைகிறது. இந்த முரணை ஒருநோக்காக்கிக் கொள்வது எப்படி? இந்த புள்ளியில் நீங்கள் அதிகம் பொதுவில் பேசமாட்டீர்கள் என்று அறிகிறேன். இருந்தாலும் வலுவாக எனக்குள் இந்த ஐயம் இருப்பதால் இத்தருணத்தில் பகிர்ந்துகொள்கிறேன்.
இன்னொன்றும் உள்ளது. அறிவின் கோட்பாடுகளை யதார்த்தத்தளத்துக்குக் கொண்டு வந்து வாழ்வதென்பது தான் இலட்சிய வாழ்வு. ஆனால் பலநேரங்களில் நம் பட்டறிவு வேறொன்றை சொல்கிறது. ரமா சொல்வது போல ‘செண்டிமென்டாக’, ஆனால் அது ஆழமானதும் கூட. உண்மையில் எனக்கு அதை ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை, உள்ளுணர்வாக ரமா சொல்வதன் ஆழத்தை அறிகிறேன். ஆனால் அதைப் புறவயமாகச் சொல்ல முடியவில்லை.
கே.வி.ஜயானனும் இந்தக்கதையில் ரமாவின் தரப்புக்கு எதிராக அப்படி ஒரு அறிவார்ந்த முறையையே தன் வாழ்வில் பரிசோதிக்கிறார். பலமாகத் தோல்வியுறுகிறார்.
இதை எப்படி புரிந்துகொள்வது? வாழ்க்கைக்கு வராத அறிவுக்கு என்ன மதிப்பு? அதே சமயம் அறிவு வாழ்வின் உயிர்ப்பையே குலைக்குமென்றால் அந்த அறிவு மனிதனுக்கு கொடுப்பதுதான் என்ன? அதற்காக அறிவே வேண்டாம், லௌகீக யதார்த்த செண்டிமெண்டுகளே போதும் என்றும் இருக்க முடியவில்லையே? அறிவில் ஒன்றை கண்டடைந்து நடத்தையில் வேறொருவிதமாக ஒழுகினால் அது ஹிப்போகிரசி இல்லையா?
ஜெ, உண்மையில் இந்தக்கணம் எனக்குள்ளும் விஜயன், ரமா, பிரபானந்தர் என்று மூன்று குரல்களும் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் வலுவான பின்னணி, வாதங்கள் இருக்கின்றன. அதில் எழுந்து வரும் பெரிய கேள்வி, அறிவுக்கு சாராம்சத்தில் மதிப்பு உண்டா?
*
இவ்வரிசைக்கதைகளில் இதுவரை கந்தர்வன் கதையே பேருச்சம் எனக்கு. ஆனால் இந்தக்கேள்விகளை ஒட்டி இந்தக்கதை உருவாக்கிய அதிர்வுகளாலேயே இதை மிகவும் நெருக்கமாக உணர்கிறேன். நன்றி .
ஆர்.
அன்புள்ள ஆர்,
மிக நீண்ட கடிதம். தனிப்பட்ட செய்திகளைச் வெட்டிவிட்டு சுருக்கி இதை வெளியிடுகிறேன். ஏனென்றால் இது எழுப்பும் கேள்வி அடிப்படையான ஒன்று. அதோடு இத்தகைய விஷயங்களை பொதுவில் விவாதிக்கும்போது வரும் புறவயத்தன்மை ஒரு வகையான ஒழுங்கை அளிக்கிறது.
நீங்கள் உணர்ந்தது சரி, நான் சிலவற்றை பொதுவில் விரிவாகப் பேசுவதில்லை. ஏனென்றால் அதனால் குழப்பமே எஞ்சும். குழப்பத்துக்கு ஒருபடி முன்னரே நின்றுவிட முயன்று, கவனமாகவே பேசுவேன். ஆதாரமான விஷயங்களை பேசத்தொடங்கினால் விவாதமாக ஆகும். விவாதத்தால் அறியமுடியாதவையே சாராம்சமானவை.
இரண்டு சிக்கல்கள் உண்டு இதில். ஒன்று, இதற்கு ஒரு கடிதத்தில் முழுமையாகப் பதில் சொல்ல முடியாது. இரண்டு, சொல்லப்படும் பதிலால் இந்த வினா நிறைவுறாது. தானாகக் கண்டடையவேண்டும்.
சொல்லப்படும் பதிலென்பது ஒரு தொடக்கமாக, ஒரு சிந்தனைச்சீண்டலாக மட்டுமே அமைய முடியும். ஆகவே சுருக்கமாகச் சொல்கிறேன். அது இந்தக் கதையை விளக்குவதற்காக அல்ல, உங்கள் கேள்வியை ஒட்டி ஒரு பதில். முழுமையான விளக்கம் அல்ல நீங்கள் சொந்தச் சிந்தனையை முன்னெடுக்கும்பொருட்டு ஒரு குறிப்பு மட்டுமே.
*
‘அறிவார்ந்த’ , ‘உணர்வுசார்ந்த’ என்னும் இரு அணுகுமுறைகளுமே அதீதத்தின் சிக்கல்கள் கொண்டவை. இரு எல்லைகள் அவை. ஆகவே இரண்டுவகை பிழைகள்.
அறிவார்ந்த என்பதில் ’நான்’ என்னும் தற்பிடித்தம் உள்ளது. நாம் ‘என் அறிவு’ என்பதையே பொதுவாக அறிவு என்கிறோம். அந்த தற்பிடித்தமே அறிவுத்தேடல் கொண்டவர்களின் ஆதாரச் சிக்கல்.அறிவை பயனற்றதாக்கும் அம்சம் இதுவே.
நான் நித்யாவிடம் இதைப்பற்றிப் பேசியிருக்கிறேன். அவர் சொன்ன பதிலை எழுதியுமிருக்கிறேன். ‘தானே கண்டறிந்தது என்பதனால் ஒன்று உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்புவதுதான் அறியாமையின் உச்சம்’ என்று அவர் சொன்ன வரியை பலமுறை மேற்கோள் காட்டியிருக்கிறேன். நாம் நம் அறிவால் அறிவது அனைவருக்குமான உண்மையாக இருக்கவேண்டியதில்லை.ஏன், நமக்கேயான உண்மையாகவும் இருக்கவேண்டியதில்லை. அது வெறுமே தர்க்கபூர்வமானதாகவும், பொருத்தமானதாகவும் மட்டும் இருக்கலாம். தர்க்கபூர்வமானதும் சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமானதும் உண்மையாக இருக்கவேண்டியதில்லை.
நான் இன்னொருவகையில் அதைச் சொல்வேன். ‘சரியான சொற்களில் சொல்லப்பட்டுவிட்டதனால் மட்டுமே ஒன்று உண்மையென்று நம்புவதைப்போல அறிவின்மை ஏதுமில்லை.’ ஆனால் அந்த மாயை எழுத்தாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் உரிய சொந்த எலிப்பொறி. [ஈகோ அடிபடுகிறதென்றால் புலிப்பொறி என்று வாசிக்கவும் ]
அறிவை நம்பி, உணர்வை அதற்குமேல் ஏறும் களிம்பென எண்ணி எள்ளி நகையாடி விலக்கி, தூய தர்க்கத்தால் மட்டுமே முடிவுகளை எடுப்பவர்கள் உண்மையில் ஆணவத்தின் விழைவாலேயே அந்த முடிவுகளை எடுக்கிறார்கள். கதையின் கே.வி.ஜயானன் எடுக்கும் எல்லா முடிவுகளும் அப்படித்தான். அவை அறிவார்ந்தவை என அவர் நினைக்கிறார். ஆனால் அவை வெறும் ஆணவநிறைவுக்கான முயற்சிகள், ஆழத்தில் நிறைவேறாத ஏக்கத்தின் வெளிப்பாடுகள் என்றுதான் கே.வி.ரமா சொல்கிறார். அதுதான் கதையின் சாராம்சமே.
இன்னொரு பக்கம் வெறும் உணர்வுரீதியான முடிவுகள் உள்ளன. அறிவார்ந்த ஒருவரால் முற்றாக உணர்வுகளுக்கு ஒப்புக்கொடுத்து வாழமுடியாது. அது காற்றுக்கு சருகு தன்னை அளிப்பதுபோல. வாழலாம், காற்று நம்மை முள்ளில் கொண்டுசென்று குத்தி வைத்தால் புலம்பாமலிருக்க முடியுமென்றால்.
கே.வி.ரமா வெறும் செண்டிமெண்டுகளால் இயக்கப்பட்டு அதைச் சொல்லவில்லை. அவர் மிகக்கூர்ந்த அறிவாற்றலுடன்தான் உணர்வுகளை ஆராய்கிறார் என்பதைக் கதையில் காணலாம்.
அறிவை உணர்வு கட்டுப்படுத்த, உணர்வை அறிவு கண்காணிக்க ஒரு சமநிலைப்பயணமே எவருக்கும் உகந்தது.மிக எளிமையான பதில். ஆனால் எப்போதுமுள்ளது. அத்வைதத்தின் வழி அதுவே- நடுவே உள்ள பாதை. பொன்னிறப்பாதை என்பது அதுதான்.
அறிவால் ஒன்றை கண்டுகொண்டதுமே அதை நம்புவதல்ல சரியான வழி. அது நம் ஆணவத்தின் நிலவொளியால் பொன் என மாற்றப்பட்ட சிப்பியாக இருக்கலாம். அந்தக் கால இடத்தை கடந்தால், அது தன்னுரு வெளிக்காட்டலாம். அறிவின் அறிதல்களை உணர்ச்சிகளால் பரிசீலிக்கவேண்டும். உணர்ச்சிகள் பல. பிறர் தரப்பையும் நோக்கும் அறவுணர்வே ‘செண்டிமெண்டு’களில் முதன்மையானது.பற்று பாசம் என செண்டிமெண்டுகள் ஏராளமாக உள்ளன இவ்வாழ்க்கையில்.
உதாரணமாக, தன் தந்தையை கைவிட்டு விலகிச்சென்று இருத்தலியலில் திளைத்த கே.வி.ஜயானன் அப்போது நித்யசைதன்ய யதியைச் சந்தித்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்?
‘நீ முற்றிலும் தனியன், நீ உன் வாழ்க்கையை முடிவுசெய்ய முழுஉரிமை கொண்டவன், உன் வாழ்வென்பது நீ உருவாக்கிக்கொள்வது மட்டுமே என நீ எண்ணிக்கொண்டிருப்பதெல்லாம் உன் ஆணவம் அளிக்கும் வசதியான நிலைபாடுகள் மட்டுமே. நீ ஓர் உயிரியியல் தொடர்ச்சி. நீ துண்டித்தாலும் அது உன்னை துண்டித்துக் கொள்ளாது. இங்கே எடுக்கப்பட்டது கொடுக்கப்பட்டாக வேண்டும்.
தந்தையை அளவிடும் அளவுகோல் மைந்தரிடம் இல்லை. மூதாதையரை மதிப்பிடுமளவுக்கு உனக்கு வாழ்க்கை நீளமில்லை. உன் அளவுகோல்களைக் கொண்டு நீ உன் சொந்த வாழ்க்கையிலேயே எதையும் அறுதியாக மதிப்பிட்டுவிடக் கூடாது. ஆகவே உன் எளிய கோபதாபங்களுக்கு அப்பால் சென்று என்றுமுள்ள உண்மையை தொட முயல்க.
ஒரு கணம் கண்மூடி அமர்ந்து, உன்னை ரத்து செய்துகொள்ள முடிந்தால் உனக்கே தெரியும், நீ இப்புடவியின் உயிர்ப்பெருக்கில் ஒரு வெறும் துளி என. எல்லா உயிருக்கும் உரிய நியதிகளே உனக்கும் என. நீ அரியவன் அல்ல, நீ முற்றிலும் தனித்தன்மையானவனும் அல்ல. உனக்கென்று மட்டும் ஓர் இருத்தல் இல்லை. ஆகவே உனக்கென்று மட்டும் இருத்தலியல் கேள்விகளும் அதற்குரிய விடைகளும் இல்லை. அப்படியொன்றை நீ தேடுவது நான் நான் என எழும் வெற்றாணவத்தால்தான்.
ஆகவே உன் அப்பாவிடம் சென்று பணிந்து அவர் அந்திமகாலத்தில் விரும்புவதைச் செய். அவருக்கு அளிக்கவேண்டிய அனைத்தையும் அளி. அதற்கு உன் சிறிய ஆணவம் தடையாகக் கூடாது. அதை வென்று செல்க. நீ செய்யவேண்டியதை செய்துவிட்டாய் என்றால் உனக்கு செய்யப்படவேண்டியது செய்யப்படாவிட்டாலும் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள உன்னால் முடியும்.அளிக்கவேண்டியவற்றை அளித்தவர் அவற்றை கடந்துசென்றவராவார். வாழ்க்கையில் எதையும் எச்சம் விட்டு மேலே செல்லாதே. விட்டுவிட்டவை வளரும், விழுங்கும்’
– என்று சொல்லியிருப்பார்.அதாவது, ஒரு செண்டிமெண்டின் ஆழத்தையே சுட்டிக்காட்டியிருப்பார். ஆனால் அது வெறும் உணர்வுநிலை அல்ல. ஒரு முழுமையில் வைத்துப்பார்க்கும் பார்வை.
கே.வி.ஜயானன் அவர் அப்பாவுக்கு கடைசியில் நல்ல மகனாக இருந்திருந்தால் அவருக்கு அந்தத் துயர்கள் அத்தனை பூதாகரமானதாக ஆகியிருக்காது இல்லையா?. அத்தனை அறிவுக்கூர்மையுடனிருந்தவர் அந்த அறிவால் உணர்ச்சிகளை கண்காணித்திருந்தால் தன் செயல்களின் உணர்வுத்தளம் என்ன என்று புரிந்துகொண்டிருப்பார்.அந்த உணர்வுத்தளத்தை அறிவார்ந்து கையாள முடிந்திருக்கும். அது ரகசிய சக்தியாக இருந்து ஆட்டிப்படைத்திருக்காது. அவர் கடைசிவரை அதைப் புரிந்துகொள்ளவில்லை.
இந்தக்கதை அறிவுக்கு எதிரானது அல்ல. அறிவென நடிக்கும் உணர்வுகளைப் பற்றியது இக்கதை. வஞ்சம் ஏக்கம் போன்றவை அறிவை கருவியெனக் கையாள்வதைப் பற்றியது.
*
வேதாந்தம் அறிவை மறுக்கவில்லை, ஐயப்படவுமில்லை. ஆனால் அறிவு என்பது என்ன என்று அறியவும் வரையறுக்கவும் தொடர்ந்து முயல்கிறது.
அறிவு பயனற்றது அல்ல. இருவகை அறிவுகள் உண்டு. தான் என்பது ஒரு முழுமையின் துளியே என்றும், தன் வாழ்க்கை என்பது இங்குள்ள வாழ்க்கைவலையின் ஒரு கண்ணிதான் என்றும் உணர்வது தன்னறிவு. தன்னறிவு முழுமையறிவுக்கான தொடக்கம்.
மாறாக, தான் தான் என தன் அறிதலையே முழுமை என முன்வைப்பது அறிவாணவம். இரண்டுக்கும் வேறுபாடுண்டு. தன்னறிவு தன் எல்லைகளை, பொறுப்புகளை முதன்மையாகச் சுட்டும். கூடவே தான் என ஒன்றில் சிக்கியிருக்காமலிருக்கவும் செய்யும்.
பிரிவுபட்ட அறிவின் விளைவே அறிவாணவம். ஒரு துறை, ஒரு தளம் சார்ந்த அறிவு. ஒரு தருணம், ஒரு கோணம் சார்ந்த அறிவு. அறிவாணவமே வெறுமையை அளித்து உளச்சோர்வுக்குக் கொண்டுசெல்கிறது.
நீங்கள் ’அறிவென்பது மாயை என்றால் புனைவெழுத்து மாயைக்குள் மாயையை உருவாக்கியே திளைக்கிறது. அதன் வழியாக மேலும் மேலும் அறிவை சேர்த்துக்கொள்கிறது’ என்கிறீர்கள். அப்படி அல்ல. புனைவெழுத்து சரியான கலைத்தன்மையுடன் இருக்கும் என்றால் முழுமையை நோக்கியே சுட்டும்.முழுமையைச் சுட்டும் அறிவு மாயை அல்ல, துண்டுபட்ட உண்மையே மாயை.
அறிவின் படி வாழலாகாதா என்று கேட்டதற்கு இதுவே பதில். பிளவுண்ட அறிவின்படி வாழ்வது இழப்புகளையே அளிக்கும். ஏனென்றால் அந்த அறிவுக்கு இணையான எதிர் அறிவும் இருக்கும். இதைக் கடந்ததுமே அது வந்து முன்னால் நிற்கும். இதற்கு அளிப்பதற்கு இணையாக எதிர் அறிவும் நம்மிடமிருந்து பிடுங்கிக்கொள்ளும். முழுமையறிவையே நாம் நாடவேண்டும். அதைக்கொண்டே முடிவெடுக்கவேண்டும்.
அவ்வண்ணம் முழுமைசார்ந்த ஓர் உள்ளறிதல் நிகழாதபோது உணர்வால் அறிவால் சமன்செய்யப்பட்ட துலாமுள் பாதையே சரியான வழி.மாறாக ஓர் உள்ளறிதலின் ஆணை எழுந்ததென்றால் அதன்பொருட்டு எதையும் இழக்கலாம், கடந்துசெல்லலாம். ஏனென்றால் நாம் நமது சாரமென்ன என்று அறிந்துவிட்டிருக்கிறோம். அதன்பின் நமது இலக்கு, வழி எதைப்பற்றியும் ஐயமில்லை. இன்று எனக்கு ஐயமேதுமில்லை.
நித்யாவின் மாணவனாக கே.வி.ஜயானனுக்கு நான் இப்படிச் சொல்வேன். ’ஒவ்வொரு தெய்வத்துக்கும் அதற்கான கொடைகளை அளி, பலிகளைப் போடு. கையில் குழந்தையுடன் காட்டில் தப்பிச்செல்லும் அன்னை துரத்திவரும் ஓநாய்களுக்கு கையிலுள்ள உணவுகளை வீசுவாள். கடைசியில் தன் தசையையும் வெட்டிவீசுவாள். குழந்தையை கொண்டுசென்று சேர்த்துவிடுவாள்’
*
வேதாந்தம் அறிவின் பாதையை முன்வைக்கவில்லை – பேரறிவின் பாதையை முன்வைக்கிறது. அறிவை மாயை என்று சொல்லவில்லை, முழுமையுடன் இணையாத துண்டுபட்ட அறிவையே மாயை என்கிறது. இந்த உலகில் இதுவரை தோன்றிய ஞானமார்க்கங்களிலேயே கலையிலக்கியத்திற்கு அணுக்கமானது வேதாந்தமேயாகும். ஏனென்றால் அது கலையிலக்கியங்களை மயக்கங்கள், வெற்றுணர்ச்சிகள் என்று சொல்லவில்லை – அவை முழுமையைச் சுட்டுகின்றனவா என்று மட்டுமே நோக்குகிறது.
நாராயண குரு அறிவு என்னும் சிறிய நூலை இயற்றியிருக்கிறார்.அதன் சாராம்சம் இதுவே. அறிவு ஒரு ஓரு தனிப்பிரக்ஞையில் அதன் விளைச்சலாக நிகழ்கையில் சிற்றறிவு. அதுவே ஆணவஅறிவு.
தன்னறிவு தன்னை ரத்துசெய்து அறிவது .அதை உணர்வால், நுண்ணுணர்வால் கண்காணித்து பெருக்கி அறிந்தறிந்து செல்லுமிடம்தான் பேரறிவு. எந்த ஓடையைத் தொடர்ந்தாலும் கடலைச் சென்றறிவதுபோல.
பேரறிவு என்பது முழுமையறிவு. பிளவற்ற அறிவு. சிற்றறிவின் தளத்தில் அறிவே அறிவுக்கு எதிராக நின்றிருக்கிறது. பேரறிவு ’நமது- பிறிது’ என்ற பிளவற்றது. ஒட்டுமொத்தமானது. அது அறிதலால் மட்டும் ஆவது அல்ல. அறிதலில் அமைவதனாலும் ஆவது.
பொதுவாக இதை இப்படிச் சொல்கிறேன். ‘உரிய முறையில் தியானிக்கப்படாத அறிவு என்பது வெறும் ஆணவமாகவே முடியும். தியானம் என்பது அறிவை, அது எதன் துளியாக இருக்கிறதோ அந்த ஒட்டுமொத்தத்தின் ஒரு பகுதியென உணர்வது. அப்போதுதான் அந்த அறிவுக்கு உண்மையின் பெறுமதி அமைகிறது’.
இது எழுத்தாளனாகிய ஜெயமோகன் சொல்வது அல்ல. அவன் மூளையின் செரட்டோனின் அளிக்கும் தூண்டுதலால் மட்டுமே கதைகளை எழுதிக்கொண்டிருப்பவன். எழுதும்போதிருக்கும் திளைப்புக்கு அப்பால் எதையும் அறியவோ விளக்கவோ செய்யாதவன். இந்தப் பதில் நித்யாவின் மாணவனால், முற்றிலும் வேறொருவனால், எழுதப்படுவது.
ஜெ