விருந்து [சிறுகதை]
அன்புள்ள ஜெ
விருந்து ஓர் அழகான கதை. அழகான துயரம் கொண்ட கதை. அதில் ஆசாரி புறவுலகத்தை வரைகிறான். அத்தனை காட்சிகளையும் ஒன்றாக வரைகிறான். வெளியே ஏதும் தனித்தனியாக இல்லை, அனைத்தும் ஒன்றாகக் கலந்தே உள்ளன என்று அவன் சொல்கிறான். அதுதான் அவனுடைய தரிசனம். அவன் விருந்துவைப்பதுகூட அதற்காகத்தான்.
சுவாரசியமான ஒரு விஷயம். நானும் ஆசாரிதான். என் அப்பா மாமா எல்லாருமே வெற்றிலைக்கு அடிமைகள். வாயில் ஏதாவது குதப்பிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் இது ஆசாரிவேலை செய்யும்காலம் வரைக்கும்தான். இன்றைக்கு எவரும் ஆசாரிவேலை செய்வதில்லை. ஆகவே குதப்பும் பழக்கமும் இல்லை
சபரி
அன்புநிறை ஜெ,
விருந்து கதை முதலில் வாசித்ததும் ஒரு புரிந்து கொள்ள முடியாத, உட்செரிக்க இயலாத ஒன்று ஏதோ எஞ்சியது. அதுவே பின்னர் கதையை ஒருவிதமாகத் திறந்து கொள்ளவும் உதவியது.
கதையில் நான்கு தலைகள் உருள்கின்றன. அம்மிணி, நாயர் திவாகர குறுப், ஆசாரி, ஆட்டுக்கிடா.
ஆசாரி நாயரிடம் வேலை செய்தவன் (குடிகிடப்பு ஊழியன்). அவன் அவரை வெட்டுவதற்காக அணுகும்போது கூட அவர் சாதாரணமாகவே அமர்ந்திருக்கிறார். பதற்றமோ முன்னால் சண்டை சச்சரவுக்கான தொனியோ அவர் பேச்சில் இல்லை. அமர்ந்தபடி ‘என்னடா’ என்கிறார். அவர் ஆசாரி மனைவி அம்மிணிக்கு தொந்தரவு தந்திருக்கலாம், உயிரை மாய்த்துக் கொள்ளும்படியான தொந்தரவு. அம்மிணி ஆசாரியின் காதலியா மனைவியா மறைஉறவா என்பதை விளக்கவில்லை எனினும் “எனக்க வீடுவரை போகணும்னு நினைச்சேன்… அம்மிணிக்க குழிமாடம் இருக்குத எடம் வரை”
என்பதால் அவன் வீட்டில் குழிமாடம் கொண்டவள் ஆதலால் மனைவி எனக் கொள்ளலாம். மேலும் அக்கொலை குறித்து பிள்ளை கேட்கும் போது, அவன் உடனடியாகக் குறிப்பிடுவது மகாபாரதக் கந்தர்வனைத்தான், (சைரந்திரிக்காக கீசக வதம்)
மேலும் அவன் பாடும் நளசரித கதகளி பாடலும், சுவரெங்கும் அவன் விரிக்கும் உத்யானமும் (சாம்யம் அகன்னொரு உத்யானம்) அவர்களது இன்ப வாழ்வின் நினைவால் இருக்கலாம். வயிறு நிறைந்தவர்கள் போடும் வெற்றிலையை அவன் மனம் மயங்கி சுவைப்பது அவனது நிறைவையே காட்டுவதாகத் தோன்றுகிறது. அவனுக்கு விருந்து தேவையல்ல வெற்றிலையே போதும்.
அடுத்தாக ஆட்டை தன் கையால் நான்கு நாட்கள் ஊட்டி வளர்த்து அவன் கண்ணெதிரே அறுத்துப் பார்ப்பது எதனால், என்ன பெயரிட்டான் என்ற கேள்வி.
அவன் நாயர் மீது வைத்திருந்த நம்பிக்கை, அதை அவர் அறுத்தது முதல் வினை (அம்மிணி சாவு). அவரை அவன் தலையறுத்து அதை நிகர் செய்கிறான். அந்தக் கொலை முடித்து காவலர்கள் வரும் வரை அவன் காத்து இருக்கிறான். அவன் செய்ததில் தவறென்ற எண்ணமும் இல்லை, தண்டனைக்குத் தப்பும் எண்ணமுமில்லை. எனில் முடிந்துவிட்ட கணக்குக்குப் பிறகு இவன் தலை போகப் போகிறது.
எனவே மீண்டும் ஒரு தலையை வெட்டி இம்முறை அனைவருக்கும் விருந்து வைக்கிறான். அவன் அந்த ஆட்டிற்கு நாயர் பெயர் வைக்கலாமோ? ஊரே அவன் கொண்ட தலைக்கு வாழ்த்துவதை ஒருமுறை கேட்க எண்ணியிருக்கலாம்.
ஆடு அவனே என எண்ணியதாகக் கொண்டால், அவன் வைத்த நம்பிக்கையை நாயர் அழித்ததை, மீண்டும் நிகழ்த்திப் பார்த்துக் கொள்கிறான். அவன் தலை நாளை உருளப் போவதன் முன் ஒத்திகையையும். எனில் அவன் பெயரை இட்டிருக்கலாம்.
இறுதியாக எதை செரித்துக் கொள்வதற்காக அவ்வளவு வெற்றிலை எனும் கேள்வி வருகிறது. கதைசொல்லியின் தாத்தா தாணப்பன் பிள்ளை வாழ்நாள் முழுவதும் இட்ட வெற்றிலை ஆசாரியின் சாவுக்கு மௌன சாட்சியாக நின்றதற்காக. எனில் ஆசாரி இட்டுக் கொண்டே இருந்த வெற்றிலை எது செரிமானம் ஆவதற்காக? அவன் கொண்ட அவ்வளவு பெரிய விருந்து எதுவாக இருக்கும் என்னுமிடத்தில் சைரந்திரியும் தமயந்தியும் மீண்டும் சிரிக்கிறார்கள். நம்பிக்கையை அறுத்தது அம்மிணி என்றும் கொள்ளலாம் – அவளும் அவனை ஏமாற்றி நாயரோடு உறவு கொண்டிருந்ததாக ஒரு சாத்தியதையில். அவன் வரைந்த உத்யானத்தில் ஆண்களே இல்லை. எனவே அவன் கையால் கொல்லப்படாத அம்மிணியின் பெயராகவும் இருக்கலாம். அவன் உண்ணாத விருந்து. ஆயிரமாயிரம் வெற்றிலைகளுக்கும் செரிக்காத விருந்து.
பெயரிடப்படாத ஒன்றை ஆழ்மனம் செரிக்க இயலாது. எனவே அவன் அகம் கொண்ட உணர்வுக்கு பெயர் இடுவது அவனுக்குத் தேவையாகிறது.
இது வருவிருந்து அல்ல, எதிர்நோக்கி காத்திருக்க, செல்விருந்து, சென்றவனுக்கு மட்டுமே தெரியும் விருந்து.
மிக்க அன்புடன்,
சுபா
படையல் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
படையல், விருந்து இரு கதைகளையும் தொடர்ச்சியாக எழுதினீர்களா? இல்லை என்றால் அந்தக்கதையில் இருந்து எஞ்சியது இங்கே முளைத்ததா?
படையல் கதையும் விருந்துதான். படையலில் பலிகொள்கிறார்கள் துறவிகள். இதில் பலியளிக்கிறான் சாமானியன். ரெண்டுமே ரத்தப்பலி
குமரவேல்
அன்பு ஜெ
உங்கள் புனைவுகளின் போது தான் நான் நுண் தருணங்களை அடைகிறேன். வேறு எங்கு சென்றாலும் அங்கு அந்த நுண் தருணத்தை காணவியலாது மேலும் மேலும் உங்களருகிலேயே வந்து நாய் போல் பார்த்துக் கிடக்கிறேன். நெருப்பை ஊதி அவர்கள் பற்ற வைக்கும்போது ”அவை தயங்கியபடி பற்றிக் கொண்டன” என்கிறீர்கள். ”சாம்பிராணிவச்ச பஞ்சு… சமைஞ்சபுள்ள சிரிக்கிறாப்பிலே பத்திக்கிடும்.” என்கிறீர்கள்.
திடீரென எல்லாம் ஒரே இருட்டுதான்… அம்மையிருட்டுக்கு ஆயிரம் குட்டி இருட்டு” என்கிறீர்கள். அதே நேரம் சிவனைப் பாடும்போது ”இருட்டுக்கு இருட்டான ஒளியே அல்லவோ?” என்கிறீர்கள். பிச்சைக்காரர்களைப் பற்றிச் சொல்லும்போது ”எப்பவுமே இருந்திட்டிருக்கானுக பிச்சைக்காரனுக” எனவும் ”பிச்சைக்காரன் சோறும் பேய் திங்குத பொணமும்னு கணக்கு.” என்கிறீர்கள். பின்னும் ”சாவுபயம் வந்தா செத்தாத்தான் அது தீரும்” என்கிறீர்கள்.
கவிதைத் தருணங்களையும், தத்துவார்த்தங்களையும் போகிற போக்கில் தெளித்துவிட்டுச் செல்கிறீர்கள். எந்த உங்களின் சொல்லையும் கவனக் குறைவோடு கடந்தால் அந்த சுவை குறைந்து விடுமோ என்று ஐயமுறுவதனாலேயே ஒவ்வொரு கதையயும் மீண்டும் மீண்டும் படித்து ஏதும் விட்டுவிடாதபடிக்கு மீள்வாசிப்பு செய்ய வேண்டியுள்ளது.
சிவனடியார் கைக் கொள்ள வேண்டுமென நினைத்து சிதம்பரம் போவதை ஏற்கனவே அடைந்துவிட்டவராக எறும்பு பவாவைப் பார்த்தேன். ”கேள்விக்குமேல் கேள்வியா இருந்ததெல்லாம் போயாச்சு. எல்லா கேள்விக்குமான ஒற்றைப் பதிலா ஒண்ணு வந்து சேந்தாச்சு. இனி சொல்லடங்கணும். இடம் அமையணும்”.
கேள்விகளெல்லாம் அடங்கியவராக, யாவற்றிற்கும் ”பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்ற ஒற்றைப் பதிலைக் கண்டவராக, சொல்லடங்கி, இடம் அமைந்து தனக்கான கூட்டை உருவாக்கி சுருங்கிக் கொண்டிருப்பவராக பாவா எனக்கு தென்பட்டார். முதன்முதலில் இந்த வரிகளை சிவனடியார் சொன்ன போது யாவற்றிற்கும் எப்படி ஒற்றை பதில் இருக்க முடியும் என்று நினைத்தேன்.
ஆனால் கதையின் இறுதியில், நிசப்தத்தின் விளிம்பில் கனன்று கொண்டிருந்த தீ நெரிபடும் ஓசைக்குப் பின்னரான அந்த ”பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்ற சொல்லில் தான் அந்த திறப்பை அடைந்தேன். பின்னும் ”அண்ணாமலையிலே எரியுறதுதான் சிதம்பரத்திலே ஆகாசமாட்டு இருக்குது. எல்லாம் ஒண்ணுதான்” என்ற வரிகளில் நான் பரிபூரணமாக சரணடைந்துவிட்டேன்.
சொல்லென இனி எதுவும் சொல்லித் தான் இக்கதையை நான் புரிந்து கொண்டதை உங்களுக்குச் சொல்ல வேண்டுமா என்ன? உண்மையில் அந்த இரத்தப் படையலை நீங்கள் தான் வாசகர்கள் எங்களுக்குப் படைத்திருக்கிறீர்கள்.
திறப்பான கதை ஜெ. நன்றி.
அன்புடன்
இரம்யா.