ஆமென்பது… [சிறுகதை]
அன்புள்ள ஜெ
’ஆமென்பது’ மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயனின் [கசாக்கின் இதிகாசம்] வாழ்க்கையை ஒட்டி எழுதப்பட்ட கதை. அவருடைய இறுதிச்சடங்கைச் செய்ய அவருடைய மகன் வர மறுத்துவிட்டான் என்பது அக்காலத்தில் வந்த செய்தி. சரியா என்று தெரியவில்லை. அது தவறான செய்தியாகவும் இருக்கலாம். ஆனால் கதையில் அவருடைய பெர்சனாலிட்டி மிகத்தீவிரமாக வந்திருக்கிறது. அவருடைய உடல்நலச்சிக்கல்கள், அவருடைய அரசியல், அவர் கடைசியில் போத்தன்கோடு கருணாகர சுவாமிகளின் மடத்தில்தான் இருந்தார்.
விஜயனைப் போன்றவர்களின் வாழ்க்கை சபிக்கப்பட்டது. அவர்கள் ஒன்றை தொலைத்து வேறொன்றை தேடிக்கொண்டிருப்பவர்கள். அதைத்தான் கதையும் சொல்கிறது என நினைக்கிறேன். எழுத்தாளர்களையும் உண்மையான மனிதர்களையும் கதைநாயகர்களாகக் கொண்டு பலகதைகளை எழுதியிருக்கிறீர்கள். முன்பு எம்.கோவிந்தனா என்று சந்தேகம் வரும் ஒரு கதை இருந்தது. எண்ணி எண்ணிக் குறைவது. ஜெயகாந்தன் வரும் இரண்டு கதைகள் உள்ளன. மதுரைசோமு ஒருகதையில் வருகிறார். இந்தக் கதைகளை எல்லாம் தொகுக்கலாமென நினைக்கிறேன்
எஸ்.ராஜகோபாலன்
அன்புள்ள ஜெ
நானே நினைத்துக்கொண்ட ஒரு விஷயம்தான் ஆமென்பது கதையிலுள்ளது. நான் சோதிடம் பார்ப்பவன். சோதிடம் பார்க்கும் ஒருவன் நவீன இலக்கியம் வாசிக்கலாமா என்று கேட்கமாட்டார்கள் என நினைக்கிறேன். நாங்கள் படித்த ஒன்று ‘சுபம் வத மங்களம் வத’ என்பது. சுபமானதே பேசவேண்டும். மங்களமானதே பேசவேண்டும். ஏனென்றால் தப்பான எதையாவது பேசினால் உடனே அருகே நின்று தெய்வம் ஒன்று ஆம் என்று சொல்லிவிடும். அந்த ததாஸ்து சொல்லும் தெய்வம் நாமேதான்
இந்த எழுத்தாளர்கள் எதிர்மறையாகவே சிந்திக்கிறார்கள். கசப்பு கோபம் வன்மம் என்றே எழுதுகிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் அதெல்லாம் இருக்கலாம். ஆனால் அவற்றை கொஞ்சம் ஜாஸ்தியாக்கிக் கொள்கிறார்கள். சிலர் சும்மாவே அதையெல்லாம் எழுதுகிறார்கள். எழுத்தில் உக்கிரம் வேண்டும். ஆகவே எல்லாமே உக்கிரமாக ஆக்கிக்கொள்கிறார்கள்
எழுத்தாளர்கள் எழுதும் மிகச்சிறந்த புனைவு அவர்கள்தான் என்று சொல்வார்கள். தாங்கள் புரட்சியாளர்கள் கலகக்காரர்கள் துக்கமானவர்கள் என்றெல்லாம் எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். உடனே ததாஸ்து விழுந்துவிடுகிறது. அதுவே அவர்களின் வாழ்க்கையாக ஆகிறது. கதையில் பிரபானந்தரும் அதைத்தான் சொல்கிறார். ஏற்கனவே இங்கே இவ்வளவு துக்கம். மேலும் ஆகாசத்தில் பறக்கும் துக்கங்களை ஏன் பிடித்து இழுத்துக்கொண்டுவந்து வைக்கிறாய் என்கிறார்
சங்கரநாராயணன் ஜி
ஏழாம்கடல் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஏழாம் கடல் கதை தொடர்ச்சியாக பல கேள்விகளை எழுப்புவது. பல பதில்கள் அவரவர் கண்டடையவேண்டியவை. அந்தக்கேள்விகளை ஒருவாசகர் எந்த அளவுக்கு ஆழமாக எழுப்புகிறார் என்பது அவருடைய சிறப்பு சார்ந்த விஷயம்
எனக்கு தோன்றிய ஒரு சின்ன விஷயம். என் பாட்டியும் இன்னொரு பாட்டியும் நாற்பதாண்டுகள் மிகமிக நெருக்கமாக இருந்தார்கள். அந்த இன்னொரு பாட்டிக்கு கொஞ்சம் நோய்கள் உண்டு. அடிக்கடி நான் போய்ட்டா நீ இருக்கக்கூடாதுடீ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதேபோல அவர் இறந்த பதினேழாம் நாள் என் பாட்டியும் மறைந்தார்
யோசித்துப்பார்த்தால் அதுவும் ஒரு நஞ்சுதான் என்று தோன்றுகிறது
அழகு பாலசுப்ரமணியம்
பேரன்பிற்குரிய ஜெயமோகன்,
உருண்டு திரண்ட அன்பாகிய அமிழ்தும் அதனடியில் ஒரு நுண் துளி வெறுப்பாகிய நஞ்சும் கலந்தது தானே மனித மனசு. கோடி கோடியாய் அன்பென்னும் முத்து விளைக்கும் சிப்பி கணங்கள் மானிடர் வாழ்வில் நிறைந்திருந்தாலும் எங்கோ ஒரு நீல ரேகை துளி நஞ்சு துளிர்த்த சிப்பிக் கணமும் இருக்கத்தானே செய்கிறது.
எல்லாச் சிப்பியும் முத்து தருவதில்லை. எல்லாக் கரையோர பாறைப் சிப்பியும் முத்து வளரும்வரை பிடிக்கப் படாமல் தப்புவதில்லை. பிடிக்கப்படுகின்ற கோடிகோடி கரையோர பாறைப் சிப்பிகளில் ஏதோஒன்று முத்து கொண்டதாக உள்ளது. அதிலும் லட்சம் கோடிகளில் ஒன்று நீல ரேகை நச்சு கொண்டதாக உள்ளது.
வியாகப்பனின் அன்பு திரண்டு, அவன் பிரார்த்தனைகள் பலித்து, அந்த பரிசுத்த ஆவி ஏழாம் கடலான பாராவாரத்திலிருந்து பேரன்பின் பெருநட்புக்கு பரிசாக பழுநுதலால் அமிழ்தாகி ஒரு முத்துச்சிப்பியை பிள்ளைவாளுக்கு எப்போதோ கொடுத்துவிட்டது. ஆனால் பிள்ளைவாளுக்குள் இருந்த சிறு நஞ்சோ அந்த நீல ரேகை விஷ சிப்பி கிடைக்கும் வரை காத்திருந்தது. அந்த காத்திருப்புக்கும் காரணம் வியாகப்பனிடம் அவருக்கிருந்த பேரன்பில் துளிர்த்த துளி நஞ்சே. அந்தத் துளி நஞ்சே வியாக்ப்பனிடம் தனக்கு முத்து கிடைத்ததை பற்றி சொல்ல விடாமல் நீல ரேகையாய் தடை செய்திருந்தது.
அறுபது ஆண்டுகால பேச்சுக்களிடை நிச்சயமாக வியாகப்பனிடமிருந்து அந்த நீல ரேகை சிப்பியை குறித்து பிள்ளைவாள் எப்போதோ அறிந்திருந்தார், அது வரும் நாளுக்காக அறிந்தே காத்திருந்தார். அதனாலேயே,
“நான் சடைஞ்சுபோட்டேன்… போறவளி தெரிஞ்சாச்சு.. ஒப்பம்சேந்து போலாம்னு” பிள்ளைவாள் சொல்லியும் இருந்திருக்கிறார்.
பிள்ளைவாளுக்கு நிச்சயம் தெரிந்து இருந்திருக்கிறது தனக்குப்பின் தன் உயிர் நண்பன் வியாகப்பன் வாழ மாட்டான் என்று. செம்புலப் பெயல் நீர் போல நெஞ்சோடு நெஞ்சு கலந்த அன்பு நெஞ்சுக்கு தெரியாதோ இன்னொரு நெஞ்சின் பாடு.
நாலு பக்க சிறுகதைக்குள் ஒரு நட்புக் காவியம் படைத்து எங்கள் உள்ளக் காட்டில் மென் தூறல் தூவி மண்வாசம் கிளப்பிவிட்டுவிட்டீர்கள்.
எண்ணங்கள் கிளர்ந்து எழுத்தாய் ஓடி வருகிறது….
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது என் உயிர் தோழனாக இருந்தவன் அந்த கிராமத்தில் இருந்த ஒரே ஒரு செருப்பு தைக்கும், சால் போன்றவற்றை தைக்கும் ஒரு தொழிலாளியின் மகனான முனுசாமி.
நோஞ்சானாக நான் பலசாலியான அவன் லாரல் அண்ட் ஹார்டி போல ஒரு விசித்திர கலவை. நாவல் மரத்திலும் அத்தி மரத்திலும் மாமரத்திலும் ஏறி அவன் உதிர்க்கின்ற பழங்களில் அவன் இறங்கி வருவதற்குள் முக்கால்வாசி தின்று தீர்த்த ஒரு விசித்திர நட்பு பந்தம். எதற்காகவோ வீட்டில் சண்டை போட்டுவிட்டு ஓடிப் போனான் அந்த மடையன். இன்றுவரை என்ன ஆனான் எங்கு இருக்கிறான் எனத் தெரியாது. ஆனாலும் நட்பு குறித்து எதைப் படித்தாலும் பார்த்தாலும் அவன் நினைவு வராமல் போவதே இல்லை. முதற் காதலை மட்டுமா முதல் நட்பையும் தான் மறக்க முடியாது.
ஓடிப்போன முனுசாமியின் வெறுமையை சட்டென வந்து பிடித்தான் தனவேல். ஒரு ஒன்றரை கிலோமீட்டர் ஊரைவிட்டு தள்ளி இருந்த கிராமத்தைச் சார்ந்த சிறிய சேரியிலிருந்து படிக்க எல்லா வகுப்பையும் சேர்த்து 40 பேரே இருந்த பள்ளிக்கு வந்தவன். எனக்காக எப்போதும் அவன் பள்ளிப் பையில் மாங்காயோ, வேர்க்கடலையோ, கரும்போ கம்பங் கதிரோ, மக்காச்சோளமோ, இலந்தைப் பழமோ, கோண புளியங்காயோ அல்லது குறைந்தபட்சம் சில்லுக்கருப்பட்டியோ இல்லாது போன நாளே கிடையாது. ஐந்தாம் வகுப்பில் என் தந்தை மாற்றலாகி அவர் சொந்த கிராமத்திற்கு வந்தபோது அழுது கொண்டேதான் அவனைப் பிரிந்தேன். நான் முதன் முதலில் 15 காசு போஸ்ட் கார்டில் கடிதம் எழுதியதும் அவனுக்குத் தான். அதன்பிறகு அவன் படிப்பை நிறுத்திவிட்டு சித்தாள் வேலை செய்ய பெங்களூரு சென்று விட்டதால் தொடர்பே இல்லாமல் போனது. எங்கு இருக்கிறான் என்று இன்றைக்கும் தெரியாது.
அப்பாவின் சொந்த ஊருக்கு சென்ற பொழுது அந்த ஊரில் வஜ்ஜிரம் என்ற ஒருவன் எனக்கு நெருங்கிய நண்பன் ஆனான். வயல்வெளி ஓடை குளத்தங்கரை ஏரிக்கரை பள்ளி மைதானம் அம்மன் கோயில் வாகனக் கூடம் என சேர்ந்து கிடந்து பல மணி நேரம் பேசிப்பேசி கூத்தடிப்போம். அத்தனை நெருக்கம்.
யார் கண் பட்டதோ அல்லது உள்ளத்தின் ஆழத்து அறியா சிறு வெறுப்போ அல்லது அவனை எது தூண்டியதோ ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது என்னையும் எங்கள் வகுப்பில் இருந்த இன்னொரு பெண்ணையும் இணைத்து கழிப்பறை சுவற்றுக்கு வெளியே கரித்துண்டால் ஒற்றை வரி புனைகதை எழுதி விட்டான். நான் மனம் உடைந்து போனேன். இல்லாத ஒன்றை கதை கட்டியது மட்டும் அல்ல தேவையில்லாமல் ஒரு பெண்ணின் மீது களங்கம் ஏற்படுத்துவதை அந்த வயதில் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் போனது. அந்த நாளிலிருந்து அவனை பார்ப்பதையே அவன் பக்கம் திரும்புவதையே தவிர்த்துவிட்டேன். அவன் என்னோடு பேச எவ்வளவோ முயன்றும் முற்றாக அவனை விலக்கினேன். ஏதோ காரணத்தினால் ஒன்பதாம் வகுப்பிலேயே அவன் பள்ளியை விட்டு நின்று விட்டான். அவன் தந்தையோடு சேர்ந்து அருகில் இருந்த நகரத்தில் அவர்களுக்கு சொந்தமான சிறிய ஜவுளிக்கடையில் வியாபாரம் செய்ய போய்விட்டான். அதன் பிறகு என்னுடைய 35 வயதுவரை அவனை சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கவேயில்லை.
நான் துறவு மேற்கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்பாக எனக்கு உள்ளுணர்வாக நான் அவ்விதம் அவனை முற்றாகத் தவிர்த்தது சரியல்ல என்று தோன்றிக்கொண்டே இருந்தது. ஒரு முறை பெற்றோரைப் பார்க்க கிராமத்திற்கு சென்றிருந்த பொழுது அவன் வீட்டுக்கு அவனைத்தேடி நானே சென்று மனம் விட்டுப் பேசினேன். ஒருமணி நேரம் பொதுவாக வாழ்க்கை நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டோம். அந்த நேரத்தில் அவன் செயலுக்கு அவன் எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டான். என் செயலுக்காக அவனை முற்றாக ஒதுக்கியதற்காக நானும் எண்ணிறந்த முறை அவனிடம் மன்னிப்பு கேட்டேன். என்ன காரணமோ ஏதோ தெரியாது நான் துறந்து இமயமலை செல்வதற்கு சில தினங்களுக்கு முன்பாக எனது கிராமத்து நண்பன் ஒருவன் வஜ்ஜிரம் எதன் பொருட்டோ தற்கொலை செய்து கொண்டதாக எனக்கு தகவல் சொன்னான். நான் மனம் கலங்கி அந்த பரம்பொருளுக்கு நன்றி சொல்லி அழுதேன். இறைவன் எத்தனை கருணை மிக்கவன், வஜ்ஜிரம் இறப்புக்கு முன்பாக அவனிடம் மன்னிப்பு கேட்கின்ற ஒரு நல்வாய்ப்பை என்மீது கனிந்து வழங்கினானே!
வஜ்ஜிரம் இடத்தைப் பிடித்தது என்னைவிட ஒரு வயது பெரிய நரசிம்மன். மேல்நிலை வகுப்பு முடித்து கல்லூரிக்குச் செல்லும் வரை ஆட்டமும் அட்டகாசமும், அந்த வயதுக்கே உரிய பருவ மாற்ற தடுமாற்றங்களும், தத்துபித்து செய்கைகளும், திருட்டுச் சினிமாக்களும், கீழ்மையும் மேன்மையும் என பால்யத்திற்குரிய அனைத்துக்கும் என் வழிகாட்டியாகவும் ஆசானாகவும் துணைவனாகவும் இருந்தவன். இன்றைக்கும் தொடர்பில் இருக்கிறான். ஆனால் என்ன நான் கல்லூரிக்குச் சென்று விடுதியில் தங்கி விட்டதாலும் அதன் பிறகு வாழ்க்கை முறையே கிராமத்திலிருந்து என்னை துண்டித்து விட்டதாலும் அவனுடனான தொடர்பு மிக மிகக் குறைந்து விட்டது.
SRM பொறியியல் கல்லூரியில் முதல் நாளிலேயே முதல் பார்வை முதல் புண்ணகையிலேயே உயிரில் வந்து கலந்தவன், ஒரு உயிர்த் தோழனாக இன்றுவரை தொடர்பவன் சக்திவேல்.
படிப்பாளி கோஷ்டியில் ஒருவனாக இருந்து மெரிட்டில் சீட் வாங்கி அந்த கல்லூரிக்கு போனவன் நான். அவன் தந்தை படிக்க முடியாமல் போன அவரின் இழப்பை ஈடுகட்ட முட்டிமோதி நிர்வாக கோட்டாவில் டொனேஷன் கட்டி அவனை கல்லூரியில் சேர்த்திருந்தார். எங்கள் இணைப்பே கொஞ்சம் வித்தியாசமானது தான்.
நான்கு ஆண்டுகள் என் விடுதிஅறை, வகுப்பறை, ஊர் சுற்றல், பொழுதுபோக்கு என ஒன்றாக பகிர்ந்த வாழ்வின் உன்னத கணங்கள் அவை. அவனுக்கு படிப்பு கொஞ்சம் இழுபரி, கடைசி வருஷத்திலே என்னுடைய அனைத்து தேர்வுகளும் முடிந்து போன பிறகும் ஒரு மாதம் அறையிலேயே தங்கி இருந்து அவனுடைய முன்னர் எழுதி விடுபட்டுப் போன 17 பாடங்கள் தேர்வு முடியும் வரை அவனோடு இருந்து அவன் அனைத்திலும் வெற்றி பெற இருவரும் சேர்ந்தே உழைத்தோம். வியக்கத்தக்க வகையில் எல்லா பாடங்களிலும் வெற்றி பெற்று அவன் என்னோடு சேர்ந்து பொறியியல் படிப்பையும் முடித்தான்.
நான் வேலை கிடைத்து என்னுடைய முதல் வேலையாக இந்தூர் மத்திய பிரதேசத்தில் ஓராண்டு பணியாற்றிய பொழுது என்னை காண்பதற்காகவே அவன் சென்னையில் தங்கியிருந்த மாமா வீட்டில் பொய் சொல்லி காசு வாங்கி அங்கு வரை வந்தவன். அதன்பிறகு அவன் மாமா வீட்டில் தங்கி கொண்டே சொந்தமாக நீர் சுத்திகரிக்கும் மெஷின்களை பழுது பார்க்கும் வேலையை செய்து கொண்டிருந்தான்.
ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நான் சென்னை வந்து சிட்டி குழுமம் ஆரம்பித்திருந்த உலகளாவிய வங்கி செயல்பாட்டு மென்பொருள் உற்பத்தி நிறுவனத்தில் சேர்ந்து அதிவேகமாக பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில்தான் சக்திவேல் குடிநீர் சுத்திகரிப்பு, பாட்டிலிங் மற்றும் பேக்கேஜிங் இயந்திரங்களை செய்யும் ஒரு சிறு தொழிலை சென்னையில் துவங்கி இருந்தான். இருவரும் சேர்ந்தே பொருளாதாரத்தில் வளர்ந்தோம். ஒத்தும் உதவியும் வாழ்ந்தோம்.
நான் துறவு மேற்கொண்டு இமயத்தில் இருந்த ஐந்து ஆண்டுகளிலும் சலைக்காமல் என்னோடு தொடர்பில் இருக்க தொடர்ந்து முயன்று கொண்டிருந்தவன் சக்திவேல்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் திருவண்ணாமலை வந்தது எங்கள் நட்பை மேலும் இறுக்கியது. நான் திருவண்ணாமலை வந்த நாள் முதல் இன்றுவரை ஒவ்வொரு மாதமும் என்னை காண்பதற்காகவே ஏதோ ஒரு ஞாயிறு காலை சென்னையிலிருந்து தனியாக காரில் கிளம்பி திருவண்ணாமலை வந்து ஒரு நான்கு ஐந்து மணி நேரம் என்னோடு செலவு செய்து நள்ளிரவு வீடு போய்ச் சேருவான்.
துறவு வாழ்வில் எனக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் சக்தியின் பங்களிப்பு இன்றுவரை போற்றத்தக்கது நினைவு கூறத்தக்கது. எத்தனையோ தொடர்புகளை துறவின் பொருட்டு முற்றாக உதற முடிந்த என்னால் இந்த நண்பனே எதன்பொருட்டும் தவிர்க்க முடிந்ததே இல்லை.
இந்தக் கதை என் நினைவுகளை எப்படி எப்படியோ கிளறிவிட்டது.
//“அது எந்த பெஞ்சாதிக்கும் மனசாக்கும்… இன்னொருத்தர் அப்டி நெருக்கமா இருந்தா எரியத்தான் செய்யும்…//
இதை நான் பிரத்தியட்சமாக அனுபவித்திருக்கிறேன். மாதாமாதம் என்னை காண சக்தி வருவது சக்தியின் மனைவிக்கு எப்போதும் எரிச்சலை தருகின்ற ஒன்றுதான்.ஒரு சில முறை அவரிடம் சொல்லாமலேயே சக்தி வந்தபோது அதை அறிந்து நான் ஒரேயடியாக அவ்விதம் மனைவியிடம் சொல்லாமல் சக்தி வருவதற்கு தடை சொல்லிவிட்டேன். அவரிடம் “நீ எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் நண்பனே ஆனால் மனைவியிடம் சொல்லிவிட்டு வா” என்று உறுதியாகக் கூறிவிட்டேன். இதை சக்தியின் மனைவியிடமும் அவன் முன்நிலையிலே அழைத்துக் கூறிவிட்டேன்
இப்போதெல்லாம் ஒரு மாத இடைவெளியில் நண்பர் திருவண்ணாமலை வரத் தவறினால் அவர் மனைவியே “கிளம்புங்க! கிளம்புங்க!, திருவண்ணாமலை போய் உங்கள் நண்பரோடு குலாவி விட்டு வாருங்கள், எங்களை கொஞ்சம் ஃப்ரீயா இருக்க விடுங்க” என்று துரத்தி அனுப்புகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் நண்பரின் மகளோ “அப்பா திருவண்ணாமலை எந்த வாரம் போறீங்க ?”என்று கேட்டு தந்தை ஊரில் இல்லாத நாட்களுக் கேற்றவாறு தனது நாட்களை திட்டமிட்டுக் கொள்கிறார்.
நண்பரின் மனைவியையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு சன்யாசியோடு சேர்ந்து நெருங்கிய நண்பராக இருக்கின்ற ஒருவர் சன்னியாசியாகி விட்டால் என்ன செய்வது என்ற அவரது பயமும் புரிகிறது. அவர் அவ்வப்போது என்னிடம் “அண்ணா அவருக்கு கடமைகள் உள்ளன அதனால் ஒழுங்காக வேலை பார்க்க சொல்லுங்கள் சாமியார் அவதெல்லாம் வயசு என்பதுக்கு மேல வச்சுக்கலாம்”என்று அடி போடுவார்.
ஆனால் என்னதான் சொல்லுங்கள் எப்பொழுதாவது வெகு அரிதாக தவிர்க்க முடியாத ஏதாவதின் பொருட்டு சென்னைக்குச் சென்றால் தங்குவது சக்தி வீட்டில்தான். சக்தியே பலமுறை சொல்லி விட்டிருக்கிறார் சுவாமி நீங்கள் வருவதால் அருமையான சாப்பாடு எனக்கு கிடைக்கிறது என்று. எனக்கு உண விடுவதற்காக சக்தியின் மனைவி பல மணிநேரங்கள் சமையல் கூடத்தில் தவம் கிடப்பது எனக்கு எப்போதுமே வியப்பு அளிக்கின்ற ஒன்று. இந்தப் பெண்களை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. எத்தனை அழகாக படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்…
//ஒரு நாளைக்காவது நல்ல சோறு போடாமல் விட்டதுண்டா?//உண்மைதானே…
சக்தியின் துணைவியை பெண் பார்க்க அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தோம். அவர் எப்படியோ எங்கள் ஆழ்ந்த நட்பை மோப்பம் பிடித்து முதல் பேச்சிலேயே “அண்ணா” என்று உள்ளன்போடு அழைத்தார். வேற வழி நானும் சக்தி அவர் பார்த்த அந்த முதல் பெண்ணையே மணப்பதற்கு, அந்த முடிவை சக்தி எடுப்பதற்கு ஆமாம்சாமி லிஸ்டில் சேர வேண்டியதாகிவிட்டது.
எத்தனைதான் அடிநெஞ்சில் எங்கள் நெருங்கிய நட்பு காரணமாக சக்தியின் மனைவிக்கு சற்று எரிச்சல் இருந்தாலும் ஆண்டுக்கு இரு முறையேனும் அவர்கள் குடும்பத்தோடு வந்து சில மணிநேரங்களை என்னோடு செலவழித்து விட்டு செல்கிறார்கள். என்ன செய்வது ஒரு விஷயத்தை மாற்றவே முடியாது என்று தெரிந்துவிட்டால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதானே சரி. சக்தியின் துணைவியும் முற்றாக வேறு வழியின்றி எங்களின் நட்பை அப்படியே ஏற்றுக் கொண்டுவிட்டார்.
ஒரு குடும்பமே கொண்டாடுகின்ற நட்பு என்பது மாபெரும் கொடுப்பினை. இத்தனைக்கும் பிறகும் ஏதாவது மனபாரம் என்றால் நண்பரும் அவரின் மனைவியும் அன்பு மகளும் சேர்ந்து எல்லாவற்றையும் கொட்டித் தீர்ப்பது என்னிடம் தான்.
ஒரே ஒரு நல்ல நட்பு கிடைத்தால் கூட போதும் அந்த ஒன்றைப் பிடித்துக்கொண்டு இந்த முழு வாழ்க்கையையும் நிறைவாக வாழ்ந்து விடலாம். எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு உன்னத உறவு நட்பு மட்டுமே. ஒரு நல்ல நட்பு இருந்தால் ஆலகால விஷத்தைக் கூட கண்மூடி தைரியமாக அருந்தலாம். எண்ணிறந்த நல்ல நட்புகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பேரியற்கைக்கு நன்றி.
பரிசுத்த ஆவியின் அருள் கொண்டு ஏழாம்கடலில் மூழ்கி நட்புக்கொரு அசல் முத்தெடுத்து கொடுத்துள்ளீர்கள். இனிய நினைவலைகளை எழுப்பிய உங்கள் இனிய எழுத்துக்கும் அதன் குழவிக் கையென வருடிச் செல்லும் மென் தொடுகை நடைக்கும் நெஞ்சம் நிறை நன்றிகள்.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி