அன்புள்ள ஜெ
குழந்தைகளிடம் சராசரித்தனத்தை சுட்டிக்காட்டாமல் சிறந்த இலட்சியங்களையும் படைப்பாளிகளையும் சுட்டிக்காட்டவேண்டும் என்றும் அவர்கள் அந்தவகையில் தங்கள் வாழ்க்கையினை அமைத்துக்கொள்ள வழிநடத்த வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். நல்ல விடயம். ஒரே ஒரு கேள்வி. அதை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குச் செய்கிறீர்களா? மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்
குமரவேல்
அன்புள்ள குமரவேல்
இரு குழந்தைகளிடமும் அதை மட்டும் தான் சொல்லியிருக்கிறேன். அவர்கள் செல்லும் பாதையும் பொதுவான சராசரி பாதை அல்ல. அவர்களுக்கு உண்மையான ஆர்வம் உடைய துறைகள்தான். அதில் அவர்கள் எதை இழந்தாலும் அது சரியே என்றே சொல்லியிருக்கிறேன். அதற்கு மேல் அவர்கள் அடையும் வெற்றி அவர்களின் திறமையும், சூழலும் கொடுப்பது.
ஜெ
ஜெ
இதைவிடவும் என்னை உத்வேகப் படுத்திய ஒன்றை இதுவரை தரிசித்ததில்லை.
உழைப்பாளி இச்சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பின் பகுதி. படைப்பாளி அதன் வளரும் நுனி. – இந்த ஒரு வார்த்தையில் ஒரு உலகம் திறந்து கொண்டது. இது தெரியாததல்ல. ஆனால், internalize செய்து கொண்டதில்லை.
வெட்கத்தை விட்டுச் சொல்வதென்றால் – power mongering குழுவில் நானும் ஒருவன். ஆனால், கொஞ்சம் படைப்பூக்கம் உள்ள என்று வகைப் படுத்துவேன். எங்கள் பாஷையில் சொன்னால், “state of art which has not yet become science”. என்னும் வித பரிசோதனைகளை மேற்கொண்டதுண்டு. அதற்கான ஒரு அங்கீகாரமோ/பலனோ கிடைக்கவில்லை என்று சோர்ந்தும், புலம்பியும் இருக்கிறேன். சொல்லப் போனால் ஒரு victim syndrome. அங்கீகாரத்தையும், பலனையும் எதிர்பார்க்கும் மனநிலையை ரமணர் கொண்டு விரட்ட முயற்சித்திருக்கிறேன் – முழுமையாக முடியவில்லையாதலால், சோர்வு வந்து கவ்விக் கொள்ளும் கணங்கள் பல.
ஒரு தற்கொலை கணத்தில் நீங்கள் ஒரு புழுவைக் கண்டு உத்வேகம் கொண்ட கணம் இன்று என்னுள்.
வாழ்வின் ஒரு கணமும் சோர்வு என்னை வந்தடையலாகாது.. தீவிரமான செயலே என்னைச் செலுத்தும் என்று நம்பித் துவங்குகிறேன் இக்கணம்.
அந்த வாழ்க்கையே நான் உங்களுக்குச் செலுத்தும் காணிக்கை. நன்றி ஐயா..
அன்புடன்
பாலா
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களுடைய விதிசமைப்பவர்கள் கட்டுரை படித்தேன். எனக்கும் இருந்த சந்தேகம். விவாதகுழுமத்திலும் முன்பு இந்த கேள்வியை எழுப்பி இருந்தேன். பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. அயன் ராண்ட் குறித்து விவாத குழுமத்தில் நீங்கள் சொல்லியிருந்ததை நான் கவனிக்கவில்லை.
இன்னொரு கேள்வியையும் அந்த பதிவில் கேட்டிருந்தேன். தனது திறமையால் ஒருவர் அதிகமாக பொருளீட்டுவதை தவறென்று சொல்ல முடியுமா ? சொல்ல முடியாது என்றால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாகுமல்லவா?
தில்லை நடராஜன்.
அன்பின் ஜெ.எம்.,
என்னால் விதி சமைப்பவர்களிலிருந்து இன்னும் கவனத்தை மீட்டுக் கொள்ள முடியவில்லை.
மனம் அதன் ஓட்டங்களுக்குள்ளேயே சுழன்று சுழன்று வருகிறது.
சராசரிகளாக மட்டுமே வாழ்ந்து பழகியோர்..,
அவ்வாறு இருப்பதிலேயே ஒரு சோம்பலான இன்பம் கண்டு அதில் திளைத்தோர்..,
தொடக்கத்தில் உற்சாகமாக இயங்கிவிட்டுக் காலப் போக்கில் தங்கள் செயலூக்க மனநிலையிலிருந்து நகர்ந்து போய் விட்ட காரணத்தால் தொடர்ந்து இயங்கி வருபவர்களையும் சாதனை படைத்து வருபவர்களையும் ஏளனம் செய்வோர் என அந்தக் கூட்டத்தால் இக் கட்டுரையின் வாசகங்களை நேர்மையான புறவயப் பார்வையோடு உள்வாங்கிக் கொள்ள முடியாதுதான்.
//நான் என் இளமையில் எழுத்தை என் இடமாக எடுத்துக்கொண்டு அதற்காக பிற அனைத்தையும் கைவிட முடிவெடுத்தபின் இத்தனை வருடங்களில் எனக்கு எவ்வளவு அறிவுரைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆச்சரியத்துடன் நினைத்துக்கொள்கிறேன்.//
என்று சொல்லியிருக்கிறீர்கள்.
ஜெ.எம்…நீங்களாவது இளமையில் செயல்படத் தொடங்கி இப்படிப்பட்ட பேச்சுக்களை எதிர்ப்பட்டீர்கள்.
உங்கள் அளவு படைப்பூக்கம்..திறன் போன்றவை இல்லாமல் போனாலும் குழந்தைப் பருவம் முதல் என்னுள் கனன்று கொண்டிருந்த எழுத்து வெளிப்பாட்டுக்கு வாழ்வின் ‘கடைக்கோட்காலையி’லாவது -ஓரளவு வடிகால் தந்து ஆசையைச் சிறிது தீர்த்துக்கொள்ளலாம் என்று லௌகீகக் கடமைகள் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு ஏதோ என்னால் முடிந்த மொழியாக்கம்,வலை எழுத்து,கட்டுரை எனச் செயலாற்ற முற்படும் எனக்கும் எத்தனை வகையான கேலியும் கிண்டலும் பரிகாசமும் எதிர்வினையாகக் கிடைக்கிறது தெரியுமா…?
இனிமேல் எதற்குப் படிக்கிறீர்கள்…?
இப்படிக் கண் விழித்து இரவெல்லாம் எழுதி என்ன கிடைக்கப் போகிறது..?
பென்ஷன் வருகிறது..ஹாய்யாக இருந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிக்காமல் எதற்கு இதையெல்லாம் சுமக்கிறீர்கள்…?
இத்தியாதி..இத்தியாதி….
சும்மா இருப்பதை விட அவ்வாறான வாசிப்பும் எழுத்தும் உழைப்பும் தரும் அளப்பரிய ஆத்ம திருப்தியின் ஒரு சிறு திவலையைக் கூட அவர்கள்சுவைத்திருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது(வாலிழந்த நரிக்கதைதான்)
என்னைப் போன்றவர்களால் இனி ஒரு விதி சமைக்க முடியாமலும் கூடப் போகலாம்..ஆனாலும் விதி சமைக்கும் மன எழுச்சியை உத்வேகத்தைத் தக்க வைத்துக் கொள்வதும் முக்கியம்தானே?
ரஸ்கோல்நிகோவ் தன்னை விதி சமைப்பவனாக நினைத்துக் கொண்டு எழுதிய கட்டுரையை – அதன் தூண்டுதலே தொடர்ந்த அவனது செயலுக்கு நியாயம் கற்பிக்கக் கடைசி வரை அவனை உந்தித் தள்ளியதைப் பொருத்தமான இடத்தில் நினைவுகூர்ந்திருக்கும் திரு கிருஷ்ணனுக்கு நன்றி.
அன்புடன்,
எம்.ஏ.சுசீலா,
புது தில்லி
www.masusila.com