படையல், தீற்றல் கடிதங்கள்

தீற்றல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

படையல் தீற்றல் இரு கதைகளைப் பற்றிய கடிதங்களை ஒரே சமயம் வாசிப்பது ஓரு விசித்திரமான அனுபவமாக இருக்கிறது. இரண்டும் சம்பந்தமே இல்லாத கதைகள். படையல் ஸ்பிரிச்சுவலான கதை. தீற்றல் முழுக்கமுழுக்க லௌகீகம். மிகச்சிறிய விஷயம். ஆனால் இரண்டுமே வாசிக்கும்போது அந்தந்த தளங்களில் நிறைவளிக்கும் கதைகள்

இந்தக்கடிதங்கள் ஒரு வகையில் அந்தக்கதைகளை மீட்டிக்கொள்ள உதவுகின்றன. நாம் கதையிலே இதையெல்லாம் கவனித்தோமா, நாம் வாசித்தோமா என்றெல்லாம் நாமே பார்த்துக்கொள்கிறோம். கதைமழை கொட்டிக்கொண்டே இருக்கிறது. திணறத்திணற கதை

சந்திரகுமார்

அன்புள்ள ஜெ

சிறுகதைகளின் எல்லா வடிவங்களையும் வாசித்துக்கொண்டிருக்கிறோம். தீற்றல் ஒரு சின்னக் கவிதை. அந்தக் கவிதையைச் சுற்றி ஓர் உரையாடல். அந்த உரையாடலே அந்தக் கவிதையைச் சுற்றியிருக்கும் இடத்தை வண்ணம் பூசி கவிதையின் உருவத்தை தெளிவாகக் காட்டுவதற்காக மட்டும்தான்.

கவிதை அப்படி ஒரு தீற்றலாக, விரைவான ஒரு மின்னலாக இருந்தால்தான் அதற்கு மதிப்பு

ராஜ்

அன்புள்ள ஜெ. அவர்களுக்கு ,

தீற்றல் கதையை இரண்டு முறை வாசித்தேன். அதற்கு காரணம் அந்த உவமை தான் .கண்கள் சந்திக்கும் தருணம் என்பது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் குளத்தில், திடீரென ஒரு மீன் துள்ளிமறைவதைப் போல.

உச்சமான தருணங்களை சொல்லில்  சொல்லி விட முடியாது என ஓஷோ சொல்கிறார். ஆனால், சொல்லித்  தோற்கலாம். ‘அப்படி சொல்கையில், சிறப்பான தோல்வியென்பது மகத்தான வெற்றியே’, என்று ஒரு உரையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பீர்கள்.

யோசித்து பார்க்கையில் ,சங்க இலக்கியம் தொடங்கி இன்று வரை காதல் வாழ்வை ,காதலின் தருணங்களை எத்தனை பேர் பாடியிருக்கிறார்கள், எவ்வளவு முறை பேசியிருப்பார்கள்.ஆனால், இன்றும் புதிதென நிகழும் ஒன்றாகவே அது இருக்கிறது, அந்த மீனின் துள்ளலை போல.

கதையின் இறுதியில், குளம் இல்லை. மீன் இல்லை. வால் மட்டுமே, தீற்றல் மட்டுமே எஞ்சுகிறது.வாழ்வின் இறுதியில் எஞ்சுவது, அந்த வாலின் துள்ளலை நினைவில் மீட்டிக்கொள்வது மட்டும்தானா?
தோன்றி மறுகணம் மறையும் அந்த மீனை, பற்றும் முயற்சியை தான் ‘மீன் எறிதூண்டிலின் நிவக்கும்’ என சங்கப்புலவர்  பாடினாரா?

அன்புடன் ,

முத்துராஜா
மதுரை

படையல் [சிறுகதை]

வணக்கம்,

தங்களின் படையல் கதை வாசித்தேன். சிறப்பான கதை. எறும்பு பாவா போன்று எங்கள் ஊரிலும் ஒரு பாவா இருந்தார். அவரை  நாங்கள் கொட்டான் பாவா என்று அழைப்போம். சூஃபி ஷாஹ் இனாயத்தினுடைய வரலாறு அண்மையில் வாசித்தேன். அந்தத் தருணத்தில் இக்கதையை வாசிக்கையில் புரிதலும் விளக்கமும் மேலும் வலுவாகிறது. நவாப் கான் போன்ற ஆட்சித் தலைவர்களின் செயல்பாடுகள் சூஃபி ஷாஹ் இனாயத்தின் வாழ்க்கையிலும் உங்கள் கதையிலும் பொருந்தி வருகிறது. பத்து இலட்சம் காலடிகள், அன்னம் வரிசையில் வரும் கதையே இதுவும். அருமை.

நன்றி.

ஜிஃப்ரி ஹாசன்

 

முந்தைய கட்டுரைஇரு நோயாளிகள், விருந்து – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகேளி, குமிழிகள்- கடிதங்கள்