தீற்றல் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
வெவ்வேறு கதைகளைப் பற்றி வெவ்வேறு வகைகளில் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்றைய சூழலில் சிறுகதை பற்றி இவ்வளவு பெரிய விவாதமும் வேறெங்கும் நடைபெறவில்லை என்றுதான் நினைக்கிறேன். இளம் படைப்பாளிகளின் கதைகளுக்குக் கூட இதேபோன்று ஆழமான விவாதங்கள் இங்கே நடைபெறுகின்றன.
தீற்றல் கதையில் மௌனி கதையிலிருந்து ஒரு தொடர் கண்ணியாக கதை சொல்லப்படுவது அழகாக உள்ளது. கதைசொல்லுபவர் சரோஜாதேவி படத்தைப் பார்க்கிறார். மலையாளப்பாட்டை நினைவுகூர்கிறார். அதைப்பற்றிப் பேசுகிறார். ஆனால் அப்போதுகூட அவர் அந்த நிகழ்வைச் சொல்ல முயலவில்லை. அதை மௌனிகதை சொல்லி அதைப்பற்றிப் பேசுபவர்போலச் சொல்கிறார். அது அவ்வளவு அந்தரங்கமான விஷயம் அது.
அது அப்படியே மறைந்துவிட்டது. மௌனி சாவு என எழுதுகிறார். இது சாவைவிட ஆழமானது. முழுமையான வெறுமை என்கிறார். அந்த வெறுமையிலிருந்துகொண்டு அதைச் சொல்கிறார்
தங்கவேல் கோவிந்தராஜ்
அன்புள்ள ஜெ
தீற்றல். மிக அழகான கதை.
ஆம் அது எற்றும் மிஞ்சி இருக்கும். மிஞ்சிய கொஞ்சம் உள்ளிருந்து எப்பொழுதாவது எட்டி பார்க்கும். தாத்தாவான பின்னும் கூட கதைசொல்லியிடமும் அது மிஞ்சி இருக்கிறது.
இதையெல்லாம் படிக்கும் பொழுது பெண்களுக்கு துறவும், ஆன்மீக அலைகழிப்பும் தேவையா என்று கூட எனக்கு தோன்றுகிறது. நான் இதுவரை பெண்கள் ஆன்மீகத்தில் இருந்ததில்லை என்று சொல்லவில்லை. ஆனால் இதுவரை இது ஆண்களின் உலகம், ஆண்களின் பார்வை வழியாக உருவானது. இது ஆண்களின் தத்துவமும் ஆன்மீகமும். கீதை உரைக்கபட்டது அர்ஜூனனிடம். அது ராதை என்றால் கிருஷ்ணன் என்ன சொல்லியிருப்பான்.
என் வரையில் இக்கதை படித்த மனநிலையை சொல்வதென்றால். மாயை ஆண்களுக்கு துயரம் பெண்களுக்கு அது எங்கோ ஒருவித்தில் கொண்டாட்டம் பேரின்பம்.
ஞானத்தில் கிருஷ்ணனால் எந்த உயரத்துக்கும் செல்லமுடியும். ராதை காதலின் வழி அவள் சென்ற இடத்தை உயரத்தை கிருஷ்ணனால் அடைய முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. பெண்கள் அவர்களின் கண்வழி தங்களுக்கான ஆன்மீகம் ஒன்றை உறுவாக்கிக்கொள்ள வேண்டும், அதை தேடி வகுத்து தொகுத்து கொள்ள வேண்டும். இன்றையதிலிருந்து அது சற்று மாறுபட்டதாகவே இருக்கும் என்றே எனக்கு எண்ண தோன்றுகிறது.
வெண்முரசில் நீலம் தான் அதிகம் வாசிக்கபட்டது என்றும், ஒரு அலையென அதை வாசிக்க பெண்வாசகர்கள் வந்து சென்றார்கள் என்று செல்லியிருந்தீர்கள். அது நமக்கு உணர்த்துவது எதை.
நீலம் வெண்முரசில் ஒரு தீற்றல்.
நன்றி
பிரதீப் கென்னடி
கூர் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
கூர் மீண்டும் அசௌகரியமூட்டும் ஒரு கதை. அதை எப்படி எதிர்கொள்வதென்பது கொஞ்சம் சிக்கல்தான். முந்தைய நூறுகதைகளில் ஏழாவது என ஒரு கதை இருந்தது. அந்த நூறுகதைகளில் பேசப்படாமலேயே போன கதை அது. அந்தக்கதையை ஞாபகப்படுத்தும் கதை.
அந்த சின்னப்பையன்கள் சமூகத்தால் தூக்கிவீசப்படுகிறார்கள். அவர்கள் தங்களை கிருமிகளாக ஆக்கிக்கொண்டு சமூகத்தைச் சூறையாடுகிறார்கள். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்கள் நம் குழந்தைகள்தான்.
நான் சந்தைகளிலும் தெருக்களிலும் இதேபோன்ற குழந்தைகளைப் பார்க்கும்போது இவர்கள் நேர்மையான வாழ்க்கைக்கு வந்தால் அதைப்போல அதிசயம் வேறில்லை என்று நினைத்துக்கொள்வேன்
அவன் அன்பான கொஞ்சல்மொழி கேட்டதுமே கொலைவெறி அடைகிறான். அதை இன்னொருவகையில் கடல் கதையிலும் சொல்லியிருந்தீர்கள்
தேவராஜ்
அன்பு ஜெ
“சாத்தானை வைச்சுதான் கர்த்தர் பழிவாங்குவாரு” இந்த வரிகளைக் கொண்டே ஞானப்பன், அவனைக் கொலை செய்யச் சொன்னவன் மற்றும் ஆரிஸ் ஆகிய மூவருள்ளும் பயணித்தேன். சிறு வயதில் சாத்தான் என்பதை அகோரமான மிருகத்தைப் போலேயே கற்பனை செய்து கொண்டதுண்டு. இப்போதெல்லாம் அதை ஒரு மன நிலையாகவே பார்க்கிறேன். ஒவ்வொருவருள்ளும் அது இருக்கிறது. அது வெளிப்படும் நேரமும் அளவும் அதனால் ஏற்படும் சேதாரத்தைப் பொறுத்தே அதன் கோரத்தன்மை வெளிப்படுகிறது. ஞானப்பன் சாத்தானாக வெளிப்படும் எந்தத் தருணத்திலும் கொலை செய்யப்படவில்லை. ஆனால் பேரனைக் கொஞ்சும் ஒரு சாமானிய மன நிலையில் இருக்கும் போது தான் ஆரிஸுக்கு அவனை குத்த வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.
ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற மன நிலையே சாத்தான் மன நிலை. ஒருவனை வெட்டி வகுந்திருவேன் எனும்போதோ, பயமுறுத்திப் பேசும்போதோ, போட்டுத்தள்ள வேண்டுமெனும்போதோ, வவுந்திருவேன்னு மிரட்டியபோதோ ஆரிஸ் ஞானப்பனைக் கொலை செய்யவில்லை. மாறாக பேரனைக் கொஞ்சும்போதே அவனை ஒரே குத்தில் சங்கில் இறக்க வேண்டும் என்ற வெறி வந்திருக்கிறது. அந்த மன நிலையே சாத்தானின் உச்சம். இது போன்ற உச்ச மன நிலையால் தான் ஞானப்பன் போன்ற சாத்தனை உயிரறுக்க முடியும். ஒவ்வொரு சாத்தான் மன நிலையும் ஒவ்வொரு சூழல் பின்புலத்திலிருந்து வருகிறது. ஆரிஸுக்கான அந்த சூழல் மன நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் அந்த எதிர்மறை அலையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனம் ஆரிஸுக்காகவும், பிற சிறுவர்களுக்காவும் கனக்கிறது.
நீங்கள் குறளினிது உரையில் சொன்ன இந்த குறள் நினைவிற்கு வந்தது.
”நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்”
ஞானப்பனின் உயிர்ஈரும் அந்த வாளின் கூர்-ஐ, அந்த நொடியை ஆரிஸின் கண்கள் வழி பார்த்துக் கொண்டிருந்தேன்.
அன்புடன்
இரம்யா.