தீற்றல்,படையல்- கடிதங்கள்

தீற்றல் நிறைய எதிர்வினைகளை உருவாக்குமென நினைக்கிறேன். இந்தக் கதைகளில் சிலகதைகள் எல்லாருக்கும் தொடர்பு அளிப்பவை அல்ல. உதாரணமாக, என் வயதுக்கு குமிழிகள் தொடர்பு அளிக்கவில்லை. ஆனால் வலம் இடம் நான் வாழ்ந்த சிறுவயது அனுபவம். ஆன்மிகமான தேடல், சூஃபியிசம் பற்றிய அறிமுகம் இல்லாதவர்களுக்கு படையல் பிடிகிடைக்காமல் போகலாம். நீங்கள் மதம், நாட்டுப்புறப்பண்பாடு ஆகியவற்றிலிருந்தெல்லாம் இமேஜ்களை எடுத்து எழுதுகிறீர்கள். நடுகல், படையல் ரத்தச்சோறு ஆகியவை எல்லாம் இந்தத் தலைமுறையினரில் பலருக்கு செய்திகளாகவே இருக்கலாம்

ஆனால் இந்த தீற்றல் அவர்களுக்கும் புரியும். அவர்கள் அறிந்த ஓர் உலகம். அவர்கள் சினிமாவிலும் பழைய போட்டோக்களிலும் இந்த வாலிட்டெழுதிய கண்ணை பார்த்திருக்கலாம். அந்த வாழ்க்கையின் சித்திரங்களை அடைந்திருக்கலாம்.ஆகவே அன்றைய அந்த மனநிலையை இந்தக்கதை வழியாக அவர்கள் அடைந்திருப்பார்கள். அதிலும் அந்த கோயிலில் நின்றிருக்கும் போதைநிலை வேறுவேறுவடிவில் அனைவருக்கும் வந்ததாகவே இருக்கும் இல்லையா?

கதையில் மௌனி பற்றிய குறிப்பு வருகிறது. மௌனி பெரும்பாலும் பயங்கர வசீகரம் கொண்ட கண்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார்

எஸ்.முரளி

அன்புள்ள ஜெ

தீற்றல் கதையை இரண்டுமுறை வாசித்தேன். விளையாடுவதுபோல, எதையும் முக்கியமாகச் சொல்லவே இல்லை என்பதுபோல, கதை எழுதப்பட்டிருக்கிறது. ஒரு பெரியவர் தன்னுடைய ஆழ்மனசை வெளியே வைக்கும்போது கொள்ளும் தயக்கம் பதிவாகியிருக்கிறது. அவர்கள் எல்லாவற்றையும் வேறு ஒருவரின் கதையாக ஆக்கிவிடுவார்கள். நடப்புச்செய்திகளுடன் கலந்து சொல்வார்கள். ஒன்றிலிருந்து ஒன்றாக நினைவுக்குள் செல்வார்கள். ஆனால் முக்கியமான சிலவற்றைச் சொல்லாமல் விட்டுவிடுவார்கள்.

இன்றைக்கு வாலிட்டெழுதிய நீலக்கருங்கண் இருப்பது அம்மன்களின் சிலைகளிலேதான்

ஆர்.ராஜசேகர்

படையல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

தெய்வங்களுக்குரிய குருதிச்சோற்றுப் பலியை அடையும் தகுதியை சிவனடியார் எப்படி அடைகிறார்? சாவுபயம் வந்து செத்து ரத்தம் வழியாக மறுபடியும் பிறந்து அதன்பிறகுதான் எறும்புபாவா குருதிச்சோறு அளிக்கிறார். அதன்பிறகுதான் அவர் அருணாச்சலமும் சிதம்பரமும் ஒன்று. எல்லாமே ஒன்று என்று உணர்கிறார்.

அதற்கு முன்பு அவர்தான் சிவலிங்கத்தை மிதித்தவனை கொன்றார். அந்த உலகபுத்தியில் இருந்துதான் செத்து மறுபடி பிறந்து எறும்புபாவா அமர்ந்திருக்கும் ஞானசிம்மாசனத்தின் அடியில் அமரும் தகுதியை அடைகிறார்

எஸ்.கிருஷ்ணகுமார்

 

அன்புள்ள ஜெ

நான் இதுவரை உங்கள் கதைகளை மட்டும்தான் படித்திருக்கிறேன். கட்டுரைகளை ஒருசில பத்திகள் படித்து விட்டுவிடுவேன். எனக்கு கட்டுரைகளைப் படிக்கப் பொறுமை இல்லை. ஆனால் கதைகள் என்னை அதிரவைக்கின்றன. அதிலும் ஆன்மிகமான கதைகள். முன்பு அப்படி பலகதைகள் திகைப்பை அளித்தன. அந்த வரிசையில் வரும் கதை படையல். இந்தக்கதைகளை எல்லாம் நீங்கள் ஞானக்கதைகள் என்ற தலைப்பிலே தொகுக்கலாமென்று நினைக்கிறேன்

திருமலைச்சாமி

முந்தைய கட்டுரைபுதிய வாசகர் சந்திப்பு – கோவை
அடுத்த கட்டுரைகதைகள், கடிதங்கள்