குமிழிகள், கூர் – கடிதங்கள்

குமிழிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

குமிழிகள் கதையின் பல தளங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னமும்கூட பேசமுடியும். ஓர் அறிவார்ந்த பிரச்சினையை அக்கதை முன்வைப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த உரையாடலால்தான் அப்படி தோன்றுகிறது. படித்த, உயர்பதவி வகிக்கும் அறிவான பெண்ணின் பேச்சு அது, அவ்வளவுதான். பிரச்சினை உணர்ச்சிகரமானது. அவள் ஏன் அதை தன் கணவனிடம் சொல்கிறாள். அவள் கலந்தாலோசிக்கவில்லை. முடிவெடுத்துவிடுகிறாள். ஆனாலும் சொல்கிறாள். ஏனென்றால் அவளுக்கு அதில் ஏதோ ஒரு பிரச்சினை உள்ளது.அந்தப்பிரச்சினைதான் கதையின் மையம் என நினைக்கிறேன்

கே.ராம்குமார்

 

அன்புள்ள ஜெ,

மீண்டும் கதை தொடர்மழைக்கு நன்றி,

என் இரவுகள் எப்போதுமே தூக்கம் கொள்ளாதவை. அந்த நேரத்தை உங்கள் கதைகள்  நிறைவு செய்துகொண்டிருக்கிறது.

குமிழிகள் கதை இவ்வரிசையில் எனக்குப் பிடித்த கதையாகும். படித்து மேல்தட்டுக்கு வந்துவிட்ட பெரும்பாலான பெண்களுக்கு ‘ஆணாதிக்க’ப் போக்கு வந்துவிடும். குறிப்பாக தன்னைவிட குறைந்த வருமானமும் சமூக அந்தஸ்தும் கம்மியான கணவன்மார்களிடம் இந்த’ ஆணாதிக்கப் போக்கு’ தலைகாட்ட ஆரம்பிக்கும். இயல்பாகவே மனைவியை விட கணவன் குறைந்த வருமானம் பெறுபவனாக இருப்பின் அவன் தன் மனைவியை காழ்ப்புணர்ச்சியோடுதான் அணுகுவான். ஆனால் இக்கதை கணவனையின் விட்டுக்கொடுப்பவனாக சகித்துக்கொண்டு வாழ்க்கை நடத்துபவனாக காட்டுகிறீர்கள் . அது அப்பாத்திர வார்ப்புக்கு பொருந்தி வருகிறது.

வயது ஏற ஏற இந்த மெத்தப் படித்து மேல்நிலைக்கு வந்துவிட்ட மனைவி உடல் சார்ந்து தன்னை முன்னெடுத்துக் கொண்டால் சமூக மதிப்பும் மரியாதையும் கூடும் என்று நினைக்கிறாள். அதற்காகவே மூக்கு பிலாஸ்டிக் சர்ஜக்குப் பிறகு  மார்பக லிப்டு( face lift) செய்துகொள்ள ஆயத்தமாகிறாள். அதற்கான முன்னேற்பாடுகள் செய்துகொண்டே கடமைக்காக கணவனிடம் அபிப்பிராயம் கேட்கிறாள். கணவனை அனுமதி கேட்க வேண்டிய அவசியம்கூட அவளுக்கு இல்லை. ஏனெனில் அவனைவிட அவள் உய்ர்ந்துவிட்டவள் என்கின்ற நினைப்பு அவளுக்கு. அந்த விவாதத்தை இருவரிடையே நடக்கும் செறிவான உரையாடலாக நடத்திக் காட்டுகிறீர்கள். அந்த்ஸ்து இருப்பில் மேல்நிலையில் இருக்கும் மனைவியின் குரலே இங்கேயும் ஓங்கி ஒலிக்கிறது. அவன் அந்த மார்பக எழுச்சி வேண்டாமே என்றுதான் அபிப்பிராயப் படுகிறான். அது அவள் உடல் ஸ்பரிஸத்திற்கு இடம் கொடுக்காது என்பதாலும். ஆனால் அவள் திட்டவட்டமாக இருக்கிறாள். தன்னை தகவமைத்துக்கொள்ள கணவன் தொடுதலிலும் உடலறவிலும் இன்பம் சுகிப்பதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவன் ஏக்கம் கடைசியில் வெளிப்படுவதுதான் கதையின் உச்சமே அடங்கியிருக்கிறது. அவன் வேறென்ன செய்வான் .இனி அவனுக்கு ஆசை வரப்போகும் எல்லா இரவுகளும் போதையில் தவழ்ந்து காகிதத்தில் ஏறிய சித்திர முலைகளை தட்டு இன்புறுவதைத் தவிர்த்து. அட்டகாசம்.

கோ.புண்ணியவான்.

கூர் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கூர் கதையில் இன்ஸ்பெக்டரின் மனைவி கதாபாத்திரத்தை நான் தனியாகக் கவனித்தேன். அவர் ஆழமான மதநம்பிக்கை கொண்டவராகவும், தீவிரமான அறவுணர்ச்சியை வெளிப்படுத்துபவராகவும் இருக்கிறார். அதை நானும் நிறைய பார்த்திருக்கிறேன். அரசியல்வாதிகள் போலீஸ்காரர்கள் ரவுடிகள் போன்றவர்களின் மனைவிகள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு குற்றவுணர்ச்சி இருக்கிறது. அதை இப்படி கடக்கிறார்கள். ஆனால் அதற்காக கணவர்களிடம் போராடவோ, அவர்களின் பிரச்சினைகளை தடுக்கவோ ஒன்றும் செய்யமாட்டார்கள்

ஞானப்பனின் மனைவிகூட அப்படித்தான் இருக்கிறாள். வீட்டுக்குள் அவர் வன்முறையைப் பேசக்கூடாது. பிள்ளைகள் முன் அதையெல்லாம் சொல்லக்கூடாது. அவ்வளவுதான். அவர்களின் அறவுணர்ச்சி நிறைவடைந்துவிடுகிறது. அதைத்தான் இன்ஸ்பெக்டர் சொல்கிறார். அந்தப்பையனின் படம் வெளியானால் உடனே அவனை பார்த்து அய்யோ பாவம் என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் என்று.

அர்விந்த்

 

அன்புள்ள ஜெ

இந்த சிறுவர்களை ஸ்டேஷனில் விசாரிக்கும் காட்சி ஏற்கனவே ஏழாவது என்ற கதையில் வேறொரு ஆழத்துடன் வந்துவிட்டது. நீங்கள் எழுதிய ஆறுமெழுகுவத்திகள் படத்தில் ஒரு சிறிய காட்சியாக வந்துசெல்கிறது. நீங்கள் முதல்வடிவை எழுதிய ரேனிகுன்டா படத்திலும் உள்ளது. [ஆனால் சினிமாவில் அவை சரியாகக் காட்டப்படவில்லை. சினிமாவுக்கு அந்த நுட்பங்கள் தேவையில்லை என நினைக்கிறார்கள்] இந்த சம்பவத்தை நீங்கள் எங்கேயோ நேரில் பார்த்திருக்கிறீர்கள். அதைத்தான் எழுதி எழுதிப்பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன்

மதன்குமார்

குமிழிகள், கடிதங்கள்

குமிழிகள் -கடிதம் 

குமிழிகள்- கடிதங்கள்

குமிழிகள்,கடிதங்கள்

குமிழிகள்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைபடையல்,தீற்றல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆமென்பது… [சிறுகதை]