[ 1 ]
கர்னல் ஆடம் ஹ்யூக்ஸ் துரை என்னைக் கூப்பிட்டனுப்பிய போது எதற்கு என்று சொல்லவில்லை. ஆனால் அந்தரங்கமான சந்திப்பு என்பது அவர் தன் தோட்டத்திற்கு என்னை வரச்சொல்லியதிலிருந்து தெரிந்தது. அங்கேதான் நான் பெரும்பாலும் அவரைச் சந்திப்பது. அது மதராசப்பட்டினத்திலிருந்து நெடுந்தொலைவில், தாம்பரம் காட்டோரமாக இருந்தது. குதிரைவண்டியில் கப்பிக்கல் சாலையில் நான்கு மணிநேரம் நிற்காமல் போகவேண்டும்.
துரை மாதமொருமுறை வெள்ளிக்கிழமை சாயங்காலங்களில் அங்கே சென்றால் திங்கள்கிழமை காலைவரை இருப்பார். அவருடன் அவருக்கு நெருக்கமான வேலைக்காரன் சிலுவைநாதனும் மெய்க்காப்பாளனான பட்டாணிக்காரன் ரியாஸ் அகமது கானும் இருப்பார்கள். பண்ணைவீட்டில் எப்போதும் காவலுண்டு. இரண்டு ராஜபாளையம் வேட்டைநாய்களுடன் திம்மையா நாயக்கரும் அவர் தம்பி தொட்டண்ண நாயக்கரும் இருப்பார்கள். அவர்களின் வீடுகளும் அதற்குள்தான்.
நன்றாக வேலிகட்டி வளைக்கப்பட்ட தோட்டத்திற்குள் மாமரங்களும் பலாமரங்களும் செறிந்திருக்கும். வாசல்கதவு இரும்பு அழிபோட்டது. அங்கே சிறிய காவல்மாடத்தில் இரு நாயக்கர்களில் ஒருவர் எப்போதுமிருப்பார். அங்கிருந்து செல்லும் மண்சாலை உள்ளே சற்று இறங்கி துரையின் மாளிகையின் ஓட்டுக்கூரையை காட்டும். துரையின் மாளிகையை உள்ளே சென்றாலொழிய பார்க்கமுடியாது. சுற்றிலும் பெரிய வராந்தாவும் இரண்டு சாரட் முற்றங்களும் கொண்ட மாளிகை.
துரை அங்கே வரும்போது ஏற்கனவே பெண்களை அங்கே கொண்டுசேர்த்திருப்பார்கள். குடிவகைகளும் இருக்கும். அதையெல்லாம் சிலுவையே ஏற்பாடு செய்வான். நாயக்கர்கள் அதை அவர்கள் அறியவே இல்லை என்ற பாவனையில் இருப்பார்கள். துரை அங்கே வந்தால் பின்னிரவில் காட்டுக்குள் துப்பாக்கியுடன் புகுந்து மான்களை வேட்டையாடிக் கொண்டுவருவார். அவர் ஒரு தூக்கம்போட்டு எழும்போது அது சமைக்கப்பட்டு காத்திருக்கும். குடித்தும் சாப்பிட்டும் பெண்களுடன் விளையாடிக்கொண்டிருப்பார். மீண்டும் ஒரு தூக்கம். விழித்ததும் வேட்டை.
துரையிடம் இருபதுக்கும் மேற்பட்ட உயர்தரத் துப்பாக்கிகள் இருந்தன. அவருக்கு அமெரிக்க துப்பாக்கிகள் மீதுதான் மோகம். எல்லா முக்கியமான கம்பெனி துப்பாக்கிகளிலும் ஒன்று வைத்திருந்தார். திம்மையாவுக்கு துப்பாக்கிகளில் பிரியம் உண்டு. அவர் அவற்றை துடைத்து எண்ணையிட்டு பளபளவென்று வைத்திருப்பார். துரை இல்லாதபோதும் வந்திருக்கிறேன். பெரும்பாலான நேரங்களில் திம்மையா துப்பாக்கியை கொஞ்சி குலாவியபடித்தான் இருப்பார். மாளிகைக்கு தெற்கே சமையலறை. அதை ஒட்டிய வேலைக்காரர் அறையில் கொம்பன் இருப்பான். அவன்தான் பங்காவை இழுப்பது.
துரை என்னை அவருடைய அலுவலகத்தில் சந்திக்க விரும்புவதில்லை. அவர் தன் அலுவலகத் தனியறையில் எந்த கறுப்பனையும் சந்திப்பதில்லை. பெரிய குத்தகைக்காரர்கள், தனவந்தர்கள், துபாஷிகளை சந்திக்க ஒரு கூடம் இருந்தது. அதில் சிம்மாசனம் போன்ற நாற்காலியில் துரை அமர்வார். அவர்கள் அப்பால் சிறிய இருக்கைகளில் அமரவேண்டும். நான் வெளியே நின்றுதான் பார்த்திருக்கிறேன். துரை என் நிலையில் இருக்கும் அதிகாரிகளை ஏறிட்டுப் பார்ப்பதில்லை. நாம் வணங்கி நிற்கும்போது அவர் கடந்துசெல்வார்.
ஆனால் இருபதாண்டுகளாக நான் துரையை அவருடைய இல்லத்தில், முகாம் அலுவலகத்தை ஒட்டிய சிறிய அறையில் சந்தித்து வருகிறேன். துரைக்காக பலவேலைகளைச் செய்துகொடுத்திருக்கிறேன். பெரும்பாலும் கொலைகள். அவ்வப்போது அதிகாரிகளையும் தனவந்தர்களையும் உளவறிதல். சில வெள்ளை அதிகாரிகளையே உளவறிந்திருக்கிறேன். பெண்விஷயமும் உண்டு. இந்தமாதிரி சில்லறைப் பெண்கள் அல்ல. அவர்கள் சிலுவை கை சொடுக்கினாலே வந்து நிற்பார்கள். பெரிய இடத்துப் பெண்கள். தனவந்தர்களின், துபாஷிகளின் மனைவிகள். அவ்வப்போது வெள்ளைக்கார மனைவிகளும்.
ஒருமுறை மட்டும் காப்டன் ஜேம்ஸ் ஆட்டர்லி என்பவருக்கு அபவாதம் வந்து வேலைபோகச் செய்தேன். அதற்காகச் சில சான்றுகளையும் சந்தர்ப்பங்களையும் உருவாக்கினேன். வெள்ளைக்கார கலெக்டர்கள் கர்னல்கள், காப்டன்கள் கர்னல்களைப் பற்றி அவதூறுகளை ரகசியமாகப் பரப்புவதும்செய்வேன். துரை எதையும் என்னிடம் சொல்வார். நான் செய்யமுடியுமா என்று எண்ணவும் மாட்டார். நான் எதையும் செய்யமுடியாமல் ஆனதுமில்லை.
நான் எதைச் செய்யவும் தயங்கியவன் அல்ல. என் அப்பா காலத்தில் சிவகிரி ஜமீன்தார் எங்கள் நிலத்தையும் என் சகோதரிகளையும் பிடுங்கிக்கொண்டார். என் அப்பா நான்கு மகன்களுடன் சென்னப்பட்டிணம் வந்தார். சென்னப்பட்டினத்தில் அவர் குதிரைவண்டி ஓட்டினார். குதிரைக்கு இணையாகச் சவுக்கடி பட்டார். நான் குதிரைவேலைதான் செய்தேன். தற்செயலாக துரை கண்ணுக்குப் பட்டு ராணுவத்தில் சேர்ந்தேன்.
சாதாரண சிப்பாயாக இருந்து துரையின் கருணையால் ஜமேதார் ஆனேன். இன்றைக்கு சிவகிரி ஜமீன் என்ன விலை என்று கேட்குமளவுக்கு என்னிடம் பணமிருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் தங்கம் வெள்ளி என்று பலவகையாக பதுக்கியிருக்கிறேன். தம்பிகள் பேரில் நிலங்கள் வாங்கியிருக்கிறேன். அவர்கள் சிறிய பண்ணையார்களாக இன்றைக்கு வாழ்கிறார்கள். இங்கே துரையின் முன் பழைய தரித்திரத்துடன், மேலும் பணிவுடன் தோற்றமளிக்கிறேன்.
இந்த மாளிகையில் துரை என்னிடம் ஒப்படைத்தவை எல்லாமே வெளியே சொல்லமுடியாத செயல்கள்தான். துரைத்தனத்தாருக்குத் தெரிந்தால் அப்போதே தூக்கில் ஏற்றிவிடக்கூடிய குற்றங்கள். ஆனால் நான் துரையை நம்பியிருந்தேன். எனக்குத்தெரியும், இங்கே கவர்னர் வரை அத்தனைபேரும் இந்தப்பாதை வழியாகத்தான் மேலே சென்றிருக்கிறார்கள். துரைக்கு நான் தேவைப்படும்வரை என்னை அவர் பார்த்துக்கொள்வார்.
[ 2 ]
திம்மையா நாயக்கர் என்னை பார்த்து மெல்ல தலையசைத்தார். அவர் அருகே தோல்பட்டையில் கோணன் என்ற பெயருள்ள ராஜபாளையம் நாய் துள்ளி துள்ளி குரைத்தது. நான் என் குதிரைவண்டியில் இருந்து இறங்கினேன். வண்டிக்காரன் பேய்க்காமன் அதைக் கொண்டுசென்று பெரிய மாமரத்தடியில் நிறுத்தினான். நான் நடந்தே மாளிகைநோக்கிச் சென்றேன்.
மாளிகை முகப்பில் துரையின் சாரட் நின்றது. அதன் கன்னங்கரிய பரப்பின் நிழலுருக்களாக அருகிருந்த மரங்கள் தெரிந்தன. அங்கே ஒரு குளிர்ந்த சுனை இருப்பதுபோல தோன்றச்செய்தது. கொம்பன் பங்காவை இழுத்துக்கொண்டு குந்தி அமர்ந்திருந்தான். அவனுடைய தலைப்பாகை முகத்தின்மேல் சரிந்திருந்தது.
நான் முகப்பில் நின்று “சலாம் துரையே”என்று குரல்கொடுத்தேன்.
கான் வெளியே எட்டிப்பார்த்து என்னைக் கண்டதும் தலையசைத்தான்.
‘சலாம் பாய். நல்லா இருக்கிறிகளா?”
கான் ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று, சற்றுநேரம் கழிந்த பின்பு திரும்பிவந்து வரும்படி கைகாட்டினான். நான் செருப்பை கழற்றிவிட்டு உடலை குறுக்கியபடி உள்ளே சென்றேன்.
துரை தூங்கி எழுந்திருக்கவில்லை. சுடுமண்ணாலான சிவந்த சதுரவடிவத் தரையோடுகள் வேய்ந்த அகலமான கூடத்தில் மரத்தாலான நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. எல்லாமே உள்ளூர்க்காரர்களுக்கு மிக உயரமானவை. துரைகள் கால்சராயுடன் அமர்வதற்குரியவை. அகலமான மேஜைமேல் பீங்கான் குவளையில் சிவந்த தாமரைப்பூக்கள் இருந்தன. ஒரு பெரிய மூங்கில்கூடையில் பழங்கள். பீங்கான் தாங்கி ஒன்றில் வெள்ளியாலான பலவகை கத்திகள் வரிசையாக செருகப்பட்டிருந்தன. கொட்டைகளை உடைப்பதற்கான கருவிகள், ஒயின்குப்பியை திறப்பதற்கான கருவிகள். நாலைந்து புத்தகங்கள். ஆங்கில நாளிதழ்கள் மடிக்கப்பட்டிருந்தன.
மேஜைக்கு அப்பால் பெரிய கண்ணாடி போட்டு மூடிய அல்மாரா முழுக்க ஒயின் குப்பிகளும் பிராந்தி விஸ்கி குப்பிகளும் நின்றிருந்தன. நீலவண்ணப் புட்டிகள், செந்நிறப்புட்டிகள், தெளிந்த கண்ணாடிப்புட்டிகள். எல்லாவற்றிலும் மது. இன்னொரு திறந்த அல்மாரா முழுக்க கண்ணாடிக்கோப்பைகள். நீளமான கண்ணாடி டம்ளர்கள். பீங்கானால் ஆன டீக்கோப்பைகள். சில கோப்பைகள் தங்கவண்ணத்தால் ரேக்குவேலை செய்யப்பட்டவை. மரத்தாலான தாங்கியில் அடுக்கடுக்காக அடுக்கிச் சரித்து நிறுத்தப்பட பீங்கான் தட்டுக்கள். அவை பெரிய மலர் ஒன்றின் இதழ்கள் போல. இளஞ்செந்நிறமானவை, இளநீலநிறமானவை.
நான் ஒருமுறைகூட பீங்கான் தட்டில் உணவு உண்டதில்லை, டீ குடித்ததில்லை. கண்ணாடிக்கோப்பைகளில்கூட எதையும் சாப்பிட்டதில்லை. முடியாது என்றில்லை. அவை துரைமார்களுக்குரியவை. அவற்றை நாம் பயன்படுத்த ஆரம்பித்தால் எங்கோ ஓர் இடத்தில் நாமும் துரைகளும் சமம் என்று அகத்தில் தோன்ற ஆரம்பித்துவிடும். அதை எத்தனை மறைத்தாலும் எங்கோ நம்மிடமிருந்து கசிந்துவிடும். பொதுவாக அவற்றை மறைக்கவே முடியாது. அது நம்மை கூர்ந்து நோக்கிக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரிந்துவிடும்.
நான் அறிந்த ஒன்று உண்டு, இந்த துரைமார்கள் நம்மை பார்க்கவே இல்லை என்று பாவனை செய்வார்கள். ஆனால் நம்மை உற்றுநோக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நம் மீது தீராத அச்சமும் ஐயமும் இருக்கிறது. நாம் அவர்களை முற்றாக அடிபணிகிறோமா என்று கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். நாம் எங்கோ எல்லையைக் கடப்போம் என நினைக்கிறார்கள். அங்கே கொம்பன் பங்காவை இழுத்துக்கொண்டிருக்கிறான். அவன் கை கொஞ்சம் தளர்ந்தால் உள்ளே தூங்கிக்கொண்டிருக்கும் துரைக்கு அது தெரியும்.
சுவர்களில் தொப்பிகள் மாட்டப்பட்டிருந்தன. பிரம்புத்தொப்பிகள், தோல்தொப்பிகள், கம்பிளித்தொப்பிகள், வெண்ணிறமான இனாமல் பூசப்பட்ட இரும்புத்தொப்பிகள். ஒவ்வொரு முறை அந்த அறைக்குள் நான் செல்லும்போதும் அங்கிருக்கும் பொருட்களைத்தான் என் விழிகள் தொட்டுத்தொட்டுச் செல்லும். சன்னல்கள் அனைத்துக்கும் மென்மையான வெண்ணிறத் திரைச்சீலைகள் போடப்பட்டிருந்தன. அவை அலைபாய்வது அங்கே யாரோ நின்றிருப்பதுபோன்ற பிரமையை எழுப்பின.
சிலுவை உள்ளிருந்து வந்து ”மதராசப் பட்டினத்திலே தொத்து நோய் இருக்கிறதனாலே துரையை பக்கத்திலே போய் பேசக்கூடாது. கையை தைலம்போட்டு நல்லா களுவிட்டு தள்ளி நிக்கணும். இங்க உள்ள எந்த பொருளையும் கூடுமானவரை தொடப்பிடாது” என்றான்.
“ஓ” என்று நான் சொன்னேன்.
அவன் ‘கையை அங்கே களுவுங்க” என்றான்.
நான் மறுபக்க வாசல் வழியாக வெளியே சென்று அங்கிருந்த அகன்ற வராந்தாவில் சுவர் ஓரமாக பதிக்கப்பட்டிருந்த எனாமல் தொட்டியில் கை கழுவினேன். கையை கழுவுவதற்கான காரசோப்பு வைக்கப்பட்டிருந்தது.
அப்போதுதான் சற்று தள்ளி தூணருகே குந்தியபடி ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அவள் முந்தானையை இழுத்து முகத்தின்மேல் போட்டிருந்தாள். ஆனாலும் அவளை என்னால் அடையாளம் காணமுடிந்தது. நாவிதன் நாகசண்முகத்தின் புதிய மனைவி. அவன் அவளை ஊரிலிருந்து கட்டிக்கொண்டுவந்து ஒருவாரம்கூட ஆகவில்லை. மடத்தனமாக துரைத்தனத்தாரின் ஆசி வாங்க கூட்டிக்கொண்டுவந்திருந்தான். துரை அவனுக்கு பத்துரூபாய் சன்மானம் அளிக்க ஆணையிட்டார். அவன் கொஞ்சம் சம்பள உயர்வை எதிர்பார்த்தான். அதற்காக மனு எழுதி கொடுத்தான்.
“அந்த மரத்தைலத்தை கையிலே போடணும்” என்று சிலுவை சொன்னான்.
நான் அவளைப் பார்த்ததை காட்டிக்கொள்ளாமல் யூகலிப்டஸ் எண்ணையை கையில் பூசிக்கொண்டேன். குமட்டும் நெடி எழுந்தது. ஆனால் அது நல்லது, நாம் தூய்மையாக இருப்பதாக நமக்கு ஒரு பிரமை எழும்.
மீண்டும் கூடத்துக்கு வந்து நின்றுகொண்டேன். சிலுவை உள்ளே போய் பார்த்துவிட்டு வந்து “எந்திரிச்சாச்சு”என்றான். நான் தலையை அசைத்தேன்.
சிலுவை ஒரு வாயகன்ற ஏனத்தில் சூடான நீரில் வெண்மையான டவலை போட்டு எடுத்துச்சென்றான். அதிலும் யூகலிப்டஸ் எண்ணை விட்டிருந்தான். கூடமே அதன் ஆவியால் நாற்றமடித்தது.
சிலுவை வெளியே வந்து பெரிய மரத்தாலத்தை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். அதில் ஆவி உமிழ்ந்த கெட்டிலும் பீங்கான் கோப்பையும் இருந்தது.
சிலுவை ஏனத்துடன் திரும்பிச் சென்றான். அதைத்தொடர்ந்து தோல்செருப்பு ஓசையிட துரை கையில் டீக்கோப்பையுடன் வெளியே வந்தார். என்னை பார்த்துவிட்டிருந்தார், முன்னரே சிலுவை என் வருகையை சொல்லியும் இருப்பான். ஆனால் அவர் நான் அங்கிருப்பதை அறிந்ததே உடலில், கண்ணில் எங்கும் தென்படவில்லை. அது அவர்கள் அத்தனைபேருக்கும் இருக்கும் பயிற்சி.
துரை நாற்காலியில் அமர்ந்துகொண்டார். டீயை நிதானமாக உறிஞ்சிக் குடித்தார். கோப்பையை கீழே வைப்பது வரை அவருடைய உலகில் நான் இல்லை. பின்னர் எழுந்துகொண்டு ஒரு ஓலைத்தொப்பியை எடுத்து தலையில் வைத்தபடி வெளியே சென்றார். நான் ஓசையில்லாமல் தொடர்ந்து சென்றேன்.
துரை வெளியே தோட்டத்தில் நடந்தார். நான் கூடவே சென்றேன். சட்டென்று அவர் திரும்பி என்னிடம் “உனக்கு செவத்தானை தெரியுமா?” என்று கேட்டார்.
ஒரு கணம் கழித்துத்தான் நான் ஆளைப் புரிந்துகொண்டேன். துரைச்சானியின் வேலைக்காரன், சாரட் வண்டியில் கூடவே செல்பவன். “தெரியும்” என்றேன். அவனா என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டேன். மிகச்சிறிய உயிர், கொசு போல.
“அவனிடம் பேசியிருக்கிறாயா?”
“ஆமாம், சிலமுறை”
“அவனைப்பற்றி ஒரு சின்ன குழப்பம்”
“அவனைப்பற்றி என்ன? துரை யோசித்துக் குழம்பும் அளவுக்கு அவனுக்கு என்ன மதிப்பு? அந்நேரத்தில் அவனை கொன்றுவிடலாம். கட்டைவிரலுக்கும் போதாத சிற்றெறும்பு…”
துரைக்கு என் ஆங்கிலம் கொஞ்சம் கழித்துத்தான் புரியும். ஆகவே நான் ஒற்றை ஒற்றைச் சொல்லாகவே பேசுவேன்.
“உன்னைவிட அவன் நன்றாக ஆங்கிலம் பேசுவான். ஆகவேதான் தெரேஸாவுக்கு அவனை மிகவும் பிடித்திருக்கிறது”
“ஆமாம், அவன் பேசுவது நன்றாக இருக்கும்” என்றேன். அவன் முழுநேரமும் மாளிகையில் இருக்கிறான். துரைச்சானியும் அவளுடைய அந்தரங்கத்தோழியான மரியாவும் அவனிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மரியா ஆங்கில இந்தியப்பெண். பரங்கிமலைக்காரி. ஆனால் அவள் மாளிகையிலேயே நிரந்தரமாக இருந்தாள்.
“அவனைப்பற்றி ஒரு குழப்பம்”என்றார் துரை.
நான் காத்திருந்தேன்.
“கொன்றுவிடுவது எளிது. ஆனால் எனக்கு ஒரு விடை தெரியவேண்டும். கொன்றால் அந்த விடை தெரியாமலேயே போய்விடும்.”
எனக்கு என்ன என்று புரிந்தது. ஆனால் நான் அதை அறிந்துகொண்டதை என் உடலேகூட காட்டவில்லை.
“மாளிகையில் அவனுடைய அறைக்குள் ஒரு பாம்பு நுழைந்துவிட்டது. அப்போது அவன் இல்லை. காவல்காரன் முஷ்டக் முகமது கான் அவன் அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பாம்பைத் தேடி கொன்றுவிட்டான். அவனுடைய பொருட்களை எல்லாம் கலைத்துபோட்டுவிட்டான். எல்லாவற்றையும் திருப்பி அடுக்கும்படி கட்டையனிடம் சொன்னான்”.
கட்டையன் மாளிகையின் எடுபிடிப்பையன். நான் என்ன என்று அதற்குள் ஊகித்துவிட்டேன்.
”கட்டையன் பொருட்களை அடுக்கும்போது அங்கிருந்த ஒரு பெட்டிக்குள் சில துணிகள் இருந்தன. பெண்களின் உள்ளாடைகள். அவன் அவற்றை எடுத்து கொண்டுவந்து அகமது கானிடம் காட்டினான். அகமது கான் அவற்றை திரும்ப அப்படியே கொண்டுசென்று வைக்கச் சொல்லிவிட்டான். எவரிடமும் மூச்சுவிடக்கூடாது என்று கட்டையனை எச்சரித்துவிட்டு என்னிடம் வந்து சொன்னான்.”
நான் ஊகித்ததேதான். என்னிடமிருந்து எந்த ஒலியும் எழவில்லை.
”வழக்கமாக ஒரேவகையாகத்தான் ஊகிக்கவேண்டும். அவன் அவற்றை எதற்கு எடுத்துச்சென்றான் என்று சொல்வது எளிய விஷயம்… எனக்கு தேவை அது அல்ல. அதாவது…”
செவத்தான் துரைச்சானிக்கு மிகமிக அணுக்கமானவன். அவனுக்கு முப்பது வயதுக்குமேல் இருக்கும். பெயர்தான் செவத்தான். ஆனால் நல்ல கறுப்புநிறம். பரந்த முகத்தில் பெரிய வெண்பற்கள். ஈரம் மின்னும் எருமைக்கண்கள். மீசையில்லாத மொழமொழவென்ற முகம். மெலிந்தவன், ஆனால் மிக உறுதியான உடல் கொண்டவன்.
செவத்தான் துரைச்சானி லண்டனில் இருந்து வந்தபோதே மாளிகையில் இருந்தான். அவள் வந்து சேர்ந்த அன்று கப்பலில் இருந்து அவளுடைய பொருட்களை எடுத்துவரப்போனவனே அவன்தான்.
அவனுடைய பேச்சை நான் கவனித்திருக்கிறேன். அவனுடைய தனித்திறமை அதுதான் என்று தெரிந்தது. அவன் மிகமிக மென்மையான குரலில், ஒருவருக்கென்று தனியாகச் சொல்வதுபோலத்தான் பேசுவான். அழகான ஆங்கிலச் சொற்களை தேர்ந்தெடுத்து பூத்தொடுப்பவதுபோல கோத்துக் கோத்து சொற்றொடர்களை உருவாக்குவான். அவன் பேசினால் துரைச்சானி அவனையே கூர்ந்து பார்ப்பாள். அவன் அவளை அடிக்கடி சிரிக்கவைப்பான். தன் கைப்பையால் துரைச்சானி அவனை செல்லமாக அடிப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.
“அவன் ஏன் அந்த ஆடைகளை எடுத்து வைத்தான்? அவனுக்கு அவளுடன் என்ன உறவு? அதை நான் தெரிந்துகொள்ளவேண்டும்” என்று துரை சொன்னார் “அதை உறுதியாக தெரிந்துகொண்டபின் அவனைக் கொன்றுவிடலாம். அந்த விடை எதுவானாலும் சரி, விடை தெரிந்தால்போதும்”
“நான் அவனிடம் பேசுகிறேன்” என்றேன்
“பேசு… நீ இதை மிக ரகசியமாகச் செய்யவேண்டும். நீ இப்படிச் செய்வது அவளுக்கு தெரியக்கூடாது. தெரிந்திருக்கும், அவள் ஆலிஸ்பரி குடும்பத்தைச் சேர்ந்தவள். ஜெனெரல் எர்வர்ட்ஸ் அவளுடைய சிற்றப்பா. என்னால் அவளுடைய கோபத்தை தாளமுடியாது”
“நான் பார்த்துக்கொள்கிறேன்”
“சரி” என்று சொல்லி துரை மேலே நடந்தார். நான் தொடர்ந்து செல்லக்கூடாது என்று அறிந்திருந்தேன்.
[ 3 ]
நான் செவத்தானை சந்திக்கவேண்டும் என்று சொல்லி ஆளனுப்பினேன். அவனை அருகிலிருந்த கறுப்பர் நகரத்தின் டிரினிடி தேவாலயத்திற்கு வரச்சொல்லியிருந்தேன். கறுப்பர்களில் ஒருசாரார் அவசரமாக கட்டிக்கொண்ட ஓலைக்கொட்டகை பின்னர் ஓடுபோட்ட கட்டிடமாக ஆகியிருந்தது. அதைச்சுற்றி ஒரு திறந்தவெளி இருந்தது. நாலைந்து சீமைவாகை மரங்கள் நின்றன. சதுப்பு நோக்கிச் செல்லும் ஓரு கலங்கலான ஓடை அருகே ஓடியது. அதிலிருந்து கெட்டநீரின் நாற்றம் காற்றடிக்கும்போதெல்லாம் வந்தது. ஓடைக்கரையில் நாலைந்து மரபெஞ்சுகள் உண்டு.
செவத்தானை நான் சந்திப்பதை கோட்டைக்குள் எவரும் பார்க்கவேண்டாம் என்று நினைத்தேன். வாரநாட்களில் தேவாலயத்திற்கு யாரும் வரமாட்டார்கள். சாயங்காலம் அங்கே நடமாட்டமே இருக்காது. அதேசமயம் எவர் வேண்டுமென்றாலும் வந்து நின்றிருக்க வாய்ப்புள்ள இடம் அது. கறுப்பர் நகரத்தில் எல்லா இடங்களிலும் எல்லாரும் நின்றிருக்க முடியாது. அந்தந்த சாதிகளுக்குரிய இடங்கள் இருந்தன.
செவத்தானிடம் நான் சாதாரணமான உடையில் வரச்சொல்லியிருந்தேன். கோட்டையில் வேலைசெய்பவர்கள் வெளியே செல்லும்போது காக்கி அரைக்கால் சட்டையும் காலர் இல்லாத வெள்ளை மேல்சட்டையும் தோல்சப்பாத்தும் அணிவது வழக்கம். ராணுவத்தில் இருப்பவர்கள் காக்கி கால்சட்டையும் பூட்ஸும் அணிந்து காலர் உள்ள காக்கி சட்டைபோட்டிருப்பார்கள். கழுத்துக் குட்டை கட்டி தொப்பியை கையில் வைத்திருக்கவேண்டும் என்பது விதி. அதிகாரிகள் எதிர்ப்பட்டால் வெறுந்தலையுடனோ மார்பு தெரியவோ எதிர்கொள்ளக்கூடாது.
தொலைவிலேயே நான் செவத்தானைப் பார்த்துவிட்டேன். என்னைக் கண்டதும் அவன் பதற்றம் அடைந்ததை, கண்கள் சுருங்கி முகம் தாழ்ந்ததை கண்டேன். துரைக்காக நான் என்ன செய்கிறேன் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.
அருகே வரவர அவன் நடை தளர்ந்தது. மிக அருகே வந்தபோது நான்குபக்கமும் பார்ப்பதுபோல பார்வையை அலையவிட்டான். அருகே வந்து முணுமுணுப்பாக “கும்பிடறேனுங்க” என்றான்.
“ம்”என்றேன். “என்னப்பா செவத்தான். என்ன? எப்டி இருக்கே?”என்றேன்.
“எனக்கென்னங்க?” என்றான் மெல்லிய குரலில்.
“நல்ல தீனி, நல்ல சம்பளம். மினுமினுன்னு இருக்கே. அரண்மனை நாயி… என்ன?”
அவன் சோகையாகப் புன்னகைசெய்தான்.
“உக்காருடே” என்றேன்.
“அய்யா வேண்டாம்”
“டேய் உக்காரு. இது நம்ம ஜமீன் இல்ல. பிரிட்டிஷ் சர்க்காரோட ரூல் இருக்குற எடம்… இங்க நாமள்லாம் சமம். உக்காரு”
அவன் அமர்ந்தான்.
“மாளிகையிலே எல்லாம் எப்டி போய்ட்டிருக்கு?”
“நல்லா போகுதுங்க… நாம நம்ம சோலியை பாக்கிறது”
“அதான் நல்லது, அறியவேண்டியதுக்கு அப்பாலே அறிஞ்சா தலைக்கு அது சுமை பாத்துக்க”
“நமக்கு என்னங்க தெரியும்? நம்ம காதே அடைஞ்சுபோச்சு”
”கண்ணு?”
அவன் படபடப்படைவது தெரிந்தது. உடனே எனக்கு தெரிந்துவிட்டது, நான் அழைத்தது ஏன் என அவனுக்குத்தெரியும். நான் அவன் அருகே சென்று “நான் வளத்த விரும்பல்லை. நான் ஏன் கூப்பிட்டேன்னு உனக்கு தெரியும்”
“இல்லீங்கய்யா”
“அந்தப் கட்டையன் பய சொல்லிட்டான்… ஏன்னா அவனுக்கு நீ தீனி குடுக்குறே”
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
“சங்கதி துரைக்கு தெரிஞ்சிருச்சு, தெரியுமா?“
அவன் கண்களில் நீர் நிறைந்தது. தலை வெடவெடவென ஆட ஆரம்பித்தது.
“சொல்லுடே”
அவன் குரல்வளை ஏறி இறங்கியது.
“அந்த அடித்துணிகளை எதுக்கு எடுத்து கொண்டாந்து வைச்சே?”
“சும்மா”
“டேய்… நீ என்ன தையல் படிக்கிறியா? உண்மையைச் சொல்லு“
“பட்டுத்துணியாக்கும்… வெள்ளையா பாம்புச்சட்டை மாதிரி அளகாட்டு இருந்தது…அதனாலே”
“அதைவைச்சு என்ன பண்ணினே?”
அவனிடமிருந்து ஒரு விசும்பலோசை மட்டும் எழுந்தது.
“டேய், கேட்டதுக்கு பதில் சொல்லு. என்ன பண்ணினே?”
“என்னையக் கொல்லச் சொல்லியிருக்காங்க. அதாக்கும் உண்மை. கொல்லுங்க. நான் இனி என்ன சொல்லுறது?”
“கொல்லணுமானா எப்பவோ கொன்னிருப்போம்…”என்றேன். “நான் உண்மையை அறிஞ்சுகிடணும். அதை வைச்சு என்ன பண்ணினே?”
“நான் ஒண்ணுமே…”
“டேய்…”
அவன் மீண்டும் விசும்பி தலைகுனிந்தான்.
“அதைவைச்சு மத்தது பண்ணினே… மோந்துட்டு… அதானே? இல்லேன்னு சொல்லு”
“இல்ல”
“செரி வா. வந்து சர்ச்சு படிமேலே தொட்டு சத்தியம் பண்ணு”
“நான் வேதக்காரன் இல்ல”
“அப்ப உன் சாமி எது? மாரியம்மன் கோயிலுக்கு வர்ரியா?”
அவன் கும்பிட்டு “என்னைய கொன்னிருங்க…” என்றான்.
“கொல்லணுமா வளக்கணுமான்னு நாங்க சொல்லுறோம்….நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. துணிகளை வைச்சு என்ன செய்தே?”
அவன் “அதுதான்…”என்றான்.
“ஏன்?”
அவன் ஒன்றும் சொல்லவில்லை
“அது துரைசானியோட துணி… மரியாவோட துணி இல்லை”
“ஆமா”
“அப்ப உனக்கு துரைச்சானிதான் ஆளு, என்ன?”
“என்னைய கொன்னு போட்டிருங்க…நான் வேற ஒண்ணும் சொல்ல மாட்டேன்”
“இங்கபாரு, கொல்லுறது இப்ப பேச்சே இல்லை. கொல்லணுமானா அது ஒரு எறும்பக் கொல்லுறதைவிட சாதாரணம். சும்மா பசப்பாதே. கேட்டகேள்விக்குப் பதில் சொல்லு”
“சாவுறதானா அதுக்குமேலே என்ன? செய்யவேண்டியதைச் செஞ்சுடுங்க”
“மஞ்சக்குப்பத்திலே உனக்கொரு அம்மா இருக்குல்ல? தங்கச்சி ஒருத்தி, அவளுக்கு ரெண்டு சின்னப்பிள்ளைக…”
“அய்யா!”
“அதான், வேரோட பிடுங்குறது வெள்ளைக்காரன் வழக்கம்… பேசாம கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிடு…புரியுதா?”
”அய்யா! அய்யா!”
“அழுதா ஒண்ணும் ஆகாது…லெச்சம்பேரு கோடிபேரு அழுது அழுது செத்தாத்தான் ஒரு அரசன் கோலுநாட்டுறான்… புரியுதா? கேட்டகேள்விக்கு பதில் வரணும்.”
அவன் முகத்தை மூடிக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான். நான் அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
அவன் விசும்பி மெல்ல அமைந்தான்.
“சரி, சொல்லு… அது ஏன் துரைச்சானி?”
“தெரியல்ல”
“அவங்க மேலே ஆசையா? அவங்க மணம் புடிச்சிருக்கு, இல்ல?”
“இல்ல, அப்டி இல்ல”
“டேய்”
“அய்யா சத்தியமா அப்டி இல்ல. ஏன் அப்டி செஞ்சேன்னு எனக்கே தெரியல்ல”
“சரி, இதை ஆரம்பிச்சு எவ்ளவு நாளாச்சு?”
“அய்யா, சாமி சத்தியமா, பெத்த ஆயா சத்தியமா, ஒருவாரம்தான்… நாலே நாலு வாட்டிதான்…”
”நாலுவாட்டி, இல்ல?”
“அய்யா என்னைய கொல்லுங்கய்யா, சுட்டுக்கொல்லுங்கய்யா”
“சரி, ஏன் துரைச்சானி? அவங்க உன்மேலே ஆசைய காட்டினாங்களா?”
“அய்யா பெரும்பாவம் அது… அப்டில்லாம் இல்ல”
“பின்ன?”
“அவங்க என்னைய நல்லாத்தான் நடத்தினாங்க. எல்லாத்தையும் சொல்லுவாங்கய்யா. என்னோட பாசையை திருத்தினதே அவங்கதான்… அவங்கள நான் சிரிக்கவைச்சுக்கிட்டே இருப்பேன். அதனாலே என்னைய அவங்களுக்குப் பிடிக்கும்”
“நெருக்கமா இருந்தீக?”
”அய்யா, நெருக்கம்னா என்னன்னு சொல்ல? அவங்களுக்கு சாப்பாடு கொண்டுபோறது நான். படுக்கை விரிக்குறது நான். சிலசமயம் அவங்களுக்க கௌனை அடுக்கி நீவி ஊசிபோட்டு மாட்டிவிட்டிருக்கேன். ஒரு பேதமும் இல்லீங்கய்யா…”
“அப்டித்தான் ஆரம்பிச்சுது, இல்ல?”
“இல்லீங்கய்யா… அப்டி எத்தனை வருசமாச்சு? ஒரு மாத்து நெனைப்பு இல்லைங்கய்யா. ஒரு துளிகூட உள்ளுக்குள்ள அளுக்கு இல்லீங்கய்யா, அப்டி நினைச்சே பாத்ததில்லைங்கய்யா”
“ஓகோ, அப்ப எப்ப நினைக்க ஆரம்பிச்சே?”
“போனவாரம்..”
“போனவாரம் என்ன நடந்திச்சு?” நான் என் கைத்துப்பாக்கியை எடுத்தேன். அதை திறந்து சுழற்றி குண்டுகளைப் பார்த்தபின் பொருத்திக் கொண்டேன். பெருமூச்சுடன் அவனைப் பார்த்தேன்.
”தப்பா ஒண்ணும் இல்லீங்க”
“இதோபார்” என்றேன் “இப்ப நான் உன்னைச் சுட்டுக்கொன்னா கேக்க ஆளில்லை. துரை குடுத்தனுப்பின நகை எங்கிட்டே இருக்கு. நீ திருடி இங்க ஒளிச்சுவைக்க வந்தே, அதை பிடிக்கவந்ததும் என்னைய கொல்லவந்தே, சுட்டுட்டேன். அவ்ளவுதான் கதை. புரியுதா?”
அவன் முகத்தில் ஒரு தசை மட்டும் விலுக் விலுக் என துடித்தது
”சாவுறேன், கொல்லுங்கன்னு சொல்லி அழுறது பெரிசில்ல. நெஜம்மா சாவுக்க முனைங்கிறது வேற. உன்னைமாதிரி அடுக்களைப்பிறவிகளுக்கு அது என்னன்னு தெரியாது… இப்ப தெரிஞ்சிருக்கும்”
“அய்யா”
”சொல்லு, என்ன நடந்தது?”
“துரைசானி எங்கிட்ட வேற மாதிரி நடந்துகிட்டாங்க”
“எப்டி?”
அவன் கைகளை இறுக முஷ்டி பிடித்தபடி நின்றான்.
“சொல்லு எப்ப? என்ன பண்ணினாங்க?”
“போனவாரம், கவர்னர் விருந்துக்கு போய்ட்டு வந்தப்ப”
“ம்”
“கவுனை கழட்டிட்டு இருந்தாங்க… மரியா உள்ள இருந்தா. லேஸை கழட்ட காலை தூக்கினாங்க. நான் குனிஞ்சு காலை பிடிச்சேன். காலைத்தான் புடிச்சேன். கெண்டைக்காலை. அப்டி ஆயிரம் தடவை புடிச்சிருக்கேன். ஷூ போட்டுவிடுவேன். லேஸை அவுப்பேன். அன்னிக்கு என்னமோ அப்டியே சீறிட்டாங்க. சட்டுன்னு பக்கத்திலே இருந்த பீங்கான் தட்டை எடுத்து என் தலையிலே அடிச்சாங்க. திட்டினாங்க”
“என்னன்னு?”
“கறுப்புப் பிசாசு, அசிங்கமான மிருகம், நாத்தம்புடிச்ச புழு அப்டி… அதெல்லாம் வழக்கமா எல்லா துரச்சானிகளும் சொல்றதுதான். என் மூஞ்சியிலே துப்பினாங்க. காலாலே எட்டி உதைச்சு போ போன்னு கத்தினாங்க”
“நீ என்ன பண்ணினே?”
“மன்னிச்சுக்குங்க மதாம்னு சொல்லி எந்திரிச்சு மூஞ்சியை துடைச்சுகிட்டு வெளியே போய்ட்டேன். மூஞ்சியை கழுவிட்டு சமையலறையிலே போய் நின்னேன். என் மூஞ்சியப் பாத்து மரியா என்னாச்சுன்னு கேட்டா. ஒண்ணுமில்லைன்னு சொன்னேன். துரைச்சானி திட்டினாங்களான்னு கேட்டா. ஆமான்னே. சரி, பரவாயில்லை. இந்த துரைச்சானி மத்த துரைச்சானிங்கள மாதிரி இல்ல, நல்லவள்ன்னு சொன்னா. நான் ஆமான்னு சொன்னேன்”
“அப்றம்?”
“அப்றம் வேலைகள் செய்ஞ்சேன். கொஞ்சம் கழிச்சு துரைச்சானிக்கு காலைவைச்சுக்கிட சுடுவெந்நி கொண்டுபோயி வைச்சேன். மரஎண்ணை எடுத்துவைச்சேன். அவங்க மூஞ்சி அப்டியே ரத்தம் மாதிரி சிவந்து இருந்துச்சு. கண்ணெல்லாம் கலங்கி இமை வீங்கி ஒருமாதிரி இருந்தாங்க. என்னைய ஏறிட்டும் பாக்கலை. ஒண்ணுமே சொல்லலை. மரியா காலுக்கு வெந்நி காட்டி எண்ணைபோட்டுவிட போனா. நான் உள்ள நின்னேன். அப்றம் அவங்க அப்டியே தூங்கப்போயிட்டாங்க. நான் சாப்பிட்டுட்டு தூங்கிட்டேன்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லல நீ”
“அதுக்கு மறுநாள்தான் அதை எடுத்தேன்”
“எப்ப?”
”அதுக்கு மறுநாள் காலம்பற. துரைச்சானியோட பழைய துணியெல்லாம் வெளுக்குறதுக்கு வரும். மூங்கில்கூடையிலே போட்டு வச்சிருப்பாங்க. மரியாதான் அதுக்கு நம்பர்போட்டு வண்ணானுக்கு போடணும்…அவனுக காலம்பற வந்திடுவாங்க. நான் சும்மா அந்தவழியா போனேன். அப்ப அந்த அடித்துணி தெரிஞ்சுது. அதைப்பாத்ததும் படபடப்பா ஆகிப்போச்சு…”
“படபடப்புன்னா?”
“நெஞ்சடைச்சுப்போச்சு. உடம்பிலே வேர்வை பூத்து குளுந்துது. காய்ச்சல் கண்டவன் மாதிரி நடுங்கிட்டிருந்தேன். என்ன ஆச்சுன்னே தெரியல்ல. ஏன் அப்டி செய்தேன்னும் தெரியல்ல. நான் அப்டியே அதை உருவி எடுத்து பையிலே வைச்சுக்கிட்டு ஓடிப்போய் ரூமுக்குள்ளே கதவடைச்சு உக்காந்திட்டேன்”
”முதல்ல அதப்பாத்தப்ப என்ன தோணிச்சு? அந்த மாதிரியா?”
“ஒண்ணுமில்ல… பயம் மாதிரி. வேற என்னமோ ஒண்ணு… அப்டியே உடம்பு உடைஞ்சிடும்கிற மாதிரி… மயிரெல்லாம் சிலுத்துப்போச்சு. ஆனா ரூமுக்குள்ள போனதும் அமைதியாயிட்டேன். அதை ஒளிச்சு வைச்சுட்டு அப்டியே கொஞ்சநேரம் உக்காந்தேன். கண்ணுலே இருந்து ஆவி பறக்கிறமாதிரி இருந்தது. ரொம்பநேரமாச்சு மூச்சு நேரே ஓடுறதுக்கு”
“அப்றம்?”
“என்னைய மரியா கூப்பிட்டுட்டே இருந்தா. அதனாலே நான் திரும்பி சமையலறைக்குப் போனேன். துரைசானிக்கு பூட்ஸ் எடுத்து பாலீஷ் போட்டு வைக்கச் சொன்னா. நான் பாலீஷ் போட்டுவைச்சேன். அப்ப துரைச்சானி வந்தாங்க…”
“என்ன சொன்னாங்க?”
“ஒண்ணும் விசேசமா சொல்லல்ல. நேத்து நடந்தது அவங்களுக்கு யாவுகம் இருக்க மாதிரியே தெரியல்ல. பெட்டிமேலே காலை வைச்சு நின்னாங்க. நான் ரவை நேரம் யோசிச்சேன். அவங்க என்ன தூங்கிட்டிருக்கியான்னு கேட்டாங்க. நான் மேலே பாத்தேன். அவங்க மூஞ்சியிலே வழக்கமான சிரிப்புதான். நான் லேஸும் ஷூவும் போட்டு விட்டேன்”
“ம்”
“ஒண்ணுமில்லைங்கய்யா”
“இப்ப உன் மனசிலே ஒரு சிந்தனை வந்துபோச்சு. அதைச் சொல்லு”
“அய்யா”
“டேய், சொல்லு”
“எனக்கு கொஞ்சம் குளிருநடுக்கம் மாதிரி வந்திச்சு”
“பயமா?”
“இல்ல, சந்தோசம் மாதிரி”
“என்ன சந்தோசம்?”
”தெரியல்ல”
“அவங்களைப்பத்தி நீ என்ன நினைக்கிறேன்னு அவங்களுக்கு தெரியாதுங்கிற நினைப்புலே வார சந்தோசம், சரியா?”
“அய்யா, இல்ல. நான் அப்ப தப்பா ஒண்ணும் நினைக்கல்ல”
”சரி, பிறவு?”
“அன்னிக்கு துரைசானிகூட பந்துவெளையாடுற மைதானம்போனேன். அப்றம் கிளப்பு. சாயங்காலம் மீசிக்கு ஹால் போனேன்… ராத்திரிதான் வந்தேன். எல்லாம் வழக்கம் மாதிரிதான். அவங்களும் வழக்கம் மாதிரிதான் இருந்தாங்க. நானும் பேசினேன், சிரிச்சேன். ஆனா எனக்கு உடம்புக்குள்ள அப்பப்ப ஒரு குளிரு நடுக்கம் வந்திட்டே இருந்தது”
“எப்டி?”
“அய்யா, இப்ப உள்ளுக்குள்ள நனைஞ்ச துணிய போட்டிருந்தா குளிரும் இல்லீங்களா, அப்டி”
“நீ பேசத்தெரிஞ்சவன்” என்று நான் புன்னகைத்தேன்.
முதல்முறையாக அவனும் புன்னகைத்தான்.
“அப்றம், சொல்லு”
அவன் பேசாமல் அமர்ந்திருந்தான்
“சொல்லு” என்றேன், கடுமையாக
“அந்த ராத்திரிதான்”
“ம்”
“முதல் முறையா… அதை வைச்சு…”
“சொல்லு”
“ரூமுக்குள்ள போனதுமே அந்த நினைப்புதான் வந்திச்சு. உடனே உடம்பு தூக்கிப்போட ஆரம்பிச்சுது. கைகாலெல்லாம் உதறிட்டு இருந்தது. கதவை மூடிட்டு அதை எடுத்தேன். தொடவே முடியல்ல. தொண்டைவேற காய்ஞ்சு போச்சு… அப்டியே உக்காந்து மோந்து பாத்தேன். அப்பதான்…”
“அதுவரை அந்த நினைப்பே வரல்லையா?”
“அய்யா, சத்தியமா அதுவரை அப்டியொரு நினைப்பே இல்லை”
“சரி, அதுக்குபிறகு இந்த ஒருவாரமா, இல்ல?”
“ஆமா”
“துரைச்சானிகிட்டே வழக்கம்போல பழகுறே?”
“ஆமாங்கய்யா, எல்லாம் வழக்கம்போல. ஆனால் இப்பவும் அந்த உள்நடுக்கம் இருக்குதுங்க”
“அதை காட்டிக்கிடுறதில்ல?”
“அதெப்டிங்கய்யா?”
“அவங்க எப்டி இருக்காங்க?”
“துரைச்சானிக்கு அது ஒரு சின்ன சம்பவம் தானே? அப்டியே மறந்திருப்பாங்க”
“ஒண்ணுமே சொல்லல்ல?”
‘இல்லீங்கய்யா”
“ஒண்ணுமே காட்டிக்கல?”
“அய்யா, இல்லீங்கய்யா”
“நீ கூர்ந்து பாத்திருப்பே. கண்ணைச் சந்திச்சிருப்பே”
“ஆமாங்க”
‘ஒண்ணுமே தெரியல்ல”
“இல்லீங்கய்யா, ஒரு துளிகூட தெரியல்ல”.
நான் துப்பாக்கியை வருடியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். பிறகு அதை உள்ளே வைத்துக்கொண்டு எழுந்தேன். அவனும் எழுந்தான்
“செவத்தான்”
“அய்யா”
“நீ போ… இந்த விசயத்தை நான் விசாரிச்சதை மறந்திரு… உனக்கு பிடிச்சதைச் செய். நான் குறுக்கே வரமாட்டேன்”
“அய்யா!” என்றான் புரியாமல்.
“நீ அந்த அடித்துணிகளை தையல் படிக்கணும்னு மாடலுக்காகத்தான் திருடினேன்னு துரைகிட்டே சொல்லிடறேன். தையக்காரனா போறதுக்கு உனக்கு நினைப்பு இருக்கு… அதனாலேதான் செஞ்சே”
“அய்யா”என்றான். அவனுடைய முகம் மாறிவிட்டது. கண்களில் புன்னகை வந்தது.
“நாமளும் பதிலுக்கு என்னமாம் செய்யணும்லடே?” என்றேன்.
”அய்யா” என்றான். அவன் என்ன நினைக்கிறான் என்று கண்கள் காட்டவில்லை.
“செரி, போ” என்றேன்.
கைகூப்பி கும்பிட்டுவிட்டு அவன் சென்றான். நான் அவனைப் பார்த்துக்கொண்டு நெடுநேரம் நின்றேன். நான் உள்ளூர புன்னகைத்துக் கொண்டிருந்தேன். என் முகத்தில் அது வெளிப்படவில்லை. நான் மிக நன்றாகப் பழக்கியிருப்பது என் முகத்தைத்தான்.
+++++++
21 அறமென்ப… [சிறுகதை]
20 நகை [சிறுகதை]
19.எரிசிதை [சிறுகதை]
18 இருளில் [சிறுகதை]
17 இரு நோயாளிகள் [சிறுகதை]
16 மலைபூத்தபோது [சிறுகதை]
15 கேளி [சிறுகதை]
14 விசை [சிறுகதை]
13. இழை [சிறுகதை]
12. ஆமென்பது[ சிறுகதை]
11.விருந்து [சிறுகதை]
10.ஏழாம்கடல் [சிறுகதை]
9. தீற்றல் [சிறுகதை]
8. படையல் [சிறுகதை]
7.கூர் [சிறுகதை]
6. யட்சன் [சிறுகதை]
5. கந்தர்வன் [சிறுகதை]
4.குமிழிகள் [சிறுகதை]
3.வலம் இடம் [சிறுகதை]
2.கொதி[ சிறுகதை]
1.எண்ணும்பொழுது [சிறுகதை