மலையாள கவிஞர் கே.ஏ.ஜெயசீலனின் ஒரு கவிதை. சுவர்மூலையில் அமர்ந்திருக்கிறது பல்லி. அதன்முன் வரிசையாக பூச்சிகள் ஊர்ந்து வருகின்றன. நேர் எதிரில் பல்லியைக் கண்டதும் திகைக்கின்றன.பக்கவாட்டில் விலக முயல்கின்றன. முடியாமல் தத்தளிக்கின்றன. பின்பக்கம் வரும் பூச்சிகள் முன்னால் உந்தி செலுத்த பல்லியின் வாய்க்குள் சென்றுகொண்டே இருக்கின்றன. எந்த பூச்சிக்கும் மூன்றாவது சாத்தியம் ஒன்று இருப்பது தெரியவில்லை. சுவரிலிருந்து பிடிவிட்டு உதிர்ந்தால்போதும்.
அந்தவகையில் பிடிவிட்டு உதிர்வது என்பது ஒருவகையான பைத்தியம். மண்டையின் ஒரு வாசலை திறந்துவிடுதல். இன்னொரு கவிதை. ஒரு மாறுதலுக்காக கூரையில் வானம்நோக்கிச் செல்ல ஒரு வாசல் வைக்கவேண்டும் என்று ஏன் எவருக்கும் தோன்றவில்லை?
இலக்கியத்திற்கும் கருத்துச்செயல்பாட்டுக்கும் இடையே உள்ள முதன்மை வேறுபாடே இந்தப் பித்து அம்சம்தான்.சீராகவும் ஒழுங்காகவும் சிந்திக்கவே நாம் வளர்ப்பால், கல்விமுறையால், பொதுப்போக்கு அறிவியக்கத்தால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்.அதுவே முறையானது, தேவையானது. வீட்டில்தான் வாழமுடியும். ஆனால் அவ்வப்போது கூரைவழியாகவும் வெளியேறலாம்.
முறையான சிந்தனைப்போக்கிலிருந்து உடைத்துக்கொண்டு மீறிச்செல்லும் தன்மை இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளிலொன்று. ஆகவேதான் ஆசாரவாதிகளிலிருந்து புரட்சியாளர்கள் வரை அத்தனைபேருக்கும் இலக்கியம் மீது ஒரு ரகசிய ஒவ்வாமை உள்ளது. அதை ‘வழிகாட்டி’ நடத்திச்செல்ல ‘சீர்திருத்த’ அதில் ‘பிழைகளை கண்டுபிடித்து திருத்த’ தொடர்ச்சியாக முயன்றுகொண்டே இருக்கிறார்கள்.
எல்லா நல்ல படைப்புக்களிலும் அந்த வான்நோக்கிய வாசல் திறந்து கிடக்கும். ஆனால் சில படைப்புக்கள் முதன்மையாக அந்த மீறலையே முன்வைக்கும். அதன்பொருட்டு மட்டுமே எழுதப்பட்டிருக்கும். அவை பொதுவாசிப்பிலிருப்பவர்களுக்கு திகைப்பையும் ஒவ்வாமையையும் உருவாக்கக்கூடும்.
தமிழில் அத்தகைய ஆக்கங்களுக்கு முதன்மை உதாரணம் ரமேஷ் பிரேதனின் கதைகள், கவிதைகள். ‘திரும்பிநோக்கி காறித்துப்பிவிட்டு கிளம்பிச் செல்லும் மனநிலையில் எப்போதுமிருப்பவை’ என அவற்றை வரையறை செய்யலாம். நமக்கு எழுதியளிக்கப்பட்ட, பேசியளிக்கப்பட்ட அனைத்தையும் மீறும்தன்மை கொண்டவை அவை.
கசப்பு கோபம் ஆகியவற்றில் தொடங்கி மீறிச்சென்று அடையும் ஓர் அமைதியை அவை கண்டடைகின்றன. அங்கே வள்ளலார் அமர்ந்திருக்கிறார். நாமறிந்த வள்ளலார் அல்ல, வேறொருவகையில் கண்டடையப்பட்ட வேறொருவர்
நம் சமூக ஒழுங்கை, நம் பாலியல் நடவடிக்கைகளை, நமது வரலாற்றை தன்போக்கில் உடைத்து மறு ஆக்கம் செய்யும் படைப்புக்கள் ரமேஷ் பிரேதனுடையவை. அவை நம்மை வெவ்வேறு வகையில் ஊடுருவுகின்றன. நாம் அவற்றை வாசிக்கையில் எழும் ஒவ்வாமையே அவை உண்மையில் உத்தேசிப்பது என்று புரிந்துகொண்டால், அவை நம்மை ஊடுருவ அனுமதித்தால், நமக்கு அவை புதியவாசல்களை திறக்கக்கூடும்.
மொழியின் சிடுக்கு, எண்ண ஓட்டங்களின் கட்டற்ற தன்மை, இங்குள வாழ்க்கையுடன் சம்பந்தம்ற்ற வேறொரு யதார்த்தத்தில் உலவுதல் ஆகிய காரணங்களால் ரமேஷ் பிரேதனின் கதைகள் பொதுவாசிப்பிலிருந்து விலகியே இன்றுள்ளன. ஆனால் தன் வாசிப்பை தானே உடைத்து முன்செல்ல விரும்பும் இலக்கிய வாசகர்களுக்கு அவை முக்கியமானவை.