கூர் – கடிதங்கள்

கூர் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வழக்கம்போல கதைகள் வேறுவேறு களங்களிலிருந்து வேறுவேறு மனநிலைகளிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன. பதினேழாம்நூற்றாண்டு நாயக்கர் காலத்திலிருந்து சமகாலக் குற்றச்சூழலுக்குத் தாவுவது கொஞ்சம் கஷ்டமானதுதான். ஆனால் இந்த கதைவிழாவின் கொண்டாட்டமே அதுதான். ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ஒரே நாளில் சம்பந்தமில்லாமல் படங்களைப் பார்ப்பதுபோலிருக்கிறது

கூர் ஒரு விஷம்போன்ற கதை. அந்தப்பையன் எங்கே கூர்கொள்கிறான் என்பதுதான் கேள்வி. அவனுடைய முரட்டுத்தனம், அவனிருக்கும் கைவிடப்பட்ட நிலை எல்லாமே கதையின் வழியாக உருவாகி வருகிறது. கதையின் கேள்வி அவன் ஞானப்பனைக் கொல்லும் வெறியை எங்கிருந்து அடைகிறான் என்பது. அவன் அந்த வெறியை அடைவது ஞானப்பன் தன் பேரனைக் கொஞ்சுவதைக் கேட்கும்போதுதான். அந்த இடத்தில் குற்றம் என்ற இடத்திலிருந்து கதை அந்த சிறுவனின் ஏக்கம் என்னும் இடத்திற்குச் சென்றுவிடுகிறது. ஆழமான ஒரு மானுடத்துக்கத்தைச் சொல்லிவிடுகிறது

ஜெயக்குமார்

அன்புள்ள ஜெயமோகன்

எனக்கு எப்பவும் ஓர் எண்ணம் மனதை கீறுவதுண்டு‌.நமக்கு எப்போது பிறர் மேல் வெறுப்பு வருகிறதென.’கூர்’ கதை வாசித்தேன்.வெறுப்பு கூர் கொண்டு வருவதை அளவிட்டு கொண்டே வாசித்தேன்.பிறர் மேல் வெறுப்பு வருவதற்கு,அவர்களை விட நாமே பெரும் காரணம்.வெறுப்பு வருவதற்கு காரணம் தேடி கொண்டிருந்த சிறுவனுக்கு ஏக்கம் தான் அதை கொடுப்பதாய் இருக்கிறது.இப்படி சொல்லலாம்- கோபம் கொண்டவனுக்கு கோபம் கொண்டவனை விட மகிழ்ச்சியுடையவனே எதிரி.ஆற்றல் விரிந்து கிடப்பது சிறு வயதில் தான்.அவ்வயதில் நம் மனநிலையும் வாழ்க்கைமுறையும் கூர் அடைகிறது.

அன்புடன்

பாலா

 

அன்புள்ள ஜெ

கூர் போன்ற நான்கு ஐந்து கதைகள் முந்தைய நூறுகதைகளிலும் இருந்தன. குற்றத்தின் உலகம். ஆனால் குற்றத்தின் தீவிரம், அதைக் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனம் ஆகிய இரண்டையுமே இக்கதைகள் பொருட்படுத்தவில்லை. குற்றம்வழியாக வெளிப்படும் ஒரு மனிதமனத்தைத்தான் கூறமுயல்கின்றன. சின்னப்பையன் கொல்வது அவனுடைய அப்பனைத்தான். தன் பேத்தியைக் கொஞ்சும் ஞானப்பனில் அவன் காண்பது தன்னை கைவிட்டுச்சென்ற அப்பனைத்தான்.

கதைமுழுக்க அப்பன் என்ற அடையாளம் அந்தப் பையன்களை எப்படியெல்லாம் படுத்துகிறது என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. கிண்டலாகவும் கசப்பாகவும் அவர்கள் அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

எம்.ராஜேந்திரன்

அன்புள்ள ஜெ

கூர் சட்டென்று தூக்கி கீழே போட்டுவிட்டது. இந்தக்கதையின் அழுத்தமும் இது அளிக்கும் கசப்பான உண்மையும் எனக்கு தெரியும். ஒரு அடிபோல விழுகிறது. ஆனாலும் இந்தவகையான கதைகள் உங்களுடையவை அல்ல. இவை உங்களுக்கு தூரமான கதைகள் என்று நினைக்கிறேன்

செல்வி ஆர்

முந்தைய கட்டுரைகொதி, வலம் இடம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகந்தர்வன்,யட்சன் – கடிதங்கள்