இரு நோயாளிகள் [சிறுகதை]

மானந்தொடியில் அச்சுதன் நாயர் கிருஷ்ணன் நாயரிடம் ஒரு பேட்டியை நான் எடுக்க நேர்ந்தது முற்றிலும் தொழில்முறையாக. எம்.ஏ.கிருஷ்ணன் நாயரின் மணிகண்டவிலாஸ் என்னும் ஓட்டல் 1970-ல் தொடங்கப்பட்டது. 2020-ல் அதற்கு ஐம்பதாவது ஆண்டுவிழா. அவருக்கு எண்பதாவது வயது நிறைவு விழா. அதாவது சதாபிஷேகம். இரண்டையும் சேர்ந்துகொண்டாட அவர் மகன்கள் முடிவெடுத்தனர். அவரைப்பற்றியும் ஓட்டலைப்பற்றியும் ஓர் ஆவணப்படம் எடுத்து யூடியூபில் ஏற்றுவதற்கு என்னை அழைத்தனர். நான் திருவனந்தபுரம் கரமனையில் ஒரு வீடியோ ஸ்டுடியோ நடத்திவந்தேன்.

எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் அவர்களின் நான்கு மகன்களுமே ஓட்டல் தொழிலில்தான் இருந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு திருவனந்தபுரம், ஆற்றுகால், வர்க்கலை, கொல்லம் நகர்களிலாக பதினெட்டு ஓட்டல்கள் இருந்தன. மகன்கள் எல்லாருமே பெரிய அளவில் நிலைபெற்று விட்டிருந்தனர். பேரப்பிள்ளைகள் ஓட்டல் தொழிலுக்கு வந்துவிட்டார்கள். எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் ஒரு பெரிய ஆலமரம்.

திருவனந்தபுரம் பேட்டையில் இருந்த மணிகண்டவிலாஸ் பழைய கட்டிடத்தில் அப்படியே இயங்கிக் கொண்டிருந்தது. அப்பாவின் காலம் வரை அதை இடித்துக் கட்டவேண்டாம் என்று மகன்கள் முடிவுசெய்திருந்தார்கள். எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் நாள் தவறாமல் அதிகாலையிலேயே குளித்து,  வெள்ளை ஆடை அணிந்து, பழவங்காடி கணபதியை ஒரு தேங்காய் எறிந்து கும்பிட்டு, சந்தனக்குறி போட்டு, காதில் துளசி இலையுடன் ஐந்துமணிக்கு கடைதிறக்கும் நேரத்தில் மணிகண்டவிலாஸின் கல்லாவில் அமர்ந்திருப்பார்.

மணிகண்டவிலாஸ் பழையபாணி கேரளச் சிற்றுண்டி வகைகளுக்கு புகழ்பெற்றது. திருவனந்தபுரத்தில் அங்கேதான் ஓட்டப்பமும் இலையப்பமும் கிடைக்கும். காபி தண்ணீர் மாதிரி இருக்கும். டீ தண்ணீரைவிட கொஞ்சம் மேலாக இருக்கும். ஆனால் அரைச்செம்பு தருவார்கள். இட்லி மிகப்பெரிதாகவும் தோசை அப்பளவட்டத்தில் அரை இஞ்ச் தடிமனாகவும் இருக்கும். மசாலாதோசை, முறுகல்தோசை கிடையாது. ஆனால் நல்ல வத்தல்மிளகாய் வைத்து அரைத்த நீர்த்த தேங்காய்ச்சட்டினி கிடைக்கும். தோசையை ஊறவைத்துச் சாப்பிடலாம். பிரமாதமான ரசவடை, பழம்பொரி உண்டு. அரிசியில் செய்யும் சுறுக்கா என்னும் ஒரு விந்தையான பலகாரம் புகழ்பெற்றது. அங்கே புட்டுதான் பெரும்பாலானவர்களால் சாப்பிடப்பட்டது. உடன் அப்பளமும், பயறும், வேகவைத்த நேந்திரம்பழமும் உண்டு. சம்பா அரிசிப்புட்டு சாலையிலேயே மணக்கும்.

மதியச்சாப்பாடு புளியங்கொட்டை போன்ற சம்பா அரிசிச் சோறு. தேங்காய் அரைத்து வெள்ளரிக்காயோ தடியன்காயோ போட்ட கறி. உருளைக்கிழங்கு அல்லது காய்ச்சில்கிழங்கு கூட்டுகறி. வாழைக்காய் விழுக்குபிரட்டி, நாட்டுப்பயறு பொரியல். புளிசேரியும், மிளகுரசமும், கருவேப்பிலைபோட்டுக் காய்ச்சிய மோரும் உண்டு. சிறு கிண்ணத்தில் நாலுகரண்டி அடைப்பிரதமன் நாள்தோறும் உண்டு. சைவம்தான். அசைவ ஓட்டல் என்றால் அதை தூய்மையாக நடத்த முடியாதென கிருஷ்ணன் நாயர் நம்பினார். அந்த சாப்பாட்டுக்கென்றே தேடிவருவார்கள்.

எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் கடையில் கல்லாவில் மதியம் வரை அமர்ந்திருப்பார். கொஞ்சம் ஓய்வெடுத்தபின் மூன்று மணிக்கு வந்தால் இரவு எட்டரை மணிக்கு கடைமூடும் வரை இருப்பார். மாலையில் அங்கே சூடான செந்நிறச் சம்பா அரிசிக்கஞ்சியும், மரவள்ளிக்கிழங்கு மயக்கியதும், பயறு மற்றும் காணத்துவையல்களும், மரவள்ளிக்கிழங்கு பப்படமும், சீனியவரைக்காய் வற்றல் பொரித்ததும் கிடைக்கும். பரோட்டா சப்பாத்தி அங்கே நுழைந்ததே இல்லை. சமையற்காரர் கேசு நாயருக்கும் எம்.ஏ.கிருஷ்ணன் நாயருக்கும் ஒரே வயது.

எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் நல்ல நினைவுடன், தெளிவுடன் இருந்தார். ஆனால் அவருக்கு எந்த நினைவும் உள்ளே போய் பதியவே இல்லை. 1970-ல் அவர் மணிகண்டவிலாசத்தை தொடங்கியபிறகு கல்லாவிலிருந்து விலகியதில்லை. ஆரியசாலை பசாருக்கு காய்கறிகள் மளிகைகள் வாங்க சென்றுகொண்டிருந்தார். பத்தாண்டுகளில் மளிகைப்பொருட்கள் அனைத்தையும் எஸ்.கோலப்பப் பணிக்கர் அண்ட் சன்ஸ் நிறுவனம் கொண்டுவந்து அளிக்க ஆரம்பித்தது. பரிசுத்தநாடார் அண்ட் சன்ஸ் காய்கறிகளை கொண்டுவந்து தந்தார்கள். அவர் கல்லாவை விட்டு நகரத்தேவையே இருக்கவில்லை.

எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் அவர்களின் கண்முன் வரலாறு ஓடிச்சென்றிருந்தது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது. திருவிதாங்கூர் அரசர் முடியிழந்தார். அசுரபிராமணனான திருவிதாங்கூர் திவான் சி.பி.ராமசாமி அய்யரை கே.சி.எஸ்.மணி வெட்டினார். அய்யர் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றார். ஐக்கிய கேரளம் பிறந்தது. கம்யூனிசக் கிளர்ச்சி நடந்தது. தேர்தல் பாதைக்கு வந்து இ.எம்.எஸ் ஆட்சியைப் பிடித்தார். விமோசன சமரம் நடந்து, இ.எம்.எஸ் ஆட்சியை இழந்தார். மாறிமாறி ஆட்சிக்கவிழ்ப்பு நடைபெற்றது. நடுவே நக்சலைட் கிளர்ச்சி நடந்தது. நெருக்கடிநிலை வந்தது. ராஜன் கொலை கேரளத்தை உலுக்கியது. எம்.டி.வாசுதேவன் நாயர் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்தன. தகழி சிவசங்கரப்பிள்ளைக்கு ஞானபீடம் கிடைத்தது. எதுவுமே எம்.ஏ.கிருஷ்ணன் நாயருக்குத் தெரியாது. எவராவது சொன்னால் மட்டும் ‘ஆமாமாம், சொன்னார்கள்’ என்று நினைவுகூர்வார்.

தனிப்பட்ட நினைவுகளிலும் ஒன்றும் சொல்வதற்கில்லை. குழந்தைகள், குடும்பம் எதைப்பற்றியும் எந்தப் பெரிய நினைவும் இல்லை. ஆகவே மேலும் பின்னால் நகர்ந்து 1970-ல் அந்த ஓட்டல் தொடங்குவதற்கு முந்தைய காலகட்டத்தை நோக்கி அவரை இழுத்துச் சென்றேன். அவருக்கு ஓட்டல் தொழிலில் முன் அனுபவம் உண்டா? எப்படி உள்ளே வந்தார்? ஏதோ ஒரு கொக்கி கிடைக்கும். மனிதன் எவரானாலும் முற்றிலும் காலியானவர் அல்ல.

எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் திருவனந்தபுரம் காசநோய் ஆஸ்பத்திரி இருக்கும் புலயனார்க்கோட்டை என்னும் இடத்தில்தான் ஒரு டீக்கடையை முதலில் தொடங்கியிருந்தார். அந்தச் செய்தி அவர் மகன்களுக்கே தெரியாது. புலயனார்கோட்டை! என் மண்டை மின்னியது. முன்பு புலையர்கள் நாடாண்ட ஒரு குறுநிலம். அங்கே ஒரு கோட்டை இருந்ததாக தொன்மம் உண்டு. ‘புலயனார் மணியம்ம பூமுல்ல காவிலம்ம’ என்ற அழகான சினிமாப்பாட்டும் உண்டு. அதை பின்னணி இசையாகச் சேர்க்கலாம். எதையாவது காட்டவேண்டுமே. அங்கே மேற்கொண்டு அகழ்ந்தேன்.

புலயனார்கோட்டை ஒருகாலத்தில் திருவனந்தபுரம் நகருக்கு வெளியே இருந்தது. 1930-ல் அங்கே திருவனந்தபுரம் மகாராணி சேது லட்சுமிபாய் ஒரு காசநோய் விடுதியை தொடங்கினார். அன்றெல்லாம் காசநோய்தான் இந்தியாவின் மிகப்பெரிய தொற்று. வறுமையுடன் பட்டினியுடன் இணைந்து பெருகும் நோய். நெஞ்சுருக்கி. அத்துடன் நம்மவர்களின் துப்பும் பழக்கம் வேறு. ஆயிரக்கணக்கானவர்கள் செத்துக்கொண்டிருந்தனர்.

பல்லாயிரம்பேரை புலயனார்க்கோட்டை ஆஸ்பத்திரி காப்பாற்றியிருக்கிறது. பிறகு அது நெஞ்சுநோய்களுக்கான தனி மருத்துவமனையாக ஆக்கப்பட்டது. அந்தக்காலத்தில் 117 ஏக்கர் நிலம் இருந்தது. விமானப்படைக்கு பெரும்பாலான இடம் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் வெறும் 12 ஏக்கரில் இப்போது செயல்படுகிறது. அங்கே இப்போதே மக்கள் நடமாட்டம் குறைவு. அக்காலத்தில் மயானம்போல் இருந்திருக்கும். ஏன் அங்கே டீக்கடையை தொடங்கினார்?

”என்னுடைய அப்பா மானந்தொடியில் அச்சுதன் நாயர் அங்கே டீ வியாபாரம் செய்தார்” என்று எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் சொன்னார். “அப்பாவுக்குச் சொந்த ஊர் எர்ணாகுளம் பக்கம், வைற்றிலா. அங்கே வீட்டில் சோறில்லாமல் தாய்மாமனால் துரத்தப்பட்டு கொல்லம் வந்தார். துறைமுகத்தில் எடுபிடிப் பையனாக இருந்தார். அவருடைய முதலாளி செறியான் சாக்கோவுக்கு காசநோய் வந்தது. அவர் புலயனார்க்கோட்டை ஆஸ்பத்திரியில் சேர்ந்தபோது துணைக்கு அப்பாவையும் கூட்டிக்கொண்டார். அப்பா அங்கே அவருடன் தங்கினார்.”

செறியான் சாக்கோ ஓராண்டில் இறந்தார். அப்பா அப்படியே அங்கேயே தங்கிவிட்டார். சிகிச்சையிலிருக்கும் நோயாளிகளுக்கு எதையாவது வாங்கிவந்து கொடுப்பது அவருடைய வேலை. சில்லறை கிடைக்கும். அப்படியே தூக்குவாளியில் டீ விற்க ஆரம்பித்தார். டீ அப்போதுதான் வந்து பிரபலமாகியிருந்தது. பால்விட்ட டீ காசநோய்க்கு நல்லது என்றனர் டாக்டர்கள். அப்பா அனல்போட்ட வாளிக்குமேல் எனாமல் தகரப்பானையை வைத்து அதில் தண்ணீர் கொதிக்க எனாமல் கோப்பைகளுடன் உள்ளே அலைந்து வார்டுகளில் இருப்பவர்களுக்கு டீ கொடுப்பார். டீக்கோப்பையை கொதிக்கும் நீரில் கழுவ இன்னொரு கையில் கொதிக்கும் தண்ணீர் கொண்ட வாளி வைத்திருப்பார்.

புலயனார்கோட்டை காசநோய் ஆஸ்பத்திரி என்பது ஒருவகையில் சிறைச்சாலை. நோய் என்னும் தண்டனைபெற்றவர்களுக்கான சிறைச்சாலை அது. ஆனால் அங்கே வந்து சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் கொஞ்சம் வசதியானவர்கள். காய்ச்சலும் இருமலும் வந்ததுமே டாக்டர்களிடம் செல்லும் அறிவிருந்தவர்க்ள். மற்றவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் உழைத்து, மெலிந்து, வற்றலாக ஆனபின்னர் சாவதற்காக அங்கே வருபவர்கள். அங்கிருப்பவர்கள் ஒரு சமூகமாக காலப்போக்கில் மாறினார்கள். அங்கேயே ஒரு வகையான வியாபார உலகம் உருவாகியது. அங்கே பணத்துக்கும் பொருளுக்கும் வேறு மதிப்பு.

அப்பா கொஞ்சம் கொஞ்சமாக பணம்சேர்த்து அங்கே ஒரு சின்ன நிலத்தை வாங்கினார். அங்கே ஒரு ஓட்டுவீடு கட்டினார். ஆனால் டீக்கடை போடவில்லை. ஏனென்றால் அன்று சானட்டோரியத்துக்கு வெளியே மக்கள் நடமாட்டமே இல்லை. சானட்டோரியத்திற்கு சாமான்களை ஏற்றிக்கொண்டு அவ்வப்போது வந்து போகும் மாட்டுவண்டிகள் மட்டும்தான். அப்பாவின் வியாபாரம் நன்றாகவே நடந்தது. அப்பா அங்கே சானடோரியத்தில் வேலைபார்த்த மேலேக்கல் வேலாயுதன் நாயரின் மகள் காளியம்மையை திருமணம் செய்துகொண்டார். நான் பிறந்தேன்.

“நீங்கள் அங்கே புலயனார்க்கோட்டையில்தான் பிறந்தீர்களா?” என்று நான் கேட்டேன்

“இல்லை, நான் பிறந்தபோது என் அம்மாவின் அப்பா வேலாயுதன் நாயர் டிபி சானட்டோரியத்தின் வேலையை விட்டுவிட்டு திரிச்சூர் மங்களோதயம் ஆஸ்பத்திரியில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அவருடைய ஊர் திரிச்சூர் அருகே அய்யந்தோள். மங்களோதயம் ஆஸ்பத்திரி திருப்பணித்துறை அப்பன் தம்புரான் ராமவர்மா தொடங்கிய தனியார் ஆஸ்பத்திரி. அங்கே அவருக்கு இங்கிருந்ததைவிட நல்ல சம்பளம். என் அம்மா என்னை அங்கேதான் பெற்றாள். நான் எட்டு வயதுவரை அங்கேதான் இருந்தேன்.”

”அப்படியென்றால் 1948 இல்லையா?” என்றேன்.

“அப்படியா?” என்று என்னைக் கேட்டார் எம்.ஏ.கிருஷ்ணன் நாயர்.

“ஆமாம்” என்றேன்.

“இருக்கும்… நான் எட்டுவயதில்தான் அம்மாவுடன் திரும்ப புலயனார்க்கோட்டைக்கு வந்தேன். அதுவரை இரண்டுமாதத்துக்கு ஒருமுறை அப்பா வந்து பார்த்துவிட்டுச் செல்வார். அப்பாவை எனக்கு அதுவரை மங்கலாகத்தான் ஞாபகம். இரு கைகளிலும் எடை சுமந்து முதுகு கூனலாகி கைகள் நன்றாக இழுபட்டு இருக்கும். ஆனால் உடலில் கொழுப்பே கிடையாது. நார்நாரான உடம்பு. அம்மா நல்ல குண்டாக இருப்பாள். அவள் அப்பா டிபி ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு தின்னக்கொடுக்கும் கொழுப்பு உணவை முழுக்க எடுத்துக்கொண்டுவந்து மகளுக்கு கொடுத்து ஊட்டி வளர்த்தார். என்னையும் அப்படித்தான் வளர்த்தார்.”

“எட்டுவயதில் திருவனந்தபுரம் திரும்பினீர்கள் இல்லையா?”

“ஆமாம், எட்டு வயதில். என் தாத்தா செத்துப்போனார். ஏற்கனவே பாட்டியும் செத்திருந்தார். சடங்குகள் முடிந்ததும் அப்பா என்னையும் அம்மாவையும் புலயனார்கோட்டைக்கு கூட்டிவந்தார்.”

“எட்டுவயது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? என்ன நினைவு?”

அவர் யோசித்து “ஒரு சின்ன நினைவுதான். அங்கே நான் மங்களோதயம் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடிச் செல்வேன். தாத்தா என்னை அங்கே கூட்டிச்செல்வார். அங்கே நிறைய தின்னக்கிடைக்கும். அங்கே பாதிப்பேர் முட்டை சாப்பிடமாட்டார்கள். எனக்கு அதையெல்லாம் கூப்பிட்டு தருவார்கள். ஒருவர் என்னைக்கூப்பிட்டு முட்டை தருவதுண்டு. அவர் அன்றைக்கு என்னிடம் என் வயது என்ன என்று கேட்டார். நான் போய் தாத்தாவிடம் என் வயது என்ன என்று கேட்டேன். தாத்தா எட்டு என்றார். நான் எட்டு என்று சொன்னதும் அவர் என் குஞ்சாமணியில் கையால் தட்டி எட்டு வயதாகியும் நீ ஜட்டிபோடாமல் அலைகிறாயா என்றார்.”

“நீங்கள் ஜட்டி போடவில்லையா?”

“இல்லை. நான் இடுப்பில் ஒரு துண்டு மட்டும்தான் கட்டியிருந்தேன். அதுவும் அடிக்கடி அவிழ்ந்துவிடும்” எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் சொன்னார். அவர் முகம் மலர்ந்தது. “அவரை நன்றாக ஞாபகமிருக்கிறது. இளைஞர். வட்டக்கண்ணாடி போட்டிருப்பார். நன்றாகப் பாடுவார். அவர் கவிஞர் என்றார்கள். கவிஞர் இருக்கிறாரா என்று கேட்டு சிலர் அவரைப் பார்க்க வருவார்கள். அடிக்கடி பத்திரிகைகள் வரும். அவற்றில் அச்சிடப்பட்டு வரும் கவிதைகளை அவர் படிப்பார். பாட்டு போலவே பாடுவார்.”

“அவர் பெயர் என்ன?”

“பெயர் தெரியாதே…”

”பிறகுகூட பெயரை கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லையா?”

“இல்லை, நான் அவரை ஞாபகப்படுத்திக்கொள்வதே இப்போதுதான். நீ கேட்டதனால்தான். அவர் மங்களோதயம் ஆஸ்பத்திரியிலேயே செத்துவிட்டார். அதற்குள் நாங்கள் புலையனார்கோட்டைக்கு வந்துவிட்டோம். அம்மாவின் அண்ணாவுக்கு அங்கே காசநோய் ஆஸ்பத்திரியிலேயே அவருடைய அப்பாவின் வேலை கிடைத்தது. அவர்தான் அந்தக் கவிஞரைப் பார்த்துக்கொண்டார். அவர் படம்கூட பேப்பரில் வந்தது. அவர் ரொம்பநாள் கழித்து புலையனார்கோட்டைக்கு வந்தபோது அந்தக் கவிஞர் செத்துவிட்டதைச் சொன்னார். பேப்பரைக்கூட காட்டினார்”.

எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் சொன்னார் “புலயனார்கோட்டையில்தான் நான் பள்ளிக்கூடம் போனேன். மிஷன் பள்ளிக்கூடம். எட்டாம் வகுப்பு வரை படித்தேன். அதன்பின் அப்பாவுக்கு உதவியாக நானும் டீ விற்றேன். அப்பா ஒரு டீக்கடை திறந்தார். எங்கள் வீட்டுக்கு முன்னாலேயே கொஞ்சம் ஓலை வைத்து சாய்ப்பு இறக்கி டீக்கடையை ஆரம்பித்தார். அவர் கடையில் இருப்பார். நான் சானட்டோரியத்திற்குள் சென்று டீ விற்று வருவேன். அப்பா இறக்கும்போது எங்களுக்கு நிலமும் வீடும் எல்லாம் வந்துவிட்டன. நான் என் முப்பதாவது வயதில் இந்த மணிகண்டவிலாசை ஆரம்பித்தேன். இந்த ஓட்டலை நான் ஆரம்பித்தது பெரிய கதை…”

அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே நான் கூகிளில் தேடிவிட்டேன். மங்களோதயம் ஆஸ்பத்திரியில் காசநோயால் மறைந்தவர் கேரளத்தின் மாபெரும் கற்பனாவாதக் கவிஞரான சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை. ரமணன் என்ற காதல் காவியத்தை எழுதியவர். கண்ணீரும் கனவும் காதலும் நிறைந்த அவருடைய கவிதைகள் வழியாகவே மலையாளம் தன் முதிராஇளமையை கண்டடைந்தது.

சங்ஙம்புழ கிருஷ்ண பிள்ளை 1911 அக்டோபர் பத்தாம் தேதி எர்ணாகுளம் அருகே இடப்பள்ளியில் பிறந்தார். எர்ணாகுளம் மகாராஜாஸ் காலேஜிலும் திருவனந்தபுரம் ஆர்ட்ஸ் ஸ்கூலிலும் படித்தார்.கொஞ்சகாலம் ராணுவத்தில் பணியாற்றினார். ஆசிரியராக வேலைபார்த்தார். 1948 ஜூன் மாதம் 17 ஆம் தேதி சாகும்போது அவருக்கு முப்பத்தாறு வயதுதான். அவர் மனைவி ஸ்ரீதேவி அம்மாவுக்கு வயது இருபத்திரண்டு.

சங்ஙம்புழ கிருஷ்ண பிள்ளை தன் கல்லூரிக்காலத்திலேயே மாபெரும் கவிஞர் என்று புகழ்பெற்றிருந்தார். கற்பனாவாதம் அவருக்கு கவிதைக்கான பொருள் அல்ல, வாழ்க்கையேதான். பெண்கள்தான் அவருடைய தீராப் போதை. தெற்குக்கேரளம் முழுக்க விபச்சாரிகளை தேடி அலைந்தார் என்று சொல்கிறார்கள்.  ‘எல்லா பெண்ணும் பேரழகியாக தெரியுமளவுக்கு அவர் கற்பனாவாதக் காதலனாக இருந்தார். எல்லா பெண்களையும் கவர்ந்து அடையும் கந்தர்வனாகவும் திகழ்ந்தார்’ என்று பிரபல விமர்சகர் எம்.பி.பால் எழுதியிருந்தார்.

“நீங்கள் அங்கே பார்த்த கவிஞர் சங்ஙம்புழா கிருஷ்ணபிள்ளையா?” என்று கேட்டேன்.

“தெரியவில்லையே.”

“அவரை பற்றி பிறகு விசாரிக்கவே இல்லையா? மிகவும் புகழ்பெற்ற கவிஞர் ஆயிற்றே? எல்லா பாடநூல்களிலும் அவர் கவிதைகள் இருக்குமே.”

“நான் கவனிக்கவே இல்லையே.”

“அவரைப்பற்றி வேறு யாராவது சொன்னார்களா?”

“இல்லை” என்றார் எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் பிறகு “ஆ, நான் அவரைப்பற்றி வேறு ஒருவரிடம் சொன்னேன். ஞாபகம் வருகிறது.”

“யாரிடம்?”

“அவரும் ஒரு காசநோயாளிதான். அவர் தமிழ்நாட்டு ஆள். சைவவேளாளப் பிள்ளை. அவரும் பாடுவார். எல்லாம் தமிழ்ப்பாட்டு. சிவனைப்பற்றிய பாட்டு. அவர் மனைவியும் இன்னொருவரும்தான் அவரைக் கொண்டுவந்தார்கள். அவருக்கு காசநோய் முற்றியிருந்தது. இங்கே சானட்டோரியத்தில் சேர்த்தார்கள். கொஞ்சநாள் இருந்தபிறகு திரும்பக் கொண்டுபோனார்கள். அவர் செத்துவிட்டார் என்று பிறகுதான் தெரிந்தது” என்றார் கிருஷ்ணன் நாயர் “அவர் மனைவியின் ஊர் திருவனந்தபுரம். ஆனால் அவர் திருநெல்வேலிக்காரர். அவர்கள் எங்களுக்கு கொஞ்சம் பணம் மிச்சம் வைத்திருந்தார்கள். அப்பா அதை வாங்க என்னை அனுப்பினார். சொன்னேனே, அவருடைய மனைவி வீடு திருவனந்தபுரம்தான். நான் அங்கே சென்று பணம் வாங்கிவந்தேன். அப்போதுதான் அவர் செத்ததைச் சொன்னார்கள்”

நான் மெல்லிய படபடப்பை அடைந்தேன். “அவர் பெயர் என்ன தெரியுமா?”

“அவர் பெயரா? ஞாபகமில்லை. அவர் மனைவி பெயர் கமலா. என் தங்கைபேரும் கமலாதான். கூடவே ஒரு இளைஞர் வந்தார். அவர்பெயர் பழனி… இல்லை சிதம்பரம்…”

நான் பரபரப்பை இழந்து தளர்ந்தேன்.

“அவர் அங்கே சானடோரியத்தில் நாலைந்துநாள்தான் இருந்தார். நான் அவரை பார்த்தேன். அவரிடம் பேசினேன். அப்பா என்னிடம் டீ கொடுத்தனுப்பினார். அவரிடம் அதை கொடுத்தேன்….”

“என்ன பேசினீர்கள்?”

“அவர் என்னிடம் நீ முகத்தில் துணித்திரை போடாமல் இங்கே சுற்றி அலையாதே, உனக்கும் காசநோய் வந்துவிடும் என்றார். நான் அவரிடம் உங்களுக்கு எப்படி காசநோய் வந்தது என்று கேட்டேன். அவர் சொன்னார், இந்த உலகத்திலுள்ள அத்தனைபேரும் அவர் முகத்தில் காறித்துப்பினார்கள். அதனால் காசநோய் வந்தது என்று.”

“நீங்கள் என்ன சொன்னீர்கள்?”

“நான் சொன்னேன், ‘நான் திரிச்சூரில் பார்த்த கவிஞர் மாமா வேறுமாதிரி சொன்னாரே?’ என்று. இவர் சிரித்தபடி ’என்ன சொன்னார்?’ என்று கேட்டார். ’இந்த உலகத்திலுள்ள அத்தனைபேரையும் முத்தமிட்டதனால் காசநோய் வந்தது என்று சொன்னாரே?’ என்று சொன்னேன்.”

நான் எம்.ஏ.கிருஷ்ணன் நாயரின் உதடுகளை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். நாம் சிலவேளைகளில் மிகப்பெரிய ஒன்றை பார்த்துவிடுகிறோம். ஆனால் அவர் மிக அற்புதமான இசையை வெளிப்படுத்தும் உயிரற்ற வானொலிப்பெட்டி போல் இருந்தார்.

எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் சொன்னார் “இவர் என்னிடம் ‘அந்த மாமாவின் பெயர் என்ன?’ என்று கேட்டார்.  ‘பாட்டுகாரன்’ என்று நான் சொன்னேன். ‘அவர் இருக்கிறாரா?’ என்று கேட்டார். ‘இல்லை செத்துவிட்டார்’ என்று சொன்னேன். உடனே இவர் பயங்கரமாகச் சிரித்தார். சிரிப்பென்றால் அப்படி ஒரு சிரிப்பு. யாரோ அவரை போட்டு அடித்து மிதித்து துவைப்பதுபோல உடல் துள்ளியது. மிகவும் மெலிந்தவர். பெரிய குரல்வளை ஆட கையால் மெத்தையை அடித்தபடியும் கால்களை உதறியபடியும் சிரித்தார்”

எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் புன்னகைத்து “அதேபோல சிரிப்பவர்களை நான் அதற்கு முன் பார்த்ததே இல்லை. அவரை நாலைந்து கைகள் கிச்சுக்கிச்சு மூட்டுவதுபோல அப்படி ஒரு சிரிப்பு. சிரித்துச் சிரித்து இருமல் வந்துவிட்டது. இருமியபோது அவர் மனைவி ஓடிவந்தார். அவர் மனைவிக்குக்கூட இளம்வயதுதான். கூடவே அவருடனிருந்த சிதம்பரமும் வந்தார். இருமி துப்பியபோது கட்டிகட்டியாக ரத்தம் வந்தது. அதன்பின் மூச்சுத்திணறி துடிக்க ஆரம்பித்தார். நான் விலகி வந்துவிட்டேன்.” என்றார் எம்.ஏ.கிருஷ்ணன் நாயர். “அதன்பிறகு கொஞ்சநாளில் அவரும் செத்துவிட்டார். சொன்னேனே?”

“ஆமாம், 1948 ஜூன் முப்பதாம்தேதி. சங்கம்புழ கிருஷ்ண பிள்ளை இறந்து பதிமூன்று நாட்கள் கழித்து”

“அப்படியா? அவர் பெயர் என்ன?”

“சொ.விருத்தாசலம், தமிழில் புதுமைப்பித்தன் என்ற பெயரில் கதைகள் எழுதினார்”

“பாவம், மெலிந்த மனிதர்” என்றார் எம்.ஏ.கிருஷ்ணன் நாயர். “நான் இங்கே பேட்டையில் ஓட்டல் தொடங்கியபிறகுதான் எனக்கு வளர்ச்சி. என் அப்பா அங்கே புலயனார்க்கோட்டையில் ஆரம்பித்த ஓட்டலுக்குப் பெயர் இல்லை. அப்பா சபரிமலை பக்தர். அவருக்கு சபரிமலை போகவே வாய்ப்பு அமையவில்லை. அவர் நினைவாக மணிகண்டவிலாஸ் என்று பெயர்போட்டேன். நானும் ஐயப்ப பக்தன்தான். ஆனால் சபரிமலை போனதில்லை. நேரமே இல்லை…” எம்.ஏ.கிருஷ்ணன் நாயர் சொல்லிக்கொண்டே சென்றார் “என் மகன்கள் ஆரம்பித்த எல்லா ஓட்டல்களும் அய்யப்பனின் பெயரால்தான். ஐயப்பவிலாஸ், சபரிவிலாஸ், ஹரிஹரசுதம், இப்படி. அதாவது…”

*****

16 மலைபூத்தபோது [சிறுகதை]

15 கேளி [சிறுகதை]

14 விசை [சிறுகதை]

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரை’ஆள்தலும் அளத்தலும்’ எஞ்சுவதும்- அனங்கன்
அடுத்த கட்டுரை‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்