கந்தர்வன், யட்சன் – கடிதங்கள்

கந்தர்வன் [சிறுகதை]

அன்பிற்கும் வணக்கத்திற்குரிய ஜெயமோகன்,

கந்தர்வன் சிறுகதை ஆழமான ஒன்று. தன்னலம் பாராது ஊர் உலக நன்மைக்காக தன்னை அளிப்பவர்கள் ஏழு குதிரை சூரியன் மற்றும் அவனுக்கும் மேலுள்ள தேவர்கள் தலை மீது ஏறி கந்தர்வன் ஆக பறக்கிறார்கள்தான். தேசமெங்கும் எழுந்து கிடக்கின்ற எத்தனையோ பல ஆலயங்கள் இத்தகைய தற்கொடையாளர்களின் தெய்வ வடிவங்கள் தானே.

இந்தக்கதையில் தற்கொடை தந்து கந்தர்வனான அனஞ்ச பெருமாளை விட மிகவும் போற்றத்தக்கவள், ஒரே கணத்தில் அனைத்தையும் புரிந்து கொண்டு ஊர் மக்களுக்காக, அவர்களின் நலனுக்காக, வரி துன்பத்திலிருந்து விடுபட அவர்கள் போட்ட திட்டம் வெற்றி பெறுவதற்காக தன்னைச் சிதை ஏற்றிய வள்ளியம்மைதான். அவளே கந்தர்வனுக்கு ஏற்ற கந்தர்வி.

அவள் புத்திசாலி, ஒரு இயல்பான பெண், அவள் களவு ஒழுக்க குற்றமிழைத்தவளாகவும் இருக்க சாத்தியமே இல்லை. அவள் கணவன் அவன் தன் இயல்புப்படி அவளை ஐயப்படுகிறான். இந்தப் பின்புலத்தில் வைத்துப் பார்த்தால் சட்டென்று முடிவெடுத்து தன்னை அளித்த வள்ளியம்மை மிக உயர்ந்து நிற்கிறாள். ஒருவகையில் பார்த்தால் எல்லாவற்றையும் யோசித்து நிகழ இருப்பதையும் அறிந்து முருகேசனின் உயிரை இவள் காப்பாற்றி உள்ளாள்தானே. தற்காத்து தற்கொண்டான் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என முன்பு நீங்கள் எழுதியவளொரு மலையரசி இப்பொழுது நீங்கள் எழுதியவள் ஒரு மங்கையர்க்கரசி. ஆலயம் கொண்டு அன்னையாய் கந்தர்வனோடு தேவியாக நிற்கப் போகின்றவள். எத்தனையோ இப்படிப்பட்ட தன்னையே அளித்த குடிகாத்த பெண் தெய்வங்கள் எல்லாவற்றையும் இணைத்து தானே பராசக்தி என்ற பெருந்தெய்வம் ஆக்கியுள்ளது நமது இந்து மரபு.

பதினேழாம் நூற்றாண்டு வாழ்க்கைச் சித்திரங்கள், மன்னராட்சி கொடுமைகள், மனிதர்கள், அவர்களின் எண்ணப் போக்குகள், குறைகள், மேன்மைகள், பேச்சு வழக்கு முறைகள், பஞ்சங்கள்,பட்டினிகள், பத்தினிகள் என எல்லாவற்றையும் மிக அழகாக வெளிப்படுத்திய ஒரு கதை.

ஒரு உன்னதமான கதை தந்த உங்களுக்கு உளம் கனிந்த அன்பும் நன்றியும்.

அன்புள்ள

ஆனந்த் சுவாமி

 

அன்புள்ள ஜெ

கந்தர்வன் ஒரு கதைநிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும். இத்தனை கூர்மையான ஒரு கதை உங்கள் படைப்புக்களில்கூட சமீபத்தில் வாசித்ததில்லை. கதை என்றால் அது வாள்வீச்சு போல எந்த வகையான முயற்சியும் தெரியாமல் நடக்கவேண்டும். மொழி, சூழல் எல்லாமே இயல்பாகவே ஒன்றாக இருக்கவேண்டும். அதோடு அந்தக்கதைக்கு நிலமும் பண்பாடும் இருக்கவேண்டும்.

கந்தர்வன் நான் பிறந்த நெல்லைப்பகுதியின் கதை. ஆகவே அதை நான் ஒரு பெரிய கண்டடைதலாகவே வாசித்தேன். எத்தனை மனிதர்கள் என்ற ஆச்சரியம்தான் ஏற்பட்டது. உரையாடல்கள் வழியாகவே ஒவ்வொருவரின் இயல்பும் மனநிலையும் வெளிப்படுகிறது. அதில் உச்சம் என்றால் செய்வதெல்லாம் செய்துவிட்டு நியாயவான்களைப் போல நடிப்பவர்களின் பேச்சுக்கள்தான்.

சிவ.கதிர்வேல்

யட்சன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கந்தர்வன் கதையையும் யட்சன் கதையையும் இணைத்து வாசித்தேன். கந்தர்வன் மேலிருந்து கீழே வந்தவன். இவன் கீழிருந்து மேலே செல்பவன். கந்தர்வனிடம் எந்த தீங்கும் அழுக்கும் இருட்டும் இல்லை. இவன் எல்லா தீங்கிலும் சிறுமையிலும் நீந்தி நோயாளியாகி அங்கே சென்றவன். இரண்டுபேரும் இரண்டு எல்லைகள். இரண்டுவகையான சாத்தியக்கூறுகள். இரண்டுபேரையும் இணைக்கும் அம்சமாக உடன்நின்றநங்கை.

இரண்டு கதைகளையும் வாசிக்கும்போது ஆன்மிகத்தின் இரண்டு வாய்ப்புகள் கண்முன் தெரிகின்றன. அணைஞ்சபெருமாள் தெய்வமாக ஆவது புரிந்துகொள்ள முடிகிறது. முருகப்பனும் அவனருகே அதேபோல தெய்வமாக அமர்ந்திருப்பதுதான் ஆன்மிகத்தின் விந்தை. அன்பு தியாகம் மட்டுமல்ல பொறாமை காழ்ப்பு எல்லாமும்கூட ஆன்மிகத்துக்கான வழியாக ஆகலாம் என்று நினைத்துக்கொண்டேன்

ஆனந்த்குமார்

அன்புள்ள ஜெ

யட்சன் கந்தர்வன் கதையின் அழகான நீட்சி. கந்தர்வன் கதையில் ஒரு மின்வெட்டுபோல வந்த கதையை அப்படியே விரித்து விரித்து எழுதப்பட்ட வாழ்க்கைச் சித்திரம். முருகப்பன் எங்கே செல்கிறான்? அவனுக்கு இலக்கே இல்லை. ஆனால் அவனால் வள்ளியம்மையிலிருந்து விலகமுடியவில்லை. வள்ளியம்மையிடமிருந்து அல்ல அவள் நிகழ்த்திய அந்தச் செயலில் இருந்த மர்மம்தான் அவனை ஈர்த்தது. அந்த மர்மத்தை அவன் தேடிச்செல்லச்செல்ல சித்தன் ஆனான்

அந்த மர்மத்தை சித்தனாகி தெய்வமாக ஆனபிறகும் கண்டுபிடிக்கவில்லை. கண்விழித்து வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருக்கிறான். முடிவிலாக்காலம் அப்படித்தான் அமர்ந்திருப்பான்

என்.ஆர்.ராஜ்குமார்

முந்தைய கட்டுரைவலம் இடம்,கொதி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாஞ்சில்நிலத்தின் நாக்கு