கந்தர்வன் [சிறுகதை]
அன்பின் ஜெமோவிற்கு வணக்கம்.
இந்தக் கொரோனா விடையார்த்தி(!) கதைகளைப் படித்து வருகிறேன்.
‘கந்தர்வன்’ ஓர் அற்புதமான, கச்சிதமான சிறுகதை.அதிலும் கன்னியாகுமரியின் வட்டார நடையில் நீங்கள் எழுதும் கதைகளைப் படிப்பதில் ஓர் அலாதி சுகம் எப்போதுமே எனக்குண்டு.இந்த மொழிக்குள்தான் தங்களின் பகடிகள் எப்படிப் பொருந்திப் போகின்றன? இந்தக் கதையை அறையில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் என்னையறியாமல் வெடித்துச் சிரித்து விட்டேன் போல.சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்த சக தர்மிணி “என்ன? ஜெயமோகனா? ரொம்பதான் பித்துப் பிடிச்சு அலையுறீங்க.”என்று கழுத்தை வெட்டிக்கொண்டு போனாள்.போகட்டும்.
இந்தக் கதையின் ஆன்மாவை எட்டிப்பிடிக்க முயன்று மீண்டும் மீண்டும் படித்தும் நான் வெற்றியடைந்தேனா என்ற சந்தேகம் என்னைப் படுத்துகிறது.
ஊர்ப் பெண்களின் கண்கள் பண்டாரத்தின் உடற்கட்டை மொய்ப்பதைப் படிக்கும்போது வள்ளியம்மையின் சத்தியங்களை முதலில் நம்பத்தான் முடியவில்லை.ஆனால் ‘பண்டாரம் எவரையும் பார்ப்பதில்லை.சோறு தவிர இவ்வுலகில் அவனுக்கு ஆர்வமிருப்பதாகவும் தெரியவில்லை’ என்ற வரிகளைக் கடந்து கதை பயணித்தபோது நம் மனசில் இருந்த சஞ்சலம் நீங்கி பண்டாரம் நம்மை மெல்ல மெல்ல ஆட்கொள்ளத் தொடங்குகிறான்.
மாராயக்குட்டிப்பிள்ளையிடம் அவன் கையளித்து ‘ஊருக்காக செத்தா நல்லதுதான்.இது ஊரு போட்ட சோத்தில வளர்ந்த உடம்பு’ என்று கூறி’ செரி.நல்லா வாழுங்க.. நல்ல படியா நெறைஞ்சு வாழுங்க’என்றதுமே நம் மனசில் அவன் கந்தர்வனாக இறங்கிவிட்டான்.
கதையில் வள்ளியம்மையின் பாத்திரத்தைத்தான் நம்மால் பாம்பென்றும் பழுதென்றும் பிரித்தரியமுடியாமல் மயக்கமடைய வைக்கிறது .முருகப்பன் இறந்துவிட்டான் என்று கூறி அழைத்துவரப்பட்ட வள்ளியம்மை தலையிலும் மார்பிலும் அறைந்து கதறியபடி சிதையருகே ஓடிவந்தவள் பிணத்தைப் பார்த்ததும் திகைத்து ஒரு சொல்லும் பேசாமல் துவண்டு தரையில் குந்தியவரையில் கதையோட்டத்தில் கரைந்து போகும் நாம் அவள் திடீரென்று சிதையில் பாய்ந்து அவன் உடலைத் தழுவிக்கொண்டதும் நெய்தீ அவள் ஆடைகளைப் பொசுக்கி ‘அவள் உடல் துடிப்பதும் நெளிவதும்’ என்ற க்ளாசிக் வரிகளில் திகைத்து நின்று விடுகிறோம்.
ஆக,அணைஞ்ச பெருமாள் என்ற பெயரை(உண்மையில் யாரையும் அணையாத பெருமாள்) அந்த பாத்திரத்திற்கு சூட்டியது அவன் ஊருக்காக உயிரை அணைந்ததாலா இல்லை வள்ளியம்மை அணைந்ததாலா என்ற கேள்வி அந்தரத்தில் நின்று கொண்டிருக்கிறது.
இப்படிக்குத் தங்கள் அன்புள்ள,
இரா.விஜயன்.
புதுச்சேரி-10.
அன்புள்ள ஜெ,
என்னதான் சொன்னாலும் கதை என்பதுதான் இலக்கியத்தின் பேரின்பம். ஒரு செறிவான வாழ்க்கையை அருகே பார்ப்பதுபோன்ற அனுபவம். தத்துவம் சரித்திரம் எல்லாம் சரிதான். கதையை ஒழுங்காகச் சொல்பவன்தான் கதாசிரியன். வலம் இடம் கதை தெளிவான கதை. ஆனால் கந்தர்வன் கதைசொல்லலில் ஓர் உச்சம். எந்த சிரமமும் இல்லாமல் ஓட்டம்மாகச் செல்கிறது.
ஒரு சிறுகதையில் எத்தனை கதாபாத்திரங்கள். எத்தனை ஜாதிகள். கூட்டம்கூட்டமாக மனிதர்கள். ஒரு முழு வரலாற்றுச் சூழலே உள்ளது.ஒரு மையக்கதை ஆற்றுவெள்ளம்போல குப்பை செத்தைகளுடன் செல்கிறது.ஆனால் அதனூடாக மிக நுட்பமாக இன்னொரு கதை ஊடாடிச் செல்கிறது. இப்படித்தான் எழுதமுடியும் வேறெப்படியும் முடியாது என்று சொல்லத்தக்கவகையில் முதல்கதையின்மேல் இரண்டாவது கதை ஏறி அமர்ந்துவிடுகிறது
கதாபாத்திரங்களைப் பற்றி விரிவாகச் சொல்லவில்லை. ஆனால் அத்தனைபேரின் முகங்களும் அருகே தெரிகின்றன. எனக்கு மிக சுவாரசியமாகத் தெரிந்தமுகம் முருகப்பனுடையது. அவன் சந்தேகத்தால் மனைவியை எதிர்த்திசைநோக்கி தள்ளுபவன். மாராயக்குட்டிப்பிள்ளை என்ற சூழ்ச்சிக்கார கிழவர். ஆனால் ஒரு தந்தைவடிவமும்கூடத்தான். பண்டாரத்தை தேர்வுசெய்தபின் அழவும் செய்கிறார். நல்லசிவம் செட்டியார் என்ற சூழ்ச்சிக்காரர், சட்டென்று தன் மகனை கொள்ளிபோடச்செய்து கோயிலுக்கு பாத்தியம் பெற்றுவிடுகிறார்.
நல்லெண்ணையை உள்ளங்காலில் பூசி வழுக்கிவிழுவதிலிருந்து பிரச்சினை வந்தால் ஓடிவிட நினைப்பது, பண்டாரத்தை ஏற்றிவிட்டுவிட்டு ‘நாம சொன்னா அவன் புத்தி எங்க போச்சு?’ என அவனையே வைவது வரை பிள்ளைமாரின் புத்தி. எதிலும் லாபநோக்கம், பிள்ளைமாருடன் ரகசியப்போட்டி என்று செட்டியார்களின் உலகம். இலக்கியம் எழுதப்படுவதே இதற்காகத்தான். நாம் அறிந்தே இருக்காத ஒரு முழு உலகமும் கிளம்பி வந்துவிட்டது. நாம் நம் பண்பாட்டில் ஒரு கட்டத்தில் போய் வாழ்ந்துவிட்டு வந்துவிட்டோம்
ஆனால் அது மட்டும் அல்ல. வரலாறு என்பது எழுதப்படுவது. எழுதப்படாதது பெண்களின் வரலாறு. அகத்தின் வரலாறு. எழுதப்பட்ட வரலாறு வழியாக எழுதப்படாத வரலாறு நோக்கிச் செல்கிறது கதை. அங்கே ஒரு மின்னலைக் காட்டிவிட்டு முடிந்துவிடுகிறது. கதை என்றால் இதுதான். சொல்லச்சொல்ல பெருகிக்கொண்டே போகும் ஒரு பெரிய அனுபவப்பரப்பு
எம்.சந்திரசேகர்
அன்புள்ள ஜெ
அணைஞ்சபெருமாளின் கதாபாத்திரம் ஆரம்பம் முதலே கந்தர்வன். அவன் இந்த உலகைச் சேர்ந்தவன் அல்ல. அவனுடைய தோற்றம் தேவர்களுக்குரியது. கோபுரத்தின் உச்சியில் இருக்கும் சிலைதான் அவன். பார்த்து ரசிக்கலாம், அணுகமுடியாது. அங்கிருந்து கீழே உதிர்ந்து வானுக்குச் சென்றுவிடுகிறான். அவன் நன்றாகச் சாப்பிட்டு எந்தக்கவலையும் இல்லாமல் கால்களை ஆட்டிக்கொண்டு படுத்திருக்கும் காட்சி கண்களை நிறைக்கிறது
வள்ளியம்மையை கவர்ந்தது அவன் உடல் என நான் நினைக்கவில்லை. அவனுடைய கவலையே அற்ற நிலைதான். அந்த தெய்வீகத்தன்மைதான். அவள் கணவன் வியாபாரி. அவள் அவனிடமிருந்து கந்தர்வனுடன் வானம்போக ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லை
சி.எஸ்.ராம்
அன்புள்ள ஜெ
கோபுரத்திலேறி குதிப்பது என்பது தமிழகத்தின் இடைக்கால வரலாற்றில் ஒரு பெரிய கலாச்சார ஃபினாமினான் ஆகவே இருந்திருக்கிறது. நிறைய குறிப்புகள் உள்ளன. வரிவசூலுக்கு எதிராகவும், கோயிலின் ஊழலுக்கு எதிராகவும், கோயிலை ஆக்ரமிப்பதற்கு எதிராகவும் கோபுரத்தில் இருந்து குதித்திருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் இதே சம்பவம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்தது என்று நினைக்கிறேன். சுசீந்திரம் கோயில் கோபுரத்திலிருந்துகூட ஒரு நம்பூதிரி குதித்துச் செத்திருக்கிறார். இது நம் ஊரின் ஒரு ஹராகிரி முறை. அநீதிக்கு எதிராக சாமானியன் எதிர்வினையாற்றுவது இப்படித்தான்.
தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிக்காலத்தில்தான் இப்படி உயரமான கோபுரங்கள் நிறைய வந்தன. அத்துடன் கோபுரத்தற்கொலைகளும் தொடங்கின. அத்தனை உயரமான இடம் அதற்குமுன் தமிழ்நாட்டில் எங்கும் இல்லை. உயரம் வந்ததுமே வீழ்ச்சியும் வருவது ஒரு ஆச்சரியமான முரண்பாடுதான்.
இந்தச் சரித்திரப் பின்புலம் கதைக்கு மிக அழுத்தமான ஒரு பெரிய அர்த்தத்தை அளிக்கிறது. பெரிய ஒரு கோயிலைச் சுற்றி சிறியதெய்வங்கள் உருவாகிக்கொண்டே இருப்பதைப்போல ஆச்சரியமான நிகழ்வு வேறு கிடையாது
ராஜ்குமார் செல்லையா