வெளியேற்றம்- கடிதங்கள்

நாகர்கோயிலும் நானும்

நாகர்கோயில்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நாகர்கோவில் குறித்த உங்கள் பதிவை படித்தேன். இலக்கிய குழுக்களை பற்றி எனக்கு தெரியவில்லை. நான் இங்கு பிறந்திருந்தாலும் பதின் பருவத்தில் நெல்லை மாவட்டம் சென்று அந்த நிலத்தின் வெறுமையை அக்னியால் அவதியுற்று அதற்கு என்னை தகவமைத்து கொண்டு என் நிலமாக மாற்றி கொண்டு வாழ்ந்திருந்தேன். பின்னர் தொழில் ரீதியாக எர்ணாகுளம் சென்று அங்கும் என் நிலமாக பாவித்தே 7 ஆண்டுகள் வாழ்ந்து வந்தேன்.

இதற்கிடையில் அம்மா கருங்கல் வந்தார்கள், இப்போது பகோட்டில் வீடு வைத்து விட்டார்கள். கடந்த மார்ச் முதல் நான் இங்கு தான் இருக்கிறேன். உண்மையில் நெல்லையோ எர்ணாகுளமோ இத்தனை ஆண்டுகள் அளிக்காத அணுக்கத்தை இந்த நிலம் எனக்கு அளித்துள்ளது. அதற்கு உங்கள் எழுத்துகள் முக்கிய காரணம். உங்கள் எழுத்தில் வெளிப்படும் நிலத்தின் மனிதர்களை இந்த ஓராண்டில் வீடுறைதலின் இடையில் அரிதாக வெளியில் செல்லும் போதும் கண்டு கொண்டே இருக்கிறேன்.

மிக சமீத்திய நிகழ்வு, காவி வேட்டி இளைஞர்கள் நான்கு பேர் ஒரு உணவகத்தில் உணவருந்தி விட்டு பணம் கொடுக்கையில் நான்கு பிரியாணி என்றார்கள், கல்லா பெட்டியில் இருந்தது ஒரு இளைஜன் (CSI கிறிஸ்தவன்), சீண்டுவதற்காக பிரியாணி என்றால் சிக்கனா பீஃபா என்றான், உணவகமே வெடித்து சிரித்தது. இளைஞர்களும் சிரித்து அவனை தழுவி சென்றாரகள்.

ஆனால் நாகர்கோவில் இதற்கு நேர் எதிர் என்பதே என் அனுபவம். உங்களுக்கு நிகழ்ந்ததும் அதுவே என்று நினைக்கிறேன், நான் நீங்கள் தாக்கப்பட்டபோது உங்கள் வீட்டிற்கு வந்திருந்தேன், அப்போது நான் உணர்ந்தது இது நீங்க வசிக்க தகுந்த இடம் அல்ல என்பதே. என் நினைவுகளில் பார்வதிபுரம் நாகர்கோவிலில் இருந்து விலகி இருந்தது, ஆனால் நாகர்கோவில் பார்வதிபுரத்தை விழுங்கி இருந்ததை அன்று கண்டேன். எங்கள் நிலத்தை  இன்னும் பத்தாண்டுகளில் மார்த்தாண்டம் விழுங்கி விடும் என்றே நினைக்கிறேன்.

லாபவெறி மேற்சொன்ன ரசனை சார்ந்த சூழலை இல்லாமல் ஆக்கிவிடும் என்றே கருதுகிறேன். அதன் தாக்கம் தெரிகிறது (கழுவன்திட்டையில் ஒரு குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி வந்து விட்டது), நிலத்தை நேரடியாக ஏற்கனவே ரப்பர் ஆக்கிரமித்து விட்டது. இங்கு லாபம் என்பது வெறும் பணம் சார்ந்தது மட்டும் அல்ல என்பதையே உங்கள் பதிவில் நான் புரிந்து கொண்டது.

பார்வதிபுரத்தை விட்டு வெளியேறும் திட்டம் நீங்கள் குறிப்பிட்டபோது ஒரு விடுதலையாக அமையும் என்று நம்புகிறேன்,

சிறு வருத்தத்துடன் வாழ்த்துகள்.

நன்றி,

அருள்.

***

அன்புள்ள அருள்

பார்வதிபுரத்தைவிட்டு உடனே வெளியேற முடியாது. இங்கே வீடு உள்ளது. அண்ணா இருக்கிறார். ஆனால் படிப்படியாக இன்னொரு வீட்டை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.

குமரிமாவட்டம் மதவெறியில் மூழ்கிவிட்டது. இரு எல்லைகளில் மட்டுமே இங்கே மனிதர்கள் வாழ்கிறார்கள்.

ஜெ

***

வணக்கம் ஜெ

உங்களுக்கு சமீபத்தில் வந்த கடிதங்களில் உங்கள் மீது வரும் அவதூறுகளும் வசைகளும் குறித்து எழுதியிருந்தீர்கள். வாசகர்களின் கடிதங்களும் கண்டேன். இதை தனித்த விஷயமாகக் கருதி வருந்தத் தேவையில்லை என்பதே என் எண்ணம். இன்றைய சூழல் இப்படித்தான் இருக்கிறது. இங்கு நடப்பது விவாதமே அல்ல. விதண்டாவாதம்தான். பாமரத்தனத்தை மகிழ்வித்து அதற்கு சொறிந்து சுகமளிக்கும் விதண்டாவாதம்.

எச்சப்பொறுக்கி என்று சொன்னதில் அதிர்ச்சியடையவோ ஆச்சர்யப்படவோ ஒன்றுமில்லை. இந்தக் காலி இந்துத்துவர்களை விடுங்கள். இன்று முகநூலில் ‘இன்டலெக்ஷுவல்’ ஆக அறியப்படும் இந்துத்துவர்கள் கூட உங்களைக் குறித்து பேசும்போது, அதன் தொனியைக் கவனிக்கும்போது, இந்தக் காலிகளின் கூச்சல் பெரிய விஷயமே இல்லை என்று தோன்றும். சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் மனநல மருத்துவர், பெரியாரிஸ்ட், இணையதள இன்டலெக்ஷுவல, ஒரு நூல் வெளியீட்டு விழாவில் உங்களைக் குறித்து பேசும்போது ‘புளிச்ச மாவு’, ‘காலி பெருங்காய டப்பா’ என்றுதான் பேசினார். இவர்கள்தான் தமிழ்சூழலில் அறிவுஜீவிகளாக அறியப்படுகின்றவர்கள். ‘நக்கீர முனிவர்’ போன்ற ஜனநாயகத்தின் நான்காவது தூணின் தேவைக்கு ஏற்றாற்போல சொறிந்து சுகமளிப்பவர்கள். இவர்களால் நிரம்பியதுதான் இன்றைய சூழல்.

எனக்கு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், நாகர்கோயில் குறித்த பதிவில் ‘இனி என் நிலம் அல்ல அது’ என்று குறிப்பிட்டது. இது எனக்கு அதிர்ச்சியளித்தது. அவ்வளவு எளிதில் அந்த நிலத்தை உங்களால் தூக்கி ஏறிய முடிந்ததா ? எழுத்தாளனுக்கு நிலம், தேசம்  எல்லாம் கிடையாது என்பது ஒருபுறமிருந்தாலும், உங்கள் புனைவில் நீங்கள் மீள மீள வாழ்ந்து அனுபவித்த நிலம் அது. உங்கள் புனைவு என்றாலே அந்த மலையாளம்+தமிழ் வட்டார வழக்கு, அந்த மக்கள், உணவு, பகடி இவைகள்தான் நினைவுக்கு வரும். நிலம் என்பது வெறும் மக்கள் கூட்டம் மட்டுமல்ல. அது மண், காடு, மலை, நீர் இவைகள்தான். அதைத் தூக்கி எரிந்து விட்டேன் என்று சொல்லும்போது எனக்கு நம்பமுடியாததாகத்தான் இருந்தது.

விவேக் ராஜ்

அன்புள்ள விவேக்ராஜ்

நான் ‘மனம் கசந்து’ அம்முடிவை எடுக்கவில்லை. நானே என்னை பார்த்துக்கொண்டிருந்தேன். கூடுமானவரை இங்கே இருக்கவே முயன்றேன். ஆனால் இங்கிருந்து மனம் விலகிவிட்டது. காலைநடை செல்வதே பிடிக்கவில்லை. பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறேன்.

இங்கே இருப்பது நீடிக்கும்தான். ஆனால் இன்னொரு இடம் எனக்கென இருக்கும். அங்கேதான் என் இறுதி அமையும். நான் இனிமேல் குமரிமாவட்டத்தின் எழுத்தாளன் அல்ல. அப்படி என்னை அடையாளப்படுத்த விரும்பவில்லை. அது ஓர் அவமதிப்பு என்று படுகிறது

ஜெ

***

முந்தைய கட்டுரைபெண்களின் நெஞ்சில் மூண்ட கனல்: இரம்யா
அடுத்த கட்டுரைகுமிழிகள்- கடிதங்கள்