கொதி[ சிறுகதை]
அன்புள்ள ஜெ
கொதி ஆழ்ந்த துயரத்தை மட்டுமல்ல துயரமே ஓர் ஆன்மிக அனுபவமாக ஆவதைக் காட்டும் கதை. இந்த கொதி எடுக்கும் சடங்கு வட இந்தியாவிலும் உண்டு. ஆனால் கடுமையான பஞ்சம் திகழும் ஆப்ரிக்காவில் இல்லை. அங்கே என்னென்னவோ சடங்குகள் உண்டு. இது இல்லை. இந்தச் சடங்கு இப்போது இல்லை. ஆச்சரியமென்னவென்றால் முப்பதாண்டுகளுக்கு முன்புகூட இருந்தது. இன்றைக்கு இல்லாமலாகிவிட்டது. பகிர்ந்து உண்பதற்கு நேர் எதிரான சடங்கு இது. பக்கத்துவீட்டானை உணவை பங்குபோடவந்த எதிரியாகப்பார்க்கும் சடங்கு. இப்படி ஒரு சடங்கு இங்கே இருந்தது என்பதே ஆச்சரியமானதுதான். இப்படி ஒரு நிலைமையிலிருந்து சென்ற இருபதாண்டுகளாகவே வெளியே வந்திருக்கிறோம் என்பது மேலும் ஆச்சரியமானது
சிவ.குமாரவேல்
அன்புள்ள ஜெ
கொதி கதை நெகிழ்ச்சியடையச் செய்தது. இரண்டு எல்லைகள் இங்கே உள்ளன. கிறிஸ்தவப் பாதிரிமார்கள் இங்கே வரவில்லை என்றால் நாமெல்லாம் காட்டுமிராண்டிகளாக இருந்திருப்போம் என்ற ஒரு பக்க பிரச்சாரம். இன்னொரு பக்கம், கிறிஸ்தவர்கள் ஒன்றுமே செய்யவில்லை, அவர்களெல்லாம் ஆதிக்கத்தின் ஐந்தாம்படை என்று பிரச்சாரம். இரண்டு பிரச்சாரங்களுமே உண்மைக்கு எதிரானவை. வெறும் வெறுப்புகள்
ஆனால் மதப்பிரச்சாரம் செய்வதற்காக பாதிரிமார் வரவில்லை என்றால் நாம் பட்டினியால் செத்திருப்போம் என்று சொல்வதை மன்னிக்கலாம். அதேசமயம் அதற்கு எதிர்ப்பிரச்சாரமாக அந்த பாதிரிமார்களின் அர்ப்பணிப்பையும் மனிதாபிமானத்தையும் இழிவுசெய்வதை மன்னிக்க முடியாது. அது நன்றிகொன்ற செயல். ஆன்மீகமான இழிவு அது. இருட்டில் தள்ளிவிடுவது
இந்த இரு நிலைகளுக்கு நடுவே கூர்மையான சமநிலையுடன் சென்றுகொண்டே இருக்கிறீர்கள். கால்டுவெல்லைப் பற்றிய லாசர் கதையும் ஓலைச்சிலுவை கதையும் நற்றிணை கதையும் எல்லாம் தமிழிலக்கியத்தில் நிகழ்ந்துள்ள நன்றிக்கடன் செலுத்துதல்கள். தமிழிலக்கியத்தில் இந்தவகையான பதிவு உங்கள் கதைகளில் மட்டுமே உள்ளது
பொன். முருகானந்தம்
வலம் இடம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஓராண்டுக்குப் பிறகும் தனிமையின் புனைவுக்களியாட்டுக்கு கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னமும் அக்கதைகள் வாசிக்கப்பட்டு முடிவுறவில்லை. இதோ அடுத்த களியாட்டு. ஒவ்வொரு கதையும் அற்புதமான அனுபவங்கள். ஒன்று ஒருவகைக் கதை. அதை வாசித்து நிறைவதற்குள் அடுத்த கதை. ஒன்றைவிட ஒன்று மேல். ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் சம்பதமே இல்லை. மிக ஆச்சரியமானதுதான்
வலம் இடம் ஒரு புதிரான கதை. ஆனால் நெகிழ்ச்சியான கதையும்கூட. சாவும் பிறப்பும்தான் அந்தக்கதையில் இரண்டு எருமைகள். வருவதும் போவதும். கண்ணுக்கு வாழ்வு தெரிகிறது. சாவு தெரிவதில்லை. அருகே நின்றிருக்கிறது. ஆனால் நுட்பமாக தெரியவும் செய்கிறது
சிவராம்
அன்பு ஜெ,
மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அருகிருந்தாலும் தொலைவிலிருந்தாலும் அவர்களோடு நாமறியாத உள்ளுணர்வின் மூலம் தொடர்பு கொண்டிருபோம். இங்கு குமரேசனுக்கும் அவருடைய எருமை மாட்டுக்கும் இடையேயான ஒரு அலவலாவள் சொற்களேதுமில்லாத உணர்வுகளின் வழி கடத்தக் கூடியதாய் அமைந்தொழுகி மனதை நிறைக்கிறது. முதன் முதலில் குமரேசன் இடது பசுவைப் பற்றி பிதற்றும்போது நானும் செல்லம்மாவைப் போலேயே அவனை தவறாக நினைத்துவிட்டேன். கதையை வாசித்துவிட்டு இரவு அதை அசை போட்டுக் கொண்டிருந்தேன். கனவில் இடது பசுவைக் கண்டேன். கதையின் ஆரம்பத்தில் மாட்டிற்கு வரும் வயிற்றுவலியின் போது இறந்து போன கன்றே இடது பசுவாக நின்றிருக்கிறது. அன்னையன்னும் நுண்ணுணர்வில் தன் கன்றை அறிந்து கொண்ட தாயை விட குமரேசன் என்னும் தாயின் அன்பு சிலிர்க்கச் செய்தது. அவன் இறுதியில் அந்தக் கனவில் ”மாட்டுவேவாரத்துக்கு மறைவெரல் பாசையில்” கண்டிப்பாக வலது மாட்டையே நினைத்துத் தொட்டிருப்பான். அதுவே லட்சுமி. அதுவே பல்லாயிரமாகப் பெருகி நிறைக்க முடியும். திடீரென நின்ற கோலத்தில் பெருமாள் நினைவிற்கு வந்தார். அவருக்கு வலத்தில் இருப்பவள் ஸ்ரீதேவி, இடத்தில் இருப்பவள் பூதேவி.. பின்னும் தங்கையா நாடார் சொன்ன இந்த வரிகளை நினைத்துப் பார்த்தேன் “தொளுவம் ஒளிஞ்சு கிடக்கக்கூடாது. மூத்தவ வந்து நின்னுகிடுவா”. கண்டிப்பாக அவர் வலத்தையே தொட்டிருக்க வேண்டும்.
”தாங்குறவனுக்குத்தான் தெய்வம் துக்கத்தை தரும். தாங்காதவனுக்கு சொப்பனத்தை குடுக்கும்.” என்று சொல்லியிருந்தீர்கள். குமரன் தாங்கமாட்டாதவன் தான். அவனுக்காகவே அம்மையின் அனுக்கிரகமாய் மீண்டும் வந்து சேர்ந்த ஸ்ரீதேவிக்காய் மகிழ்ந்தேன்.
மிக நெருக்கமானவர்களின் இறப்பின் உள்ளுணர்வு மீண்டும் என் தாத்தாவை நினைவுபடுத்தியது. எனக்கும் அது இருந்தது. அவர் இறப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்னரே அவர் இறந்துவிடுவார் என்று எண்ணி அழுது கொண்டிருந்தேன். அவர் இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் அவரைப் பார்க்க வயல்காட்டிற்கு சென்றபோது அவர் மிகவும் சுருங்கிப் போயிருந்தார். எப்பொழுதும் போல என் கைகளை தன் மடியில் வைத்து கையின் ரேகைகளை தொட்டு கோடு போட்டுக் கொண்டிருந்தார். எப்போதும் சொல்லும் கிருஷ்ணரின் கதைகளினின்று ஏதும் சொல்லவில்லை. தன் கைகளை என்னிடம் நீட்டி தனக்குக் கைகளின் நடுவில் சக்கரம் இருப்பதாகக் காட்டினார். நான் சரி என்று முத்தமிட்டேன். மதிய உணவை நான் ஊட்டி விட்டபின் அவர் வேப்பமர நிழலில் நாற்காலியில் உட்கார்ந்து வயல்காட்டையே வேறேதோ இடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதைப் போல மூழ்கியிருந்தார். நான் அருகே போய் படுத்துக் கொண்டு அவரையே பார்த்திருந்தேன். திடீரென அவரிடம் “தாத்தா சாவறத பத்தி நீ என்ன நினைக்கிற” என்று சொன்னேன். அவருக்குக் காது கேட்காது என்பது நினைவிற்கு வரவே அமைதியானேன். மீண்டும் அழைத்து ”படு” என சைகை காணித்தேன். “படுத்தா எந்திரிக்க மாட்டேன். உக்காந்திருக்கேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் வயக்காட்டில் உழுத மண்ணை வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு வாரங்கள் கழித்து அவர் எழுந்திரிக்கவே முடியாத ஒரு இடத்தில் தூங்கிப் போனார். எப்போதும் போல் இன்றும் எங்கோ தொலைவில் அவர் இருப்பதாய் நினைத்து அவருடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். அவர் இல்லையென்று சொல்லிவிட முடியாது. குமரேசனுக்கு மீண்டும் அம்மை கிடைத்தது போல எனக்கும் அந்தத் தருணம் கிடைக்கும் என்றே நினைக்கிறேன். நுண்ணுணர்வின் அன்பு ஆழமானது. பைத்தியமானதும் கூட. நெகிழ்வான கதை ஜெ. நன்றி.
அன்புடன்
இரம்யா.