குமிழிகள் – கடிதங்கள்

குமிழிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

குமிழிகள் உங்கள் ஒரு ஆழமான விவாதங்கள் கொண்ட கதைப்பாணியில் அமைந்துள்ளது. எந்தவகையான அறிவுபூர்வத்தன்மையும் இல்லாமல் வெறும் கதையாகவே அமைபவையே இந்தக்காலத்தில் நீங்கள் எழுதும் கதைகள். ஆழம் அவற்றின் உள்ளே உள்ளடங்கியிருக்கும். ஆனால் திசைகளின் நடுவே, போதி தொடங்கி பிழை போன்ற கதைகள் வரை ஆழமான விவாதங்கள் கொண்ட கதைகள் உண்டு. அத்தகைய கதைகளில் ஒன்று இது.

இந்த வகையான கதைகளில் ஏதேனும் ஒரு தரப்பை நீங்கள் வலியுறுத்துவதில்லை. எல்லா தரப்பையும் சமமாகவே சொல்லிவிடுகிறீர்கள். இதனால் நிலைபாடு எடுக்கும் வாசகர்கள் குழம்பிவிடுகிறார்கள். இதில்கூட இரண்டு தரப்புகள் உள்ளன. ஒன்று, பெண் ஆணுக்கு நிகரான இடத்தை சமூகத்தில் அடையவேண்டும் என்றால் அவள் தன் உடலையும் ஆளுமையையும் ஆணைச்சார்ந்ததாக வைத்துக்கொள்ளக்கூடாது என்னும் நிலைபாடு. அவள் தன்னளவில் முழுமைக்குத்தான் முயற்சி செய்யவேண்டும். அவளுடைய விடுதலை அப்படித்தான் இருக்கமுடியும்

இல்லை, ஆணைச்சார்ந்துதான் அவள் உடல் இருக்கமுடியும் என்றால் அடுத்த கேள்வி அவளுடைய ஆன்மீகம் மட்டும் தன்னியல்பானதாக இருக்கமுடியுமா என்பதுதான். ஒரு பெண் துறவி ஆணுக்கு உரியவளாக இருந்தால்தான் மோட்சம் அமையுமா என்ன? இல்லையே. அப்படியென்றால் லௌகீகத்தில் மட்டும் ஏன் அப்படி என்று வரையறை செய்யவேண்டும்?

அதற்கு எதிராக சாம் சொல்வது அடிப்படையான கேள்வி. அப்படி பெண் தனித்தபாதையில் விடுதலை நோக்கிச் சென்றால் அவள் ஆணின் காமத்தை தவிர்க்கவேண்டியிருக்கும். ஆணும்பெண்ணும் அப்படி தனிப்பாதை தேர்வுசெய்தால் உலகில் காமம் காதல் என்பதே இல்லாமலாகிவிடுமே? அது இயற்கையின் விதி அல்லவா?

இரண்டுமே சரிதான்.இந்த வகை கதைகளில் அந்த மையப்புள்ளியை அடைந்தபிறகு கதை ‘சொல்வது’ என்ன என்று பார்க்கக்கூடாது. நமக்கு பிடித்ததை எடுத்துக்கொள்ளவேண்டும்

எனக்கு படுவது இதுதான். லிலி போன்ற சிலர்தான் அப்படி மீறிச்செல்கிறார்கள். ஜான்சி ராணி லட்சுமிபாய் மாதிரி. பி.டி.உஷா மாதிரி. இந்திராகாந்தி மாதிரி. அவர்கள் ஆணுக்கானது என தன்னிடம் எதையும் வைத்திருக்கமாட்டார்கள். அவர்களின் முழுமை அவர்களே நிரப்பிக்கொள்வதாகவே இருக்கமுடியும்

ஆனால் இந்தக்கதை இருப்பது அதற்கு மேலேதான். அப்படி ஒரு முழுமையை தன்னைத்தானே பெண் அடைவாள் என்றால் அது என்னவாக புரிந்துகொள்ளப்படும் எப்படி ஆணால் எடுத்துக்கொள்ளப்படும் என்பதுதான் கதையே.

எஸ்.

அன்புள்ள ஜெ

குமிழிகள்.இக்கதையில் இரண்டு தொன்மையான படிமங்கள் குறிப்பிட படுகின்றன. வாசிப்புக்காக அவற்றைபற்றி இணையத்தில் தேடினேன்.

ஒன்று: அப்சரஸ். ஈர்ப்பதன் பொருட்டு தங்களின் உருவங்களை மாற்றிகொள்பவர்கள். பொருளுலகின் தெய்வங்கள் என்று குறிப்பிடபடுகிறார்கள். தீரா இளமையும் அழகும் கோரி தவமிருந்து சிவனிடமிருந்து அதை பெற்றார்கள் என்பது தொன்ம கதை.

லிலியும் அதையே செய்கிறாள். தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கைக்கான(role) உருமாறி கொள்கிறாள். தன்னை நோக்கி ஈர்க்கும் உடல். அதற்க்காக அவள் ஆணை மட்டுமல்ல தன்னுடைய காமத்தையே கூட கடக்கிறாள். முதலில் அதில் சாம் க்கு அதில் ஆன்மீகமான இடர் ஒன்றுள்ளதாக படுகிறது. ஆனால் அவனும் இத்தனை காலம் கடந்தும் மர்லின் மன்றோ புகைப்படத்தால் ஈர்க்கபடுகிறான். அதுவும் கையால் சுடுவதை போன்ற புகைப்படம், ஒருவேளை பெண் தன் அழகின் மூலம் ஈர்க்க அல்ல அடக்கவே நினைக்கிறாளோ.

இரண்டு: அபிதகுசலாம்பாலை பற்றியது. தான் வணங்கப்படாததால் பார்வதி தவமிருந்து சிவனின் பாதி உடலை கோரி பெற்று அர்தநாதிஸ்வராவது தொன்மம். அபிதகுஜாம்பாளுக்கு உண்ணாமுலை அம்மன் என்றும் பெயர். சாம் இந்த தொன்மத்தின் வழியாகவே லிலி யை புரிந்து கொள்கிறான். உடலும் அழகும் போன பின்னும் பிறரிடமிருந்து அதே மதிப்பும் வணக்கமும் வியப்பும் செல்வாக்கும் இருந்தால் லிலி இதை செய்யப்போவதில்லை. அப்படி இல்லாததனால் தான் இதை செய்கிறாள்.

இக்கதையில் வட இந்தியா அமெரிக்கவை, தென் இந்தியா வட இந்தியாவை பாவனை செய்கிறது என்று வருகிறது. இதை நாங்கள் சமூகவியலில் படித்திருக்கிறோம். அது எங்களுக்கு sanskritization என்று விளக்கப்பட்டது. அது அடிதட்டில் இருக்கும் சமூகம் பொருளாதாரத்திலும் அதிகாரத்திலும் மேல்நிலையில் உள்ள சமூகத்தின் உடை, வாழ்க்கைமுறை, பாவனைகள், சடங்குகளை தனதாக்கிகொள்ளும் என்பது.

“கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்;

ஒரு காப்பி சாப்பிடலாம், வா.”

என்பது தேவதேவனின் கவிதை.

கதையில் சாமிநாதன் சாம் ஆனதுபோல், லலிதா லிலி ஆனதுபோல். முலைகள் கோப்பைகளாகவும், சிவப்பு வைன் பெண்மையின் சாரமாகவும் ஆகிறது. வைனை கோப்பையில் ஊற்றும் போது குமிழ்கள் தோன்றி மறையும். உடல் என்னும் குமிழ்களை பருகுபவன் வெறும் நுரையையே உண்கிறான், அவன் பெண்மையின் சாரத்தை உண்பதில்லை.

கதைக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இரு வேறு நிலைகளில் இருந்து விவாதம் நிகழ்கிறது. கதை தொல்காலதிலிருந்து  இன்று வரை மாறாத நியதியை சொல்கிறது.

என்ன தேவதேவனின் கவிதையின் காமத்தில் எதிரே அமர ஒரு பெண் வேண்டும். இக்கதையில் அதுவும் வேண்டியதில்லை. விருப்பமுடைய முலைகள் போன்ற கோப்யையும் பழரசமும் போதும் என்கிறது. ஒரு உன்னதமாக்கல் நிகழ்கிறது. கோப்பையும் பழரசமும் உடலை கடந்த உன்னதமாக்க பட்ட உரையாடல் ஆகிறது.

நன்றி

பிரதீப் கென்னடி.

அன்புள்ள ஜெ

குமிழிகள் சிறுகதை பலவாறாக வாசிக்கப்படுகிறது. அதற்கு வரும் எதிர்வினைகள் ஆச்சரியமூட்டுகின்றன. எங்கள் நட்புக்குழுமத்தில் மிகத்தீவிரமான விவாதங்கள் நடந்தன. என்ன பிரச்சினை என்றால் பலநாள் பேசவேண்டிய கதை. பேசிமுடிப்பதற்குள் அடுத்த கதை வந்துவிடுகிறது

குமிழிகள் கதையில் நான் வாசித்தது இதுதான். எந்த ஒருவிஷயமும் முதலில் ஒரு அப்ஜெக்டிவான பிராக்டிகலான பயாலஜிக்கலான விஷயமாக இருக்கிறது. அது மெல்லமெல்ல இமேஜினேட்டிவாக, சிம்பாலிக்காக ஆகிவிடுகிறது. அழகியலாக ஆகிவிடுகிறது. மார்பகங்களும் அப்படித்தான். அவை பெண் பாலூட்டுவதற்கு தகுதியானவளா என்று அவளை கருவுறச்செய்யும் ஆண் பார்ப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் உரியவை. ஆகவே அவை பாலுணர்வை அளிப்பவையாக ஆயின. அவை மூடப்பட்டதும் அவை ரகசியமாக ஆயின. கண்ணிலிருந்து மறைந்தன. உடனே அவை கலையாக மாற ஆரம்பித்தன

ஆப்ரிக்க சிற்பங்களில் முலைகள் பற்றி ஒரு வரி கதையிலே வந்தது. ஆப்ரிக்காவில் முலைகளை மூடுவதில்லை. ஆகவே அங்குள்ள சிற்பங்களில் ரொமாண்டிக் சித்திரம் இல்லை. யதார்த்தமான முலைகளை ஆப்ரிக்கச் சிலைகளில் மட்டும்தான் பார்க்கமுடியும். இந்தியாவில் முலைகள் மூடப்பட்டதுமே கற்பனை கட்டின்றி பறக்க ஆரம்பித்தது. இந்தியச் சிலைகளில் ஐடியல் முலைகளுக்கான தேடலே உள்ளது.

அதேதான் இங்கே நடக்கிறது. முலைகள் பெண்ணின் பெர்சனாலிட்டி சார்ந்தவையாக ஆகின்றன. அவை அவளுடைய உடைமைகள் ஆகின்றன. தொடமுடியாதவை ஆகின்றன. எல்லா பெண்களும் அபிதகுசலாம்பாளாக ஆகின்றனர். அப்போது என்னாகிறது? ஆண் காமத்தை கலையாக ஆக்கிக்கொள்கிறான். கனவில் அதை பெருக்கிக்கொள்கிறான். வைன் கிளாஸிலும் படங்களிலும் முலைகளை மறு கண்டுபிடிப்பு செய்கிறான். கதை முடியும் இடம் அதுதான்

எஸ்.ராமச்சந்திரன்

குமிழிகள்- கடிதங்கள்-1

முந்தைய கட்டுரைகந்தர்வன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாகர்கோயிலில் ஓர் உரை