நாகர்கோயில்- கடிதங்கள்

நாகர்கோயிலும் நானும்

அன்புள்ள ஜெயமோகன்

தங்களது “நாகர்கோயிலும் நானும்” பதிவு வருத்தமளிக்கிறது.தாங்கள்  ஒரு ஆக்கபூர்வ சக்தி. நீங்களே விரக்தி பதிவிடலாமா?

ரங்கராஜன் ராமஸ்வாமி

அன்புள்ள ரங்கராஜன்

அது விரக்திப் பதிவு அல்ல. அது ஓர் யதார்த்தம். நான் இருக்கும் நிலையைச் சொன்னேன். அதில் சோர்ந்துபோயிருந்தாலோ, அல்லது சலிப்புற்றிருந்தாலோ அது விரக்தி. நான் வருந்தக்கூட இல்லை. அதுவே இயல்பான பரிணாமம் என்றுதான் நினைக்கிறேன். இன்னும் பெரிய கனவுகளையும் திட்டங்களையும் நோக்கிச் செல்வதற்கான தொடக்கம். புதியநிலம் நோக்கிச் செல்வதற்கான ஆணை அது.

ஒரு நிலத்தின்மேல் கொண்டிருக்கும் பற்று என்பது ஒரு தளைதான். அதை கடப்பது நல்லதுதான். அது இப்படி நிகழவேண்டுமென்றிருக்கிறது.

ஜெ‌

விவாதம்,மொழி, எல்லைகள்

ஆசிரியருக்கு வணக்கம்,

நான் உங்கள் மாணவர்களில் ஒருவன்,உங்கள் இணையதளத்தை தினமும் வாசிக்கும் லட்சம்பேரில் ஒருவன்.நீங்கள் யாரென எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.பொது வெளியில் உங்களை பற்றி சொல்லப்படும் கீழ்த்தரமான (எ பொ)போன்ற வரிகளை ஒருவர் உங்களுக்கு எழுத நீங்களும் தளத்தில் வெளியிட்டு நான் படிக்கும்போது மிக உளச்சோர்வடைகிறேன்.

கடந்த ஆண்டு ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து “தான்  நடக்கும் பாதையில் ஒரு இஸ்லாமியர் வந்தாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது என ஜெயமோகன் சொன்னதாக முகநூலில் பரப்புகிறார்கள்,நீ அவரது நண்பன்தானே,என்ன சொல்கிறாய்”என கேட்டார்.

அது ஜூன் மாதம் குருபூர்ணிமா நாள் நானும்,மூத்தவர் லக்ஷ்மிமணிவண்ணனும்,தம்பி சுசீலும் உங்களை சந்தித்து ஆசி பெற்று வெண்முரசு நிறைவுக்கு பாராட்டி மாலையணிவித்து ,எனது கையால் முருக கடவுள் சிலையை பரிசளித்தபின்.உங்கள் அருகில் இருந்து அருணா அக்கா கையால் ஆப்பமும் கடலை கறியும் சாப்பிட்டு வந்தேன்.

அதையே அவரிடம் பதிலாக சொன்னேன் “இப்பத்தான் அவருக்க வீட்ல கூட இருந்து காப்பி குடிச்சிட்டு வாறன்,அவரை பற்றி தூற்றுபவர்கள் அவர் எழுதிய லட்சக்கணக்கான வரிகளில் பத்து வரியை கூட படிக்காதவர்கள் அல்லது அவரிடம் நேரில் பத்து நிமிடம் பேசி பழகாதவர்கள்”என்றேன் .

பொறுக்க முடியாமை ,இயலாமையினால் ஒரு கூட்டம் தூற்றி கொண்டே இருக்கிறது அது எப்போதும் இருக்கும்.நாங்கள் மதிக்கும் ஆசானை,போற்றும் குருவை பற்றி பொதுவெளியில் சொல்லப்படும் இதுபோன்ற கீழ்தர வார்த்தைகளை கொண்ட வசைகளை என்னால் தாங்கிக்கொள்ள இயலாது.

இது என் குரல் மட்டுல்ல உங்களை ஆசிரியராக,குருவாக மதிக்கும்,உங்கள் இணையதளத்ததை வாசிக்கும் உண்மையான வாசகர்களின் குரலும் கூட.

ஷாகுல் ஹமீது .

 

அன்புள்ள ஷாகுல்

நலம்தானே? குளச்சல் வழியாக கடலிலேயே கடந்துசென்றீர்கள் என்று அருண்மொழி சொன்னாள். வேடிக்கையாக இருந்தது.

வெறுப்பு பற்றிச் சொல்லியிருந்தீர்கள். வாசகர்கள் அல்லாதவர்களின் கருத்துக்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அவர்கள் எளிய அரசியலையோ, மதத்தையோ வெறுப்பாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

மதத்தை எதையேனும் விரும்புவதற்காக பயன்படுத்துபவர்கள் மிகச்சிலர்தான்

ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலி டாக்டர் வி. ஜீவானந்தம்- குக்கூ சிவராஜ்
அடுத்த கட்டுரைஅன்றாடத்திலிருந்து திரள்வது