கண்கூடான காந்தி
சில வருடங்களுக்கு முன்பு, ஈரோடு டாக்டர் ஜீவானந்தம் அவர்கள் என் தொலைபேசிக்கு அழைத்து, “திருவண்ணாமலைக்கு வந்திருக்கேன். உன்ன பாக்கணும்” என்றார். நானும் குக்கூவிலிருந்து கிளம்பிப்போய் அவரைப் பார்க்கச் சென்றேன். சேலத்திலிருந்து இரு மருத்துவ நண்பர்களும் டாக்டருடன் வந்திருந்தார்கள். அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள ஒரு மருத்துவமனையை புதுப்பித்து துவங்குவதற்கான திட்டத்தில் இருந்தார்கள். அச்சமயம் அம்மருத்துவமனை வெளிநாட்டுப் பெண்மணி ஒருத்தருடைய நிதியுதவியில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த மருத்துவமனையின் உள்ளே எல்லா பகுதிகளையும் சுற்றிப்பார்த்துவிட்டு, ஏழெட்டு பிற மருத்துவர்களுடன் கூடி டாக்டர் ஜீவா ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்.
பத்து நண்பர்கள் இருந்த அக்குழுவில் எல்லோரும் மருத்துவர்கள். சில பெண் மருத்துவர்களும் அந்த ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். உரையாடலின்போது டாக்டர் ஜீவா, அம்மருத்துவமனையில் இன்னின்ன பகுதியில் இன்னின்ன மருத்துவ வசதிகள் (உதாரணமாக ஸ்கேன் வசதி, புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு) வரவேண்டும் என ஒவ்வொரு இடமாகச் சுட்டிக்காட்டினார். அந்த மருத்துவமனை இன்னும் நவீனமயமானதாகவும், அதேசமயம் எளிய மக்களுக்கு அதனுடைய சேவைகள் எளிதில் சென்றடையுமாறு குறைந்தபட்ச சிகிச்சை செலவில் இயங்குவதாகவும் இருக்க வேண்டுமென அக்குழுவினருக்கு திட்டத்தை வகுத்துக்கொடுத்தார். திருவண்ணாமலை, பின்தங்கிய மாவட்டம் என்பதால் அம்மருத்துவமனை உரியமுறையில் பேணப்பட வேண்டும் என்பதில் டாக்டர் ஜீவா உறுதியாயிருந்தார்.
தருமபுரியில் ஒரு புது மருத்துவமனையும், திருவண்ணாமலையில் இம்மருத்துவமனையை நம் தேவைக்குத் தக்க மாற்றியமைத்து இயக்கலாம் என்பது அவருடைய திட்டம். காலையிலிருந்து பின்மதியம்வரை நெடுநேரம் மருத்துவமனை வளாகத்தைச் சுற்றியலைந்து, ஒவ்வொரு இடமாக நின்று திட்டம்வகுத்து மெனக்கெட்ட ஜீவா டாக்டரின் உருவம் இன்னும் அச்சுப்பிசகாமல் நினைவிலுள்ளது. அதன்பின் எல்லோரும் இரண்டு கார்களில் ஏறி, மலைச்சுற்றுப் பாதையில் இருந்த ஒரு ஆசிரமத்திற்குள் போனோம். மலையடுவாரத்துக் கீழே அமைந்த அந்த ஆசிரமத்துக்குள் நுழைந்தவுடன் நித்யானாந்தாவின் ஒரு பெரிய உருவப்படம் அங்கிருந்தது. அப்படத்தின் கீழே ஒரு ரப்பர் செருப்பு வைத்திருந்தார்கள். அங்கு சென்றிருந்தவர்களில் டாக்டர் ஜீவாவைத்தவிர மற்ற எல்லாரும் அதைத் தொட்டுக் கும்பிட்டார்கள்.
அப்பொழுதுதான் எனக்கு ஒரு உண்மை விளங்கியது. அந்தக் குழுவில் உள்ள ஆறேழு பேர் நித்தியானந்தா ஆசிரமத்தில் பக்தர்களாக உள்ள மருத்துவர்கள். அதன்பின் அந்த ஆசிரமத்துக்குள் வைத்து எங்களுக்கு உணவுப் பரிமாறினார்கள். எல்லாவற்றையும் பொறுமையாக அவதானித்து ஒரு கோர்வையை ஏற்படுத்திக்கொண்ட பிறகே எனக்கு விசயம் புரிந்தது, அந்த மருத்துவமனையை பொறுப்பேற்று, நித்யானந்தாவின் ஆசிரம நிதயிதவியில் அந்த மருத்துவமனையை இடைநில்லாமல் இயங்கவைப்பது. ஒருபக்கம் எனக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியாகவும், இன்னொருபக்கம் இதனால் டாக்டருக்கு ஏதாவது அவப்பெயர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் ஒருசேர உள்ளெழுந்தது. நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு, அபகரிப்பு, ஆக்கிரமிப்பு என ஏராளமான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் பேசப்படுகிற சூழலில், இது டாக்டரை எதாவது மதிப்பிழக்கச் செய்திடுமோ என நான் பதறினேன்.
அந்தக் குழுவில், டாக்டர் கீர்த்தனா என்றொரு பெண்ணும் இருந்தாள். அவளுடைய அம்மா, அப்பா என அந்த குடும்பமே ஒரு மருத்துவக்குடும்பம். நாமக்கல்லில் வசித்துவந்த அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆசிரமத்திற்கே வந்து தங்கிவிட்டார்கள். டாக்டர் ஜீவாவும் அந்தப் பெண்ணும் அம்மருத்துவமனை குறித்து நெடுநேரம் பேசிய காட்சிச்சித்திரம் என் மனதுக்குள் துல்லியமாக நினைவிருக்கிறது. டாக்டரும் அப்பெண்ணும் பேசிக்கொள்வதைப் பார்க்க பார்க்க ஏதோ தந்தை-மகள் பேசுவதுபோல மீளமீள எண்ணத்தில் தோன்றியது.டாக்டரின் தலையைக் கோதியபடியே அப்பெண் பேசிய அந்த வாஞ்சை நிறைந்த உரையாடல் என்றும் நினைவழியாத பொக்கிஷம்.
அதன்பின் ஜீவா டாக்டரும் நானும் மெல்ல நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் நடக்க ஜீவா மெல்லமெல்ல என்னிடம் சொல்ல ஆரம்பித்தார், “அந்த பொண்ணோட அப்பா படுத்தபடுக்கையா இருந்தாரு. நித்யானந்தாதான் அவர குணமாக்குனாருன்னு அவங்க நம்புறாங்கடா. அது அவங்க நம்பிக்கை”. அப்பவும்கூட எனக்கு அச்சம் துரத்தித் தொடர்ந்தபடியே இருந்தது. நித்யானந்தா மருத்துவமனையை டாக்டர் ஜீவா அவர்கள் திட்டம்வகுத்து செயல்படுத்திவதில் ஒரு உறுத்தல் எனக்குள் இருந்தது. ஆனாலும் அதை அவரிடம் எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை.
அடுத்து நான்கைந்து மாதங்கள் கழித்து ஈரோட்டில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அதில் பேசுவதற்காக தா.பாண்டியன் அங்கு வந்திருந்தார். அச்சமயம் ஜீவா அவரிடம், ” உங்க கட்சிக்கு சொந்தமான இடத்துல ஒரு பெரிய ஆஸ்பத்திரி கட்டலாம். உங்ககிட்ட இவ்ளோ தொண்டர்கள் கட்சில இருக்காங்க. ஆளாளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தாலே அந்த மருத்துவமனையை சில கோடிகள்ல நம்மால கட்டமுடியும். ஆஸ்பத்திரி வருமானத்துல திரளும் தொகைய கட்சிக்கான நிதியா வச்சுக்க முடியும்” என்றார். இப்படி கட்டப்படுகிற மருத்துவமனையில் என்னென்ன வசதிகள் இருக்கும், தொண்டர்கள் எப்படி சலுகைத் தொகையில் சிகிச்சை பெறுவது உள்ளிட்ட பல தகவல்களை டாக்டர் ஜீவா தெரிவித்தார்.
பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு தா.பாண்டியன், “இல்ல நாங்க அங்க ஒரு காம்ப்ளக்ஸ் கட்டலாம்னு இருக்கோம். இது கட்சில எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு” எனச் சொன்னார். விரக்தியும் சலிப்புமாக ஜீவா அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
அச்சமயம் பொறியாளர் மனோகரன் டாக்டருக்கு நெருக்கமான நண்பராக இருந்தார். அந்த மனோகரனும் டாக்டரும் உரையாடிக் கொண்டிருக்கையில் நான் அவரிடம் கேட்டேன், “என்னங்க டாக்டர், நாம நித்யானந்தாகிட்ட உதவிக்காக போய் நிக்குறோம். இது ஏதோ உறுத்தலா இருக்கே. யாராச்சும் தப்பா எடுத்துட்டா?” என என் மன அச்சத்தை அவரிடம் சொன்னேன். அதற்கு டாக்டர் ஜீவா, “இல்லடா… தவறான ஒருத்தனா காட்டப்படுற ஒருத்தன் அவனோட செல்வத்த இந்த சனங்களுக்கு பயன்படுத்த விரும்புறான். ஆனா, மக்களுக்காக தீவிரமா களத்துல வேலைசெய்யுற கட்சின்னு சொல்றவங்க தங்கள் செல்வத்த வேறமாதிரி பயன்படுத்துறாங்க. நாம என்னசெய்யனும்னா, அந்த பெருஞ்செல்வத்த எப்படி மக்களுக்கானதா மாத்தனுங்கிறததான் நாம யோசிக்கனும். எப்படியோ எதுவுமே கிடைக்காத எளிய மனுசங்களுக்கு ஆதாயம் கிடைக்கனும்” என்றார். அப்பொழுதும்கூட அந்த பதில் எனக்கு உவப்பாக இல்லை.
பின்பொருமுறை, தஞ்சையில் டிரஸ்ட் ஹாஸ்பிட்டல் கட்டும் பணிகளுக்காக, கம்யூனிஸ்ட் தோழர் நல்லகண்ணு அவர்கள் ‘பீடிசுற்றும் தொழிலாளர் சங்கத்திலிருந்து’ ஒரு லட்ச ரூபாயை நிதியாக ஜீவா டாக்டருக்குத் தந்தபோது என்னுள்ளம் அவ்வளவு நெகிழ்ந்திருந்தது. எக்காலத்தும் வணங்கத்தக்க செயலது.
ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும் டாக்டரின் அணுகுமுறையை அருகிருந்து அனுபவப்பட்ட பிறகு, மெல்லமெல்ல அந்த அணுகுமுறை எனக்குள்ளும் உருவாகிவருவதை என்னால் உணரமுடிந்தது. கட்சி, சித்தாந்தம் என எவ்வித பேதமும் யார்மீதும் அவருக்குக் கிடையாது. எவரால் எளிய மனிதர்களுக்கு நல்லது நிகழ்ந்தாலும் அவரின் ஆற்றலை பயன்படுத்திக்கொள்ளும் மனிதராகவே டாக்டர் எப்போதுமிருந்தார். இலக்கு என்பது செயலாகவும், இணக்கம் என்பது பாதையாகவும் அவருக்கிருந்தது. என் பால்யத்தை வார்த்த ஆசான்களில் டாக்டர் ஜீவாவின் இருப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது என்பதை நினைக்கையில் விம்மலெழுகிறது.
ஈரோடு டிரஸ்ட் ஹாஸ்பிட்டல் (கூட்டுறவு மருத்துவமனை) துவங்கி சில ஆண்டுகளான காலகட்டத்தில், அங்கிருக்கும் மாநில அமைச்சருக்கும் டாக்டரிக்கும் ஒரு முரண் உண்டான போது, அந்த மருத்துவமனை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு அதை பொக்லைன் மூலம் இடிக்க வந்தார்கள். அச்சமயம் உதயச்சந்திரன் அங்கு பொறுப்பிலிருந்தார். டாக்டர் ஜீவா, தன்னந்தனி ஆளாக மருத்துவமனை முன்பாகப் போய்நின்று, “ஒருத்தரும் வெளிய வராதீங்க. நான் பாத்துக்கிறேன்” எனச்சொல்லி, கட்டிடத்தை இடிக்கும்நிலையிலும்கூட அங்கேயே நின்றிருந்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே அம்முயற்சி கைவிடப்பட்டது.
“மக்கள் சேர்ந்து நடத்துற தர்ம ஆஸ்பத்திரி இது. அதிகாரத்தால இது அழிஞ்சிடக்கூடாது” எனச்சொல்லி எங்கள் எல்லோரின் நம்பிக்கையையும் அணையாமல் வளர்த்தெடுத்தவர் ஜீவா.
ஈரோடு கலைத்தாய் அறக்கட்டளை மாதண்ணனின் செயற்பணி என்பது டாக்டர் ஜீவாவுக்குள் பெருமளவு தாக்கத்தை உண்டாக்கியிருந்தது. ஏதேதோ ஞாபகங்கள்… சாவுவரை மறக்காத சம்பவங்கள்… எதைச்சொல்லி என் பதட்டத்தை தணித்துக்கொள்வதென தெரியவில்லை. டாக்டர் சொன்ன வார்த்தைகள் தலைமுழுக்க நிறைந்து கனங்கொடுக்கிறது.
பிரதமராக மோடி அவர்கள் இரண்டாம்முறை வென்றுவந்த சமயத்தில் டாக்டர் திரும்பத்திரும்ப சொன்ன விசயம், “மார்க்சியத்த மட்டுமே பேசிட்டிருக்க மார்க்சிஸ்ட்டும், பெரியாரியத்த மட்டுமே பேசிட்டிருக்க திராவிடக்கழகங்களும் நிச்சயம் காந்தியப் பேசுனா மட்டுந்தான் இந்திய மக்கள்கிட்ட வெல்லமுடியும். என்னைப்பொறுத்தவரை, காங்கிரஸ்காரவங்கள விட கம்யூனிஸ்ட்காரவங்க காந்திய பேசுனாதான் மோடிய வீழ்த்த முடியும். இதச்செய்யாமவிட்டா மக்கள் மனசுல, எதிர்மனநிலையில மோடி இன்னும் வலுவானவரா மாறிமாறி பெருசா நின்றிடுவாரு. எதிர்ப்புல வளர்ற ஒரு விசயத்த நாம தூண்டி முன்னவிட பெருசா மாத்திடக்கூடாது” என்பதுதான்.
டாக்டர் ஜீவாவின் பெரிய ஆசையென்பது, சாதாரண பழைய ஒருபக்கக் காகிதத்தில் அவர் எழுதுகிற குறிப்புகள் சிறுசிறு புத்தகங்களாக மாறி கைக்குவருவதைத்தான். புத்தக அச்சில் அவருக்குத் தீராத விருப்பமிருந்தது. அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிக்கு எழுந்து தொடர்ச்சியாகத் தன்னுடைய மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்கிற டாக்டரின் தீவிரத்தை நான் அறிந்திருக்கிறேன்.
இவை எல்லாவற்றையும் தாண்டி… நான் என்னுடைய பத்தொன்பது வயதில் ஜீவா டாக்டரை முதன்முதலாகச் சந்தித்தேன். தினமணியில் என்னைப்பற்றி வந்திருந்த ஒரு செய்திக்குறிப்பை பார்த்துவிட்டு, ஆரஞ்சுப்பழக் கூடை ஒன்றுடன் அப்பா, அம்மா என தன் குடும்பத்தோடு என் வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்து பேசி பாராட்டிச் சென்றதும், ஊட்டியில் ஒரு பின்னிரவு தாண்டி டாக்டருடைய அப்பா அம்மாவின் காதல்கதையைப்பற்றி அவர் அனுபவம் பகிர்ந்ததும் என்னால் என்றும் மறக்கவியலாதவை.
தீவிர காங்கிரஸ்காரரான அவரின் தந்தை சிறைக்குச் சென்று வந்தபிறகு தீவிர கம்யூனிஸ்ட்டாக மாறிவிடுகிறார். டாக்டருடைய அம்மா வேற்று மாநிலத்தை, வேற்று மதத்தைச் சார்ந்தவர். அவர்கள் இருவருக்கும் உருவான ப்ரியம், அதற்கு எதிர்வினையாக ஈரோடு, கோவைப் பகுதியிலுள்ள ஜாதியுணர்வானது டாக்டரை எப்படி விலக்கி ஒதுக்கியது… என ஏதேதோ நினைவுகளை அந்த ஊட்டி இரவில் அவர் பகிர்ந்துகொண்டார்.
அந்த உரையாடலில் அவர் சொன்ன ஒரு சம்பவத்தை என் வாழ்நாளில் எப்போதுமே மறந்ததில்லை. “எங்க அப்பாவும் அம்மாவும் முதல்முறையா சந்திச்ச மரம் ஒன்னு இருக்கு. கொஞ்ச காலம் கழிச்சு, காத்தடிச்சோ வேறேதோ காரணத்துனாலயோ அந்த மரம் கீழே விழுந்திருச்சு. சேதி கேள்விப்பட்ட எங்க அப்பா முன்னூறு நானூறு கிலோமீட்டர் தாண்டிப்போய் அந்த மரத்த வீட்டுக்கு எடுத்துட்டுவந்து ஒரு கட்டிலா மாத்துனாரு. நான் உட்பட, என்னும் தலைமுறையோட துவக்கமே அந்த சந்திப்பும், அந்த மரத்தோட இருப்பும்தான்” என்று பேசி கண்கலங்கிய டாக்டரை நான் இப்போது மனம் நனைக்கிறேன். டாக்டருடைய அப்பா பெயர் வெங்கடாசலம், அவ்வளவு கல்விநிறுவனங்களை உருவாக்கிய மாபெரும் மனிதர். ஆனால், அந்நிறுவனங்களுக்குள் எவ்வகையிலும் அவர் அதிகாரம் செலுத்தாமல், விலகிநின்று உயர்த்திவிடும் அந்த குணத்தன்மை… டாக்டர் ஜீவாவுக்கு அவருடைய அப்பாவிடமிருந்தே வந்திருக்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் சங்கிலித்தொடர் மருத்துவமனைகள் இந்தியாவில் பிரபலமாகத் துவங்கிய அக்காலத்திலேயே டாக்டர் ஜீவா அவர்கள், “முழுக்க முழுக்க கூட்டுறவு மருத்துவமனைகள் மக்கள் பங்களிப்பில் உருவாகியே ஆகணும். எளிய மக்களுக்கான ஆஸ்பத்தரிதான் இந்தியாவில் சங்கிலித்தொடரா அமையணும்” எனச்சொல்லி, அதற்கான எல்லா திட்டப்பணிகளையும் முழுமையாகத் திட்டமிட்டு செயல்பாடுகளைத் துவக்கிவைத்தார்.
கடைசிவரை அவருடைய நிறைவேறாத ஆசையென்பது இரண்டு விசயம். ஒன்று, தர்ம்புரியில் ஒரு மக்கள் மருத்துவமனையை உருவாக்குவது. இன்னொன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிறப்பு மருத்துவமனை திறப்பது. கூடங்குளத்தில் உதயக்குமாரைச் சந்திக்கும்போதும் இதுகுறித்து அவர் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார்.
எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது.ஈரோட்டிலிருந்து கொஞ்சம்தள்ளி சித்தோடில் பாரதிதாசன் கல்லூரி உள்ளது. நண்பர்கள் இணைந்து கூட்டுறவு அடிப்படையில் உருவான கல்லூரி அது. அக்கல்லூரியில் மஞ்சுளா கிருஷ்ணன் எனும் அம்மா பொறுப்பிலிருந்த காலம் அது. டாக்டரும் நானும் அவரைச் சென்று சந்தித்து ஒரு மாணவருக்கான கல்விக்கட்டணத்தை செலுத்திவிட்டு பேசுகையில் டாக்டர், “ரொம்ப முக்கியமான ஒருத்தரோட பையன். நீங்க இவன பத்திரமா பாத்துக்கணும்” என மஞ்சுளாம்மாவிடம் சொன்னார். அது, கவிஞர் விக்கிரமாதித்யனின் பையன். தமிழ் இலக்கியச்சூழலில் ஏராளமான மனிதர்களுக்கு போதைமீட்பு மருத்துவச்சிகிச்சை மற்றும் மருந்துதவிகள் சார்ந்து ஏதோவொரு தொடுதலோ உதவியோ கடைசிவரை ஜீவா செய்துகொண்டுதான் இருந்தார்.
வழக்கமாக, நான் ஈரோட்டில் அவரைச் சந்திக்கச் சென்றால் எங்காவது அவருடன் பயணம்போவது வழக்கமாக இருக்கும். 2000வாக்கில் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள், மாதத்தில் ஆறேழு நாட்கள் என்னுடைய முழுப்பொழுதும் அவருடனான வெளியூர் பயணத்திலேயே கழிந்தது. அப்படியான ஓர் பயணத்தில்தான் ஊட்டி போனோம். அங்கு, ஒரு கிறித்தவ மிசனரியில் பொறுப்பிலிருந்து வெவ்வேறு ஊர்களில் சேவையாற்றிய ஒரு அம்மா இருந்தார். தன் பணி ஓய்வுக்காலம் வந்து ஊருக்குத் திரும்பும் சூழ்நிலையில் அவர் டாக்டரை நேரில் சந்திக்க விரும்பம் கொண்டிருந்தார். அவர் பார்க்க விரும்பிய ஒரே ஆன்மா டாக்டர் ஜீவாதான். அந்த நற்சந்திப்பில் நானும் உடனிருந்தேன். டாக்டரும், வயதான அந்த கன்னியாஸ்திரியும் ஒரு சின்னஞ்சிறிய தேவாலயத்தில், நடுநடுங்கும் குளிரில் தேவனை நோக்கி மண்டியிட்டு, கைகள்குவித்துப் பிரார்த்தித்து அழுதகாட்சி என்னையும் தேம்பித்தேம்பி அழவைத்தது.
2016ல் தும்பி இதழை துவங்கி, அச்சடித்த முதல்புத்தகத்தை ஜீவாவிடம் கைசேர்த்தபோது அவர், “இவ்வளவு தரத்துல குழந்தைகள் இதழ ஏற்றுக்கொள்ற மனநிலையில தமிழகமக்கள் இருக்கமாட்டாங்டா. எல்லாவகையிலயும் இத புறக்கணிக்கிற வாய்ப்புதான் நிறையா இருக்கும். மனசுவிடாம கொண்டுவந்துட்டே இருக்கணும். காலந்தள்ளி சூழல் மாறமாற மக்கள் ஏத்துப்பாங்க. குறைஞ்சது இருபது வருசமாச்சும் நீ இத விடாமப் பண்ணனும்” என்றார். அச்சொல் இன்று தும்பிக்கு நிகழ்வதை கண்கூடாகப் பார்க்கிறேன்.
மருத்துவர் வெ. ஜீவா அவர்களைப்பற்றி இந்தியாவிலுள்ள வெவ்வேறு முக்கிய ஆளுமைகள் எழுதிய கட்டுரைத் தொகுப்பின் கையெழுத்துப்பிரதி என் கைகளில் இருக்கிறது இக்கணம். சென்னைப் புத்தகக் கண்காட்சி முடிந்து, அடுத்த மாதம் வரும் அவருடைய பிறந்ததினத்தில் (76 வயது) ஜீவாவுக்கான கெளரவிப்பாக இப்புத்தகத்தை கொண்டுவர அவருடைய நண்பர்கள் மிகுந்த ஈடுபாட்டிலிருந்தார்கள். ஒரு பெரிய விழாவாக அதைத் திட்டமிட்டிருந்தார்கள். காலம் அச்செயலை அவருக்கான நினைவுவிழாவாக மாற்றி அதிர்ச்சிப்படுத்துமென யூகிக்கவில்லை.
டாக்டரின் முகம் மீளமீள அகத்தில் தோன்றி கண்ணீரை வரவழைக்கிறது. டாக்டர் ஜீவாவின் மூச்சு காற்றில் கலந்துவிட்டது என்கிற யதார்த்தத்தை எப்படி நம்புவது என்பதறியாமல் நான் குமைந்துகொண்டே இருக்கிறேன். அவருடைய கண்களும் அதுகொண்ட கனிவும்…
ஜீவாவும் அவருடைய நண்பர்களும் இணைந்துருவாக்கிய, காவிரிக்கரைப் படுகையில் அமைந்துள்ள ‘ஆத்மா’வில் இன்று காலை 10 மணியளவில், டாக்டர் ஜீவாவின் உடல் தகனம் செய்யப்படுகிறது. ஆத்மா அமைப்பின் லோகோவை டாக்டர் கைப்பட தாளில் வரையும்போது நான் அவருடன் இருந்திருக்கிறேன். அவரின் கனவு நினைவான அதே இடத்தில் அவருடைய தகனம் கொள்வது தாளமுடியாத அழுகையைத் தருகிறது.
உயிருதிர்ந்த அவர் முகத்தைப் பார்க்கும் அளவுக்கு என்னிடம் தைரியம் இல்லை. அசைவற்ற அவர் கரத்தை ஏற்குமளவுக்கு நான் சமநிலையுடையவன் அல்ல. தலைக்குள் நொடிக்குநொடி வெடித்து வெடித்து அமிழ்ந்துபோகும் அவருடைய நினைவுகளின் பேராழத்தில் சிக்கி உழல்வதே இந்நாளில் என்னால் இயன்றது.
இச்சமயத்தில், டாக்டருடன் இரத்தமும் சதையுமாக உடனிருந்த ரவிச்சந்திரன் அண்ணன் அவர்களை நினைத்துக் கொள்கிறேன். காரணம், கடந்த நான்கைந்து நாட்களாகவே அண்ணன் பேசும்பொழுது அவருடைய குரலில் இருந்த பதட்டமும் நடுக்கமும் என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. டாக்டருடன் இறுதிநேரத்தில் உடனிருந்த பிரதீப் அவர்களையும் கண்ணீரோடு மனம்கொள்கிறேன்.
சிவகுரு, தன்னுடைய குழந்தை புவியாழை கூட்டிக்கொண்டு, ஒரு கைத்தறி வேட்டியையும், தனது முதல் புத்தகத்தையும் கொண்டுசென்று ஜீவாவின் காலடியில் வைத்து வணங்கி அழுவதற்காகப் போயக்கொண்டிருக்கிறான். எத்தனைக் கரங்கள் அவர் பாதத்தை தொட்டுவணங்கி கண்ணீர் சிந்தும் இன்று! நோய்தீர்ந்த மனிதர்களின் நன்றிப்பெருக்காலும் கண்ணீர்த்துளிகளாலும் ஜீவாவின் இறுதிமரியாதை நிகழ்கிற அக்காட்சியை நினைத்துக்கொண்டே இங்கிருக்கிறேன்.
எளியவர்களுக்காக வாழ்ந்த நிறைவாழ்வு அவருடையது. நோய்தீர்ந்து ஆயுசுமீண்ட ஆயிரமாயிரம் இருதயங்கள் இன்று சிந்தும் கண்ணீரும், கரங்கூப்பும் நன்றியும் ஜீவாவை சாவில்லாத மனிதராக நிலைநிறுத்தும்.