வலம் இடம்,கொதி- கடிதங்கள்

வலம் இடம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வலம் இடம் ஒரு மிஸ்டிக் கதை. அந்த மிஸ்டிசிசத்தை தக்கவைத்துக்கொள்ளும் வாசிப்புகளுக்கே அது இடமளிக்கிறது. ஆனால் வழக்கமான மிஸ்டிக் கதைகள் அந்த புதிர்த்தன்மையை மட்டுமே உருவாக்கி நிலைநிறுத்திக்கொண்டு செல்லும். அதைத்தவிர எல்லாமே சுருக்கப்பட்டிருக்கும். இந்தக்கதை அந்த மிஸ்டிக் அம்சம் இல்லாமலேயே ஒரு கிராமிய யதார்த்தச் சித்திரமாகவே வாசிக்கத்தக்கதாக உள்ளது. வீட்டில் ஒருவராக இருக்கும் எருமையின் சாவு, அது உருவாக்கும் உளவியல் அழுத்தம், சாவிலிருந்து மீள்வது என்று ஒரு அழகான வாழ்க்கைச்சித்திரம் இந்தக் கதையில் இருக்கிறது

கி.ராஜநாராயணன் குடும்பத்தில் ஒருவர் என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். குடும்பத்தில் ஒருவராக இருக்கும் மாட்டின் சாவும், அக்குடும்பம் அடையும் துயரும் மட்டும்தான் அந்தக்கதை. அந்த அனுபவம் விவசாயக்குடும்பங்களில் எல்லாம் இருப்பதுதான். இந்தக்கதையில் அதிலிருந்து மீள்வதும் உள்ளது. அகத்திலிருந்து ஒரு மீட்பும் புறத்திலிருந்து ஒரு மீட்பும் உருவாகிறது

ராம்குமார்

அன்புள்ள ஜெ

வலம் இடம் கதையில் ஓர் இரட்டைத்தன்மை உள்ளது. பைனரிதான் இந்தக்கதை. முதலில் சொல்லவேண்டிய பைனரி வாழ்வும் சாவும்தான். இரண்டு எருமைகளும் அவற்றைத்தான் சொல்கின்றன. வாழ்வும் சாவும் சென்றும் வந்தும் ஆடுகிற ஓர் ஆட்டமாக உள்ளது அந்தக்கதை. எருமையுடன் கூடவே இருப்பது சாவுதான். அவன் வாழ்க்கையை தேர்வுசெய்தான். ஆகவே எருமையுடன் திரும்ப வாழ்க்கைக்கு வருகிறான்

எஸ்.ஞானசேகர்

கொதி[ சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களை முதன்முதலாக சென்னை புத்தக கண்காட்சியில் 2003 அல்லது 2004 ஆண்டில் சந்தித்தேன் என நினைவு. விஷ்ணுபுரம் கொற்றவை இரண்டு புத்தகங்களிலும் கையொப்பமிட்டு தந்தீர்கள்.அப்போதிலிருந்தே உங்களை தொடர்ந்து வாசித்தும் கவனித்தும் வந்திருக்கிறேன்..

2008ஆம் ஆண்டில் துறவு பாதையை தேர்ந்து ஐந்து ஆண்டுகள் உத்தரகாசி கங்கோத்திரி போன்ற இடங்களில் சாதனை செய்து கொண்டிருந்தேன். கடந்த 8 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் ஒரு சிற்றறையில் தனிமை வாழ்வு.

புத்தரும் ரமணரும் எனது பெருமதிப்பிற்குரிய உள்முகப் பாதைக்கான பயண வழிகாட்டிகள். யோகி ராம்சுரத்குமார் இருபத்தொரு வயதில் என்னை பதப்படுத்தி துறவு நெறியில் ஆற்றுப்படுத்தியவர். அவர் திரும்பிப்போ காலம் வரும் என்று சொன்ன ஒரே காரணத்தினால் திரும்பிச் சென்று 14 ஆண்டுகள் வனவாசம் போல் கார்ப்பரேட் காடுகளில் வெந்து பதப்பட்டு துறவில் நுழைந்தேன். பதப்பட்ட காலத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்களுடனான நெருங்கிய தொடர்பு மிகமிக பயன்பட்டது.

வெளியுலகத் தொடர்புகளை முடிந்தவரை தவிர்த்து வந்துள்ளேன். உள்ளுணர்வின் உந்துதலின் காரணமாக உள்ளேயும் வெளியேயும் சமநிலையோடு இருக்க முடிகிறதா என்று என்னை நானே சீர்தூக்கிப் பார்க்க இந்நாட்களில் முயன்று கொண்டிருக்கிறேன். என்னால் தர முடிந்த மிகச் சிறந்த ஒன்றை முடிந்தவரை சமூகத்திற்கு தந்து விடவும் முயன்று கொண்டிருக்கிறேன். அது கொடுத்தலின் நிறைவிற்காக மட்டுமே தவிர வேறொன்றிற்காகவும் அல்ல

இன்று தளத்தில் வந்த கொதி சிறுகதை என்னை இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டியது.

அலேக்பாபா என ஒருவர் அயனா தேவி என்ற மலைமீது வசித்து வந்தார். எப்போதாவது இறங்கிக் கீழே நான் தங்கியிருந்த கவானா உத்தரகாசி சிவானந்த ஆசிரமத்திற்கு வருவார். மிகவும் விசித்திரமான ஒரு துறவி. ஒரே முறையில் என்பது சப்பாத்திகள் சாப்பிடக் கூடியவர்.சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள். உங்கள் கதையில் வந்த ஞானையா எனக்கு அவரின் ஞாபகம் ஊட்டினார். அவரைப்போல அதீத அளவு உணவு உண்ணும் மற்றும் உண்டுகொண்டே இருக்கும் அல்லது அநேக நாட்களுக்கு எதையுமே உண்ணாமல் பட்டினி கிடக்கும் துறவிகளை நான் பார்த்திருக்கிறேன்.

ஏதோ ஒன்றில் அதிதீவிரமாக ஈடுபட்டு எல்லையை முட்டி உள்முகமாக திரும்புபவர்களே ஞானத் தேடலில் ஆழ்ந்து ஆழ்ந்து உன்னதப் படுவதை பலமுறை நான் கண்டிருக்கிறேன். அந்த ஏதோ ஒன்று பசியாக காமமாக பணமாக தொழிலாக புகழாக எதுவாக வேண்டுமானாலும் இருந்தபோதும் அந்த அதி உன்னத முமுட்சுக்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட ஒன்றில் மிகத்தீவிரமானவர்களாகவே இருக்கிறார்கள். உங்கள் பரிவ்ராஜக வாழ்வில் எத்தனை உன்னிப்பாக இவர்களையெல்லாம் கவனித்திருப்பீர்கள் என வியக்கிறேன்.

இந்தக்கதையின் தரிசனமாக நீங்கள் முன்வைக்கின்ற பசியாற்றல் மற்றும் நோய் தீர்த்தல் என்பவை இன்றைக்கும் எத்தனையோ உன்னத துறவிகளின் மற்றும் ஞானிகளின் அன்றாட செயல்பாடுகளாக  இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நான் உத்திர காசியில் தங்கியிருந்த சிவானந்த ஆசிரமத்தின் கவானா கிளையின் ஸ்தாபகர் சுவாமி பிரேமானந்த சரஸ்வதி அவர்கள் அன்பே உருவானவர். சுவாமி சிவானந்தரின் நேரடி சீடர். தினந்தோறும் காலை 9 மணி முதல் 12 மணி வரை யோக வாசிஷ்டம் வகுப்பு ஐந்து ஆண்டுகளுக்கு அவரிடம் படித்துள்ளேன். மூன்று மணி நேரம் வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கின்ற அவர் அந்த வகுப்பு முடிந்த உடனே கிராம மக்களுக்கான பொதுச் சேவையில் ஆழ்ந்து விடுவார்.

ஒரு இலவச மருத்துவமனையை அந்த மலைக் கிராமத்தில் அவர் உருவாக்கியுள்ளார். தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு அந்த மருத்துவமனை இன்றைக்கும் அவருடைய மேற்பார்வையின் கீழ் அடித்தட்டு மக்களுக்கு சேவையாற்றி கொண்டிருக்கிறது. 82 வயது ஞானப்பழம் அவர்.

நான் சொல்ல வந்த விஷயம் இனிதான். மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்தித்த பிறகு அந்த ஏழை மக்கள் அவரை வந்து சந்தித்து அவர் அவர்களுக்கு “த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்…..”என்ற மந்திரத்தை உச்சரித்து அவர்கள் தலையில் கை வைத்து ஆசி அளிக்க வேண்டும் என்று காத்து நிற்பார்கள். அவரும் மந்திரத்தை உச்சரித்து விபூதியும் இல்லை ஏதோ ஒரு கயிறு இல்லை ஏதோ ஒரு பிரசாதமோ கொடுத்து அவர்களுக்கு உணவும் அளித்து அனுப்புவார். பல நேரங்களில் அந்த ஏழைகளுக்கு உணவளித்த பிறகு அங்கே தங்கியுள்ள துறவிகளாகிய எங்களுக்கு போதிய உணவு கிடைக்காமல் போய்விடும். மேலும் சில பொழுதுகளில் வேண்டிய பணம் இன்றி கடன் வாங்கி மருத்துவமனையை நடத்துவதையும் உணவு வழங்குவதையும் விடாமல் செய்வார். பலமுறை எனக்கும் அவருக்கும் இந்த செயல் குறித்து சூடான விவாதங்கள் நடைபெற்றுள்ளது. நீங்கள் பேசுவது வேதாந்தம் ஆனால் இந்த ஆசீர்வாத விஷயமெல்லாம் மிகவும் வேடிக்கையாக உள்ளது என்பேன். சேவைக்காக கடன் வாங்குவது ஒரு துறவிக்கு அவசியமே இல்லை என வாதிடுவேன். ஒவ்வொரு முறையும் பேரன்போடு இதன் அவசியத்தை தாத்பரியத்தை அவர் விளக்குவார்.

மதங்கள் எதுவானால் என்ன மகான்கள் எல்லாம் ஒன்று போலவே தான் இருக்கிறார்கள். மகான்கள் ஆகாதவரை நம்மால் அவர்களை முற்றாக புரிந்துகொள்ள முடிவதில்லை.

உண்மை ஞானிகள் உபதேசங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பஞ்சப் பரதேசிகளின் பசி ஆற்றுவதில் நோய் போக்குவதில் எப்பொழுதுமே முனிந்தும் முனைந்தும் செயலாற்றுவதை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். இன்றைக்கும் திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான வீடு துறந்தோரின், கிரிவலப்பாதை வாழ் எழைகளின் பசியை அத்தகைய மகான்கள் துவக்கி வைத்த அன்னதான கட்டளைகள் விடாது உணவளித்து போக்கிக் கொண்டிருப்பதை கண்கூடாக காணலாம்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என சும்மாவா சொன்னான் நம் முப்பாட்டன் வள்ளுவப்பெருந்தகை.

வினைத் தத்துவத்தை மறுபிறப்புக் கொள்கையை சொர்க நரகத்தை இறைவனை அல்லது இறையாற்றலை நம்பமுடியாத இன்றைய  சமூகத்திற்கு அற வாழ்வு வாழ வேண்டியதின் அவசியத்தை மேலே சொன்ன எவற்றைப் பற்றியும் பேசாமல் எப்படித்தான் புரியவைப்பது என்று சிந்திக்கும் தோறும் உங்களைப் போன்ற இலக்கிய ஆளுமைகளின் இதுபோன்ற உன்னத ஆக்கங்களே எப்போதும் தீர்வாக எனக்கு முன் வந்து நிற்பதை காண்கிறேன்.

நீங்கள் எழுதுகின்ற ஒவ்வொரு கதையும் அற விழுமியங்களை வளர்ப்பதிலும் அதை உணர்வுபூர்வமாக இதயத்தின் ஆழத்தில் பதிப்பதிலும் மிகப்பெரிய பங்களிப்பை செய்கின்றன.

இனிவரும் காலங்களில் உங்களைப் போன்றவர்களால் மட்டுமே அற விழுமியங்களால் மேம்பட்ட சமூகத்தை உருவாக்குவதில் மிகச் சிறப்பாக பங்களிக்க முடியும்.

எல்லாம் வல்ல பேராற்றலின் பெருங்கருணையினால் உங்களின் இந்தப் பெரும் பணி மேலும் மேலும் தொடர்ந்து நடக்க வேண்டுமென உள்ளன்போடு விழைகிறேன்.

தங்களன்புள்ள

ஆனந்த் ஸ்வாமி

திருவண்ணாமலை.

ஜெ,

கொதி சிறுகதை வாசித்தேன்,  என் பள்ளிக்காலங்களில் அம்மா கொதி ஓதுவதை போல ஒரு சடங்கை வயிறு பிரச்னை சமயங்களில் ( குடல் மறைஞ்சது(தலைகீழாக)-அப்படி அம்மா சொல்வாங்க ) செய்வாங்க,  உழிஞ்சு எடுக்கறது என அதை சொல்வாங்க, சொம்பு போல இருக்கும் குழாய்ப்புட்டு வைக்கும் பாத்திரத்தின் கீழ் பகுதி எடுத்து ( நீர் இருக்கும் பகுதி ) அதில் எண்ணையில் முக்கிய திரியை தீ பற்ற வைத்து அதை தலையிலிருந்து கீழிறக்கி வயிற்றில் அழுத்தி கீழிறக்குவாங்க, இப்படி 21 முறை செய்வாங்க, பிறகு அதை மஞ்சள் மற்றும் வரமிளகாய் கொண்ட  நீர் இருக்கும் தட்டில் அப்படியே கவிழ்த்து வைப்பார்கள்,  நீர் உள்ளிழுக்கும் னு சொல்வாங்க, இந்த கொதி என்கிற வார்த்தை அம்மா சொன்னதில்லை, ஆனா கிட்டத்தட்ட அதை செய்தாங்க (உழிஞ்சு எடுத்தல்) வேறு பெயரில், இந்த கதை படித்த போது மறந்து போன இந்த விஷயம் ஞாபகம் வந்தது :)

இந்த கதை பற்றி இன்று மீண்டும் ஒரு கடிதம் எழுதிடுவேன், கதை எனக்கு மிக பிடித்தது,  ஒருவகையில் ஞானாயா காப்பனின் இன்னொரு வடிவமாக தோன்றினார்,

ராதாகிருஷ்ணன்,கோவை

முந்தைய கட்டுரைகுமிழிகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகந்தர்வன், யட்சன் – கடிதங்கள்