கொதி, வலம் இடம்- கடிதங்கள்

கொதி[ சிறுகதை]

அன்புள்ள ஜெ

கொதி சிறுகதை வாசித்தேன்.

“The last shaman” என்று ஒரு அமெரிக்க ஆவணபடம். பல வருடங்களாக மனநோயில் வாடும் இளைஞனை பற்றி. தண்டவாளத்தில் தலை வைக்கும் அளவுக்கு சென்றவன். அனைத்து வகை நவீன உளவியல் மருத்துவ முறைகளை  முயன்று பார்த்தும் அவனுடைய severe depression என்னும் மனநோய்க்கு மீட்பு இல்லை. இறுதி முயற்ச்சியாக அமேசான் பழங்குடிகளின் hallucination சடங்கு முறையை கேள்விப்பட்டு அதில் ஈடுபட்டு தன் மனநோயிலிருந்து விடுபடுகிறான். Ayahuasca, புகையிலை என போதை பொருட்களை, தொன்மையான பாடல்களை உள்ளடக்கி ஸாமேனால் செய்யப்படும் சடங்கு அது.

Depression- வெற்றிடம் அதுதானே தாம்பாளத்தின் நீரை உள் இழுத்து கொள்கிறது.

Gabor mate என்னும் கனடா வை சேர்ந்த உளவியலாளர். குழந்தை பருவமே அனைத்து மனநோய்களுக்கும் ஆளுமைக்கும் முதன்மையான காரணம் என்கிறார். சிறு வயதில் குழந்தையின் அகத்தில் உருவாக்கபடும் வலி அல்லது வெற்றிடம் பின்னால் கோருவது பெரிய போதைகளையாக இருக்கலாம். மேலும் இவர் நவீன மருத்துவத்தின் மனமும் உடலும் வேறு வேறு என்பது தவறான புரிதல் என்றும், பல உலக நாடுகளின் பண்டைய மருத்துவம் (primitive medicine) சொல்வது போல மனமும் உடலும் ஒன்றே என்பதையும் முதன்மையாக முன்வைக்கிறார். அடுத்து இவர் சடங்குகளையும் ஹீலிங்கையும் மனநோய்க்கான மருத்துவ வழியாக சொல்கிறார்.

நம்முடைய மேல் மனம் சடங்குகளை நம்புவதில்லை, ஆனால் ஆழமாக சடங்குகளின் மேல் நமக்கு பயபக்தி உண்டு என்பதை நம் அனுபவங்களின் மூலமே நாம் உணரலாம். மாத்திரைகளுக்கு சரியாகாத காய்ச்சல் ஒன்று, குறி சொல்லி தலையில் போட்ட அடி ஒன்றாலும் துண்ணூராலும் சரியாக போனது என் அனுபவம். அது மாலை மட்டும் வரும் காய்ச்சல், எதையோ கண்ட என் ஆழ்மணதில் அச்சதின் வெளிப்பாடாக இருக்கலாம்.

நம் அகம் அதுவாகவே சடங்குகளை உருவாக்கிக்கொள்ள கூடியது. விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு மட்டுமே தெரியும் சடங்குகளால் ஆனவர்கள். ஏனென்றால் அங்கு நடப்பது தற்செயல்களின் ஆட்டம். அதன் விளைவாக அச்சமும் சடங்கும். குழந்தைகளின் விளையாட்டுகளிலும் அவர்களுக்குள் மட்டுமான சடங்குகள் உண்டு. சடங்கு மட்டுமே அகமாகி போன அகத்தைதான் OCD போன்ற வரையரைகளில் சில கூறுகலாக காண்கிறோம்.

ஆனால் குறியீடுகளுடன் செய்யப்படும் சடங்கு நேரடியாக நம் ஆழ்மனதோடு உரையாடுகிறது. இந்த கதையில் வரும் சடங்குக்கு அறிவியல் விளக்கம் உண்டு. ஆனால் இந்த கதை புலத்தின் வாழ்கைகுள் வேறு எதனாலும் ஈடு செய்ய முடியாத அர்த்தமும் உணர்ச்சியும் இந்த சடங்குக்கு மட்டுமே உண்டு. வாழ்க்கையில் குறிப்பிட்ட சடங்குக்கு தேவையும் அது மனிதனுக்குள் கடத்தும் உணர்ச்சிக்கும் ஆழ்மனதுடனான உரையாடலுக்கும் அவசியமில்லாதபோது அச்சடங்கு புலகத்திலிருந்து விலகுகிறது.

நடுகடலில் தவிக்கும் நூறு பேரில் ஒருவனுடைய வாழ்வுக்கான பசி நூறு பேருடைய பசியுமாக ஆகிறது. பின் அவன் வயிறு தன் தலைமுறைகளின் பசிக்காக கொதிக்கிறது. அனைவரும் கண்டு அஞ்சுவதாகிறது அவனுடைய பசி.

மாபெரும் எழுத்தாளர்களின் கலைஞர்களின் பசியும் அப்படியே என்று நினைக்கிறன். அவர்கள் எத்தனையோ விதங்களில் எத்தனையோ பசிகளை அடிவயிற்றில் ஏந்தியவர்கள். மனிதர்களுள் கொதிக்கும் பசிகேத்தது அவர் அவர்களின் செயல்கள்.

நடுகடலில் அந்த தனித்தவனின் பசி கடலை உண்ணும் பசி. அந்த ஆத்மா முழு கடலையும் உண்ண வேண்டியதில்லை, முடிந்தவரையிலான கடலை உண்டு அதன் பசி நிறைவடைந்தால் போதும்.

கொதி கண்ணில் நீர் விம்ம செய்யும் கதை.

பிரதீப் கென்னடி.

[பி.கு:

  1. முடிந்தால் இந்த காணொளியை பாருங்கள். https://m.youtube.com/watch?v=g6BpmBWrKpc
  2. “சென்ற மாரிசில்..” படித்தேன். March 10 அன்றுதான் நான் உங்களை வந்து சந்தித்தேன்.]

நன்றி.

 

வலம் இடம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

வலம் இடம் கதை உங்கள் வழக்கப்படி குறியீடுகளும் உருவகங்களும் கொண்ட கதை. ஆனால் அவை வெளியே தெரியாதபடி இயல்பான யதார்த்தவாதமாக தன்னை காட்டிக்கொள்கிறது. கதை உண்மையில் எதைச் சொல்கிறது, எங்கே திறக்கிறது என்று தெரியாதவர்களால் கூட இயல்பாக வாசித்து அந்த வாழ்க்கையை ரசிக்கமுடியும். எருமைமேல் இருவரும் வைத்திருக்கும் அன்பும், அவர்கள் அதை இழந்தபோது அடையும் துயரமும் அருமையாக வெளிப்பட்டுள்ளது. இருவரும் அதை இரண்டு வகைகளில் எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்பதும் இந்தக்கதையில் முக்கியமானது என்று நினைக்கிறேன்.

இந்தக்கதையிலுள்ள உருவகங்களை எல்லாம் எடுத்து எடுத்து கதையை ஒட்டுமொத்தமாக பின்னி அமைக்கவேண்டும். செல்லம்மையும் குமரேசனும் எருமைமேல் பிரியமாக இருக்கிறார்கள். எருமை சாவுநோக்கிச் செல்கிறது. அதன் கர்ப்பப்பையில் நீர் சேர ஆரம்பித்துவிட்டது. அது உள்ளுணர்வால் குமரேசனுக்குத்தெரியும். செல்லம்மைக்கும் தெரியும். ஆகவேதான் அந்தக்கனவு வருகிறது. அதில் வரும் இன்னொரு எருமை சாவுதான். அது எருமையை அழைத்துச் செல்கிறது

குமரேசன் இரவுபகலாக மூக்குக் கயிறு செய்கிறான். எருமையை ‘பிடித்து நிறுத்திவிடுவதற்கான’ முயற்சி அது.மூக்கணாங்கயிறில்தான் கதையே ஆரம்பிக்கிறது. கதையில் அவன் அப்பா வந்து எருமையை கொண்டுசெல்கிறார். அவர் இருப்பது சாவின் உலகத்தில். திரும்ப எருமைகளுடன் வருபவர் அளப்பங்கோடு சாஸ்தா.

குழித்துறை- மேல்பாலை அருகே இருக்கும் அளப்பங்கோடு சாஸ்தாகோயில் மாடுகளுக்கான சாமி. இப்போது நம் ஊரில் மாடு குறைந்துவிட்டதனால் மனிதர்களுக்கான கோயிலாக ஆகிவிட்டது. நான் ஆறேழுவயதில் போயிருக்கிறேன். இப்போது அந்தப்பக்கம் வந்தே இருபதாண்டுகளாகின்றது. அளப்பங்கோடு சாஸ்தா

அவனிடம் உனக்கு வாழ்வு சாவு இரண்டில் எது வேண்டும் என்கிறார். இரண்டில் ஒருவிரலை தொடச்சொல்கிறார். மூக்கணாங்கயிறாக பின்னிக்கொண்டிருந்தவன் எதை தொட்டிருப்பான்? வாழ்வு சாவு ரெண்டு விரலையும் சேர்ந்து தொட்டிருப்பான் என்று நான் நினைக்கிறேன்

ஸ்ரீதர்

வலம் இடம்- கடிதங்கள்

கொதி- கடிதங்கள் 2

கொதி -கடிதங்கள்-1

முந்தைய கட்டுரைகுமிழிகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநகரங்கள், மலைகள்