கொதி, வலம் இடம்- கடிதங்கள் 3

கொதி[ சிறுகதை]

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

ஈஸ்ட்டர் திருவிழாவுக்கான தவக்காலத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில்கொதிசிறுகதை. திட்டமிட்டு எழுதியதா அல்லது தன்னிச்சையான நிகழ்வா என தெரியவில்லை. மனதிற்கு நெருக்கமான ஒரு புனைவு. இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

ஃபாதர் ஃப்ரெடெரிக் பிரென்னென், ஃபாதர் ஞானையா, ஃபாதர் சூசைமரியான் போன்ற குருக்கள் இன்றும் தேவைப்படுகிறார்கள். ஓதுவதற்காக அல்ல. இருக்கும் உணவைப் பகிர்ந்தளிக்க.

என்றும் அன்புடன்,
லெனி

 

அன்புள்ள ஜெ

நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்களாக இருங்கள் என்று விவிலியம் சொல்கிறது. பசி என்பதை ஒரு தவமாகவே  பைபிள் சொல்கிறது. எவ்வளவு உண்டாலும் தீராத பெரும்பசி என்பது  ஒரு பெரிய கொடை. அவர்களுக்கு உணவின்மேல் விருப்பம் குறையாமலேயே இருக்கும். உணவு அவர்களுக்கு எப்போதுமே ருசிக்கும்.

ஃபாதர் ஞானையா உணவின்மேல் பசி கொண்டிருந்தார். அதற்குமேலாக நீதியின்மேல் பசி கொண்டிருந்தார். ஆகவேதான் தன் இதயத்தை கிறிஸ்துவின் தூய ரத்ததால் நிறைக்கவும், தன் ஆத்தும விடுதலையை அடையவும், பரலோக ராஜ்ஜியத்தை சுதந்திரித்துக்கொள்ளவும் அவரால் முடிகிறது.

 

கெவின்

வலம் இடம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வலம் இடம் கதை நினைவுகளிலிருந்து நினைவுகளுக்குக் கொண்டுசெல்கிறது. எருமைகள் நம்முடைய வாழ்க்கையிலிருந்து வேகமாக விலகிச்சென்றுகொண்டிருக்கின்றன. இன்றைக்கு எருமை மேய்ப்பது என்பது லாபகரமானது அல்ல. எருமைகளைவிட பலமடங்கு பாலை நவீன ஒட்டுப்பசுக்கள் அளிக்கின்றன. பால் வீடுகளில் உற்பத்திசெய்யப்படுவதில்லை. மாடுகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

எருமைக்கு ஒரு தாய்மைக்குணம் உண்டு. அது ஒரு ராட்சன அன்னை. எருமையின் கண்களை அதை வளர்த்தவர்கள் மறக்கவே மாட்டார்கள். நான் அந்த எருமையின் சாவையும் அது திரும்பி வந்ததையும்தான் உணர்ச்சிகரமாக வாசித்தேன். எனக்கு அதுவே ஒரு அழியா நினைவு

 

என் குமார்

 

அன்புள்ள ஜெ

வலம் இடம் கதையிலுள்ள ஒரு சின்ன விஷயம் என் நினைவிலேயே நின்றது. பசுவோ எருமையோ வீட்டுக்கு கொண்டுவரப்படும்போது அது வாயில் புல்லுடன் வந்தால் அது மகாலட்சுமியே வருவதுபோல. ஆகவே அது வரும்போது புல்லை கொடுப்பார்கள். ஆனால் கீழே போட்டால் அமங்கலம். இயல்பாக அது நடக்கவேண்டும். இங்கே அந்த செல்லக்குட்டி வாயில் ஒரு செம்பரத்திப் பூக்கிளையோடு வருகிறது. எவ்வளவு பெரிய ஆசி. சொல்லுக்கருப்பட்டி நிறமான அந்த கன்றுக்குட்டியை பார்ப்பதுபோலவே இருக்கிறது. மானசீகமாக கட்டித்தழுவிக்கொண்டேன்

மீனாட்சி ராம்

கொதி -கடிதங்கள்-1

வலம் இடம்- கடிதங்கள்

கொதி- கடிதங்கள் 2

கொதி, வலம் இடம்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைஒருமையும் முழுமையும்
அடுத்த கட்டுரைபெண்ணெழுத்துக்கள்