கொதி- கடிதங்கள் 2

கொதி[ சிறுகதை]

அன்புள்ள ஜெமோ

கொதி கதை பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நண்பர் சொன்னார்.அவர் கிறிஸ்தவர். நீங்கள் உங்கள் நண்பர்கூட்டத்தில் இருக்கும் சிறில் அலெக்ஸ் என்ற நண்பரை திருப்திப்படுத்துவதற்காகவே அவ்வப்போது இந்தமாதிரி கிறிஸ்தவ கதைக்கருக்களைக்கொண்டு கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னார். இது ஒரு பசப்பு என்று சொன்னார். சிறில் அலெக்ஸ் உங்கள் இணையதளத்துக்கு பணம் செலவழிப்பவர் என்பதனால் இதைச் செய்கிறீர்கள் என்று சொன்னார். உங்களிடம் இதைப்பற்றி கேட்கவேண்டுமென்று தோன்றியது.

ஆல்பின்

அன்புள்ள ஆல்பின்,

நண்பர் சொல்வது இருக்கட்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கொதி போன்ற ஒரு கதையை எழுத முடிந்தவனுக்கு, அந்த நிலையில் சற்று நேரமாவது இருக்கமுடிந்தவனுக்கு, இங்குள்ள தன்னல நோக்கங்கள் பொருட்டாகத் தோன்றுமா என்ன?

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

கொதி மீண்டும் ஒரு அற்புதமான கதை. அறம் தொகுதியில் உள்ள ஓலைச்சிலுவை அவ்வளவாகப் பேசப்படாத ஒரு கதை. இது அந்த கதையின் நீட்சி போலிருக்கிறது. ஒருகாலத்தில் இங்கே தேவதூதர்களாக வந்த சில மிஷனரிகளின் நினைவை அது நிலைநாட்டுகிறது. குமரிமாவட்டத்தில் வாழ்வதனால் உங்கள் எழுத்தில் அவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

டாக்டர் சாமர்வெல் [ஓலைச்சிலுவை] ஒரு மகத்தான நாயகன். அவர் தமிழ்மக்களுக்கு அளித்த கொடையை ஓலைச்சிலுவை கதைவழியாக மறக்கமுடியாததாக ஆக்க உங்களால் முடிந்தது. அதேபோல லாசர் கதை வழியாக கால்டுவெல்லை ஒரு நவீனத் தொன்மமாகவே நிலைநாட்டமுடிந்தது. நற்றுணை கதையில் சகோதரி டதி அம்மையார் ஓர் அற்புதமான கதாபாத்திரமாக வருகிறார்கள். பரிணாமம் என்ற குறுநாவலிலும், காடு நாவலிலும் கூட மலைமக்களுக்காக வாழ்க்கையை அளித்த வெள்ளைப் பாதிரிமார்கள் வருகிறார்கள்.

தமிழ் நவீன இலக்கியத்தில் இந்த ஆளுமைகளைப் பற்றி எழுதியவராக நீங்கள் ஒருவரே இருக்கிறீர்கள். அவர்களின் நினைவை பிடிவாதமாக பேசி நிலைநாட்டிக்கொண்டிருக்கிறீர்கள். அதைச்செய்ய இங்கே எந்த கிறிஸ்தவ எழுத்தாளருமில்லை. அதற்காக நீங்கள் இந்துவெறியர்களின் வசைகளை வாங்கிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் கூடவே இங்குள்ள கிறிஸ்தவர்களிலும் பெரும்பாலும் அத்தனைபேரும் மதக்காழ்ப்புடன் உங்களை வசைபாடுபவராகவே இருக்கிறார்கள்

கிறிஸ்தவரான ஒரு வாசகரிடம் இந்தக்கதையை வாசிக்கும்படி சுட்டி அனுப்பினேன். “புளிச்சமாவு கதையை வாசிக்கமாட்டேன்” என்று உடனே தகவல் அனுப்பிவிட்டார். இந்த யதார்த்தத்தையும் நீங்கள் கதையாக எழுதியாகவேண்டும்.

ராஜ்குமார்

 

அன்புள்ள ராஜ் குமார்,

நான் எழுதுவது சில உச்சநிலைகளை, அங்கு செல்லமுடிந்த சில மனிதர்களை. அதனூடாக வரலாற்றை மேலும் விரிவாக்குகிறேன். இயல்பாக கரைந்தழியும் நினைவுகளை உறுதியாக நிலைநிறுத்த முயல்கிறேன். அது ஓர் எழுத்தாளனின் கடமை. நீங்கள் குறிப்பிடுபவர்கள் சில்லறை மனிதர்கள். அவர்களை நான் விமர்சிக்கலாம். ஆனால் அந்தச் சிறுமைகளுக்கு இலக்கியப் பதிவென்னும் மதிப்பை ஒருபோதும் அளிக்க மாட்டேன். என் புனைவுலகில் சாமர்வெல்லும் டதி அம்மையாரும் கால்டுவெல்லும் இடம்பெறுவார்கள், இந்த சிறுமனிதர்கள் ஒருபோதும் இடம்பெற மாட்டார்கள்.

ஜெ

அன்புள்ள ஜெ

ஒரு மனுசனோட புன்னகையை அவன் உடம்பிலே இருந்து பிரிச்சு எடுத்து தனியா வைச்சதுமாதிரி

என்ற வரி ஒரு மிகப்பெரிய காட்சியை அளித்துவிட்டது. புன்னகை பிரிந்து வந்து நிற்பதென்றால் என்ன? ஆத்மாவே வந்து நிற்பதுதான் இல்லையா?

அற்புதமான வரி அது. நீங்கள் எங்கோ பார்த்த ஓர் ஆளுமையின் காட்சியைத்தான் ஞானையாவுக்கே அளித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்

காமராஜ் ரத்தினம்

 

அன்புள்ள காமராஜ்

சில கதாபாத்திரங்களை நான் புனைவாக வடிப்பதில்லை, வாழ்ந்தவர்களின் நகலாகவே உருவாக்குகிறேன். நீங்கள் சொல்வது உண்மைதான். எழுபதுகளில் நான் அவரை கண்டேன். அவராக நினைவில் எஞ்சியிருப்பது அந்த வெண்புன்னகை. உடல் சென்றபின்னரும் எஞ்சும் புன்னகை. ஞானையா [பெயரை மட்டும் மாற்றியிருக்கிறேன்] என்றுமிருப்பார்

ஜெ  

கொதி -கடிதங்கள்-1

முந்தைய கட்டுரைவலம் இடம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகந்தர்வன் [சிறுகதை]