நகரங்கள், மலைகள்

சென்ற பிப்ரவரி 14 ஆம் தேதி வீட்டைவிட்டு கிளம்பி மார்ச் ஒன்றாம்தேதிதான் திரும்பிவந்தேன். வழக்கம்போல ஊரிலிருந்து ஊருக்கு பயணம். பாலக்காட்டில் ஒரு திரைவிவாதம். அங்கிருந்து கோவை. அங்கே கி.ராஜநாராயணனின் ‘மிச்சக்கதைகள்’ நூல் வெளியீட்டுவிழா.

மிச்சக்கதைகள் என்பது கி.ரா அவர்கள் இனி எழுதமாட்டேன் என்று சொல்லி தொகுத்தது அல்ல. ஏற்கனவே எழுதிய பலகதைகளில் சேர்க்கமுடியாதுபோன மிச்சங்களால் ஆனது. மகிழ்விக்கும் வாசிப்புத்தன்மைகொண்ட நூல். கி.ராவின் அழகிய புகைப்படங்களுடன்.

ரசிகமணியின் பேரர்
நடராஜன், கோவை
லாலா விடுதி உரிமையாளர்
சு.வேணுகோபால்
டி.பாலசுந்தரம்
விஜயா வேலாயுதம்
’தமிழினி’ கோகுல் பிரசாத்
ஓவியர் ஜீவா
கே.என்.செந்தில்
கவிஞர் இசை
எம்.கோபாலகிருஷ்ணன்

கோவைக்கு பத்தொன்பது இரவே வந்துவிட்டேன். இருபதாம்தேதியே நண்பர்கள் பார்க்கவந்தனர். வழக்கமாகச் சொற்பொழிவுகளுக்கு முந்தையநாள் அவ்வளவு பேசுவதில்லை. என் தொண்டை அப்படிப்பட்டது. குரல் கணீர்க்குரல் அல்ல. [பவா செல்லத்துரை குரலை கேட்கும்போதெல்லாம் கொலைவெறிப் பொறாமை வருவதுண்டு] ஆகவே அதிகம்பேசாமலிருக்கவேண்டுமென முடிவுசெய்வேன். என்னுடன் பேசவென்றே வரும் வாசகர்கள், நண்பர்களிடம் பேசப்பேச உரையாடல் நீண்டு நீண்டு செல்லும்

என்னுடன் அணுக்கமாக இருக்கும் நண்பர்களுக்கேகூட தேடிவரும் வாசகர்களைக் கண்டு திகைப்பு உண்டு. “சைட்லே கடிதங்களை படிக்கிறப்ப இத்தனைபேர் எங்கிருக்காங்கன்னு தோணும். ஆனா நேர்ல் வர்ரவங்களைப் பாத்தா அதுக்குப் பலமடங்கு. எல்லாருமே அதிதீவிர வாசகர்கள். வாழ்க்கையையும் இலக்கியத்தையும் இணைச்சுக்கிட்டவங்க. வேறு எந்த இலக்கியச் சூழலிலேயும் அவங்க கண்ணுக்குப் படுறதே இல்லை. இவங்கள்லாம் யாருங்கிற திகைப்புதான் வருது” என்றார் நண்பர்

டமருகம் நண்பர்களுடன்

கி.ரா விழா உற்சாகமாக நிகழ்ந்தது. கோவையில் நண்பர்கள் அனைவரையும் சந்திக்கும் நிகழ்வு. ஒவ்வொருவரையாக கண்டு, தழுவி, புகைப்படம் எடுக்கையில் நடுவே ஓராண்டு கடந்துசென்றிருப்பது நினைவிலிருந்து அகன்றுவிட்டது.

காலையில் கூட்டம் வைக்கப்பட்டிருந்தாலும் கிக்கானி அரங்கு நிறையுமளவு திரள் இருந்தது. என் வாசகர் பலர் திருநெல்வேலி, ராம்நாதபுரம், தேனி,தென்காசி என தொலைவிலிருந்தெல்லாம் வந்திருந்தனர். பெங்களூரிலிருந்தும் சென்னையிலிருந்தும் வழக்கமாகவே வருவார்கள்.

விழாவில் விஜய் ஆனந்த், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் ஆகியோர் சிறப்பாகப் பேசினார்கள். கி.ராவின் மகன் கி.ரா.பிரபியைச் சந்தித்தேன். கோவையின் முதன்மை மனிதர்கள் திரண்டிருந்த அவை. கி.ரா. நிகழ்ச்சியை செல்பேசியில் பார்த்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

அன்றுமாலையே ஈரோடு சென்றேன். இரவு காஞ்சிகோயிலில் செந்தில் பண்ணைவீட்டில் தங்கிவிட்டு அங்கிருந்து ஈரட்டி. ஐந்துநாட்கள் அங்கே தங்கியிருந்தேன். நண்பர்கள் காஞ்சி சிவா, ஜி.எஸ்.வி.நவீன், பிரபு,அந்தியூர் மணி, வழக்கறிஞர் செந்தில், ஈரோடு கிருஷ்ணன், ஈரோடு சிவா, மணவாளன், வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி, ஆகியோர் உடனிருந்தார்கள்.

ஈரட்டியில் காடு காய ஆரம்பித்துவிட்டது. இவ்வாண்டு மூங்கில் பூத்திருக்கிறது. இன்னும் சிலநாட்களில் முழுமையாகவே காய்ந்துவிடும். ஜூன் மாதம் மழை. அதில் மூங்கில் மீண்டும் முளைத்தெழும். அது வரை யானைகள் உணவுக்காக ஊருக்குள்தான் அலையும் என நினைக்கிறேன்.

அந்தியூர் மணி
மணவாளன், அந்தியூர் மணி, ஈரோடு கிருஷ்ணன்
மணவாளன்

காஞ்சி சிவாவை  அந்தியூர் மணி அழைத்து வரும் வழியில் தாமரைக்கரை – ஈரட்டி சாலையில் ஒரு யானையை பார்த்தார்கள். நான் ஈரட்டி வரத்தொடங்கி 10 ஆண்டுகளாகின்றன. இன்னும் யானையைப் பார்க்கவில்லை. யானைபார்க்க ஏங்கித்தவிப்பவர் வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி. அவர் கண்ணுக்கும் தட்டுப்படவில்லை. கிட்டத்தட்ட மெய்ஞானம்போல, தேடாமல் இருந்தால் எதிரே வந்து நிற்கும். ஆனால் எதிரே பார்த்தபோது அந்தியூர் மணி நாட்டுமொழியில் சொல்வதென்றால் ‘பீ கலங்கி’ ஓடிவந்துவிட்டார். அதுவும் ஞானத்தில் வழக்கமாக நடைபெறுவதே.

ஈரட்டியிலும் அருகிலிருக்கும் பகுதிகளிலும் வெயிலில் அலைந்தேன். என்ன சிக்கலென்றால் இங்கே வெயிலில் வெப்பம் தெரியாது, காற்று குளிராக இருக்கும். ஆனாலும் வெயில்வெயிலேதான். என் தலையில் இப்போது முடியின் காப்பு இல்லை. ஆகவே தலைச்சருமம் வெந்துவிட்டது. அந்தியில் தொட்டுப்பார்த்தால் தீப்பட்டதுபோல இருந்தது

ஈரட்டியைச் சுற்றியிருக்கும் மலைக்கிராமங்கள் அழகானவை. தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கிறோம். ஆனால் இன்னும் இன்னுமென புதிய இடங்கள் கண்ணுக்குப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. இம்முறை அடர்காட்டுக்குள் தனியாக இருக்கும் ஒரு சோளகர் கிராமத்துக்குச் சென்றோம். அது மலையுச்சி. கீழே மிக ஆழத்தில் குளத்தூர், மேட்டூர் தெரிந்தது. மலையுச்சியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம்

செல்லும்போதும் வரும்போதும் எக்கணமும் யானை தென்படுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. தென்படவில்லை. காடு யானையை தன்னுள் மறைத்துக்கொண்டு சூழ்ந்திருந்தது. அந்தியிருளில் காடு முற்றிலும் இன்னொன்றாக, நிழல்களாலானதாக, இருள்வடிவாக, மாறிவிடுகிறது.

ஈரோட்டிலிருந்து மீண்டும் பயணம். இன்னொரு நகர். இன்னொரு உலகம். லீ மெரிடியனின் குளிர்ந்த தனித்த ஆடம்பர அறை. வெளியே ஓங்கிய நவீன கட்டிடங்கள். நானிருப்பது இந்தியாவா என்ற ஐயம் எழும் சூழல். தூங்கி எழுந்ததும் எங்கிருக்கிறோம் என்னும் திகைப்பு எழுகிறது. இலக்கியநண்பர்கள் சூழ்ந்த ஒருவனாக, தன்னந்தனியனாக தொழிற்சூழலில், மலைகளின் நடுவே காடுசூழ ஒருவனாக, ஆடம்பரவிடுதிகளின் கண்ணாடிச்சாளரத்துக்கு இப்பால்… ஓர் ஊசல் என் வாழ்க்கை. ஒருபக்கம் இலக்கியம் மறுபக்கம் உலகியல்.

நாகர்கோயில் வந்தடைந்தேன். அரைமாதம் கடந்துவிட்டிருந்தது. நெடுஞ்சாலைப்பணி பார்வதிபுரத்தின்மேல் புழுதியை படரச்செய்கிறது. நாகர்கோயிலில் என் வீட்டுக்கு முன் கட்டப்படும் புதியகட்டிடம் முளைத்து மேலெழுந்துவிட்டிருந்தது. நம் நகர்கள் நுரைத்து நுரைத்து குமிழிகளாக எழுந்துகொண்டே இருக்கின்றன.

முந்தைய கட்டுரைகொதி, வலம் இடம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரையட்சன் [சிறுகதை]