அன்புள்ள ஜெ,
டிவிட்டரில் நீங்கள் முன்பு குறிப்பிட்ட பூங்குன்றன் என்னும் வாசகர் இப்படி எழுதியிருந்தார்
Chennai book fair has begun and there is not even the slightest mention of Jeyamohan’s Venmurasu anywhere, arguably the greatest work in Indian literature pulled off in the most audacious way possible.
மிகச்சரியாக நான் உணர்ந்தது அது. இந்த ஆண்டு முக்கியமானது. தமிழ்மொழியின் நவீன இலக்கியத்தில் முதன்மையான படைப்பு என்று எந்த நல்ல வாசகனும் சொல்லும் வெண்முரசு நிறைவடைந்திருக்கிறது. அதைப்பற்றிய பேச்சு எங்குமே இல்லை. ஓரே ஒரு கடையில் ஒருமூலையில் வெண்முரசின் சில பிரதிகள் இருந்தன. முழுமையாக இல்லை. ஒரு போஸ்டர்கூட இல்லை. மிக வருத்தமாக ஆகிவிட்டது
சாந்தி தேவராஜ்
அன்புள்ள சாந்தி,
புத்தகக் கண்காட்சியில் பேனர்கள் ,வெளியீட்டுவிழாக்கள் போன்று முன்வைக்கப்படும் நூல்கள் அந்த ஆசிரியரால் செய்யப்படுபவை. அதில் பிழையேதுமில்லை. தமிழில் அதுவே சூழல். ஆசிரியர் தன் நூலை தானே முன்வைத்து பரப்புவது அப்பிரசுரகர்த்தருக்கு அவர் செய்யும் உதவி. செய்துதான் ஆகவேண்டும். பதிப்பாளர்கள் தனியாக படைப்புகளுக்கு பேனர் வைப்பதில்லை, பிரச்சினைகளை உருவாக்கும்.
என் நூல்களை முன்வைப்பதை ஆரம்பம் முதலே செய்ததில்லை. முன்பு என் பதிப்பாளராக இருந்த வசந்தகுமார் எனக்காக வெளியீட்டு விழாக்கள் ஏற்பாடு செய்தார். அதன்பின் இன்றுவரை சென்னையில் எந்த நூலுக்கும் வெளியீட்டுவிழாக்கள் இல்லை. அறம் வெளிவந்தபோது ஈரோட்டு நண்பர்கள் ஒரு விமர்சன அரங்கு கூட்டினர். அவ்வளவுதான். அதன்பின் என் நூல்களுக்காகவோ எனக்காகவோ எந்த விழாக்களும் நடைபெற்றதில்லை. நான் என் நூல்களுக்காக எந்த நிகழ்ச்சியும் ஒருங்கிணைத்ததில்லை.
இணையதளத்தில்கூட புத்தகக் கண்காட்சியை ஒட்டி என் நூல்களை நான் முன்வைப்பதுமில்லை. தேடிவாசிப்பவர்கள் வாசிக்கட்டுமே என்றுதான் நினைப்பேன். நான் எழுதுவது போன்ற எழுத்துக்களை வாசிப்பவர்கள் வேறுவகை எழுத்துக்களை வாசித்து, அவற்றினூடாகப் பயிற்சிபெற்று, மேலேறி வருபவர்கள். அவர்களுக்கு ஏற்கனவே இலக்கியச் சூழலும், நூல்களும் தெரிந்திருக்கும்.
நேரடியாக என் படைப்புகளுக்குள் நுழைபவர்கள் அறம் தொகுதி, தன்னறம் தொகுதி போன்றவற்றினூடாக நுழைபவர்கள். அவை இலவசப்பிரதிகள், நன்கொடைப்பிரதிகள் வழியாக பல்லாயிரக்கணக்கில் பரவியிருப்பவை. ஆகவே மேற்கொண்டு பெரிய விளம்பரம் தேவையில்லை. வெறும் விளம்பரத்தால் என் நூல்களை கொண்டுசேர்க்கமுடியாது, விளம்பரத்தை நம்பி வாங்கிவிட்டார்கள் என்றால் அடிக்கவருவார்கள்.தமிழினி வசந்தகுமார் என் நூல்களை வாங்க வருபவர்களிடம் ‘இதுக்கு முன்னாடி என்ன படிச்சிருக்கீங்க?’ என்று கேட்டபின்னரே நூல்களை கொடுப்பார்.
எனக்கு வரும் கடிதங்களைப் பார்த்தால் ஏராளமானவர்கள் வாசித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள் என்றுதான் தெரியவருகிறது. தமிழின் அறியப்பட்ட இலக்கிய, வலைத்தளச் சூழல்களில் தென்படாதவர்கள் என் விழாக்களுக்கு வந்து குழுமுகிறார்கள். வாசகர்கடிதம் எழுதுகிறார்கள். தேவையானபோது நிதி அள்ளி தருகிறார்கள். எனக்கு வரும் கடிதங்களில் ஐந்திலொருபங்கே என் தளத்தில் வெளியாகின்றது.
வெண்முரசே கூட தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அதைப்பற்றி படித்துப் பேசுவதற்காக மட்டுமே பல குழுமங்கள் உள்ளன. அத்தொடர் முடிந்தபின் வாசிப்பவர்களுக்காக புதிய குழுமங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதெல்லாம் எந்த நூலுக்கும் தமிழில் நிகழ்ந்ததில்லை.
புத்தகக் கண்காட்சியின்போது வேறு ஆசிரியர்களின் நூல்களை முன்வைப்பது என் வழக்கம். நான் பழைய ஆசிரியர்களின் நூல்கள், இளம் படைப்பாளிகளின் நூல்களை முன்வைக்கிறேன். இந்த தளத்தில் தொடர்ச்சியாக அவை பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் வெறும்பரிந்துரையாக அல்ல. ஒரு விவாதப்பரப்பின் புள்ளிகளாக.
ஜெ