பொதுவாக உலகம் முழுக்கவே கவிதைகளுக்கு கவிஞர்கள்தான் வாசகர்கள். எழுதும் கவிஞர்கள், எழுத எண்ணும் கவிஞர்கள். கவிதை பற்றி எழுதுபவர்கள் கவிஞர்கள் மட்டுமே. ஒருவகையில் அதுவே இயல்பானது. ஏனென்றால் கவிதை என்பது ஒரு பொதுவான ‘பொருட்கோள்சூழல்’ கொண்டது. அதை நான் ஒரு நாடகம் என்பேன். ஒவ்வொரு தனிக்கவிதையும் அந்த நாடகத்தின் ஒரு வசனம் போல. எவர் எங்கே எவரிடம் ஏன் சொன்னது என்பது அந்த நாடகத்தால்தான் பொருள்கொள்கிறது.
அந்த நாடகம் ஒரு கவிச்சூழலின் அனைவரும் சேர்ந்து தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருப்பது.புதிதாக உள்ளே நுழைபவர்களுக்கு அந்த நாடகம் தெரிவதில்லை. ஆகவே திகைக்கிறார்கள். அக்கவிதைகளில் தங்கள் வாழ்க்கையுடன் எவ்வகையிலேனும் தொடர்புகொள்ளும் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் அவை உறவு- பிரிவு சார்ந்த எளிமையான உணர்ச்சி வெளிப்பாடுகளாக இருக்கும். அல்லது அவர்கள் ஏற்கனவே அறிந்த அரசியல் கருத்துக்களை கொஞ்சம் வேறுவடிவில் சொல்பவையாக இருக்கும்
தீவிரமான கவிதையை கவிதைச்சூழலுக்கு வெளியே இருக்கும் இலக்கியவாசகன் வாசிப்பதைக் கவனிக்கநேர்வது ஓர் இனிய அனுபவம். அவனுடைய தத்தளிப்பும் ஆர்வமும் கண்டடைதல்களும் முக்கியமானவை. அவனை அடையும்போது ஒருவகையில் கவிதை தன் வழக்கமான எல்லையை மீறிச் செல்கிறது. அவ்வாறு மீறிச்செல்வது கவிதையின் சாகசங்களில் ஒன்று, ஆனால் அதுவும் நிகழ்ந்தபடியே இருக்கவேண்டும்.
தீவிரமான கவிதைக்கு வரும் அந்த ‘வாசகன்’ உண்மையில் எதிர்காலத்தில் இருக்கிறான். இன்று பொதுவாசகர்கள் கொண்டாடும் எல்லா கவிதைகளும் அவை எழுதப்பட்ட காலகட்டத்தில் அன்றிருந்த சின்னஞ்சிறிய கவிதைச்சூழலுக்குள் மட்டுமே புழங்கியவைதான். அவை பேசப்பட்டு பேசப்பட்டு உள்வாங்கப்பட்டன. வெவ்வேறுவகையில் பொதுச்சமூகத்தால் அவை பொருளேற்றம் செய்யப்பட்டன. அதன்பின் எளிமையாக புழங்க ஆரம்பித்தன. அவ்வாறு எதிர்காலத்தில் உருவாகப்போகும் வாசகச்சூழலில் இருந்து ஒருவர் காலத்தை தாவிக்கடந்து இப்போதே அக்கவிதையை வாசித்துப் பார்க்கிறார்
என் இளமையில் நான் முன்னோடியான தேர்ந்த விமர்சகர்கள் மற்றும் சகப்படைப்பாளிகளின் கருத்துக்களை மட்டுமே பொருட்படுத்தினேன். இணைய உலகம் உருவானபின் ஒவ்வொருநாளுமென எனக்கு வந்துகொண்டிருக்கும் வாசகர்கடிதங்கள் வழியாக இலக்கியவாதி அல்லாத வாசகர்களிடம் என் படைப்புக்கள் உருவாக்கும் உளப்பதிவை, அவர்களுடன் உரையாடி அப்படைப்புக்கள் அடையும் புதிய பொருளேற்றத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவையே மேலும் முக்கியமானவை என்னும் எண்ணம் இன்று உருவாகிவிட்டிருக்கிறது.
ஏனென்றால் இலக்கியப்படைப்புக்கள் முதன்மையாக வாசகர்களுக்கே எழுதப்படுகின்றன. வாசக எதிர்வினைகள் வழியாக ஓர் உரையாடல் உருவாகிறது. மெல்லமெல்ல ஒரு சொற்களம் திரண்டு வருகிறது. வாசகர் கடிதங்களில் உள்ள மொழிப்போதாமைகள், புரிதல்சிக்கல்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டாலும்கூட அவற்றிலுள்ள புதிய பார்வைகள், நுண்தளங்கள் இலக்கியவாதிகளால் பெரும்பாலும் முன்வைக்கப்படுவதில்லை என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் இலக்கியவாதி தன்முனைப்பையே கருத்து என்ற பேரில் பெரும்பாலும் முன்வைக்கிறான். வாசகன் படைப்பின் முன் கொள்ளும் உண்மையான, திறந்த உள்ளம் கொண்ட ஈடுபாடு அவனில் இல்லை. அவனிடமிருப்பவை கணக்குகள். தன்முனைப்பின் கணக்குகள், அதன்பின் தன்னுடைய சாதி, மதம் சார்ந்த பற்றுக்கள்.
ராதாகிருஷ்ணன் மிக எளிய வாசகராக 2010 வாக்கில் அறிமுகமானவர். முறைமைசார் கல்வி பயில வாய்ப்பில்லாதவர். தொழிலாளராக வாழ்க்கையை தொடங்கி இன்று சுயதொழில் செய்கிறார். தொடர்ந்து வாசிப்பவர். மொழியை கைவசப்படுத்த எழுத்தினூடாக தொடர்ந்து முயல்கிறார். தன் அனுபவங்கள் மற்றும் உணர்வுகளைச் சார்ந்து மட்டுமே சிந்திக்கிறார்
ராதாகிருஷ்ணன் லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகள் பற்றி எழுதியிருக்கும் இக்குறிப்பு அதனால் மிக முக்கியமான ஒன்று என நினைக்கிறேன்
கடலொரு பக்கம் வீடொருபக்கம் -நூல் பற்றி- ராதாகிருஷ்ணன் மதிப்புரை
லக்ஷ்மி மணிவண்ணனின் கடலொரு பக்கம் வீடொருபக்கம்- கவிஞர் சங்கரராமசுப்ரமணியன்