தெரிந்துகொள்ளலும் அறிதலும்- கடிதம்

வயதடைதல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மேலே உள்ள மூன்று வார்த்தைகளை எழுதுவதற்குள், எனக்குள் ஓர் பதட்டத்தை உணர்கிறேன். உங்களுக்கு எழுதும் வாசகர்களில், உங்களது படைப்புகளை மிகக் குறைவாகவே வாசித்த ஒருவனாக நான் இருக்கிறேன்.குறிப்பாகச் சொல்லப்போனால், இரண்டு படைப்புகள் தான். ‘அறம்’ ஒன்று, மற்றொன்று ‘முகங்களின் தேசம்’. இரண்டுமே குக்கூ சிவராஜ் அண்ணன் அறிமுகம் செய்தது தான்.அவ்வப்பொழுது சில கட்டுரைகளையும் கடிதங்களையும் வாசித்ததுண்டு.

நான் கட்டிடக்கலையில் முதுகலைப் பட்டம் படிப்பதற்கான நேர்காணலிற்காக அகமதாபாத் சென்றிருந்தேன். அங்கு, கேட்ட ஒரு கேள்வி – “நீங்கள் உங்கள் இளங்கலையில் படித்த ஏதேனும் ஐந்து புத்தகங்களைப் பற்றிக் கூருங்கள்”.என்னிடம், ஒரு அசட்டுப் புன்னகையைத் தவிர வேறு பதில் இல்லை.ஏனென்றால், ஐந்து வருடப் படிப்பில் ஒரு புத்தகம் கூட வாசித்ததில்லை என்பது தான் உண்மை. பள்ளி காலங்களிலும் வாசித்ததில்லை. வாசிப்பின் ஆரம்பம் முதுகலையில் தான் நடந்தது.

அதன் பின்னர், சென்னையில் ஓர் கல்லூரியில் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன். நான் இளங்கலையில் தவறவிட்ட கற்றல் அனுபவங்களை, என்னுடைய மாணவர்களுக்கு அளிக்க வேண்டி விரும்பினேன். அதில் முதன்மையாகப் புத்தகம் வாசிப்பு இருந்தது.அதற்கான சிறு முயற்சிகளும் செய்தேன்.மாணவர்களிடம் தொடர்ந்து வெவ்வேறு வழிகளில் புத்தகங்களை அறிமுகம் செய்தேன்.

அதே காலகட்டத்தில் கல்லூரியின் அமைப்பிற்கு வெளியே, மாணவர்களுடன் தொடர்ந்து புத்தகங்களையும்,ஆவணப் படங்களையும், பயண அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள ‘அகர்மா’ எனும் ஒரு பொதுத் தளத்தை, குக்கூ காட்டுப்பள்ளியின் ஆதிக்குடிலில் வேரூன்றி நிறுவப்பட்டது. வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு உரையாடல் வட்டத்தைத் தொடங்கினோம்.

அதில் முதன் முதலில் உங்களின் ‘Jeyamohan speech at UCEN’ காணொளியைத் திரையிட்டோம். நீங்கள் ஏன் அதை முப்பது வருடங்களாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறீர்கள் என்பதை , மாணவர்களுடன் பயணிப்பதால் இப்பொழுது என்னால் ஓர் அளவிற்குப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தக் காணொளியைப் பல மாணவர்களுடன் அறிமுகம் செய்ய முயற்சிக்கும் பொழுது அதில் சிறு நடைமுறை சிக்கல் இருப்பதைக் கண்டடைந்தோம். ஒன்று, சென்னையில் பெரிதலிவில்லான கல்லூரிகளின் கால அட்டவணையில் ‘வாசிப்பு நேரம்’ அல்லது ‘நூலக நேரம்’ என்பது ஒன்றில்லை. சில கல்லூரிகளில் இருப்பினும் அது வெறும் காகிதத்தில் தான் இருக்கிறது. காலையில் கல்லூரிப் பேருந்தைப் பிடிப்பது, மீண்டும் மாலை அதே பேருந்தில் திரும்பிச்செல்வது என்பதிலேயே அவர்களின் நான்கு வருடமும் முடிந்துவிடுகிறது.ஆகவே இதைப் போன்ற காணொளிகளைத் திரையிடுவதற்கும், உரையாடுவதற்குமான நேரம் கல்லூரியின் மனதில் ஒதுக்கப்படுவதில்லை.

இரண்டு, சென்னையில் ஒரு கல்லூரி வகுப்பில் இருக்கும் நாற்பது மாணவர்களில்,நான்குப் பெயரால் தான் இந்தக் காணொளியின் சொற்களையும் அதன் வழியே கருத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆக அதை ஒவ்வொரு நிமிடமும் நிறுத்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூற வேண்டியிருந்தது.இதை நானே தமிழ் வாசிப்பின் ஆரம்ப காலகட்டத்தில் உணர்ந்திருக்கிறேன். தமிழ் இலக்கிய வாசிப்பு பழக்கம் இல்லாதது இதற்கு ஒரு பெரும் காரணமாக இருக்கிறது.

‘ஏன் வாசிக்க வேண்டும்’ என்பதைத் தமிழில் புரிந்துகொள்வதற்குச் சிறிதேனும் வாசித்திருக்க வேண்டும். இது ஒரு முடிவில்லா சுழற்சியாகத் தென்பட்டது. ஆனால் இந்தக் காணொளியின் கருத்தைக் கல்லூரி மாணவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தோம். தமிழ் மட்டும் அல்லாது அனைத்து மொழி மாணவர்களுக்கும் இந்த காணொளி கண்டிப்பாகப் புரிந்துகொள்ளும் படி ஏதோ ஓர் வடிவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எங்களின் அகத்தின் ஆழ்ச்சொல்லாக இருந்தது.

இது இந்தக் காணொளி மட்டும் அல்லாது உங்களின் அனைத்து படைப்புகளுமே வெவ்வேறு வடிவில் இப்புவி முழுவதும் ஒலிக்க வேண்டும் என்பதே எங்களின் பிரார்த்தனை. அதற்கான முதல் கட்டமாய் இந்தக் காணொளியை ஆங்கிலத்தில் ஒலி பெயர்த்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முடிந்தவரையில் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு , அதற்குத் தகுந்த ஆங்கில சொற்களைப் பயன்படுத்தியுள்ளோம். மொழி என்பதைத் தாண்டி, கருத்துகளின் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாகவே இதைப் பார்க்கிறோம்.

திருவண்ணாமலையில் சமகால தொற்று நோயினால் அனாதையாக இறந்தவர்களை தன் மார்பில் சுமந்து அடக்கம் செய்த பீட்டர் அண்ணாவிற்கு, இந்த மொழிபெயர்ப்பு சமர்ப்பணம். –

நன்றியுடன்

அகர்மா குழுமம்

www.instagram.com/akarmaa_

www.akarmaafoundation.wordpress.com

அன்புள்ள அகர்மா நண்பர்களுக்கு

சிலநாட்களுக்கு முன் சென்னையில் ஒரு கூட்டத்திற்கு முனைவர் பட்ட ஆய்வு செய்யும் ஒரு வாசகி வந்திருந்தார். அறிவியலில் முனைவர். அவர் பேசும்போது அவருடைய தோழிகள் எதையுமே படிப்பதில்லை என்றார். ஆய்வேடுகளைக்கூட. தேவையான நூல்களையே காணொளிகள், உரைகள் வழியாக அறிகிறார்கள். கொஞ்சம் செய்திகளை வெட்டித்தொகுத்துக் கொள்கிறார்கள். ஒரு நூலை, ஒரு கட்டுரையை முழுக்க வாசிக்க அவர்களால் இயலாது என்றார்.

திகைப்பாக இருந்தது. நம் காட்சிக்கலாச்சாரம் நம்முடைய அடுத்த தலைமுறையை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. நம் கல்விமுறை அதிவேகமாக அழிந்துகொண்டிருக்கிறது. ஆசிரியர்கள் வாசிப்பதில்லை, மாணவர்கள் காகிதத்தையே கண்களால் பார்ப்பதில்லை. இந்த வீழ்ச்சி அளிக்கும் எதிர்விளைவுகள் நம்மை வந்து அறைய இன்னும் பத்தாண்டுகளாகும். நமது கல்வியால் பயனே இல்லை என்ற நிலை வந்துசேரக்கூடும்

இந்த உரை ஏன் புரிந்துகொள்ளப்படவில்லை என்றால் இதில் சொல்லப்படுபவை மிகமிக புதியவை. உண்மையில் மிகத் தொன்மையானவை. நடைமுறையில் இன்றைய தலைமுறையில் எவருக்குமே தெரிந்திராதவை. ஆகவே இக்கருத்தை வந்துசேர வாசகர்கள் கொஞ்சம் முயற்சி செய்யத்தான் வேண்டும். அந்த அளவுக்கு அன்னியப்பட்டுள்ளோம்..

ஜெ

முந்தைய கட்டுரைவாசகனின் பயிற்சி- தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்
அடுத்த கட்டுரைஅற்ப சகி