சமயச் சழக்கர்

 இராமலிங்க வள்ளலார்

அன்புள்ள ஜெ

கீழ்க்கண்ட உரையாடலை நான் முகநூலில் வாசித்தேன். உங்கள் கவனத்திற்கு இதை கொண்டுவர வேண்டும் என்று தோன்றியது. [யார் யார் என்பது தேவையில்லை. மறைத்திருக்கிறேன். ஓரு உதாரணமாகவே சுட்டிக்காட்டுகிறேன்]

ஓர் இந்துவாகிய நான் இந்து மரபையும் வழிபாட்டுமுறையையும் அறிய முயல்பவன். தொடர்ந்து ஆர்வத்துடன் அதைக் கற்கவும் ஈடுபாடு காட்டுகிறேன்

ஆனால் நான் ஊடகங்களிலே காண்பது என்னவென்றால் வெறும் அகங்காரம், காழ்ப்பு, அதைச்சார்ந்த வசைபாடல். முன்பெல்லாம் இலக்கியவாதிகள் ஏன் இப்படி சண்டைபிடிக்கிறார்கள் என்று நினைப்பேன். இன்றைக்கு ஆன்மிகவாதிகள் சண்டைபிடிப்பதை பார்க்கும்போது இலக்கியவாதிகளெல்லாம் எத்தனையோ நாகரீகமானவர்கள் என்று தோன்றுகிறது

இந்த சண்டைகளிலே மூன்றுநான்கு விஷயங்கள் கண்ணுக்குப் படுகின்றன. ஒன்று, சாதி. சாதியும் மதச்சம்பிரதாயமும் ஒன்றுக்கொன்று கலந்துகிடக்கின்றன. ஒருவர் வைணவராக இருப்பது அவர் வைணவச்சாதியில் பிறந்தததனால்தான். அவர் மத ஆசாரம் என்று சொல்வது சாதியாசாரத்தைத்தான்.

ஆகவே சாதிவெறியை அப்படியே மதவெறியாக ஆக்கிக்கொள்கிறார்கள். மற்றச் சாதிகளை வசைபாடுகிறார்கள். இழிவுசெய்கிறார்கள். அதற்கு ஆன்மிகப்பூச்சு பூசிக்கொள்கிறார்கள்.

இன்னொன்று, தான் நம்பும் தரப்பே உண்மை மற்றதெல்லாம் பொய் என்று நினைப்பது. இது ஒரு கண்மூடித்தனம். அதிதீவிர இஸ்லாமிய, கிறிஸ்தவர்களிடம் இருக்கும் நிலையும் இதுவே. தான் நம்பும் சம்பிரதாயத்தை முன்வைத்து மற்ற எல்லாம் வெட்டி என்று கம்புசுழற்றுகிறார்கள்

உண்மையில் மெத்தப்படித்த மதபண்டிதரிடம் பாடம்கேட்கச் சென்றால்கூட அவர் முக்கால்வாசி பேசுவது அவருடைய சம்பிரதாயம் அல்லாத எல்லாவற்றையும் வசைபாடுவதை மட்டும்தான். அதிலிருந்து அப்படியே சாதியாசாரத்துக்கு செல்வார். சாதி ஆசாரத்தை மதசம்பிரதாயமாக காட்டுவார்

கடைசியாக இருப்பது ‘நான் யார் தெரியுமா?’என்ற தோரணை. இந்த உரையாடலிலேயே அதுதான் உள்ளது. கொஞ்சம் ஏதாவது படித்தால்கூட உடனே வந்து சேர்வது இந்த நாற்றம்தான். அதை எடுத்துக்கொண்டு இன்னொருவரை நாறடிக்கக் கிளம்புவது. ஆபாசத்தின் உச்சம்

மனம் வருந்தி கேட்கிறேன். ஓரு நாகரீகமான இந்து இன்றைக்கு இந்து ஞானத்தை அடைவதற்கு வழியே இல்லையா?

எம்.ஆர்.

***

முகநூல் விவாதம் கீழே

யாராக இருந்தாலும்…சத்தியம் இதுவென நான் முடிவெடுத்தால் எதிலும் பின் வாங்கி ஓடி விட மாட்டேன். எவர் எப்படி எவ்வாறு பேசுவார் என்பது எல்லாம் நான் நன்கு அறிவேன். இங்கு பலருக்கு இருக்கும் சாஸ்திர ஞானம் எனக்கு இல்லைதான். அந்த பலரிடம் பணிவாக கேள்விகள் கேட்டே பல விஷயங்களில் தெளிவடைந்தேன்.

ஆனால் மெத்த சாஸ்திர ஞானம் உள்ளது என்பதால் சிலரின் பெயரை மென்ஷன் செய்தே இவனை அடக்கி விடலாம் என்று கனவு கண்டால்.. ஏமார்ந்து போவீர்கள். !

இதோ இப்படிதான் பதில் வரும்.

இருபது நாட்கள் முன்பு கோலாலம்பூர் தெருவில் இரண்டு மேல் நாட்டு வெள்ளைகார பக்தர்கள் பிரம்மசார்யம் விரதம் பூண்டு தெருவோரம் அமர்ந்து கிருஷ்ணர் நாமங்களை பாடி கீர்த்தனம் செய்து புத்தகம் விற்ற வீடியோ ஒன்றை பதிவிட்டேன் அல்லவா..

அவர்களை விட, அகம்பாவமாக , திமிறாக தன் சாஸ்திர ஞானங்களை இங்கு எழுதி எதிரிகளை துவம்சம் செய்து விட்டதாக நினைப்பவர் எல்லாம் பெரிய பக்தர்கள் அல்ல.

முதலில் மேலே நான் சொன்னதை செய்து விட்டு வர சொல்லவும்

அவன் வைணவனாகவே இருந்தாலும்..

*

உங்களை அடக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. யாராக இருப்பினும் ஒரு கை பார்க்கும் ஞானத்தை என் ஆழ்வார் எனக்கு அருளியுள்ளார். நீங்கள் என்னை அடக்கிவிடலாம் என நினைத்து இருவரை டேக் செய்தீர்கள். நான் எனக்கு தெரிந்த ஒருவரை டேக் செய்தேன் அதுவும் உங்கள் விளக்கத்திற்க்கு பின் அழித்துவிட்டேன் அவருக்கும் உங்களும் ஏதும் பிரச்சனையா என்பதை கூட அறியவில்லை.

*

அவர் மெத்த சாஸ்திர.ஞானம் உடையவர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பணிவு இல்லை. அகம்பாவம் அதிகம். வார்த்தை பிரயோகம் வைஷ்ணவர் பேசும் பேச்சு இல்லை.. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற எழுத்து. அவரை அழைத்தாலும் அவருக்கு எவ்வாறு பதில் கொடுப்பது என்று எனக்கு தெரியும். அடுத்து, அவர் பெயரை அழித்தது

இப்போது நீங்கள் சொல்லிதான் அறிந்தேன். அழிக்காமல் அவர் வந்து எழுதி இருந்தாலும் எனக்கு அச்சம் கவலை இல்லை.

*

சாஸ்திர திமிரும் அந்தப் பரம்பொருள் தானே..!!!

*

அன்புள்ள எம்.ஆர்.

அந்த முகநூல் விவாதத்தின் கடைசிவரி கிளாஸிக். அத்வைத தரிசனத்தின் உச்சம் அதுதான்.

இதில் வருந்த என்ன உள்ளது? சமயச்சழக்கு என்பது நாம் சமயம் என ஒன்றை அறிந்த காலம் முதல் இருந்து வருவது. அத்தனை ஞானிகளாலும் தொடர்ந்து கண்டிக்கப்படுவது, வெறுத்து ஒதுக்கப்படுவது. ஆனாலும் அது இருந்துகொண்டே இருக்கிறது, என்றுமிருக்கும். ஏனென்றால் அது மானுடனின் அடையாளம், ஆணவம் இரண்டுடனும் தொடர்புடையது. உடலழகு, செல்வம்,குலம்,அறிவு ஆகியவை ஆணவத்தை அளிப்பவை என நாம் என்றோ கற்றிருக்கிறோம் அல்லவா?

நீங்கள் செய்த பிழை என்பது முகநூல் வழியாக ஞானம் பெற முயன்றது. முகநூல் போன்ற சமூக ஊடகங்களுக்கு வருபவர்கள் பெரும்பாலும் பயில்முறையாளர்கள்.அரைகுறைக் கல்வியும் அதைவிட அரைகுறையான பண்பாட்டுப்பயிற்சியும் கொண்டவர்கள். அடையாளமற்ற கும்பல்துளிகள். ஆகவே வெறும் அடையாளத்தேவைக்காகப் பேசுபவர்கள். அவர்கள் ஆணவத்தை மட்டுமே முன்வைக்கமுடியும். நான் யார் தெரியுமா என்ற ஒற்றைவரியையே பல்வேறு வகைகளில் அவர்கள் எழுதிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் எவரும் எவருமே அல்ல என்பதுதான் உண்மை, அது அவர்களுக்கு தெரியும் என்பதனால்தான் இத்தனை ஆர்ப்பாட்டம்.

இன்றைக்கு இந்து மெய்யியலைக் கற்க இருவழிகள் உள்ளன. நீங்கள் யார், உங்கள் தேவை என்ன என்பது முதல் கேள்வி. நீங்கள் உங்களை வகுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் இயல்பு நிலைத்தன்மையை நாடுவது, அடிபணிந்து ஒழுக விரும்புவது என்றால் மரபான மெய்யறிதல்முறையே உங்களுக்கு உகந்தது. நீங்கள் தொன்மையான முறைமைகளை நாடலாம். அதற்குரிய நிறுவனங்கள், ஆசிரியர்கள் உள்ளனர். அங்கே எல்லாமே மாறாமல் அப்படியே கற்பிக்கப்படுகின்றன.

ஆனால் அங்கும் முறையான ஆசிரியர்களை தேடி அடையவேண்டும். அதற்கு உங்கள் நுண்ணுணர்வும் கூடவே நல்லூழும் உதவவேண்டும். அவ்வண்ணம் ஏற்றுக்கொண்டபின் அதன் நெறிகளுக்கு உட்பட்டு முற்றொழுகவேண்டும். சென்றடையலாகும்

நீங்கள் உங்களை  மாற்றத்தை நாடுபவர், தேடல்கொண்டவர் என உணர்வீர்கள் என்றால் நீங்கள் மரபான அமைப்புகள் மற்றும் ஆசிரியர்களை ஏற்கமுடியாது. அவர்களின் ஆசாரவாதமும், பழைய அறவியலும் உங்களுக்கு ஏற்புடையனவாக இரா. நீங்கள் உங்களுக்குரிய நவீன ஆசிரியர்களையே ஏற்கவேண்டும். அவர்களும் நம் சூழலில் உள்ளனர்

நான் முதல்வகையினரை ஏற்கமுடியாதவன். அவர்களுடனான என் சந்திப்புகள் எல்லாமே கசப்பூட்டின. ஒரு காலத்தில் அவர்கள்மேல் கடும் நிராகரிப்புடன் இருந்தேன். இன்று அவர்கள் ஒரு தரப்பு அவ்வளவுதான் என நினைக்கிறேன்.

நவீன மனிதனுக்குரியது நவீன ஆன்மிகமே. அது நவீன அறவியலைக் கொண்டிருக்கும். நவீன வழிமுறைகளை கொண்டிருக்கும். நம்பிக்கைக்குப் பதிலாக அறிதலை முன்வைக்கும். ஆசாரங்களுக்கும் அனுஷ்டானங்களுக்கும் பதிலாக ஆழ்நிலைப் பயணங்களை முன்வைக்கும்

பழைமையான ஆன்மிக மரபுகள் தங்களை இறுக்கிக்கொண்டவை. மாறாமல் நிலைகொள்ள முயல்பவை. ஆகவே குறுகியவை, பிறவற்றை முற்றாக மறுப்பவை. அவை அப்படித்தான் இருக்கமுடியும், ஆகவேதான் அவை இத்தனை காலம் நீடித்தன.

ஆகவே மரபான ஆன்மிகமரபு ஒன்றில் நீங்கள் இணைந்தால் அந்த குறுகலை, பிறர்மறுப்பை தவிர்க்கமுடியாது. ஆனால் அந்த மரபுகளில் ஒரு நல்லாசிரியரை அடைந்து, அவரால் வழிகாட்டப்படும் ஒரு மாணவர் ஒருநிலையிலும் இன்னொரு மரபை மறுத்து தொடைதட்டி வாதிடமாட்டார். மட்டம்தட்ட முயலமாட்டார். ’நான் யார் தெரியுமா!’ நான் என ஒருபோதும் சொல்லமாட்டார். அது கல்விக்கு நேர் எதிரான ஆணவம் என்றே கொள்ளப்படும்.

நானறிந்த வரை மரபான குருமுறைகளில் முதலில் கட்டுப்படுத்தப்படுவதே இந்த வகையான ஆணவ வெளிப்பாடுகளைத்தான். சொல்லப்போனால் எதையும் விவாதிப்பதையே அங்கே அனுமதிப்பதில்லை. விவாதம் அறிவை மறைக்கும் களிம்பு என்பதே அக்கல்விமுறையின் புரிதல்.

விவாதம் தேவை என்றால் அவர்களுக்குள் ,இணையான இரு மாணவர்கள் ,இருவருமே கற்றுக்கொள்ளும்பொருட்டு, விவாதிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு நிறைய முறைமைகள் உண்டு. ஆசிரியரின் கண்காணிப்பும் இருக்கும்

ஒரு ஞான மரபு இன்னொரு மரபை எதிர்த்து விவாதிக்கும் தேவை ஏற்பட்டால் அந்த மரபின் தலைமை அறிஞர் சென்று, முறைப்படி நிகழும் ஒரு விவாத அரங்கில் நியாய சாஸ்திர முறைமைப்படி எதிர்த்தரப்பை மறுத்து தன் தரப்பை முன்வைப்பார்.

மூலநூல்களை பிழையறக் கற்பது, பிழைகளை விவாதிப்பது ஆகியவற்றுக்கு மரபான அமைப்புகளில் பெரிய இடம் உண்டு. ஏனென்றால் அவர்கள் மரபை மாற்றாமல் தொடர விரும்புபவர்கள். ஆனால் அதை முற்றிலும் தகுதிகொண்ட அறிஞர்கள், அதற்கான அவைகளில், தங்களுக்குள் செய்துகொள்ளும் அறிவுச்செயல்பாடாகவே நிகழ்த்துவார்கள். அவற்றை பயில்பவர்கள் பொதுவெளியில் விவாதிக்க அனுமதிக்க மாட்டார்கள்.

அத்தகைய விவாதங்கள் எல்லாமே சமயச்சழக்கு என்றும் அறிவுக்கும் ஞானத்துக்கும் எதிரான அழுக்கு என்றும் மட்டுமே அங்கே கருதப்படும்.ஆகவே இங்கே பொதுவெளியில் சழக்கிடுபவர்களை அந்தந்த மரபின் முகங்களாக கருதவேண்டியதில்லை. இவர்கள் பலவகை உளச்சிக்கல்கள் கொண்ட எளிய மனிதர்கள் மட்டுமே.

நவீன மெய்ஞான மரபுகள் என்பவை மரபை மறுப்பவை அல்ல. ஒரு ஞானியால், அல்லது ஞானியர் வரிசையால் தொல்மரபிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மெய்ஞானம் மரபின் ஆசாரங்கள் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு முன்வைக்கப்படும்போது ஒரு புதிய மெய்ஞானமரபு உருவாகிறது.

சென்ற இருநூறாண்டுகளுக்குள் உருவான அத்தகைய புதிய மெய்ஞான மரபுகளை நவீன மெய்ஞான மரபு என்கிறோம். வள்ளலார், நாராயணகுரு, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்களிடமிருந்து தொடங்கிய அத்தகைய நவீன ஞானமரபுகள் பல இங்குள்ளன.

ஆனால் எல்லா காலகட்டத்திலும் இத்தகைய கிளைபிரிதல்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இது இந்துமெய்ஞான மரபின் அடிப்படை இயல்பு. ராமானுஜர், மத்வர், சங்கரர் எல்லாருமே இப்படி பிரிந்தவர்களே. தங்கள் மெய்ஞானத்தை அதற்கு முன்பிருந்த ஆசாரங்கள், அமைப்புகளை நிராகரித்து முன்வைத்தவர்களே

இந்த கிளைபிரிதல்கள் பெரும்பாலும் அமைப்புகள் தேக்கமடைந்து, ஆசாரங்கள் வெற்றுச்சடங்குகளாகிப் பொருளிழக்கும்போது உருவாகின்றன. ஆகவேதான் இன்றைய நவீன ஆன்மிகமரபுகள் எனக்கு ஏற்புடையவையாக உள்ளன. அங்குதான் நவீன அறவியல் உள்ளது. இன்றைய உலகுக்குரிய மதிப்பீடுகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் என்றுமுள்ள மெய்ஞானம் முன்வைக்கப்படுகிறது

நீங்கள் நவீன உள்ளம் கொண்டவர் என உணர்ந்தால் நவீன ஆன்மிக மரபுகளை நாடுங்கள். அங்கு உங்கள் அறவுணர்வுக்கும் நவீனப்பார்வைக்கும் உகந்தவகையில் அதே ஆன்மிகம் கற்றுத்தரப்படும். அங்கே மூலநூல்களை எழுத்தெண்ணிப்படித்து பாடபேதம் சொல்லிப் பூசலிடுவது, ஆசார அனுஷ்டானச் சண்டைகள், ஆசாரம் பேசுவது என்ற போர்வையில் சாதிப்பூசல்கள் போன்றவை இருக்காது. சாராம்சம் சார்ந்த விவாதமும் அதற்குரிய பயிற்சிகளும் மட்டுமே இருக்கும்.

ஆனால் இங்கும் கூட பயில்முறையாளர்கள் பொதுவெளியில் பேசுவதை முழுமையாகவே கட்டுப்படுத்துவார்கள். அத்தகைய நவீன ஆன்மிக மாணவர்கள் பல்லாயிரம்பேர் தமிழகத்தில் உள்ளனர், எவர் குரலும் இப்படி இணையத்தில் ஒலிப்பதில்லை. ஏனென்றால் அந்த விவாதம் வெறும் ஆணவப்பூசலாக மாறி வெற்று வீராப்பை நிறைக்கும். எதையும் கற்கமுடியாதவர்களாக ஆக்கிவிடும்

சரி, எங்கே பொதுவிவாதம் அனுமதிக்கப்படலாம்? அனைவருக்கும் பொதுவான ஆலயவழிபாடு போன்றவற்றில் உள்ள மரபுகள் நெறிகளைப் பற்றி விவாதம் செய்யலாம். உதாரணமாக ஆலயங்களில் சித்திரை அல்ல தைதான் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடப்படவேண்டும் என ஓர் அரசாணை வருமென்றால் அது தொல்முறைமை சார்ந்ததா என்று பொதுவாக விவாதிக்கப்படவேண்டும்.சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதிக்கப்படலாமா, அதற்கு ஆகம அனுமதி உண்டா என்பது பொதுவெளியில் விவாதிக்கப்படவேண்டும்.

ஏனென்றால் இவையெல்லாம் ஞானம் தொடர்பானவை அல்ல. நூலறிவு சார்ந்தவையும் அல்ல. இவை நடைமுறைப் பிரச்சினைகள்.பொதுமக்களின்  புரிதலை ஒட்டி முடிவெடுக்கப்படவேண்டியவை. ஆகவே பொதுமக்கள் காண ஓரு விவாதம் நிகழ்ந்தாகவேண்டும். அவற்றை மெய்யாகவே நூலறிந்து, அவையில் ஏற்பு அடைந்தவர்கக்ளே சொல்லவேண்டும். அறியாதோர் ஊடுபுகுந்து சிலம்பக்கூடாது. அக்கருத்துக்களும்கூட தன்முனைப்பின் வெளிப்பாடாக அன்றி, முறைமைகள் காக்கப்படவேண்டும் என்ற மெய்யான அக்கறையின் குரலாகவே ஒலிக்கவேண்டும். மரியாதையின் எல்லைகள் கடக்கப்படலாகாது.

எப்போதும் சொல்லப்படக்கூடிய ஒன்று உண்டு. ஆன்மிகம் என்பது அடையாளங்களைச் சுமப்பதும் ஆசாரங்களைச் செய்வதும் அல்ல. அது ஒருவன் அகத்தே செய்துகொள்ளும் பயணம். அதற்கு ஒருங்கமைவுள்ள உள்ளமும் தொடர்ந்த ஆற்றலும் தேவை. நாம் பேசும் ஒவ்வொன்றும் அந்த அக ஆற்றலில் இருந்து பிடுங்கி வெளியே வீசப்படுபவையே. நன்றே ஆயினும், விவாதங்கள் இழப்பே. இத்தகைய சழக்குகளைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். இதில் இறங்கினால் முழு ஆற்றலும் இவ்வண்ணம் வீணானபின் காலிக்குடம் ஒன்றே எஞ்சியிருக்கும்.

ஜெ

இருளறிவு

முந்தைய கட்டுரைவாசகனும் எழுத்தாளனும்
அடுத்த கட்டுரைவெண்முரசுக்கு நன்றி -கடிதம்