விக்கி- கடிதங்கள் 2
மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமே விழைகிறேன். விக்கிப்பீடியாவில் 2013 முதல் பங்களித்து வருகிறேன். 2008 முதல் 2011 வரை நன்கொடை ஆங்கில விக்கிக்கு நன்கொடை அளித்து வந்தேன். அதன் பின்னர் 2013 முதல் இன்று வரை கட்டுரைகள் எழுதுகிறேன். தகவல்களைத் திருத்துகிறேன். விக்கிப்பீடியா தொடர்பாக பயிற்சியளிக்கிறேன். புகைப்படங்களைப் பதிவேற்றுகிறேன். இது என்னுடைய பங்களிப்பு.
இது போல நூற்றுக்கணாக்கானோர் பங்களிக்கின்றனர். தமிழ் விக்கிப்பீடியாவில் அனைவரும் தன்னார்வலர்கள். தங்களின் அலுவலக நேரம் போக மீதி நேரத்தில் தமிழ்விக்கிப்பீடயாவில் பங்களிக்கிறோம். இதில் தகவல் பிழைகள் இருக்கக்கூடும். வேண்டுமென்றே தவறாக அதை வைத்திருப்பதில்லை. எனவே தமிழ் விக்கிப்பீடியா பயனற்றது என்பது பொருத்தமற்றது.
இந்தியத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் இணைந்து பங்களிக்கிறோம். இதன்படி சில கொள்கை முடிவுகள் கடைபிடிக்கப்படுகின்றன. முடிந்தவரை கிரந்த எழுத்துகளைத் தவிர்ப்பது ஆங்கிலம் கலக்காமல் எழுதுவதும் அதில் அடங்கும். விக்கிப்பீடியா என்பது ஊர்கூடித் தேர் இழுத்தல். நான் எழுதும் கட்டுரைகளைப் படிக்கும் பிறர் அதிலுள்ள இலக்கணப் பிழைகளையோ அல்லது தகவற் பிழைகளையோ திருத்தலாம் அல்லது மேலதிகத் தகவல்களை இணைக்கலாம.
அங்குதான் மனம் புண்படுகிறது, நான் எழுதியதை எப்படித் திருத்தலாம் என கொதித்தெழுகின்றனர். அதன் வெளிப்பாடே தமிழ்விக்கி மொண்ணையாக இருக்கிறது எனும் வாதம். ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கட்டுரைகளை கொண்டுள்ள தமிழ் விக்கி தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பின்னால் உள்ள உழைப்பு பெரியது. தமிழ் விக்கியில் வேறு எவரும் பங்களிக்கக்கூடாது எனும் கட்டுப்பாடுகள் இல்லை. உங்களின் பார்வைக்கு தவறு எனப்படுவதைச் சரிசெய்யலாம். எனவே வெறுமனே குறை சொல்வதைவிட அதில் பங்களித்து அதன் பிழைகளைச் சரி செய்யலாம். முரண்பாடுகளை கண்ணியமான முறையில் உரையாடித் தீர்த்துக் கொள்ளலாம்.
சிக்கல் என்னவெனில் நான் எழுதியதைத் திருத்தவே கூடாது எனும் மனப்போக்குதான். சமீபத்தில் ம. நவீன் கட்டுரையில் மாற்றப்பட்ட திருத்தம் தொடர்பாக நவீன் தன் வருத்தத்தினைப் பதிவு செய்திருந்தார். தமிழ் விக்கியில் தொடர்ந்து பங்களிப்பவன் எனும் முறையில் நவீனின் மனக்குமுறல்கள் தேவையற்றவை எனக் கருதுகிறேன். ஒரு இலக்கியவாதியாக அவரால் அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரை திருத்தப்பட்டது அவருக்கு வருத்தமளிக்கலாம். அக்கட்டுரை எனது கன்ணில் பட்டிருந்தாலும் நானும் கனக்ஸ் எனும் பயனர் செய்த திருத்தத்தினையே செய்திருப்பேன்.
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இது தவறாகத் தெரியலாம். விக்கியின் கொள்கைகளையும் அதன் நோக்கத்தினையும் புரிந்து கொண்டு பங்களிக்கும் எனக்கு அக்கட்டுரையில் நீக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட விசயங்கள் சரி எனத் தோன்றுகிறது. தொடர்புடைய சுட்டி;
தமிழ் விக்கிப்பீடியா மிகவும் பரிசுத்தமானதா அதில் பிழைகளே இல்லையா எனில் இருக்கிறது என்பதுதன் பதில். வாருங்கள் இணைந்து அதைச் சீரமைப்போம். அதைவிடுத்து வெளியே இருந்து குறை சொல்லுவதைவிட அதில் ஐக்கியமாகி அதைச் சரிசெய்யலாம்.
பாலா ஆர்