ஜெயகாந்தன் வாசிப்புகள்- கடிதங்கள்

ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-3
ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-2
ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்.1 
ஜெயகாந்தன் தமிழ்விக்கி

அன்புநிறை ஜெ,

“அலைந்தவனை அமையச் செய்யவந்த தெய்வமா அவள்?” – இந்த ஒற்றை வரியில் மீண்டும் புதிதாக ஒளிர்கிறது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். மீண்டும் வாசிக்க வேண்டும்.

கல்லூரி நாட்களில் முதலில் வாசித்த நாவல், இதில் வரும் எந்தத் தத்துவங்களைக் குறித்த அறிதலுமே இல்லாத அவ்வயதில் பெரும் கனவுகளை விதைத்த கதை. ஹென்றி போல கட்டற்று இருப்பதற்கு ஒரு பெண் பித்தியாகத்தான் இருக்க வேண்டுமா என்பது போல அப்போது ஏதோ எண்ணிக் கொண்ட நினைவிருக்கிறது.

கதையின் மாயவசீகரத்தைக் கூட்டும் பேபி குறித்து, ஆதியந்தம் அறியவியலா நதி போன்ற ஒரு உருவம் மனதில் இருந்தது. ஹென்றி பல துறைகளை கடந்து செல்லும் பயணி, அவள் அவனது உன்னத தருணமொன்றில்  அவன் அள்ளிய கையில் வந்தேறிய நதி என்பது போல. இந்த உவமையெல்லாம் உங்களை வாசித்த பிறகு நான் சேர்த்துக் கொள்வதாகத்தான் இருக்கும். அன்று அவ்வளவு தோன்றியதா என்றெல்லாம் தெரியவில்லை.

சுருக்கமாக அவளை எங்கும் அமையாதவள், எந்தக் கட்டுகளும் இல்லாதவள் என்பது போல ஏதோ புரிந்து கொண்டேன். “ஒளியாக அங்கே தன்னை நிறுத்திவிட்டு செல்கிறாள் திருமகள்” என்ற வரி தரும் மன எழுச்சி பெரிது.  அவளை ஷிவாகோவின் லாராவோடு இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.

அலைச்சல்கள் – அமைதல் என்ற கோணத்தில் ஒரு பெரிய திறப்பு இது. அலையும் மெய்யுசாவிகளின் துயர் தீர்க்க அவனுள்ளிருந்தே எழும் அறிவுத் தெய்வம்.பிரயாகையில் வரும் துருவனும் கங்கையும் உடன்பிறந்தவர்கள் என்ற வரியும் நினைவில் வருகிறது. நிலைகொள்ளலும் அலைபாய்தலும் இரு பக்கங்களாக அமைந்ததே முழுமை என்ற வரியோடு இணைத்தும் இதை வாசிக்கலாம்.

ஒரு எழுத்தாளனாக பேபியின் கதாபாத்திரம் எங்கு தோன்றுகிறாள், எங்கு மறைகிறாள் என்பதைத் தொட்டெடுத்து அவளுக்கு ஜெகே தந்த பிறவி நோக்கம் இன்று நிறைவேறியதாக எண்ணிக்கொண்டேன்.

இந்தக் கட்டுரையை நீங்கள் முடிக்கும்வரை இக்கடிதத்தை எழுத வேண்டாம் என எண்ணினேன். ஆனாலும் கைமீறி எழுதிவிட்டேன்.

 

மிக்க அன்புடன்,

சுபா

 

அன்புள்ள ஜெ

 

ஜெயகாந்தன் என் மனதுக்கு உகந்த எழுத்தாளர். 2013ல் நான் கல்லூரியில் படிக்கும்போது ஜெயகாந்தன் அறிமுகமானார். அன்று நான் ஒரு கிராமத்துப்பெண். சிறுமி. உலகம் தெரியாது. ஜானகிராமன், சுஜாதா, ஜெயகாந்தன் , லா.ச.ரா எல்லாரும் சேர்ந்தே அறிமுகமானார்கள். ஆனால் எனக்கு ஜெயகாந்தனே மிக அணுக்கமானவராக இருந்தார். ‘என்னுடைய எழுத்தாளர்’ என்று நான் அவரைத்தான் உணர்ந்தேன். நான் வாசிக்க வரும்போதே அவர் பழைய எழுத்தாளர்தான். நான் உங்கள் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தது 2018 லே தான். எனக்கு அந்த கல்லூரி நூலகம் வழியாகத்தான் ஆசிரியர்கள் அறிமுகமானார்கள்

ஜானகிராமன், லா.ச.ரா எல்லாம்  நான் ஏற்கனவே குடும்பச்சூழலில் பார்த்துச் சலித்த விஷயங்களையே எழுதுபவர்கள் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. சுஜாதா பொருட்படுத்தப்படவேண்டியவர் என்றே எனக்கு தோன்றவில்லை. செயற்கையாக சில பையன்கள் ஜோக்கடிப்பார்கள் . அதுபோல எழுதுகிறார் என்று தோன்றியது.

ஜானகிராமன், லா.ச.ரா போன்றவர்கள் எழுதும் அந்தக்குடும்பக்கதை உலகம் என் இளமை முதலே என்னைச் சுற்றி இருந்தது. அவள் அப்படி இவள் இப்படி… அதை ஏன் உயர்ந்தவகை இலக்கியமாகச் சொல்கிறார்கள் என்று அன்றும் இன்றும் புரியவில்லை. ஒருவேளை அவர்கள் அந்த பெண்களின் உலகத்தை எழுதிவிட்டதனால் ஆண்களுக்குப் பிடிக்கிறதோ என்னமோ. ஆனால் தி.ஜானகிராமன், லா.ச.ரா பிடிக்கும் என்று சொல்லும் ஆண்களை நான் கவனிக்கிறேன். அவர்களெல்லாமே உணர்ச்சிகரமான அசடுகள். சிந்தனையின் ஆழமில்லாத ரொமாண்டிக் மனிதர்கள். பெரிதாக அரசியல் ஈடுபாடுகூட அவர்களிடம் இருக்காது.

எனக்கு புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும்தான் பிடித்த எழுத்தாளர்கள். அப்புறம் சுந்தர ராமசாமி. இன்றைக்கு நான் வெண்முரசு வரை படித்துவிட்டேன். இன்று ஆங்கில கிளாஸிக்குகளைக்கூட படிக்கிறேன். நீங்கள் எழுதியதிலிருந்து தொடங்கி மேஜிக் மௌண்டெய்ன் படித்து முடிக்கப்போகிறேன். ஆனால் இன்றைக்கும் எனக்கு ஜெயகாந்தன் முக்கியமானவர். அவர்தான் மனிதர்களை கருத்துக்களின் வடிவமாக காட்டினார். அதுவரை மனிதர்களை ஆசாபாசங்களால் ஆனவர்களாகவே நம் எழுத்தாளர்கள் காட்டினார்கள்.காமம் வஞ்சகம் வெறுப்பு இல்லாமல் அவர்களால் மனிதர்களைப் பற்றி எழுதவே முடியாது.

காமம் வஞ்சகம் வெறுப்பு ஏதுமில்லாமல் மனிதர்களைப்பற்றி எழுதிய முதல் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன்தான். நான் தாமஸ் மன் படிக்கும்போதுதான் இந்தமாதிரி கருத்துக்களால் ஆனவர்கள் மனிதர்கள் என்று எண்ணி எழுதிய தமிழ் எழுத்தாளர் யார் என்று யோசித்தேன். உடனே ஜெயகாந்தன் ஞாபகம் வந்தார். எனக்கு அவரைப்பிடிக்க அதுதான் காரணம் என்று தெளிவடைந்தேன்.

உண்மையில் மனிதர்களை கருத்துக்களாகப் பார்ப்பது ஒரு பெரிய முதிர்ச்சிநிலை. நம் கண்கூடாக காணும் வாழ்க்கையில் அப்படி நாம் அறிவது கிடையாது. பாரீஸுக்குப்போ நாவலில் சாரங்கனையும் அவன் அப்பாவையும் ஜெயகாந்தன் இரண்டு கருத்துக்களாக மட்டுமே பார்க்கிறார். நேரில் பழகினால் நாமும் ஆசாபாசங்கள் வழியாகவே அவர்களைப் பார்ப்போம். வெறுப்போம் அல்லது விரும்புவோம். ஜெயகாந்தன் அப்படி பார்க்கவில்லை. நம்மைச்சுற்றியுள்ள எல்லா மனிதர்களும் வெவ்வேறு கருத்துக்கள்தான் என்பது ஒரு மிகப்பெரிய புரிதல். அது தாமஸ் மன்னுக்கு உள்ளது

என்னால் இதைச் சரியாகச் சொல்லமுடியவில்லை. உங்கள் தளத்திலே ஒரு வாசகி ஜெயகாந்தனைப் பற்றி எழுதும்போது ‘எழுத்தின் ஆண்மை’ என்று சொன்னார். அது எனக்கு சிலிர்ப்பை உருவாக்கிய வார்த்தை. அதுதான் ஜெயகாந்தன். அவர் எழுதிய எந்த கதாபாத்திரமும் அவரால் வெறுக்கப்படவில்லை. மனிதர்களை அவர் மோதவிடவில்லை. அந்த மனிதர்களின் சாராம்சமான கருத்துக்களையே மோதவிட்டார். அதனால் அவர் கசப்பையோ காழ்ப்பையோ எழுதவில்லை

அந்த தரிசனத்தின் உச்சம் என்றால் அது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்தான். அதில் மோதலே இல்லை. மனிதர்கள் வெவ்வேறு கருத்துக்கள். அவர்கள் ஒரே இடத்தில் வாழ்கிறார்கள். பூசலே இல்லை. அந்த சொத்தைப்பங்கிடுவது பற்றிய பஞ்சாயத்துப்பேச்சு கண்கலங்க வைக்கும் இடம். மரபான ஒரு வேல்யூவும் நவீனமான வேல்யூவும் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன. இரண்டுமே தழுவிக்கொள்கின்றன. இந்த உச்சத்தை அவரால்தான் எழுதமுடியும். மனிதர்களை அவர்களின் பலவீனங்களுக்காக வெறுக்காதவரால்தான் அவர்களின் மேன்மைகளை கண்டுகொள்ள முடியும்

உங்கள் கட்டுரை எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது. நானே அதை எழுதியிருப்பதாக தோன்றியது. நாவலின் கதாபாத்திரங்களை கருத்துக்களின் குறியீடாக நீங்கள் காண்கிறீர்கள். அது நாவலை மிக உயரத்துக்குக் கொண்டுசெல்கிறது

 

எம்.ஜீவலட்சுமி

முந்தைய கட்டுரைகனலி- சூழியல் சிறப்பிதழ்
அடுத்த கட்டுரைஅயோத்திதாசர்,டி.தர்மராஜ்