அயோத்திதாசர்,டி.தர்மராஜ்

அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை வாங்க

அயோத்திதாசர்:பார்ப்பனர் முதல் பறையர் வரை நூலின் ஆசிரியர் நண்பர் தருமராஜன் அவர்களுக்கும், மேடையில் அமர்ந்திருக்கும் சமஸ் அவர்களுக்கும்  நூலை வெளியிடவும் உரையாற்றவும்   வருகை தரவிருக்கும்  நண்பர் சு.வெங்கடேசன் அவர்களுக்கும்  மற்றும் இந்த அரங்கத்தில்  அமர்ந்திருக்கும்  எனது நண்பர்களுக்கும்  வாசகர்களுக்கும்  வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே.. குமரி மாவட்டத்தில் முக்கியமான ஓர் ஆலயம்  ஒன்று இருக்கிறது. ‘திற்பரப்பு’ ஆலயம்.  ‘கிராதமூர்த்தி’ என்று அதற்குப் பெயர். கிராத மூர்த்தி என்றால், சிவன்  காட்டுமிராண்டியாக, காட்டாளனாகக் கோயில் கொண்டிருக்கக் கூடிய இடம் என்று பொருள். பேராசிரியரும் வரலாற்று ஆய்வாளருமாகிய அ.க.பெருமாள் அவர்கள் கூறுகிறார், இருநூறு  அல்லது இருநூற்றைம்பது ஆண்டுகள் வரைக்கும்  அந்த  ஆலயத்தில் சிவபெருமானுக்கு உயிர் பலி கொடுக்கப்பட்டது என்று.

உயிர்ப்பலி கொடுத்த மரபிலிருந்து  அது  பின்னால் மீட்டெடுக்கப்பட்டு  இன்றைய கோயிலாக மாற்றப்பட்டது.  இவ்வாறு மாற்றப்பட்டுவிட்டபோதும்  உயிர்ப்பலி கொடுத்த அந்தச் சடங்கை உடனடியாக விடமுடியாது அல்லவா? அதலால்  ஆற்றின் மறுகரையில்  இன்னொரு சிவன் நிறுவப்பட்டார். அதுதான் உண்மையான காட்டுமிராண்டி சிவன். அந்தச் சிவனுக்குப் பழங்குடி காணிக்கார இனத்தைச் சேர்ந்த ஒருவர் பூஜை செய்வார். அவர் அங்கே இப்போதும் உயிர்ப்பலி  கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆண்டுக்கு ஒரு முறை  ஒரு சேவலாவது  சிவனுக்குக் கொடுக்கப்படுகிறது.இந்தப் பக்கம் சிவன் வேறொரு வடிவில் அமர்ந்திருக்கிறார்.

நமக்கு அனைவரும்   அறிந்த தகவல்தான். ‘சைவம்’ என்பற்கு  ஒரு ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளுக்கு முன்னால்   இருந்த அர்த்தம் இன்றைக்கு இல்லை.   தொடர்ந்து அதன் அர்த்தம்  மாறிக்கொண்டேயிருக்கிறது.  மேலும் சிவன்’ என்ற அர்த்தம் கூட மாறிக்கொண்டேதான் இருக்கிறது. ஐந்நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்  சிவன் பாசுபதர்களின் தெய்வம்.

காளாமுகர்களின், கபாலிகர்களின்,  மாவிரதர்களின் தெய்வம். இன்றைக்கு அது ஒரு தெய்வம். சைவத்தின் தெய்வம்.  சைவம் என்ற  ஒரு வார்த்தையைக் கேட்டவுடனையே அகிம்சை, கொல்லாமை எல்லாமே நினைவுக்கு வருகிறது. சைவப்பூனை என்று சொன்னாலே அசைவம் உண்ணாதது என்று அர்த்தம். ஆனால்  வரலாற்றில் தமிழகத்தில் உள்ள பல சைவ  ஆலயங்களில்  உயிர்ப்பலி கொடுக்கப்பட்டிருக்கிறது. அரிதாக நரபலிகூட கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஒரு தொன்மமாகக் கூடச் சொல்வார்கள்  சங்கரன் கோவில் சிவனுக்குக் கூட  நரபலி ஒருகாலத்தில் இருந்தது என்று.

இங்கு முன்வைக்கப்படும்  முதல் கேள்வி என்னவென்றால்  சிவன் என்கிற  உருவகத்தை,  வார்த்தையைத் தொடர்ந்து நாம் எப்படி மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். அந்த ஒரு வார்த்தைக்கு அர்த்தம் இருக்கிறதா என்பதை விட  அந்த அர்த்தத்தை எப்படி நாம் அழிக்கிறோம் என்பதுதான் முக்கியம். அதாவது, எப்படி அந்த அர்த்தத்தை மறு வரையறை செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

ஒரு நூறு ஆண்டுகளுக்குள் நாம் பயன் படுத்தும் அர்த்தம்  தன்னளவில் எப்படி மறு வரையறை செய்யப்பட்டுவிடுகிறது. என்பதைக் கவனிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வார்த்தை மறுவரையறை  செய்யப்படுவது போல  ஓர் ஆளுமையும் மறு வரையறை செய்யப்படுகிறார். ஒர் அரசன் மறுவரையறை செய்யப்படுகிறான்.

சென்ற ஐம்பது ஆண்டுகளில் ராஜராஜ சோழனுக்கு  இருக்கக் கூடிய அர்த்தம் வேறு. தஞ்சை பெரிய கோவிலை ஆராய்ந்த வெள்ளையர்கள்  இக்கோயிலை யார் கட்டியது? என்று கேட்கும் போது  தஞ்சையில் உள்ள பல நபர்கள் ‘பூதங்கள்’ கட்டியதாகத்தான் சொல்கிறார்களேயொழிய  ராஜராஜனின் பெயரைச் சொல்லவில்லை. வெள்ளையர்கள்தான் அது ராஜராஜ சோழன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது என்று கண்டுபிடித்தார்கள். அதை நிறுவினார்கள். அதன் பிறகு அர்த்தம் ஏற்றி,  ஏற்றி இன்று, ராஜராஜ சோழனுக்கானதாகக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம்.

அதாவது ‘கல்கி’யின் பொன்னியின் செல்வனின் வழியாக, ராஜராஜ சோழனின்  திரைப்படம் வழியாக, பலநூறு கட்டுரைகளின் வழியாக, ராஜ ராஜ சோழன் கட்டமைக்கப்பட்டிருக்கிறான். ஆக, நாம் அறியக் கூடிய ராஜராஜ சோழன் யார்என்றால்,  சென்ற நூறு ஆண்டுகால  தமிழ்ப் பண்பாட்டுச் சொல்லாடல் வழியாக  உருவாக்கி எடுக்கப் பட்ட  ஒர்  ராஜராஜ சோழன்.  இதற்கு அப்பால் ராஜராஜ சோழன் யார் என்று கேட்டால் நம்மால் கண்டுபிடிக்க  இயலாது.

இவ்வாறு,  தொடர்ச்சியாக  ஆளுமைகள்  நாம் கொடுக்கும் அர்த்தம் வழியாக நம்மால் சமைத்து உருவாக்கப்படுகிறார்கள். அடுத்ததாக ‘திருவள்ளுவர்’ அவ்வாறு உருவாக்கப்பட்ட ஓர் ஆளுமை.  உருவாக்கப்பட்ட ஆளுமை என்று சொன்னவுடன் நமக்குச் சின்ன துணுக்குரல் வருகிறது. ஏனென்றால் இன்றுள்ளது எப்போதுமுளது என்று நாம் நினைகிறோம். அவ்வாறு அல்ல. திருவள்ளுவர் சமண மரபில்  ‘குந்துகுந்தாச்சாரியார்’ அவர்களின்  மரபில் வந்த   மாணவராகக் கருதப்படுகிறார். விழுப்புரம் அருகில் இருக்கும் பொன்னூரில் அவருக்கு ஆலயம் இருகிறது. அங்கு நாளும் சமணர்கள் வழிபடுகிறார்கள்.  நான் பலமுறை  அங்கு சென்றிருக்கிறேன்.  ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் வைணவமரபுக்குள்ளும்  சைவ மரபிற்குள்ளூம் சென்றார்.

கா.சு.பிள்ளை  ஒரு பெரிய புத்தகத்தை எழுதி  திருவள்ளுவர் மேலிருந்த சமண அடையாளத்தை அழித்து சைவஅடையாளத்தை அளிக்கிறார். அதற்குப் பிறகு பல கதைகள் உருவாக்கப்படுகின்றன. பின்பு ‘வாசுகி’ என்றொரு  மனைவி வந்து சேர்கிறாள்.  அந்த அம்மையார் தண்ணீர் இரைக்கும் போது  வாளி அந்தரத்தில் நிற்கிறது  போன்ற இப்படிப் பல கதைகள் .   அதிலொரு கதை  அவர்  ‘ஆதி’ என்கிற பறைச்சிக்கும்  ‘பகவன்’ என்கிற பிராமண ரிஷிக்கும் பிறந்தவன்  என்பது.  இந்தக் கதை  எந்தக் காலகட்டத்தில் உருவாகி வந்தது  என்று பார்த்தால் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் மேலெழுந்து வருகிறது.

அப்படி ஒரு கதை எங்கோ இருந்திருக்கலாம் . ஆனால்  பதினெட்டாம் நூற்றாண்டில்  மேலெழுந்து வருகிறது. ‘திருக்குறள் தீபாலங்காரம்’ என்றொரு பெயரிலே   ஜமீனாந்தாரிணி உரை வருகிற போது   அதில்தான்  இந்தக் கதைகள் எல்லாம் அச்சிலே கொடுக்கப்படுகிறது.  ஆக மிக எளிதாக  வள்ளுவரின் வரலாறு நிறுவப்படுகிறது.

இரண்டு மாங்காய் ஒரே கல்லிலே வெல்லப்படுகிறது. ஆதி, பகவன்  ஆகிய இரண்டு வார்த்தைகளும்  சமண மரபைச் சார்ந்தவை.  ஆதி பகவன் என்பது ஆதிநாதரைக் குறிப்பதாக இருக்கலாம். ஆனால் இப்போது இரண்டு பெயராக  மாறிவிட்டது. இரண்டு ஆளாக மாறிவிட்டார்.  இந்த மாறுதல் எப்படி நடக்கிறது?   மிகச் சமீப  காலம் வரைக்கும் கூட,அதாவது, நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் கூட   ‘தெயவப் பறையர்’  என்று அழைக்கப்பட்டவர்  எப்படி ‘தெய்வப் புலவர்’ என்று மாறினார்?  இந்த அர்த்தம்  எப்படி மாறியது ?

கேரள வரலாற்றில்  இப்படி ஒரு கதை இருக்கிறது. அதாவது கேளத்தின்  தொல்குடிகள் மொத்தமாகப் பன்னிரெண்டு குடிகள்.  இந்தக் குடிகள் ‘பறைபெற்ற பந்திரு குலம்’ என்று அழைக்கப் படுகின்றன.  அவ்வாறுதான் நாட்டுப்புற மரபிலே புழங்கி வருகிறது.ஆனால், பதினேழாம் நூற்றாண்டிலேயிருந்து  அந்தப் பறைச்சியினுடைய  கணவன் ‘வரருஜி’  ஒரு  பிராமண ரிஷி என்று நிறுவப்படுகிறது.  இதிலிருந்து வரருஜியினுடைய பிள்ளைகள்தான்  பன்னிரெண்டு குலங்கள் என்று ஆகிவிடுகிறது.  இவ்வாறு அர்த்தப் படுத்தல் வழியாக என்ன மாறுதல்  நடந்து கொண்டிருக்கிறது?   எவ்வாறு ஒரு வார்த்தை,  ஒர் ஆளுமை,  ஒரு பண்பாட்டுச் செய்தி  பொருளேற்றம் செய்யப்படுகிறது? இது மிக முக்கியமானது.

இந்தப் பின்புலத்திலிருந்து  இந்த நூலை வாசிக்கும் போது  நாம் முதலில் அறிய வேண்டியது ஒன்று உண்டு. முதன்மையாக இந்நூல்  அயோத்திதாசரின்  சிந்தனைகளைத் தொகுத்துச் சொல்லக் கூடிய ஒரு ஆக்கம் அல்ல. அப்படிப்பட்ட  நூல்கள் ஏற்கெனவே வந்துள்ளன. அயோத்திதாசரை மதிப்பிடும் நூலும் அல்ல; அயோத்திதாசரை விவாதிக்கும் நூலும் அல்ல.

இந்த நூலுக்கும் மற்ற நூலுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். இந்நூல் அயோத்திதாசர் எவ்வாறு அர்த்தப்படுட்தப்பட்டார், அதாவது பொருளேற்றம் செய்யப்பட்டார், ஆதில் உள்ள  குறைபாடுகள் என்ன, சாத்தியங்கள் என்ன, எனபதை விளக்கும் படைப்பு. அந்த வகையில்தான் இந்த நூலின் முக்கியத்துவம் உள்ளது. அதனால்தான் முன்பே வந்திருக்கும்  பல நூல்களிலிருந்து  இது மாறுபடுகிறது  இந்நூல் . இந்த நூலில் அறிவார்ந்த  முக்கியத்துவம் இதுதான். நாம் எப்படியெல்லாம் நமது பண்பாடுகளை அடையாளப்படுத்திக் கொள்கிறோம், எப்படி ஒரு சொல்லுக்கு அர்த்தம் கொடுக்கிறோம், என்கிற  கேள்விகள்  நமக்கு இருக்கும் போதுதான் இந்த நூலை நாம் படிக்க முடியும்.

’தருமராஜ் அயோத்திதாசரைப் பற்றி என்னசொன்னார்?’ என்று புரட்டிப் பார்க்கும் ஒருவர்  இந்த நூலைத் தவறாகப் படிக்க ஆரம்பிக்கிறார் என்றே சொல்வேன் .  நான் இந்த மேடையில் வலியுறுத்துவதும் அதுதான்.  தருமராஜ் ஒரு செயல்பாட்டைத்தான் (process) ஆராய்ச்சி செய்கிறார். அயோத்திதாசர் என்பவர் இங்கு  வந்து அவரால் பொருளேற்றம் செய்யப்பட்ட வரலாற்றை ஆராய்ச்சி செய்கிறார். மாறாக அயோத்திதாசரை அல்ல, அவருடைய சிந்தனைகளை அல்ல.

அயோத்திதாசர் இங்கு வந்த வரலாறு என்ன? சமீபத்திய கால வரலாறு  உங்களுக்குத் தெரிந்திருகும். அவர் ஏறத்தாழ  நூறு ஆண்டுகள்  மறக்கப்பட்ட ஒரு சிந்தனையாளர்.  மறக்கப்பட்ட பல வரலாற்றைப் படித்திருப்போம் அல்லவா?  சைவ பதிகங்கள் நூறு ஆண்டுகள்  மறைக்கப்பட்டிருந்தன; சிதம்பரத்தில் ஒர் அறையில் செல்லரிக்கப்படுக் கிடந்தன ராஜராஜ சோழன் பொன்னால் ஆன சிற்பங்களைக்  கொடுத்து அதை மீட்டு  அதை மீட்டார் என்று படித்திருப்போம். ஆனால் சமீப காலத்தில் கூட,   ஒவ்வொன்றும்  ஆவணப்படுத்தப்படும் காலத்தில் கூட,  இது நடக்கிறது  என்பது ஆச்சரியமான விஷயம்.

ஆனால், தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போதும் நடக்கிறது. அதாவது, இந்தக் காலத்தில் எல்லாம்  எதுவும் அழியாது என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. முன்பு  ஐம்பெரும் காப்பியங்களில் மூன்று நூல்கள் காணாமல் போயிவிட்டன.  சங்க இலக்கியங்கள் பல  காணாமல் போய்விட்டன. ஆனால் இன்றைக்கு இப்படி நடக்காது என்று நினைக்கிறோம். ஆனால் அவ்வாறு இல்லை. தமிழில் எடுக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்குத் திரைப்படங்கள்தான்  நமக்குக் கிடைக்கின்றன. பல காணாமல் போய்விட்டன. நவீன காலகட்டத்தில் தமிழில் எழுதப்பட்ட நூல்களிலேயே  தொகுக்க முடியாமல் மறைந்து போன நூல்கள் பல உள்ளன.

இவ்வாறுதான் நூறு ஆண்டுகாலம் அயோத்திதாசர் வரலாற்றில் இல்லாமல் இருந்தார்.  எந்த சொல்லாடலிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை.  தமிழகச் சிந்தனையின் வரலாற்றை எழுதியவர்கள்  அயோத்திதாசர் என்றொருவர் இருந்தார்  என்கிற தடையம் இல்லாமலேயே எழுதியிருக்கிறார்கள். நானே  அப்படி ஒரு   அறிதல்  இல்லாத எழுத்தாளனாக, வாசகனாகத்தான் பேசிக் கொண்டிருந்தேன். இதைப் பல முறை  பதிவும் செய்திருக்கிறேன்.

‘விஷ்ணுபுரம்’  நாவல் குறித்து  1998  ஆம் ஆண்டில் சென்னையில்.   ஒர் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் விமர்சிக்கப்பட்ட  செய்தி ஒன்று இருந்தது.  அந்நாவலில் சின்ன ஒரு பகுதி வருகிறது . அந்தப் பகுதியில்  ஆலயத்திற்குள் சென்று பறையர்கள்  பறை அடிப்பது போல எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தப் பகுதியை அக்கூட்டத்தில் பேசிய  சில அறிஞர்கள் நான் அதை வேண்டுமென்றே  எழுதியிருக்கிறார் என்று  கூறினார்கள்.

அதாவது, தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்கள் அன்றைய காலத்தில்  ஆலயத்திற்குள் சென்றார்கள்  என்று சொல்லி இல்லாத ஒரு பொற்காலத்தை   இவரே  உருவாக்குகிறார் என்று  என்னைக் குற்றம்  சாட்டினார்கள். அதற்கு  நான் ஆதாரத்தோடுதான் எழுதியிருக்கிறேன் என்றேன். அபிதானசிந்தாமணியில் பறையர்கள் பற்றிய சித்திரிப்பில்,  இவர்கள்  ஏழாம் நூற்றாண்டு வரை  ஆலயங்களில் பணி செய்த உயர்ந்த சாதியினர் என்று  குறிப்பிடப்படுடுகிறது என்று சொன்னேன். அது ஒரு முதற்கட்ட ஆதாரம். ஆனால்  அது போதும்  ஒரு  புனைவிற்கு.  இதற்கு அப்பால் ஆதாரங்களைத் திரட்ட வேண்டியது என்னுடைய  பொறுப்பு  அல்ல.  மதிக்கத் தகுந்த  ஒர் ஆய்வாளரின் ஒரு குறிபபு இருக்கிறது. பல்லவர் காலக் கல்வெட்டில்  மூத்த  பறையன் வள்ளுவனைக் கொண்டு பூஜாதி முறைகளைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது போதுமே என்று  சொன்னேன்,

அந்தக் கூட்டம் முடிந்த பிறகு,  பெரியவர்  ஒருவர் வந்து என்னைச் சந்தித்தார்.  அவர் என்னிடம் ‘அயோத்திதாசர் என்பவரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்றார். “இல்லை அப்படி யாரைப் பற்றியும் நான் கேள்விப்பட்டத்தில்லை” என்று சொன்னேன்.  அவர் சொன்னார்,   “நான் அதிர்ச்சி அடையமாட்டேன் . ஏனென்றால் யாருக்குமே தெரியாது” என்றார்.   “நீங்கள் வந்து என்னைப்  பாருங்கள்” என்று சொன்னார். . இப்படித்தான் அன்பு பொன்னோவியம் என்னும் பெரியவரைப் பார்த்து அயோத்திதாசரைப்  பற்றித் தெரிந்து கொண்டேன்.  சந்திப்பில்  எனக்குப் பழைய இதழ்களைக் காட்டினார்.

அப்போது கூட  இப்படி ஒருவர்  இருந்தார் என்று மட்டும்தான் விளங்கியது. மற்றபடிக்கு  வேறு விவரம் ஏதும் ஏதும்  தெரியவில்லை. மீண்டும் பல ஆண்டுகளுக்குப்  பிறகுதான்  ஞான. அலாய்சியசின் தொகுப்புப் பணியின் காரணமாக  அயோத்திதாசரின் முழுத்தொகுப்புகள்   வெளிவருகின்றன. அந்தத் தொகுப்பை முதலில் வாங்கியவர்களின்  நானும்  ஒருவன். அப்போதே படித்துக் கட்டுரைகளை எழுதினேன். இப்படித்தான் நம் சூழலில் மறைக்கப்பட்ட ஓர் எழுத்தாளர்,  சிந்தனையாளர்   பண்பாட்டுச் செயற்பாட்டாளர் திரும்பி வந்தார்.

இப்படித் திரும்பி வரும் போது, அதாவது   நூற்றாண்டு மறதிக்குப் பிறகு வரும் போது  கிட்டத்தட்ட இங்கு நிலைமைகள் எல்லாம் மாறிக்கிடக்கின்றன.  இரண்டு மாற்றங்களைக் குறிப்பிட்ட வேண்டும் ஒன்று,  தலித் அரசியல் என்றொரு வகை. அதைத் தொடங்கியவர்கள் பெரும்பாலும் தலித் அல்லாதவர்கள் . அது பெரும்பாலும் இலக்கியத்தில் நடந்து கொண்டிருந்தது.

பெரும்பாலும் மராட்டிய, கன்னட தலித் இலக்கியத்தை  மொழிபெயர்ப்புகளைக் கொண்டுவருவதன் வழியாக  அதை நகல் எடுப்பதன்  வழியாக இங்கு ஆரம்பம் ஆகியது.அவர்கள் தாங்கங்கள்தான் முதன்முதலாகத் ‘தலித்’ என்ற சொல்லாடலை  முன்னெடுக்கிறோம் என்ற எண்ணத்தை உருவாக்கியிருந்தார்கள்.  அந்தத் தலித் செயல்பாடு எப்படி எப்படியெலாம்  இருக்கவேண்டும்   என்கிற வரையறையை அவர்கள் உருவாக்கி வைத்திருந்தார்கள். அவர்கள்  ஒரு கலாச்சார சொல்லாடலை வடிவமைத்திருந்தார்கள்.

அப்போது திடீரென்று ஒருவர் முன்னுக்கு வருகிறார்  அவர் நூறு ஆண்டுகளுக்கு  முன்பு வாழ்ந்தவர்.  இவர்கள் என்னென்ன கூறிக்கொண்டிருக்கிறார்களோ அதை நூறு ஆண்டுகளுக்கு முன்பே செய்து கொண்டிருந்தவர்.  ஆதலால் இவர்களின் முன்னோடி மதிப்பை இல்லாமல் ஆக்குகிறார்.  ஆகவே அது ஒரு வகையான தவிப்பை , தனிமையை அவர்களுக்கு உருவாக்குகிறது.

இவரை எங்கு கொண்டு வைப்பது? வைப்பதானால்   இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் திராவிடத்திற்கு முன்னால் கொண்டு போய் வைக்க வேண்டும். அவரை ஒர் அறிவியக்கச் செயல்பாட்டாளர் என்று எடுத்துக் கொண்டால் தமிழக்த்தில் நடந்த முதல் அறிவியக்க விழிப்பென்பது, முதல் அறிவியக்கச் செயல்பாடென்பது தலித் செயல்பாடுதான் என்று சொல்ல வேண்டிவரும். அதன் பிறகுதான் காங்கிரஸ். அதன் பிறகுதான் திராவிட இயக்கம். அதன் பிறகுதான்  கம்யூனிஸ்ட்  இயக்கம். ஆக, அதிர்ச்சியளிக்கக் கூடிய வருகை. இவரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பி நின்றனர். அதனால் ஆழமான ஒரு மௌனம் நிலவியது.

ஆரம்ப காலத்தில் தலித் கருத்துக்களை முன்வைத்தவர்களில்,அயோத்திதாசரைப் பற்றி ஆழமாக எழுதியவர்கள் என்றால் இரண்டு பேரைத்தான் குறிப்பிட வேண்டி வரும்  ஒருவர் ராஜ்கௌதமன். மற்றொருவர்  ரவிக்குமார். மற்றவர்கள் எதுவுமே எழுதியது கிடையாது. அவரை எதிர்கொள்ள  மற்றவர்களுக்குத் தெரியவில்லை. அதற்கான கருவி அவர்களிடம் இல்லை.

இவர்கள் இருவரும் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனால்  அயோத்திதாசரை ஏற்றுக் கொள்ள முடிந்தது. எழுதமுடிந்தது. மற்றவர்கள் அவரை தங்கள் அரசியலில்  எங்கு கொண்டு வைப்பது  என்றே குழம்பி நின்றனர். இவ்வாறு  மெல்ல, மெல்ல அயோத்திதாசர் வாசிக்கப்பட்டு அவர் மேல் ஒரு வாசிப்பு உருவாகிறது. ஒர் அடையாளப்படுத்துதல் உருவாகிறது. ஒர் அர்த்தப்படுத்துதல் உருவாகிறது.

‘திராவிடம்’ என்ற சொல்லை முதலில்  உருவாக்கிய   முன்னோடி. சிந்தனையாளர். ‘ஆதி திராவிடன்’ என்கிற வார்த்தையை உருவாக்கியவர் நிலை நிறுத்தியவர்.  தமிழகத்தில் தலித் அரசியலை  முதலில் முன்னெடுத்த முன்னோடி. சமூக சீர்திருத்தவாதி என அவர் குறிப்பிடப்பட்டார். இந்தச் சொல்லாடல்களின் அடுத்தபடியாக  இங்கு உருவாகி வந்த அரசியலில்  பறையர் சமூகத்தின் ஒரு பிதாமகர்,    ஒரு முன்னோடி, ஒரு தந்தை என்கிற அடையாளம் அவருக்கு அளிக்கப்படுகிறது.

இது கடந்த முப்பது ஆண்டுகளில்  அயோத்திதாசர் மேல் உருவாக்கப்பட்ட வாசிப்பு. இவ்வாறுதான் அயோத்திதாசர் அர்த்தப்படுத்தப்பட்டார்.  இன்றுகூட  அவரது எழுத்துக்களில்  மிகப்பெரும்பகுதி வாசிக்கப்படாமலும் விவாதிக்கப்படாமலும்தான் இருக்கின்றது .

இன்று வரையிலும் கூட  அயோத்திதாசர் எழுத்துக்களில் சமகால அரசியல் சார்ந்து  என்னென்ன  சொல்லியிருக்கிறாரோ அதுசார்ந்து மட்டுமே விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அவரது பண்பாடு சார்ந்த எழுத்துக்கள் விவாதிக்கப்படாமல்தான் இருக்கின்றன. காரணம் என்ன?  அதற்கு ராஜ்கௌதமனின் புத்தகத்திற்குச் சென்றால்தான் தெரியும்.

ராஜ்கௌதமன்  அயோத்திதாசரை முழுமையாக வாசித்து மதிப்பிடுகிறார்.  முக்கியமான நூல் அது. ஆனால் அந்த நூலில் அவர் முன்வைக்கும் பார்வை என்பது  ஒரு பகுத்தறிவுப் பார்வை. ஒரு சமகால  வரலாற்றுப் பார்வை. ஒரு நூறு ஆண்டுகளாக மேல்நாட்டுக் கல்வியால் நாம் அடைந்த  நன்மைகளைப் பற்றிய புறவயப் பார்வை. அதில்  அயோத்திதாசர்  தலித் அரசியலில் எவ்வாறு மையமாகிறார் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்ற அனைத்தையும் நிராகரிக்கிறார்

ராஜ் கௌதமன் அயோத்திதாசர் அளிக்கும் சொற்கள் அனைத்தையும் நிராகரிக்கிறார்.  இதெல்லாம் கதைவிடுதல் என்கிறார்.  கிட்டத்தட்ட அயோத்திதாசரிடமிருந்து ஒரு சின்னப் பகுதியை எடுத்துக் கொள்வதோடு மற்ற அனைத்தையும்  காலத்திற்கு ஒவ்வாதது என்று ஒதுக்கிவிடுகிறார். இந்தப் பார்வை ஒரு சாதாரணப் பார்வை கிடையாது. அயோத்திதாரோடு இருந்த லெட்சுமிநரசு, பின்னால் வந்த அப்பாத்துரையார்  ஆகியோரது பார்வையும் அதுதான்.

அவர்களுக்கும்  அயோத்திதாசரை மதிப்பிடுவதில் சிக்கல் இருக்கிறது. அயோத்திதாசர் பல விஷயங்களில் கதை விடுகிறார் என்றுதான் எண்ணுகிறார்கள்.  அவர்கள்  கொஞ்சம் கொஞ்சமாக அயோத்திதாசரைக் கைவிடுகிறார்கள். அயோத்திதாசரை பின்பற்றியவர்கள் பலர் திராவிட இயக்கத்திற்குள்  செல்கிறார்கள். அப்பாத்துரையார் முழுமையாக திராவிட இயக்க ஆளுமையாகவே ஆகிவிடுகிறார் . லெட்சுமிநரசு பௌத்தத்தைக் கைவிடுகிறார். அவ்வாறுதான் அயோத்திதாசர் வரலாற்று மறதிக்குச் செல்கிறார்.

அயோத்திதாசரிடமிருந்து  உருவான திராவிட இயக்கம் என்றாலும்  திராவிட இயக்கம் அயோத்திதாசரைப் பற்றிப் பெரும்பாலும் எதுவுமே  கூறியது இல்லை.  அயோத்திதாசருக்குக் கோலார் தங்கவயலில் எடுக்கப்பட்ட அஞ்சலிக் கூட்டங்களுக்குச் சென்று  பெரியார் சில வரிகளைப் பேசியிருந்தாலும் கூட,  ஒரு முக்கியத்துவமான சிந்தனையாளராக முன்னோடியாக எங்கும் குறிப்பிடவிவில்லை.   இதற்குக் காரணமாக சாதியத்தை நான் சொல்லமாட்டேன். என்னளவில்  சொல்வதானால்  ராஜ்கௌதமன் சொல்லுவதுதான் காரணம். பெரியாரின் பார்வையில் அயோத்திதாசர் சொல்வது   மூடநம்பிக்கை சார்ந்த பழைமை வாதம் சார்ந்த  வரலாற்றுப் பார்வை இல்லாத  ஒரு கருத்துலகம்.

அந்த உலகத்தை எப்படிக் கையாளுவது என்பது இன்றைக்கும்கூட ஆய்வாளர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. அவர் இந்தியவரலாறு உருவான காலத்தில் வாழ்ந்தவர். இந்திய வரலாறு ஒரு பெருங்கதையாடல் என அவர் நினைக்கிறார். அது இந்துப் பெருங்கதையாடல். அதற்கு மாற்றாக  அவர் ஒரு பௌத்த பெருங்கதையாடலை உருவாக்குகிறார்.  இந்த வார்த்தை என்னது  அல்ல  தருமராஜ் அவர்களது வார்த்தை.

இங்கே கடந்த இருபது ஆண்டுகளாக  பெருங்கதையாடல் என்பது  ஒரு எதிர்மறை அர்த்தத்தில்  கையாளப்படுகிறது. வரலாற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் பார்க்கும் பார்வையைத்தான் நாம்  பெருங்கதையாடல் என்கிறோம்.  அப்படி வரலாற்றை ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பார்ப்பதென்பது  மையஅதிகாரம் சம்பத்தப்பட்டது என்று கூறுகிறோம்.

அந்த அதிகாரச் செயல்பாட்டை மறுக்க வேண்டும் என்பது  பின்னை நவீனத்துவவாதிகளின் கருத்து.  தருமராஜ் அவர்களும் அந்த மரபைச் சேர்ந்தவர்தான்.  நான் அப்படி நினைக்கவில்லை. அது ஒரு தொகுப்புப்பார்வையை அளிக்கிறது. மதத்தை, சமூகத்தை நாட்டை கட்டமைக்கிறது. அது ஆக்கப்பணிதான்

அயோத்திதாசர் தன் பெருங்கதையாடலில்  இந்தியா முழுக்க  பௌத்த நாடாக இருந்தது என்கிறார்.  பௌத்தத்தில் ஏற்பட்ட பிரிவுகளின் வழியாகத்தான் இந்து மதம்  உருவாகி வந்தது, பின்பு பௌத்தத்திற்கு எதிரான ஒரு அலையாகத்தான் பக்தி இலக்கியம்  உருவானது , அந்தப் பக்தி இலக்கியம்தான் இன்றுள்ள இந்து மதத்தை உருவாக்கியது  என்பதுதான் அயோத்திதாசரது சித்திரம்.

அதனால்தான் தமிழர்களைப் ‘பூர்வபௌத்தர்கள்’  என்று அவர் சொல்கிறார்.  அதாவது பழைய பௌத்தர்கள்.  இந்தப் பௌத்தம் சமணத்தையும் உள்ளடக்கியது என்பது அவரது கருத்து.  அந்தப் பூர்வ பௌத்தராக இருந்த தமிழர்கள் வேஷபிராமணர்களின் அரசியல் சூழ்ச்சியால் இந்த  நிலையை அடைந்தார்கள்  என்கிற ஒரு வரலாற்றுச் சித்திரத்தை  உருவாக்குகிறார்.

இந்தப் பெருங்கதையாடலைச் சார்ந்த ஒர் ஒவ்வாமையானது அடுத்த தலைமுறையைச் சார்ந்த  பெரும்பாலான அறிஞர்களிடம் இருக்கின்றது.  இதைப் பற்றி ரவிக்குமார் என்ன  சொல்கிறார்  என்று பார்த்தால் பெரும்பாலும் இந்தப்  பரப்புக்குள் அவர்  போனதே கிடையாது. ராஜ் கௌதமனும்  முழுக்க நிராகரிக்கிறார்.  இதற்குச் சரியான வரலாற்று ஆதாரம் கிடையாது என்கிறார்.

அயோத்திதாசர் உருவாக்கிய இப்பெருங்கதையாடலை இப்படி சொல்லலாம். இயக்குநர் சங்கரின்  2.0  திரைப்படத்தில் வருவது  போல  எதிரில் பெரிய ஒரு பூதம் வந்து நிற்கிறது. அந்தப் பூதத்துடன் போரிடுவதற்குச்  சிட்டி அருகிலிருக்கும் அத்தனை உலோகங்களையும் திரட்டிக் கொண்டு தானும் ஒரு பேருரு  கொள்வது போல,  ஏற்கெனவே இருக்கும் பெருங்கதையாடலுக்கு  எதிராக சாத்தியமாகும் அனைத்துச்  சொல்லாடல்களையும் இணைத்துக்  கொண்டு இவர்  ஒரு பெருங்கதையாடலை உருவாக்குகிறார்.

ஏற்கெனவே இருக்கும் அந்த வரலாற்றுச் சித்திரம்  முழுக்க முழுக்க புராணங்களால் கட்டமைக்கப் பட்டது.  இவர் அதற்கு  இணையான ஒரு மாற்றுப்  புராணத்தை உருவாக்குகிறார்.  வேறொரு புராணத்தை  உருவாக்குகிறார். சான்றாக, திருக்கார்திகை பற்றிய தொன்மம் இந்த நூலிலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

பசு நெய்யால் மட்டுமே விளக்கெரிக்க முடியும் என்கிற நிலைமை அப்போது இருக்கிறது. அப்போது  ஒரு புத்த பிட்சு. (அது புத்தரே தான் என்றும் சொல்கிறார்). ஆமணக்கு எண்ணெயிலிருந்து எடுக்கக் கூடிய நெய்யைக் கண்டுபிடிக்கிறார். அது நெய் அளவிற்கு  ஒளி அளிக்கக் கூடியது .  அதே அளவிற்குப்புகை அற்றது. ஆனால் மிக எளிதானது. ஏழை மக்கள் அனைவரும் பயன்படுத்தக் கூடியது என்று  கண்டுபிடிக்கிறார்.  அரசன் மகிழ்கிறான். அதிலிருந்து  ஒரு தீபவிழா தொடங்குகிறது. அதுதான் ‘திருக்கார்திகைத் திருவிழா’ என்று  விளக்கம் கொடுக்கிறார்.

இவ்வாறான தொன்மங்களை தொகுத்துக்கொண்டே செல்கிறார். இந்தியாவின்  மொத்த வரலாறுமே  ‘இந்திரர் தேச வரலாறு’  என்று  சொல்கிறார். பௌத்தத்தின் இந்திரன்தான் இந்தியாவிற்கு அடிப்படையாக அமைந்த தெய்வம் என்று சொல்கிறார்.  அந்த இந்திரனின் தேசம் எப்படி  வேறொரு இனத்தாரால் கைப்பற்றப் பட்டு  சிதைவுக்குள்ளாகியது என்று சொல்கிறார்.

இந்த மாற்றுப் புராணம்,  மாற்றுச் சொல்லாடல் அயோத்திதாசரிடம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. இது நாமறிந்த ‘புறவயமான’ வரலாற்றுக்கு எதிரானது. இது வரலாறு என்பதைவிட புராணமாக, புராணவரலாறாக உள்ளது. இதுதான் அயோத்திதாசரை அணுகுவதற்குத் தடையாக இருக்கிறது.  அயோத்திதாசரிடம் இருக்கும் எண்பது சதவீதம் உரையாடலை வெட்டி எடுத்துவிட்டு  எஞ்சியதைக் கொண்டு அயோத்திதாசரைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தை இன்றைக்கு இருக்கக் கூடிய  தலித்  சிந்தனையாளர்களுக்கு உருவாக்குகிறது.  இந்தச் சவாலை  எவ்வாறு எதிர் கொள்வது என்பதுதான் டி.தர்மராஜ் அவர்களின் இந்தப் புத்தகத்தின் முக்கியமான  நோக்கம்.

இந்தப் புத்தகம் அயோத்திதாசர் சொல்வதாகக் கருதப்படும் அந்த ‘ மூடநம்பிக்கை’யை அந்த ‘தப்பான வரலாற்றுச் சித்திரத்தை ’, அதாவது அந்த புராணத்தன்மையை  எப்படிக் கையாளுவது  என்று ஆராய்கிறது. எப்படி நாம் அயோத்திதாசரை அர்த்தப் படுத்துகிறோம் , எப்படி அர்த்தப் படுத்துவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கின்றன  என்று இந்தப் புத்தகம் சொல்கிறது.

ஒரு நவீனத்துவ வாதிக்கு  இந்தப் புராணம்  வெறும் நம்பிக்கை மட்டும்தான். அல்லது மூடநம்பிக்கை மட்டும்தான்.  ஆனால் பின்னை நவீனத்துவவாதிக்கு  இது ஒரு  narration , ஒரு சித்திரிப்பு முறை அவ்வளவுதான்தான். பின்னைநவீனத்துவ நோக்கில் தமிழக வரலாறு என்பது ஒரு சித்திரிப்புதான் தமிழ்ப் பண்பாடு ஒரு சித்தரிப்புதான். ஒரு கதைதான். அனைவரும் பொதுவாக ஏற்றுக்கொண்ட கதை

இது உண்மைதான் என்று சிந்திக்கும் யாருக்குமே தெரியும். கடந்த  நூறு ஆண்டுகளில்  நாம்  ஏற்றுக் கொண்ட கதையைத்தான் நாம் வரலாறு என்று சொல்கிறோம். மதுரா கண்ட்ரி மானுவலில் ஜே.எச்.நெல்சனின் வராலாற்றுச் சித்தரிப்பிலிருந்து   கடைசியாக  இன்றைக்கு எழுதப்பட்ட ஐராவதம் மகாதேவனின் வரலாற்றுரைப்பு வரைக்கும் சேர்ந்து நாம் எழுதிக் கொண்ட கதை.  அவ்வாறென்றால்  அயோத்திதாசர் இன்னொரு கதையைச் சொல்கிறார் என்றுதான் பின்னை நவீனத்துவவாதி சொல்வார்.

அந்தக் கதை எந்தளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு இந்தக் கதையும் உண்மையாகும் . அந்தக் கதைக்கு என்ன பயன் இருக்கிறது, இந்தக் கதைக்கு என்ன பயன் இருக்கிறது என்பதுதான் முக்கியமானது. அந்தப் பெருங்கதையாடலுக்கு எதிராக நிற்கக்கூடிய  ஒரு பெருங்கதையாடல் இது.  அந்த கோணத்தை முன்வைக்க உருவானதுதான் தருமராஜின் முன்னோடிப் புத்தகமான   ‘நான்   பூர்வபௌத்தன்’ என்பது.

அந்நூலில் அந்த இரண்டாவது கதையாடலை, புராணத்தைத் தன்னுடையது என்று எடுத்துக் கொண்டு பேசுகிறார்.தன்னை பூர்வ பௌத்தன் என்று அறிவித்துக் கொள்வது அதனால்தான்.

இன்றைக்கு அயோத்திதாசரைப்  பார்க்கும் போது  நமக்கு இருக்கக் கூடிய வாய்ப்புகள் என்ன?  அதை மட்டும் சொல்லி என் உரையை முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

அயோத்திதாசரைப் பற்றித் திரு.வி.க. ஒரு சிறு குறிப்பைத் தருகிறார்.  திரு.வி.க அவர்களுக்கு கடுமையான உடல் வலி/முதுகு வலி இருக்கிறது.  அயோத்திதாசரிடம்  செல்கிறார். அயோத்திதாசர் மந்திரித்து அதைத் தீர்க்கிறார். மருத்துவம் வழியாக அல்ல.  உச்சாடனம் செய்யப்பட்ட மந்திரத்தின் வழியாக  என் நோயைப் போக்கினார் என்று திரு.வி.க சொல்கிறார்.  இந்தக் கூற்றிலிருந்து அயோத்திதாசரை நாம்  புரிந்து கொள்ள முடியும்.

அவரை நோக்கிப் போவதற்கான சிறிய திறப்பு அது.  தமிழகத்திலுள்ள நவீனத்துவச் சிந்தனையாளர்களில்  ஒரு மந்திரச் சடங்கைச்  செய்யக்கூடியவராக அவர் மட்டுமே  இருந்திருக்கிறார். அவருடைய உலகம் இன்றைய நவீனப்பகுத்தறிவின் உலகம் அல்ல, பெரும்பகுதி சென்றகாலத்தைய உலகம். உள்ளுணர்வுகளும் தொன்மங்களும் சேர்ந்து உருவாக்கிய ஆழ்ந்த உலகம். அந்த காரணத்தினால்தான் பின்னாளில் உருவான  ஈ.வே.ராமாசாமியின் கதையாடலில் அயோத்திதாசர் இடம்பெறவில்லை

அது மந்திரச் சடங்கு என்பதுதான் நாம் கவனிக்கவேண்டியது. அது தர்க்கத்தை மீறிய  ஒன்று.  மிக மிக தர்க்கவாதியான திரு.வி. கவே  சற்று வியப்புடன் பதிவு செய்யும் செய்தி அது.  அதை இன்றைய பகுத்தறிவுப் பாதையில் ஒரு மூடநம்பிக்கை என்று சொல்லலாம். ஆனால் இந்த அம்சம் அவரிடம் இருந்தது. அவருடைய ஆளுமை அது, அவருடைய பார்வையின் அடிப்படிஅ அது. அந்த அம்சத்தை தவிர்த்து பார்க்கக்கூடாது.

அந்த ‘அதீத’ அம்சத்திலிருந்து அவரை நோக்கிச் சென்றால்  நாம் காணக் கூடிய அயோத்திதாசர் வேறொருவர். நாம் இன்று புனைந்து கொண்டிருப்பவர் அல்ல.  அவர் அதற்கு மேற்பட்ட ஒருவர்.  அவரது தர்க்கப் பூர்வமான அறிதலுக்கு மாறாக வேறொரு அறிதல் இருக்கிறது.  அந்த அறிதலுக்கு இந்தியாவில் வேறொரு பெரிய மரபு இருக்கிறது.  அந்த மரபென்பது இவ்வாறுதான் செயல்படும்.

இந்தியாவில் உள்ள எந்த மரபார்ந்த அறிஞர்களும், பௌத்தர்கள் சமணர்கள்  இந்துக்கள் அனைவருமே செயல்படும் அறிவுமுறை என்பது ஏற்கெனவே இருக்கும் ஞானத்தை  மறுவிளக்கம் அளிப்பது. ஒரு பாசிட்டிவான அர்த்தத்தில்  ‘திரித்து’  உரை அளிப்பது.  சொற்களைத் திரிப்பது. நாம் அனைவருக்குமே தெரியும் ‘தத்துவமஸி’  ஒரு வார்த்தையை  விதவிதமாகத் திரித்தலின் வாயிலாகத்தான்  மூன்று தத்துவ மரபுகள் இங்கே உருவாகியுள்ளன. ‘அத்வைதம்,’  ‘விசிடாத்துவைதம்,’ ‘துவைதம்’ ஆகிய மூன்று மரபுகளும்  ஒரு வார்த்தையின் மூன்று  திரிபுநிலைகளால் உருவானவை.

ஆகவே, அயோத்திதாசர்  தமிழில் வழங்கி வந்த பல சொற்களைத் திரிக்கிறார். திருக்குறளை ‘திரிக்குறள்’ என்கிறார். அது சரியா என்பது அல்ல; ஏன் அவ்வாறு செய்கிறார், அவ்வாறு திரிப்பதற்கான முறை இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும் . அவ்வாறு செய்வததற்கு இங்கு பெரிய மரபு ஒன்று இருக்கிறது.  ஒரு புராணத்தை மறுப்பதற்கு இணையாக  இன்னொரு புராணத்தை உருவாக்குவது அது. மாபெரும் முதலாசிரியர்கள் அவ்வாறுதான் செய்திருக்கிறார்கள்.

பௌத்த ஆசிரியர்கள் பலர் பாலி  மொழியில் உள்ள மூலநூல்களை,  ஏற்கெனவே பேசப்பட்ட வரலாற்றை, அவ்வாறு [ பாசிட்டிவான அர்த்தத்தில்]  திரித்துத்தான் தங்கள் பார்வையை எழுதியிருக்கின்றனர்.  மொத்த சமண வரலாறு, புராணம் என்பதும் இந்தியாவின்  தொன்மையான புராணங்களின் வரலாறுகளின்  திரிபு வழியாக உருவாகிவந்ததுதான்.  மகாபாரதத்தின் திரிபுவடிவம் சமண மகாபாரதம். பௌத்தத்திலும் அப்படி ஏராளமான இந்து புராணங்களின் திரிபுகள் உள்ளன. இந்து புராணங்களையே ஒவ்வொரு நூலிலும் ஒவ்வொரு திரிபுவடிவில் காண்கிறோம். ஒரே புராணமே சைவத்தில் ஒன்றாக வைணவத்தில் வேறொன்றாக இருக்கிறது. கவனியுங்கள் நான் திரிபு என்பதை பிழை என்று சொல்லவில்லை, அது ஓர் அறிவுச்செயல்பாடு என்று சொல்கிறேன்

இந்தத் திரிபு என்பது  இங்கு நாம் நம்பும் வரலாறோடு, புராணத்தோடு ஒத்துப் போகிறதா என்பதல்ல நாம் கேட்கவேண்டிய கேள்வி.  அது  ஒரு மாற்றுத் தரப்பு. ஒரு மாற்று வரலாறு அல்லது புராணம். அதைகு மறுப்பது அல்ல, அது  சரியா தப்பா என்னும் வாதமும் அல்ல நமக்கு முக்கியம். நம்மிடமிருப்பது ஒரு வரலாறு. நாம் புதிதாக அறிவது  மற்றொரு வரலாறு. அதுதான் சரியான வாசிப்பு.  அந்த வாசிப்பை முன்னிறுத்தும்  ஒரு நூலாக  தருமராஜின் நூலைச் சொல்லாம்.

மிக விரிவான அர்த்தத்தில்  அயோத்திதாசரின் மாற்றுப்புராணம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது, அவரது சொற்கள் எவ்வாறு மாற்று அர்த்தத்தில் உருவாக்கப்படுகின்றன, அதனூடாக அவர்  உருவாக்கும்  மாற்று வரலாறு என்பதென்ன, அந்த வரலாறு ஆற்ற்றும் மாற்றுஅதிகாரம் என்ன என்பது குறித்தெல்லாம் புத்தகத்திலே  தருமராஜ் அவர்கள் விரிவாக விளக்கியிருக்கிறார். அதற்கு அவர் அயோத்திதாசரின் சொற்களுக்கு உரை அளிக்கிறார். இந்தப் புத்தகத்தையே  ஒரு வகையில் நம் தொன்மையான உரைமரபு சார்ந்தது என்று சொல்வேன்.

இந்த ஆய்வுக்கு நமக்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. பௌத்த நூல்களை எடுத்துப் பார்த்தால்  முன்னோடி ஆசிரியனின் நூலை அவருடைய மாணவர்  மீண்டும் எழுதுவதன் வழியாகத்தான்  இன்னொரு பிரதியை உருவாக்க முடியும் . பெரும்பாலும் மூல ஆசிரியனின் நூலை எடுத்துக் கொண்டு உரை  எழுதுபவன் கொஞ்சம் இடம்மாற்றம் செய்கிறான். கொஞ்சம் பொருள் மாற்றி அமைக்கிறான். அதைக் கொஞ்சம் வளர்த்தெடுக்கின்றான்.  அல்லது மறுக்கக் கூட செய்யலாம்.

இந்த உரை மரபென்பது  தொடர்ச்சியாக  ஒரு கருத்தைப் பல்வேறு ஆசிரியர்கள்  தொடர்ந்து  வளர்தெடுத்து வருவது போன்றது, பல கைகள் வழியாக ஒரு பந்து பயணம்செய்வதுபோல. இந்த நூல் அயோத்திதாசரின் மாற்று அழகியல், மாற்று வரலாறு, மாற்றுப்புராணம்,  மாற்றுச் சொல்லாடல் ஆகியவற்றை முன்னெடுத்துப் போகும்பொருட்டு அதே ஆடலை மீண்டும் ஆடும் நூல் என்றுதான்  சொல்வேன். இதை ஒரு வியாக்ஞானம் என்று சொல்வேன்.

இந்த உரை வழியாக அயோத்திதாசரை நாம் வழக்கமாக வாசிக்கும் நவீனக்கல்விமுறை சார்ந்த வாசிப்புக்கு அப்பால் சென்று, மரபான வாசிப்பினூடாக அறிய  ஒரு வாய்ப்பை வழங்குகிறார். அயோத்திதாசரை இவ்வாறெல்லாம் புரிந்து கொள்ளலாம் என்று  சொல்கிறார்.  அந்த வகையில் மிக முக்கியமான வழிகாட்டிநூல் இது.  நாம் இறுகிப்போன  ஒற்றைப்படியான வாசிப்பை அயோத்திதாசரின் மேல் நாம் கொடுக்கிறோம். அதைக் கடக்க இத்தகைய நூல்கள் உதவுகின்றன.

அயோத்திதாசர் தன் நோக்கில் இங்கே  பௌத்தத்தை முன்வைக்கும் போது  நாம் அதை எப்படி எதிர்கொள்கிறோம்? இங்கு ஏற்கெனவே  ஒரு பௌத்தம் இருந்தது, அந்த பௌத்தத்தை  அயோத்திதாசர் ஒதுக்குகிறார் என கருதுகிறோம். அவர் ஒரு விசித்திரமான பௌத்ததைச் சொல்கிறார் என்று மதிப்பிடுகிறோம்.  நாம் வரலாற்றில் கற்பதுதான் உண்மையான  பௌத்தம் என்றும் அயோத்தாசர் சொல்லுவது அவருடைய சொந்த பௌத்தம் என்று நினைக்கிறோம்.

ஆனால்  அந்த ‘உண்மையான’ பௌத்தம் என்று நாம் சொல்லுவது மூன்று அறிஞர்களால் கட்டமைக்கப்பட்டது. குறிப்பாகச் சொல்லப்போனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில்  ரைஸ் வில்லியம்ஸ்’, பால் காரஸ்’, ஹென்றி ஸ்டீல் ஆல்காட் என்னும் மூன்று பேரறிஞர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் மரபிலிருந்த நூல்களைப் படித்துப்  பொருள் கொண்டு,  நவீன ஐரோப்பியப் பார்வையில் கட்டமைத்த பௌத்தத்தையே நாம் வரலாற்றுரீதியான பௌத்தம் என்று சொல்கிறோம்.

அயோத்திதாசரின் காலகட்டத்தில் பௌத்தம் உலகெங்கும் பரவிக்கிடந்தது.  தாய்லாந்தில் வழக்கத்திலிருந்த பௌத்தத்திற்கும் இலங்கையில் வழக்கத்திலிருந்த பௌத்தத்திற்கும்  சீனாவிலிருந்த பௌத்தத்திற்கும் எந்த தொடர்பும்  கிடையாது.இப்படி வெவ்வேறு இடங்களில் பௌத்தம் இருக்கிற செய்தி பௌத்தர்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு பௌத்தமும் தனி மதம்போலவே இருந்தது. அந்த பௌத்தமரபுகள் அனைத்தும் புத்தரால் கற்பிக்கப்பட்ட பௌத்த ஞானமரபின் கிளைகள்தான் என்று சொன்னவர்கள் ஐரோப்பியர்களே.

ஐரோப்பியர்களால் தொகுக்கப்பட்ட பௌத்தமானது ஒரு ஐரோப்பியச் சித்திரிப்புதான்.  அந்தச் சித்தரிப்பைத்தான் அயோத்திதாசர்  நிராகரிக்கிறார்.  அதிலிருந்து மாறுபட்டுத்  தன்னுடைய  கருத்தை முன்வைக்கிறார். அவர் சொல்வது அவருடைய மரபான அறிவால் அவர் உணர்ந்த ஒன்று. அவருடைய உள்ளுணர்வால் அவர் கண்டடைந்த ஒன்று.

இந்த வாசிப்பை நாம் அவருக்குக் கொடுக்கவேண்டும்.  மூன்று ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட பௌத்தம்தான் உண்மை என்றும் அயோத்திதாசர் சொல்லுவது பிழையானது என்று  சொல்லும் உறுதியான பார்வையானது நவீனக்கல்வியின் பார்வை. நவீனப் பகுத்தறிவுப் பார்வை. அது ஒரு நவீனத்துவப் பார்வை.   ஒரு காலத்தியப் பார்வை. அந்தப் பார்வையை அயோத்திதாசரின் மேல வைக்கக் கூடாது.  அது அவரை நம்மிடமிருந்து விலக்கிவிடும்

அந்தப் பார்வையைக் கடந்துசெல்கிறார் டி.தர்மராஜ். அந்தப்பார்வையை, அதற்குப்பின்னாலுள்ள நம்பிக்கைகளைக் கட்டுடைக்கிறார் என்பதுதான் இந்நூலில் முக்கியமானது. அதாவது அயோத்திதாசரின் மேல் கடந்த  முப்பது ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட ஒரு வாசிப்பைக் கட்டுடைத்து அதனுடைய இறுக்கத்தைத் தவிர்த்து புதிய வாசிப்பிற்கான ஒரு அறைகூவலை விடுப்பதுதான் இந்த நூல்.

இது ஒரு பின்நவீனத்துவ முறைமை என்ற அளவில் அயோத்திதாசரை வேறொரு நபராகக் கட்டமைப்பது. ‘உண்மையை காட்டுவது’ அல்ல. அவரை வாசித்து புனைந்துகொள்வது. அதுதான் பின்நவீனத்துவ வழிமுறை. அயோத்திதாசர் பௌத்தத்தை எப்படி அணுகினாரோ அதைப்போன்ற கோணத்தில் அவரை அணுகுவது.

தர்க்கத்தின் எல்லைகளைக் கடந்து செல்லக்கூடியவராக, நீங்கள் அறிந்த வரலாற்றுச் சித்திரத்திற்கு வெளியில் நிற்கக்கூடியவராக,  எது சரி என்று நினைக்கிறீர்களோ அதற்கு வெளியில் நிற்கக் கூடியவராக,  உங்கள் பொதுப்புத்தியை, உங்கள் அரசியலைச் சீண்டக் கூடியவராக,  பகுத்தறிவைக் குழப்பக் கூடியவராக, நீஙகள் எதை உறுதியாக நம்புகிறீர்களோ  அதை நம்பக் கூடாது என்று சொல்லுபவராக,  அயோத்திதாசரை இந்தப் புத்தகம் திருப்பிக் கொண்டுவந்து நிறுத்துகிறது.

இப்படியெல்லாம்  வாசிக்கலாம் என்கிற வாய்ப்பை இந்தநூல் இந்த அளிக்கிறது. இந்த வாசிப்பானது இனிமேல்தான் தமிழில் நிகழ வேண்டும். எதிர்காலத்தில்  இன்றுள்ள நவீனத்துவ  வாசிப்பில் அதாவது பகுத்தறிவு  வாசிப்பின்  இறுக்கங்களுக்கு  அப்பால் சென்று  வளரும் தலைமுறை அயோத்திதாசரை இன்னும் விரிவான முறையில் வாசிப்பதற்கு  ஒரு தொடக்கமாக இந்த நூல் அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

[உரையிலிருந்து எழுத்துவடிவம் அரிபாபு]

முந்தைய கட்டுரைஜெயகாந்தன் வாசிப்புகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – புரிதலின் எல்லை