நெல்லையில்…
அன்பின் ஜெ,
வணக்கம்.
இதற்குமுன் உங்களுடைய உரைகளை சென்னையில் கேட்டதுண்டு. அண்ணன் அகரமுதல்வனின் ஏற்பாட்டில் தனிப்பேச்சிலும் ஒன்றிரண்டு முறை கேட்டதுண்டு. ஆனால், சொந்த ஊரில், அதுவும் மேடையில் உங்களுக்கருகில் அமர்ந்து நீங்கள் பேசுவதைக் கேட்பதென்பது உண்மையிலேயே உள்ளத்துவகை தான்.
புத்தக வெளியீடு என்பதால், வழக்கமாய் நீங்கள் பேசுவதைக் காட்டிலும் சிக்கனமாகவே முடித்துக்கொண்டீர்கள். ஆனால், காலையில் நீங்கள் திருக்குறுங்குடி சென்று வந்ததன் புத்துணர்ச்சி உங்கள் முகத்திலும் பேச்சிலும் நன்றாகவே வெளிப்பட்டது. முகத்தில் பொலிவு கூடியிருந்தது.
இவ்வளவு கூட்டத்தை நானுமே எதிர்ப்பார்க்கவில்லை. அதிலும் முப்பது வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம். அநேக பேர் உங்களை நோக்கி வந்துக்கொண்டிருக்கும் ஆரம்பநிலை வாசகர்களும் கூட. நீங்கள் சொன்னதுபோல விரைவில் திருநெல்வேலியில் ஒரு முழுநாள் அரங்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், என்னுடைய பேச்சில் நான் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களைக் குறிப்பிட்டுச் சொல்லி ஆற்றுப்படுத்தியமைக்கு நன்றி. இனிவரும் காலங்களில் நிச்சயம் கடைப்பிடிக்கிறேன்.
எழுத்தாளர்கள் லஷ்மி மணிவண்ணன், போகன் சங்கர், ராயகிரி சங்கர் ஆகியோரையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.
நன்றி ஜெ.
அன்புடன்
பிகு
அன்புள்ள ஜெ
நெல்லையில் உங்கள் உரையை கேட்டது சிறப்பான அனுபவமாக இருந்தது. சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் நடந்து முடிந்த விழா. அனைவருமே சிறப்பாகப் பேசினார்கள். உங்கள் உரையின் யூடியூப் வடிவம் வெளியாகுமென நினைக்கிறேன்
நெல்லையில் ஒரு வாசகர் சந்திப்பை நடத்தவேண்டுமென சொன்னீர்கள். அது அவசியமானது. இங்கே உங்கள் வாசகர்கள் பலர் உள்ளனர். அதை நேரிலும் கண்டீர்கள். சந்திக்க ஆவலுடனிருக்கிறோம்
விஜயகுமார்
அன்பு ஜெ,
நெல்லைப் பயணம், உங்களுடனான முதல் சந்திப்பு, மதார் என்ற புதிய நண்பரின் முதல் கவிதை நூல் வெளியீட்டு விழா பற்றி் என் நினைவுகளை எழுதியிருக்கிறேன்.
இந்த ஜனவரியிலிருந்தே ஜெ –வைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. ஜெ தன் வாசகர்களுடன் உரையாடும் கடிதங்களை நுணுகி கவனித்து எனக்கானவைகளை நான் கோர்த்துக் கொள்வதுண்டு. அப்படி ஒரு வாசகர் கடிதத்தில் “கடிதத்தை விட நேரில் சந்தித்துப் பேசும்போது தான் இன்னும் அணுக்கமாக உரையாட முடியும்” என்ற வரியை எனக்கானதாக எடுத்துக் கொண்டு சந்திக்கும் தருணத்தை எதிர் நோக்கியிருந்தேன். அப்படி ஒரு வாய்ப்பாக அமைந்தது தான் இந்த நெல்லைப் பயணம்.
ஏழு மணிக்கெல்லாம் திருவில்லிபுத்துலிருந்து கிளம்பி ராஜபாளையம் வந்து அங்கிருந்து திருநெல்வேலிக்கு பேருந்தில் ஏறினேன். இரண்டாவது முறையாக நெல்லைக்குச் செல்கிறேன். முதல் முறை பணி நிமித்தமாக மண்டலத் தலைவரை சந்திக்கச் சென்றபோது வெயில் தகித்துக் கொண்டிருந்தது. எப்பொழுதும் நான் செல்லும் தென்காசி பயணப்பாதையென்பது மலைகளை அதன் பசுமையை குளிர் தென்றலை தருவிக்கக்கூடியது. ஆனால் நெல்லையின் பயணப்பாதை அப்படியல்லவே. அது மலை தன் எச்சங்களை() விட்டுச் சென்றது போல சிறு குன்றுகளை, மரங்களே இல்லாத சாலையைக் கொண்டது. சாலை விரிவாக்கப் பணியின்போது மரங்களை வெட்டி விட்டதாகச் சொன்னார்கள். மரங்களற்ற சாலை பரிதாபத்திற்குரியது.
இப்படி இந்தப் பயண வழி புதிதில்லை எனினும் பேருந்தில் செல்வது இதுவே முதல் முறை. அதுவும் இம்முறை பனிக்காலம் முடியாமல் தீவிரமாக பொழிந்து இந்த சுடு நிலத்தை குளிர்வித்துக் கொண்டிருக்கும் ஒரு காலத்தில் செல்வது இனிமையாகவே இருந்தது. பயணப்பாதை இராஜபாளையம், முதுகுடி, முறம்பு, கரிவலம்வந்தநல்லூர், சங்கரங்கோவில், மானூர் ஆகியவற்றைக் கடந்து வண்ணாரப்பேட்டையை அடைந்தது. அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ரேடியன் பயிற்சி மையத்தை அடைந்தேன்.
இளைஞர்களின் கூட்டம் வழி நெடுக இருந்தது. தொகுத்து வழங்குபவர்கள் பரபரப்பாக எதையோ எழுதிக் கொண்டும், தங்களுக்குள் விவாத்துக் கொண்டும் இருந்தனர். விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கான தோரணை கொண்டவர்கள் தீவிரமாக தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தனர். மதரின் நண்பர்கள் புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தனர். அதற்கருகில் ஒருவர் சமச்சீர் கல்வி புத்தகத்தை வைத்துக் கொண்டு கிடைக்கும் நேரத்தில் படித்தும் கொண்டிருந்தார். சில பெரியவர்கள் பெரிய விசயங்களைப் பேசும் தோரணை கொண்டு குழுமியிருந்தனர். நான் உள்ளே சென்று ஓரமாகப் போய் உட்கார்ந்து கொண்டேன். முகம் முழுக்க புன்னையோடு ஜெ -வுக்காக காத்திருந்தேன்.
ஒரு வாரமாகவே இதே சிந்தனையில் புன்னகைத்துக் கொண்டே தான் இருந்தேன். ஜெ வந்துவிட்ட அறிகுறியை அரங்கின் பரபரப்பு காணித்தபோதெ அவர் உள் நுழைந்திருந்தார். நான் பார்த்த எந்த புகைப்படத்தையும் காணொளியை விடவும் அவர் அழகாக குழந்தை போல் இருந்தார். அதை இதுவரை நான் பார்த்த எந்தப் புகைப்படமும் படம் பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கவிதை வெளியீட்டு விழாவின் சம்பிரதாயங்களாக ஜெ நூலை வெளியிட்டு அதை லஷ்மி மணிவண்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மிகவும் எளிமையான ஒரு மனிதராக லஷ்மி மணிவண்ணன் அவர்கள் தென்பட்டார்கள். மதார் என்ற ஒரு இளம் கவிஞருக்கு அவர் ஆற்றியிருப்பதென்பது அலப்பறிய செயல். புத்தகத்தையுமே அவர் லஷ்மி மணிவண்ணன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்ததிலிருந்து அதை அறியலாம்.
மதார் அவர்கள் ஏற்புரை வழங்கும்போது கவிதைகளைத் தேர்வு செய்து பிரசூரிப்பதற்கு அவர் எடுத்துக் கொண்ட சிரத்தைகளை சொன்னபோது மேலும் எனக்கு அவரின் மேல் மதிப்பு கூடியது. அற்புதமான மனிதரை சந்தித்த மகிழ்ச்சி எனக்கு. இவர்களின் முயற்சிக்கு ஒரு உந்துகோலாக ஜெ இந்த நூலை வெளியிட்டு உரையாடி மதார் அவர்களை பாராட்டியது இன்னும் சிறப்பு.
ஜெ வின் உரையை நேரில் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. பொதுவாகவே நூலை வெளியிட்டுவிட்டு அந்த நூலைப்பற்றியே பெரும்பாலானவர்கள் பேசுவார்கள். ஆனால் பார்வையாளர்கள் பெரும்பாலும் அதைப் படித்திராதவர்களாகவே இருப்பார்கள். அவர்களை நூலை நோக்கிச் செலுத்தும் ஒரு பேச்சாகவே ஜெ இதைத் துவக்கினார்.
காலை ஆறு மணிக்கெல்லாம் ஆரம்பித்திருந்த அவரின் பயணப்பாதையில் அவருக்கு மிகவும் விருப்பமான திருக்கனங்குடி ஆலயத்திற்கு சென்று வந்ததைப் பகிர்ந்து கொண்டார். அங்கு பெண்பாற் கவிஞரான ஆண்டாள், ஆண்பால் கவிஞரான நம்மாழ்வார், தத்துவார்த்தவாதியான இராமனுஜருக்கான சிலை இருக்கிறது. அருகிலேயே அவர் தங்கிய வெட்டாற்றுப்பாறையில் உள்ள ஆலயத்திற்கு சென்று வழிபட்டதைப் பகிரும்போது ஒரு தத்துவ ஞானியைச் சுற்றி ஒரு ஆறு வலம் வரும் அந்தக் காட்சியைச் சொல்லும்போதே சிலிர்த்தது.
இது தவிரவும் பீர் முகம்மது என்ற கவிஞருக்கான தர்க்கா என கவிஞர்களுக்கு கோயில்கள் சமைத்திருப்பதைக் கண்டு ஒரு முறை அவர் கூட்டி வந்த பிரிடிஷ் எழுத்தாளர் ஒருவர் ஆச்சரியப்பட்டுப் போனதை விவரித்தார். இப்படி கவிதையைக் கொண்டாடிய மரபு நம்மிடம் உள்ளது. இன்றைய கவிதையான மதார் மற்றும் அவர் போன்ற இன்றைய கவிஞர்களின் கவிதையைப் பற்றிச் சொல்லும்போது “UNBEARABLE LIGHTNESS” தாங்கிக் கொள்வதற்கு முடியாத எடையின்மை, இனிய எடையின்மை, பறந்தலையும் தன்மை என்று கூறினார். இதை ”இசை” போன்றவர்களின் கவிஞர்களுடன் ஒப்பிடுகிறார்.
அதற்கு முந்தைய தலைமுறை கவிஞர்களான ஆத்மாநாம், சுகுமார் போன்றவர்களின் எடை அதிகம். ஆத்மாநாம் அவர்களை ”துயர் நிறம்பிய எடை பொருந்திய குண்டு” என்று சித்தரித்தபோதே முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் சித்திரத்தை எங்களுக்கு கடத்தி விட்டிருந்தார். அங்கிருந்து மதார் அவர்களின் கவிதை மற்றும் இன்றைய தலைமுறைக் கவிஞர்களின் எடையற்ற தன்மையை விளங்க வைத்த போதே மதார் அவர்களின் கவிதை நூலுக்கான வாசல் எனக்கு திறந்து கொண்டது. “எய்துவது என்பது கவிதையில் அரிதானது” அது மதாரின் கவிதைகளில் நிறைய காணக்கிடப்பதாகவும் அதன் நிறைவை செரிவை எடுத்தியம்பி முடிக்கும்போதே கவிதையைக் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து உந்திவிட்டது.
பின்னும் லஷ்மி மணிவண்ணன் அவர்கள் பேசும்போதும் அவரின் கவிதைகளை சிலாகித்தார். மத சாதி இன அடையாலங்கலன்றி ஒரு எழுத்தாளன், கவிஞன் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறி அவரை பாராட்டி மகிழ்ந்தமர்ந்தார். “பிகு” என்ற நண்பரும் பல நல்ல கவிஞர்களுடன் மதாரின் கவிதைகளை ஒப்பிட்டும் அவர் சிலாகித்த அவரின் கவிதைகளையும் எடுத்தியம்பினார். சரளமாக பேசும் தன்மையவரானாலும் முதல் முறை இலக்கிய கூட்டத்தில் பேசுவதாதலால் காகிதத்தில் அச்சடித்து எடுத்து வந்திருந்தது அவரின் ஈடுபாட்டைக் காட்டியது.
இந்த நாளின் பேச்சுக்காக எங்கெங்கோ இருந்து தேடி செறிவான் ஒரு பேச்சுக்கான உரையைத் தயாரித்திருந்தார். போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் இலக்கிய ஈடுபாடு கொண்டிருப்பது மன நிறைவான விடயம். அதன்பின் ஏற்புரை வழங்கிய மதார் நன்றிப் பெருக்கோடு மிகுந்திருந்ததை உணர முடிந்தது. தேவதேவனையும், லஷ்மி மணிவண்ணன் அவர்களையும், அவரின் நண்பரான சீனிவாச கோபாலனையும் நினைவு கூர்ந்து அவர்களுடனான கவிதைத் தருணங்களை சிலாகித்தார். அனைவருக்கும் நன்றி கூறி ஏற்புரையை முடித்தார்.
எனக்கு நண்பர்கள் மிக மிகக் குறைவு. ஆனால் நண்பர்கள் அதிகம் இருப்பவர்களைக் கண்டு மகிழ்ச்சியடைவேன். மதாருக்கு நல்ல மற்றும் நிறைய நண்பர்கள் அமைந்திருப்பதில் மகிழ்ச்சி. மதார் ஒரு கிராம நிர்வாக அலுவலராக இருந்து கொண்டும் கவிஞராக கவிதைத் தருணங்களில் திழைத்திருப்பதில் பெருமையும் கூட.
தேனீர் இடைவேளையிலும், கூட்டம் முடிந்தபோதும் ஜெ –வைச் சுற்றி நிறைய பேர் குழுமிவிட்டார்கள். எனக்கும் சில தருணங்கள் கிடைத்தது. அதன்பின் அவர் பலருடன் உரையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் அவர் புத்தகத்தை சிலாகிப்பவர்களிடம் “ஓ அப்படியா. நானா எழுதினேன்” என்பவரைப் போலவே பாராட்டுகளை நெளிந்தே வாங்கிக் கொள்கிறார். அருகே தயக்கத்துடன் வரும் வாசகர் ஒவ்வொருவரையும் தோளோடு தோள் நிறுத்தி ஒரு தோழனைப் போல பரவசப்படுத்திவிடுகிறார். அன்போடு ஒரு குழந்தையைப் போல பாசமாக அனைவரிடமும் பேசி வழி அனுப்புகிறார்.
அதன் பின் அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று அவரை சந்தித்தி்ருந்தோம். அங்கு ஜெ –வை வேறொரு பரிமாணமாகப் பார்த்தேன் எனலாம். அவரும் போகன் சங்கர் அவர்களும் மிகவும் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தனர். சிரித்துக் கொண்டே தான் இருந்தோம். ஜெ –வின் பயணத்தில் எப்போதும் உடனிருக்கும் நண்பர்களைக் கலாய்த்து தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தார். பயணங்களில் ஒவ்வொரு மனிதரையும் உன்னிப்பாக கவனிக்கிறார் ஆனால் இவரைப் பற்றி யாரேனும் சொல்லிக் கேட்க வேண்டுமே என்ற அவா எழுந்தது எனக்கு. அவரின் கண்கள் நிகழ்வுகளைப் படம் பிடிப்பவையாக இருப்பது போலவும், சற்று கூர்ந்து பார்த்தாரேயானால் எண்ணத்தின் ஆழம் வரை பயணித்து விடுவார் என்ற பயமும் வந்து சேர்ந்தது.
மதுரைக்குப் பல வழி என்ற பழமொழியைப் போல பேச்சு சுற்றி வந்து நிற்கும் புள்ளி இங்கு இலக்கியமாக இருந்தது. பிறழ்வெழுத்தில் தொடங்கி, தஸ்தாவஸ்கி டால்ஸ்டாய் ஒப்பீட்டில் வந்து நின்றது பேச்சு. போகன் ஆவர்கள் மிகவும் நகைச்சுவையானவர். முதலில் அவரைப் பார்த்தபோது ரொம்ப கராரானவர் பேசமாட்டார் என்று தவறாக நினைத்துவிட்டேன். மிகவும் எதார்த்தமான நகைச்சுவைவாதியாகத் தெரிந்தார். அடுத்தமுறை அவரிடம் நண்ராகப் பேசவேண்டும். ஏனென்றால் இந்த முறை நான் ஒரு பிரமிப்பு நிலையில் வேறொன்றாக இருந்தேன்.
அவர் தான் தஸ்தாவெஸ்கியை ஆரம்பித்தார். ஜெ, டால்ஸ்டாய் எவ்வாறெல்லாம் நிலைத்து நிற்கிறார் என்று ஒரு ஒப்பீட்டை ஆரம்பித்து டால்ஸ்டாயை நிறுத்தும் போது செறிவாக இருந்தது. இடையில் “ஆன்மீகத்தில் ஒளியையே ஏன் சென்றடைய வேண்டும்” என்ற என்னுடைய சந்தேகத்திற்கான பதிலை அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இடையிலிருந்து நானே கண்டு கொண்டேன்.
பிரியும் தருவாயில் தான் மதார் அவர்களிடம் பேசினேன். புத்தகம் வாங்கியிருக்கிறேன். படித்துவிட்டு எழுதுகிறேன் என்று நான் கூறினேன். அவர் தளத்தில் எழுதும் இரம்யா தானே நீங்க என்றார். தளத்தைத் தொடர்ந்து வாசித்து வரும் ஒவ்வொரு நல்ல வாசகரும் கண்டடைய அந்தத் தளத்தில் ஒரு துளியாய் இருப்பதில் மகிழ்ச்சி எனக்கு. லஷ்மி மணிவண்ணன் அவர்களும் காலையில் பார்த்தபோது என்னை அடையாளங்கண்டு பாராட்டி மேலும் எழுத ஊக்குவித்தார். அதற்கு காரணமான ஜெ –க்கு நன்றிகள்.
இறுதியில் மதாரிடம் வேலை, தேர்வு என்ற உலகாயதங்களைப் பேசி விடைபெற்றோம். ஜெ –வுடன் ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. வீட்டிற்கு சென்றதும் எதிர்பாராத விதமாக மதார் அவர்கள் நிகழ்ச்சியின் புகைப்படங்களை அனுப்பியபோது ஜெ –வுடன் எடுத்த ஒரு அருமையான புகைப்படம் இருந்தது கண்டு மகிழ்வுற்றேன். அவருக்கு நன்றி. சில புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். “உவப்ப தலைக்கூடி உள்ளப் பிரிதல்” போல அனைவரும் கலைந்து சென்றோம். திரும்பிச் செல்லும் வழியெல்லாம் என் முதல் சந்திப்பை சிலாகித்திருந்தேன். எழுதி முடிக்கையில் தான் அந்த பிரமிப்பிலிருந்து வெளி வருகிறேன். மிகச் சில தருணங்களை எழுத்திற்கும் அளிக்காமல் நினைவடுக்கின் ஆழத்திற்குள் புதைக்கிறேன். நினைவுகளை மீட்டும்போது அதை சிலாகித்திருப்பேன்.
இரம்யா