அரூ – அறிவியல் கதைகள்

அன்புள்ள ஜெயமோகன்,

2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் அரூ இதழ் நடத்திய அறிவியல் சிறுகதைப் போட்டியில் தேர்வான சிறுகதைகள் இரு தொகுப்புகளாக எழுத்து பதிப்பகம் மூலம் இம்மாதச் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகவுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

2019ஆம் ஆண்டு தொகுப்பின் ஒரு பிரதியை உங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பதிப்பகத்தாரிடம் தெரிவித்துள்ளோம்.

முன்பு வந்த தொகுப்பில் நிறைய அச்சுப்பிழைகள் இருந்தன. ஆகவே அது திருப்திகரமாக இல்லை. எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கையில் ஒரு சரியான பிரதி சென்று சேரவேண்டும் என்பதற்காகவே இந்த மறுபிரசுரம்.

இரு தொகுப்புகளையும் சேர்த்து மொத்தம் 25 அறிவியல் சிறுகதைகள் தமிழில் வெளியாகியிருப்பது மனதிற்கு நிறைவாக உள்ளது. இப்பயணத்திற்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி!

கீழ்க்காணும் சுட்டிகளில் இரு தொகுப்புகளையும் முன் பதிவு செய்து சலுகை விலையில் பெற்றுக்கொள்ளலாம் –
அரூ அறிவியல் சிறுகதைகள் 2019 – https://tinyurl.com/aroo2019
அரூ அறிவியல் சிறுகதைகள் 2020 – https://tinyurl.com/arootwenty

அரூவுடன் இணைந்திருங்கள்!
அன்புடன்,
அரூ நண்பர்கள்

அன்புள்ள அரூ நண்பர்களுக்கு,

தமிழிலக்கியத்தின் பேசுபொருட்களிலுள்ள தேக்கம் சலிப்பூட்டும்படி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கிறது. 90 சதவீதம் உறவுச்சிக்கல்கள். அவற்றிலும் பெரும்பகுதி ஆண்பெண் உறவுச்சிக்கல்கள். அவையும் யதார்த்தவாதச் சித்தரிப்புகள். எஞ்சியவை நடப்பு அரசியல் சார்ந்த கருத்துக்களுக்கு கதைமுலாம் பூசப்பட்டவை. அவ்வப்போது ‘மாறுபட்டு’ எழுதப்படுபவை வரண்ட உத்திச்சோதனைகள்

தமிழிலக்கியத்தில் ஒரு பெரிய முன்னகர்வை உருவாக்க அறிவியல்புனைவுகளால் முடியும். நம்முடைய அடிப்படையான தத்துவக்கேள்விகளுக்கு இனிமேல் மதம் சார்ந்த உருவகங்களை மட்டும் கொண்டு பதில்தேடமுடியாது. அறிவியலின் உருவகங்கள் தேவை. அறிவியல் புனைகதையை கேளிக்கைப் புனைவாக அன்றி ஆழமான அகவிசாரணைக்கான கருவியாக பயன்படுத்தும் எழுத்தாளர்கள் தேவை

அத்தகையவர்களை கண்டடைந்து முன்னிறுத்தும் அரூவின் முயற்சி போற்றத்தக்கது. இக்கதைகளில் பல கதைகள் தமிழ்ப்புனைவிலக்கியத்தின் வழிகளை புதிய எல்லைகளுக்குக் கொண்டுசென்றவை.ஒரு புதிய தலைமுறை உருவாக்கி வந்திருப்பதைக் காணமுடிகிறது.

தமிழில் அறிவியல் புனைகதைகள் பற்றிய விவாதங்களை நினைவு கொள்கிறேன். அறிவியல்புனைவு என்பது அனுபவமண்டலம் இல்லாத கேளிக்கை புனைவு , அறிவியலின் சோரக்குழந்தை என்ற எண்ணமே நவீனத்தமிழிலக்கிய முன்னோடிகளுக்கு இருந்தது.

அறிவியல் புனைகதைகள் தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு முன்னகர்வை உருவாக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்கு தொண்ணூறுகளில் உருவாகியது. தமிழிலக்கியத்தில் உள்ள கற்பனையற்ற யதார்த்தவாதம் , தத்துவமில்லாத உலகியல் பார்வை ஆகியவற்றை கடந்துசெல்ல அது உதவுமென நினைத்தேன். அதை நான் தனிக்குரலாக தொடர்ச்சியாக முன்வைத்தேன்.

அதுவரை தமிழில் சுஜாதாவின் தொழில்நுட்ப- கேளிக்கை எழுத்துக்களே அறிவியல் புனைவுகள் என்று எண்ணிக்கொண்டிருந்தனர். அறிவியல் புனைகதை என்பது தன் குறியியீடுகளை அறிவியலில் இருந்து பெற்றுக்கொண்ட தீவிரமான இலக்கிய ஆக்கமாக இருக்க முடியும் என்று நான் வாதிட்டேன்.அன்று அது எவ்வகையிலும் ஏற்கப்படட ஒரு கருத்தாக இருக்கவில்லை.

2000 ல் நாங்கள் நடத்திய ‘சொல்புதிது’ சிற்றிதழில் அறிவியல் புனைகதைகளுக்கான ஒரு சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. நவீனத் தமிழிலக்கியத்தில் அது ஒரு முதல் காலடி.

2004ல்  திண்ணை இணைய இதழ் அறிவியல்புனைகதைகளுக்கான ஒரு போட்டியை அறிவித்தது. அதற்குமுன் திண்ணை இணைய இதழில் அறிவியல் புனைகதையை இந்திய- தமிழ்ச்ச்சூழலில் எழுதுவதில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்று காட்டும்பொருட்டு நான் 12 கதைகள் எழுதினேன். அவை ‘விசும்பு’ என்ற பெயரில் தொகுதியாக வெளிவந்துள்ளன.அவையெல்லாமே இலக்கியப்படைப்புக்கள்- அறிவியல் பேசுபொருள் கொண்டவை. அவை தீவிரமான செல்வாக்கைச் செலுத்தியிருப்பதை இன்றும் எதிர்வினைகள் வந்துகொண்டே இருப்பதிலிருந்து காண்கிறேன்.

ஆனால் அன்று திண்ணை  போட்டிக்கு வந்த கதைகள் எல்லாமே சுஜாதா பாணியிலான தொழில்நுட்ப விந்தைகளைச் சொல்லும் முயற்சிகள் மட்டுமே. அப்போது அது சோர்வை உருவாக்கியது. அக்கதைகளின் தொகுப்பு என் முன்னுரையுடன் நூலாக வெளிவந்தது. தமிழில் அப்படி ஒரு தொகுப்பு அதுவே முதலானது என நினைக்கிறேன்

அன்று எடுத்துக்கொண்ட முயற்சிகளின் பயன் இன்று, இருபதாண்டுகளுக்குப்பின், விளைந்திருக்கிறது என்று என்று கொள்கிறேன். இக்கதைகள் தமிழ் அறிவியல் புனைகதைகள் அடைந்துள்ள முதிர்ச்சியைக் காட்டுகின்றன.

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைமுதற்கனல் – வேள்விமுகம்
அடுத்த கட்டுரைகதைகளைப் பற்றி