[புனைவுக் களியாட்டுக் கதைகளில் பத்து கதைகள் கவிஞர் பி.ராமன் மொழியாக்கத்தில் மலையாளத்தில் மாத்ருபூமி வெளியீடாக வரவிருக்கின்றன.அந்நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை]
சின்னக்குழந்தைகளை அடிக்கடி கவனிப்பேன், அவற்றால் ஒரு நாற்காலியில் மட்டும் அமரமுடியாது. ஒரு நாற்காலியில் அமர்ந்தால் உடலை வளைத்து இன்னொரு நாற்காலியில் கைகளையும் தலையையும் வைக்க அவை முயலும். ஒரேசமயம் இரண்டு நாற்காலிகளில் அமரவே முடியாது என்று அவை விழுந்து எழுந்தும், அடிகள் வாங்கியும் கற்றுக்கொள்கின்றன. அதன்பின்னரே கதைகளில் அவை ஆர்வம் கொள்கின்றன. கதைக்குள் நாம் ஒரே சமயம் நூறு, ஆயிரம் நாற்காலிகளில் அமரமுடியும்.
ஐம்பது வயது கடந்த பின்னர், அரசியல் தத்துவம் ஆன்மிகம் என்று ஏராளமாக எழுதிக் கடந்துவந்த பின்னர் நான் என்னை இப்போது ஒரு கதைக்காரனாக மட்டுமே கண்டடைகிறேன். கதையை உருவாக்குவது, கதையில் திளைப்பது மட்டுமே எனக்கு இயல்பாக இருக்கிறது. என் மெய்யான மகிழ்ச்சி அதில்தான் இருக்கிறது. அதற்காகவே கதைகளைச் சொல்கிறேன்.
எதற்காக கதைசொல்கிறேன் என்று கேட்டால் நான் வேளைக்கொரு பதிலைச் சொல்லக்கூடும். மெய்மையை தொட்டறியும் பொருட்டு, அறிவியக்கத்தில் ஊடுருவி என் கருத்தைப் பதிவுசெய்யும் பொருட்டு, இந்த வாழ்க்கையின் துயரங்களை கொஞ்சமேனும் மாற்றும்பொருட்டு, மகத்தான இலட்சியக்கனவுகளை நிலைநிறுத்தும் பொருட்டு, மாமனிதர்களை தலைமுறை நினைவுகளுக்கு கொண்டுசெல்லும் பொருட்டு, பண்பாட்டின் ஓட்டத்தை அறுபடாது முன்கொண்டு செல்லும் பொருட்டு…
இதெல்லாமே உண்மைதான். ஆனால் அடிப்படையில் நான் கதையில் திளைப்பதற்காகவே எழுதுகிறேன். ஒரு கதை வடிவம்கொண்டு எழும்போது ஒரு பெரிய பரவசம் உருவாகிறது. ஐந்து பக்கமும் திசைகள் திறந்துகொண்டே இருக்கின்றன. பறந்தலைந்து மீண்டு வரும்போது ஒரே உடலில் இருந்துகொண்டு பல்லாயிரம் வாழ்க்கைகளை வாழ்ந்தவனாக உணர்கிறேன். மெய்யாகவே கதைகளை அதற்காகவே எழுதுகிறேன்.
ஆகவே இன்று கதைகளின் முதற்பெரும் தகுதி வாசிப்பின்பம்தான் என்று உணர்கிறேன். எதிர்காலத்தில் நுண்ணுணர்வும் கற்பனையும் உள்ள வாசகர்களுக்குக் குன்றாத வாசிப்பின்பத்தை அளித்த எழுத்தாளன் என்று அல்லாமல் வேறெவ்வகையிலும் நான் நினைவூரப்பட விரும்பவில்லை.
வெண்முரசு ஏழாண்டுக்காலம் என்னை கதைகளில் பெருகிப்பெருகி பேருருவம் கொண்டு வாழச்செய்தது. அந்த இருபத்தாறாயிரம் பக்கங்களில் ஆயிரத்துக்கும் மேல் துணைக்கதைகள் உள்ளன. மரபில் இருந்து எடுத்து விரிவாக்கப்பட்ட கதைகள், அக்கதைகளின் நீட்சியாக உருவாகிவந்த புதிய கதைகள்.
வெண்முரசு எழுதும் நாட்களில் உலகின் நான்கு கண்டங்களிலாக பலநாடுகளில் பயணம் செய்தேன்.இந்தியாவில் மலைகளிலும் காடுகளிலும் பாலைகளிலும் அலைந்தேன். பல படங்களுக்கு எழுதினேன். ஆனால் அந்த ஒட்டுமொத்தப் புறவாழ்க்கையும் மிகச்சிறியது. நான் அகத்தே வாழ்ந்த வாழ்க்கை, வெண்முரசின் களத்தில் நான் நிகழ்ந்தது பலமடங்கு பெரியது.
வெண்முரசு முடிவை நெருங்கும்போது மிகப்பெரிய வெறுமையை அடையலானேன். என் வாசகர் ஒருவர் சொன்னார், வெண்முரசு முடிந்தபின் ஆறுமாதம் எதையும் வாசிக்கவில்லை என்பதோடு என்னுடைய புகைப்படத்தைப் பார்ப்பதையேகூட தவிர்த்ததாக. அந்த வெறுமையை உணரமுடிகிறது என்னாலும். நான் அதிலிருந்து வெளியேற கண்டடைந்த வழியே கதைகள்.
செறிவான படிமமொழியும், தத்துவ கனமும் கொண்ட நவீனநாவல்களான வெண்முரசுக்கு மாறாக எளிமையான நேரடியான கதைகள் இவை. கற்பனையில் விரியும் நிலமும் சூழல்களும் கொண்டவை. இன்றுநான் திரும்பிப் பார்க்கையில் ஓரிரு கதைகளை தவிர அனைத்துமே வாழ்க்கையின் அரிய தருணங்களை, உயரிய உளநிலைகளை முன்வைப்பவை. இயல்பாக அப்படி நிகழ்ந்தது. நான் நிறைய கடந்து வந்துவிட்டிருக்கிறேன் என்று உணர்ந்தேன்.
சென்ற ஆண்டு கொரோனா பரவி, வீடடங்கு அறிவிக்கப்பட்ட காலம். என்னுடைய 15 வயதிலிருந்து நான் தொடர்ச்சியாக வீட்டில் பதினைந்து நாட்களுக்குமேல் இருந்ததில்லை. வாசிப்பு எழுத்து பயணம் மூன்றுமே என் வாழ்க்கை.பி.எஸ்.என்.எல் ஊழியராக இருந்த காலகட்டத்தில் அதிகாரபூர்வ விடுப்பு, சம்பளமில்லா விடுப்பு ஆகியவற்றை சேர்த்தால் ஆண்டில் நூறுநாட்கள் பயணத்தில்தான் இருந்திருக்கிறேன். வீடடங்கு எனக்கு தனிமைச்சிறைதான்.
ஆனால் அதை ஒரு சோர்வாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று முடிவுசெய்தேன். அதையும் கொண்டாடலாம் என்று திட்டமிட்டேன். இது என் வழக்கம் என்பதை நண்பர்கள் அறிவார்கள். தமிழகத்தில் கோடை கடினமானது. ஆனால் நான் ஒவ்வொரு கோடையிலும் கோடைக் கொண்டாட்டத்தை அறிவிப்பேன்.வெயிலையும் வெயிலால் அழகுகொள்ளும் நிழல்களையும் கொண்டாட ஆரம்பிப்பேன். வெயிலில் அலைவதற்காகவே பயணங்களைத் திட்டமிடுவேன்.
கொரோனா காலகட்டத்தை கொண்டாடுவதைப் பற்றிய ஓர் அறிவிப்பை மார்ச் மாதம் 26 ஆம் தேதி என் இணையதளத்தில் வெளியிட்டேன். அதன் விதிகள் இவை:
1- கொரோனா தொற்று பற்றி தேவையான செய்திகளை தெரிந்துகொண்டுவிட்டோம், ஆகவே மேற்கொண்டு நோய்த்தொற்றின் கணக்குகள், அதுபற்றிய செய்திகளை அறிந்துகொள்வதை முற்றாக தவிர்த்துவிடவேண்டும்.
2- கொரோனா காலம் முழுக்க குடும்பத்துடன் இருப்பது. ஆனால் மிகநெருக்கமாக இருப்பதனால் உரசல்கள் வரலாம். ஆகவே குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் எதன்பொருட்டும் எவ்வகையிலும் விமர்சனம் செய்யக்கூடாது.
3- ஒரு வீட்டில் இருப்பதனால் அதிகமான நெருக்கம் உருவாகும் . அதை தவிர்க்கவேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் அவரவர் இடங்களை அளிக்கவேண்டும். குறிப்பிட்ட பொழுதில் மட்டும் சந்தித்தால்போதும்.
4 -கலையிலக்கியம் என நமக்கு உகந்தவற்றில் முழுவெறியுடன் ஈடுபடவேண்டும்.
2020 மார்ச் மாதம் 18 ஆம் தேதி புனைவுக்களியாட்டு என்று ஒன்றை அறிவித்தேன். ஊரடங்கு நாட்கள் முழுக்க கதைகளை எழுதுவது. பிறரும் எழுதலாமென அறிவித்தேன். நான் எழுதத் தொடங்கினேன். அவ்வாறுதான் இக்கதைகள் உருவாயின.
இவற்றை தொடங்கும்போது பத்துப்பதினைந்து கதைகள் என்னும் எண்ணம் இருந்தது. ஆனால் எழுத எழுத கதைகள் விரிந்து வந்துகொண்டே இருந்தன. உண்மையில் ஒரு கதையை எழுதி முடித்து எழுந்து ஒரு டீ குடிப்பதற்குள் அடுத்த கதை எழுந்துவந்தது. நிறுத்தவே முடியவில்லை என்பதுதான் உண்மை.
ஏனென்றால் வெளியே உள்ள உலகம் மிகச்சிறியது, சிக்கலற்றது. அதில் இயற்கை இல்லை, வாழ்க்கை நேர்கோட்டில் சென்றது. புனைவின் உலகம் பிரம்மாண்டமானதாக இருந்தது.. ஒரு சிறிய இடைவேளையுடன் நாள்தோறும் ஒரு கதை என்றவகையில் நூறுகதைகள்.
நான் நீண்டநாட்களாக எழுதாமலிருந்த உலகங்கள் என் எழுத்தில் எழுந்துவந்தன. நான் பிறந்துவளர்ந்த கிராமச்சூழலை இப்போதுதான் இத்தனை விரிவாக எழுதுகிறேன். இக்கதைகளில்தான் என் அப்பா மறைந்த பாகுலேயன் பிள்ளையும் அவர் நண்பர்களும் அத்தனை பிரகாசமாக எழுந்து வருகிறார்கள். இத்தனைகாலம் அவர்கள் எங்கோ கனிந்து கனிந்து காத்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
நான் முப்பதாண்டுகளாக ஆராய்ச்சி செய்யும் திருவிதாங்கூர் சரித்திரப்பின்னணி கொண்ட கதைகள், நான் நெடுங்காலம் பித்துகொண்டிருந்த திபெத் பௌத்தப் பின்னணி கொண்ட கதைகள், என் உள்ளத்திற்கு மிக உகந்த நண்பர்களின் நிலமான மலபாரின் பின்னணி கொண்டகதைகள், நான் துறவுபூண்டு வாழ்ந்த காசி பின்னணிகொண்ட கதைகள் எல்லாம் முதல்முறையாக இப்போதுதான் என்னால் எழுதப்படுகின்றன– ஏறத்தாழ இருநூறு சிறுகதைகளும் பத்து நாவல்களும் நான்கு தன்வரலாறுகளும் எழுதிய பிறகு!
எழுதி எழுதி நூறுகதைகளானபோது நானே நிறுத்திக்கொண்டேன். உண்மையில் வலுக்கட்டாயமாக நிறுத்திக்கொண்டேன். மிகவும் ஓடிவிடக்கூடாது என்பதற்காக. அத்துடன் செப்டெம்பர் ஒன்றாம் தேதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஒன்றாம் தேதியே கிளம்பி பயணம் மேற்கொண்டேன். ஈரோடு மாவட்டத்தின் கற்காலத்துச் சின்னங்கள தேடி பயணங்கள். அதன்பின் குடகுப்பயணம். இன்றுவரை பயணம் தொடர்கிறது.
இந்தக்கதைகள் முழுக்க என் இணையதளத்தில் வெளியாயின. பல்லாயிரம்பேர் அவற்றை ஒவ்வொருநாளும் படித்தனர். உண்மையாகவே ஒரு கதைத்திருவிழாவாக இருந்தது. தொடர்ந்து ஏராளமான படைப்பாளிகள் வெவ்வேறு தளங்களில் எழுதத் தொடங்கினர்.நவீனத் தமிழிலக்கியத்தின் நூறாண்டுகால வரலாற்றில் மிக அதிகமாகக் கதைகள் எழுதப்பட்ட ஆண்டு 2020தான்.
இக்கதைகள் அடைந்த வாசிப்பும் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. இலக்கிய வாசகர்கள் முதல் எளிமையான கதைவாசகர்கள் வரை இவற்றை விரும்பினர். ஏனென்றால் குறியீட்டு ஆழங்கள், நுண்ணுணர்வு நிலைகள், நவீன இலக்கியத்தின் அழகியல் கொண்டிருந்தாலும் அடிப்படையில் இவை அழகான வாழ்க்கைக் கதைகள். பெரும்பாலான கதைகள் கற்பனையை விரியச்செய்து உள்ளம் மலரவைக்கும் தன்மை கொண்டவை. வாழ்வின் விசித்திரங்களை, உச்சதருணங்களை, ஆழ்ந்த கண்டடைதல்களை நிகழ்த்துபவை.
இக்கதைகள் பல்வேறு வடிவில் மறுபிறவி எடுத்தன. நண்பர்களும் வாசகர்களும் இக்கதைகளை வாசித்தும், நிகழ்த்துகலை போல சொல்லியும் இணையத்தில் வெளியிட்டனர். நாடக வடிவங்களும் வந்தன. மேலும் பல வடிவங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அறம் வரிசை கதைகள் 2011ல் வெளிவந்த காலகட்டத்திற்குப் பின் சிறுகதைகளுக்கு இத்தனை தீவிரமான தொடர்வாசிப்பு தமிழில் நிகழவில்லை. இக்கதைகளில் பலவற்றுக்கு திரைப்பட வடிவுக்கான முன்பணம் அளிக்கப்பட்ட வகையில் மட்டுமே பலலட்சம் ரூபாய் என் கைக்கு வந்தது.
ஆனால் இன்றுவரை எந்தக்கதையும் அச்சில் வரவில்லை. மலையாளத்தில்தான் அச்சுவடிவில் இந்நூல் வரவிருக்கிறது. என் அன்புக்குரிய பி.ராமன் இவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். கவிஞனின் மொழியில் என் கதைகள் மறுவடிவம் கொண்டிருக்கின்றன.
ஜெ